2019 நவம்பர் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.
இந்தக் கட்டுரை வெளியானது எனக்கு மறந்திருந்தது.
அண்மைய வாசிப்பில் புத்தகங்கள் உணர்த்திய அசலான 'வன்முறை' மனதில் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகளும்,கேள்விகளும் இந்தக் கட்டுரையை நினைவுபடுத்தியது. இதை எழுதிய அன்றை விட இன்று இந்தக் கட்டுரை எனக்கு முக்கியமானதாக தெரிகிறது.
காதலும் வீரமும்
காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய எழுதும் எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு.
குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாக கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என்பக்கத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து என் மடியில் கால்நீட்டி கதை சொல்லு என்று நச்சரித்துக் கொண்டிருந்தான். சங்கோஜத்துடன் என்னைப்பார்த்து திரும்பியவள் நான் புன்னகைத்ததும் மகனிடம் திரும்பிக் கொண்டாள். நானும் காக்காவா,நரியா,சிங்கமா,புலியா,ராஜகுமாரியா,குமாரனா என்று காத்திருந்தேன்.
ஒரு ஊர்ல உன்னையாட்டமே ஒருபய இருந்தானாம்…மொசக்குட்டிப்பல்லு..லட்சண குஞ்ஜைய்யாவாம் என்று அம்மா முத்தம் தந்ததும் அவன் உடலைநெளித்துக் கொண்டு சிரித்தான். நல்லாப் படிச்சானாம். பெரியவேலக்குப் போனானாம்…என்று தன்பையனைப் பற்றிய தன்ஆசைகளை சொல்லிக் கொண்டிருந்தாள். இதுமாதிரி சொல்லக்கூடாதா என்றால் சொல்லலாம் தான்.உண்மையில் பயலுக்கு காளிங்கநர்த்தனனைப்போல நல்ல நிறம்.
பிள்ளைகள் பொறுத்துப் பார்த்துப் பின் அலைபேசியின், தொலைகாட்சியின் கார்ட்டூன்களுடன் பறந்துவிடுகிறார்கள். பின் வயதிற்கு ஏற்ற விளையாட்டுகளுக்குத் தாவிவிடுவதால் அதிலிருந்து மீட்க முடிவதில்லை.
காலாண்டுத்தேர்வு விடுமுறையில் அடைமழை நசநசகும் நாட்களில் எங்கள் தெருப்பிள்ளைகளை கவனிக்கிறேன். தொலைக்காட்சியின் முன் இமைக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். பதின்பிள்ளைகள்“ போர்அடிக்குதுக்கா” என்ற வார்த்தையை சலிக்காமல் சொல்வதைக் கேட்கிறேன்.
குழந்தை பருவத்தில் கதைகளின் வழி இளவரசர்களை, குதிரைகளை, யானைகளை அறிந்தவர்கள் பின்னர் அவர்களே வாசிக்கும் வயதில் அவர்களின் கனவுஉலகத்தில் அவற்றைக் காண வரலாற்றுப்புதினங்கள் தேவைப்படுகின்றன.
இதே போன்றொரு விடுமுறையில் நான் வாசித்த முதல் புத்தகம் கல்கியின் அலைஓசை. அப்பொழுது கல்கி இதழில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புதினங்களில் எதாவது ஒன்று மீண்டும் நான்காவது சுற்றாக புதுவாசகர்களுக்காக தொடராக வந்தது. அதன் ஓவியங்கள் நம்மை வரலாற்றுக்கனவுக்குள் கொண்டு செல்பவை. கல்கி எழுதிய பொழுது ஓவியர் மணியம் அவர்களின் படங்களுடன் வந்த பழைய பிரதியை நூலகத்தில் பார்த்திருக்கிறேன்.

நான் வாசிக்கும் போது ஓவியர் பத்மவாசன் வரைந்தார். அந்த வயதில் அந்தப்படங்களை எத்தனை முறை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. வாசித்த வர்ணணைகளை மனதில் இருத்தி படங்களை ஒப்பிட்டுப்பார்ப்பதை விளையாட்டாக செய்வோம். முழுத்தொகுப்பும் கைகளில் வந்ததும் காலநேரம் பாராமல் வாசித்து வசை வாங்கியிருக்கிறோம். காலம் நாமம் கெட்டு வாசிக்கத் தொடங்கிய நாட்கள் அவை.
ஓவியர் பத்மவாசன்
எழுந்ததும் குதிரையில் வந்தியத்தேவனுடன் காவிரிப்படுகையில் பாய்ந்து ஓட வேண்டும். இல்லையேல் சூர்யா சீதாவுடன் சுதந்திரப்போராட்டத்தில் என்ன நடக்கிறது என்று பேசவேண்டும், மகேந்திரனுடன் சிவகாமியின் நாட்டியசிற்பக்கூடத்தில் அமர வேண்டும். உண்மையோ, கற்பனையோ ,மிகைஉணர்வோ, எதுவானாலும் காலத்திலேறி நம் வரலாற்று நாயகிநாயகர்களுடன் இருக்கமுடியுமென்பது பதின்வயதுகளின் மிகப்பெரிய பரவசம்.
அந்த வயதில் எனக்கு உண்டாகிய சுவைதான் காலை எழுந்ததும் வாசிப்பது. இன்றும் எழுந்ததும் கால்மணியாவது வாசித்தப்பின்தான் கோலம்போடவோ, சமையலறைக்கோ செல்கிறேன்.அன்று கல்கி ,பின் பார்த்தசாரதி, பாரதி, தி.ஜா,ஜெயகாந்தன் என்று மாறிமாறி இன்று ஜெயமோகனும்,எஸ்.ரா வும். எழுத்தின் சுவை மனமெங்கும் பரவி வாழ்வின் சுவையாகும் மாயம் நிகழ்கிறது.

என் சூழலில் இன்றைய பதின்மத்தினரிடம் வாசிப்பு இல்லவேயில்லை. என் வயதில் ஓரிருவர் இருந்தார்கள். முறை வைத்து அந்தப்புதினங்களை தோழிகளுக்கு மணிக்கணக்கில் கதையாக சொல்லியிருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட எங்கள் சூழலில் இன்று வாசிக்கத்தெரிந்தவர்கள் மிகஅதிகம். ஆனால் அன்றிருந்ததில் பத்தில் ஒருவர் கூட நூலகத்தில் இன்றில்லை. இந்தநிலைதான் எங்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
கல்லூரி செல்லும் வயதில் வாசிக்கத் தொடங்குவதில் சிரமங்கள் உண்டு. கல்லூரி செல்லும் வயது வாசகமுயற்சி எடுத்து வாசிக்கும் புத்தகங்களுக்குள் நுழையும் வயதும்கூட என்று நினைக்கிறேன். அப்பொழுது சட்டென்று விரைவான வாசிப்போ, தொடர்ந்த வாசிப்போ அமையாது. மூளை பழக்கப்பட்டிருக்க வேண்டும். வரலாற்று மிகு புனைவுகள் பதின் வயதிற்கான வடிகால்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். அதோடு அவை வாசிப்புப்பழக்கத்திற்கு மிக அத்தியாவசியமான புத்தகங்களாக இருக்கின்றன.
விடுமுறைகளில் பொழுதுபோக்குகளோடு இணைந்து வாசிப்பும் ஆக்கப்பூர்வமானது. மேலதிகமாக நம் பண்பாடு, சமூகம் சார்ந்த விழுமியங்களை இளம்வயதில் மனதில் பதியவைக்க இந்த வரலாற்றுப்புதினங்கள் முக்கியமான வழிகள்.நேர்மை,லட்சியவாதம்,தலைமை,பாலினஈர்ப்பு,சாகசம்,கனவு என்று இந்த வகை நூல்களின் பேசுபொருள்களின் தேவை என்றுமுள்ளது. இவைகளெல்லாம் இல்லாத வெறுமை தானே இன்று நம்பிள்ளைகளை ஆட்டிவைக்கிறது. மேலும் காதல் வீரம் என்ற இவற்றின் அடிப்படையான அம்சம் தொடர்வாசிப்பில் மூளையை நிலைக்கச்செய்பவை.
உயிரியலின்,இயற்கையின் அடிப்படையில் பதின்வயதின் தேவைகளில் இவை இரண்டும் இயல்பானவை. கல்கி,சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி,அகிலன் போன்ற எழுத்தாளர்கள் காமத்தையும்,வன்மத்தையும் அழகாக காதலாகவும்,வீரமாகவும் மாற்றவல்லவர்கள்.
இவர்களுடன் வைரமுத்துவும். இவர்களுக்குப்பிறகு நான் ஜெயகாந்தன் புதுமைப்பித்தனிடம் சென்றுவிட்டதால் புதியவர்களைத் தெரியாது.
ஜெயகாந்தன்,தி.ஜா போன்றவர்களின் எழுத்தை சரியாக உள்வாங்க முதலில் கல்கி வரிசை எழுத்துகளை அறிந்திருப்பது அவசியம். பதினைந்திலேயே ஜெயகாந்தன், தி.ஜா ,புதுமைப்பித்தன் போன்றவர்களின் எழுத்துக்களை உள்வாங்க முடியுமா என்ற ஐயம் எனக்குண்டு. சும்மா விரைவாக வாசித்து கடப்பது எந்தவகையில் வாசிப்புக்கு செய்யும் நியாயம்.
நாம் வாழும் சமூக ,பண்பாட்டு, நடைமுறை சூழல் கொடுக்கும் களம் எதுவோ அதில் நின்றுதான் நமக்கான கூத்தை ஆட முடியும் என்ற விவேகத்தை வாசிப்புத் தரும். உலகமயமாதல் ஒருபுறம் நடந்தாலும் நாம் இன்றும் பூப்புநீராட்டுவிழாவை விமரிசையாக நடத்துபவர்கள் தானே.
பதின்வயதின் இந்த லட்சியவாத வாசிப்பு வாசகரின் வாழ்க்கைப்பார்வையை மாற்றவல்லது. ஒரு ஸ்டேண்டர்டு சார்ட் மாதிரி. மீறல் என்பதன் உண்மையான பொருள் என்ன? எதற்காக மீற வேண்டும் என்பதை சிந்திக்க உதவும்.வாசிப்பை பயன் அளவுகோலில் எடுப்பதாக நினைக்க வேண்டாம். பயன் கருதி எழுதப்படாதது இலக்கியம் எனினும் அது வாழ்வை சொல்வதால் இயல்பாகவே அதை செய்கிறது. பயன் உள்ளது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய சூழல் இன்று உள்ளது.
முந்தைய தலைமுறை கல்கிவரிசையோடு நின்றுவிட்டதால் அதை உடைத்து வரவேண்டியிருந்தது. இந்தத்தலைமுறை கல்கி வரையாவது வருவதற்கு மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. படித்தவர்கள் நிறைந்த சமூகத்தில் படிப்பு என்பதற்கான மரியாதையை, பக்குவத்தை கொண்டுவர வாசிப்பு தேவையாக இருக்கிறது.இன்று வேலைக்கு செல்லும் களங்களில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் அடிப்படையான சில விழுமியங்களின் புரிதல் இல்லாமையால் சிக்கலாகிறது. அதற்காகவேனும் வாசிப்புப் பழக்கம் தேவையாக இருக்கிறது.
இன்று எத்தனை வன்முறைகளை அன்றாடம் பார்க்கிறோம். இதற்கு அடிப்படையாக இருப்பவற்றில் முக்கியமானது காமமும்,வன்மும்.அதை வழிநெறிப்படுத்த பதின்வயது வாசிப்பு அவசியம். பாடமாகப் படிப்பவை நமக்கு வாழ்க்கையாக ஆவதில் சிக்கல்கள் இருக்கின்றன. கதைகளாக உள்நுழைபவை நம்பேச்சில், நினைவில், செயலில் வெளிப்பட அதிக சாத்தியங்கள் உண்டு.
வாழ்வின் அடிப்படைகளை கற்பனாவாதமாக காண்பதே பதின்வயதின் இயல்பு. அந்தவயதின் மனஅமைப்பு அப்படியாக இருக்கலாம்.அதனால்தான் சினிமா போன்ற ஊடகங்கள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் இளைய பார்வையாளர்களை நோக்கி படங்கள் பண்ணப்படுகின்றன. எனில் கற்பனாவாத எழுத்துக்கள் வழி நேர்மறையான அனைத்தையும் மனதில் விதைக்கமுடியும்.
வி.பி.பி.யில் கல்கி கருஷ்ணமூர்த்தியின் புதினங்கள் வீட்டிற்குவந்த அன்று நான் அலைஓசையை எடுத்தேன். அய்யா ஏன் இந்தப்புத்தகத்த முதல்ல எடுக்கற பாப்பா? என்றார்.இதில காந்தி இருக்காரூன்னு சொன்னீங்க அதனாலதான் என்றதும் தலையில் தட்டி சிரித்தார்.
வாசிப்பு என்பது ஏதோ பிறவிசார்திறன் என்று கொள்ளவேண்டியதில்லை. அது பழக்கம் சார்ந்தது. அதை குழந்தைகளுக்கு பழக்க வேண்டியது நம் பொறுப்பு.நூற்றுக்கு ஐம்பதை அடிப்படையான வாசிப்புப்பழக்கத்திற்கு கொண்டு வர முடியலாம். பழக்கத்திற்கு வந்தபிறகு அவரவர் ரசனை, விருப்பம் சார்ந்த நூல்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்வர்கள்.
எந்தவாசிப்பும் இல்லாமலிருப்பதே இன்றைய சிக்கல். அதைத்தொடங்க முதலில் வாய்மொழிக்கதைகள், படக்கதைகள், சிறுவர் நூல்கள், துப்பறியும்கதைகள், வரலாற்றுப்புதினங்கள், புதினங்கள் என்ற வரிசையில் கொண்டுவந்தால் பின்னால் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வர்கள். சைக்கிள் பழகும் போது கொஞ்சதூரம் கூடவே ஓடி வருவது மாதிரிதான். வண்டி வேகமெடுத்ததும் பாதை தன்னால் விரியும்.நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலில் ஜெயமோகன் இதை விரிவாக எழுதியிருக்கிறார்.
இன்று அனைத்தையும் கற்பிப்பதைப்போல இலக்கிய அறிமுகத்தையும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தேடி வா... என்றாலும் எதைத்தேட வேண்டும் என்றாவது தெரிவிக்க வேண்டியது அவசியம். தாலாட்டு,ஒப்பாரி,கூத்து,தொழில்பாடல்கள்,விழாக்களில் பாடப்படும் பாடல்கள்,ராமாயண பாரதக் கதை கேட்டல் என்று ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டிருந்த தொடர்ச்சி இன்று அறுந்து நிற்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. தொடர்ச்சி இருக்கிறது என்றால் இந்தக்கட்டுரை பொருட்படுத்தத்தக்கது அல்ல.
பாடப்புத்தகங்களைத் தவிர்த்து ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது வாழ்வில் மிகமுக்கியமான மாற்றம் நிகழும் தருணம்.அந்தத் தருணத்தில் கிடைக்கும் நம்பிக்கையும் தன்னிறைவும் தித்திப்பானது. தானே ஒரு புத்தகத்தை தேர்ந்தடுத்து வாசிப்பது என்பது தன்னைத்தானே வியக்கும் தருணம்.
இந்த இருநிலைகளுக்கு இடையில் அதற்கான பயிற்சியில் இருப்பதற்கு வரலாற்றுப்புனைவுகள் போன்றவை அவசியமானவை என்று நினைக்கிறேன். காகம் வடையைத்திருடுவதிலிருந்து, காகம் தூது செல்வது முதல் காக்கைச்சிறகினிலே நந்தலாலா நின்றன் கருமை நிறம் தோன்றுதடா நந்தலாலா வரை.
கல்கியும் சாண்டில்யனும் காட்டும் உலகம் பதின்பருவத்தினருக்கு விரிவானது. கல்கி வடஇந்திய நிலத்திலிருந்து ஈழம் வரை செல்கிறார். சாண்டில்யனின் களம் இன்னும் விரிவானது. அகிலன் காட்டும் லட்சியஓவியர் கதாப்பாத்திரம் பதினாறு வயதுப் பையனுக்கு கனவை விதைப்பது. கல்கியின் ஆளுமைமிக்க குந்தவையும் அப்படியான கனவைக் கொடுப்பவள். சாண்டில்யனின் படைத்தளபதிகள் துடிப்பான பையன்களுக்கானவர்கள். என்றைக்கும் வந்தியத்தேவன்,அருள்மொழிவர்மன்,ஆதித்தகரிகாலன்,மாமல்லன் கதாப்பாத்திரங்கள் இருபாலரின் கனவுகளில் குதிரைகளில் வாட்களுடன் வருபவர்கள்.
வாசிப்பு என்பது தவம் என்பது வெறும் வார்த்தை ஆடம்பரம் அன்று. பாடசாலைகளில் இருந்து வெளியேறிய பின்வயதுகளில் வாழ்க்கை வாசிப்பதை அனுமதிப்பதில்லை. நாமாக நேரத்தைப் பிய்த்து எடுக்க வேண்டும். எடுத்த நேரத்தில் அமர்ந்து அமைந்து வாசிக்க ஒரு நீண்ட பயிற்சி தேவை.
வாசிப்பால் வாழ்க்கை எப்படியாகும் என்பது வாசிப்பவர்களுக்குத் தெரியும். அது அமைய இளம் வயதிலேயே வாசிப்பது அத்தியாவசியம். இளம்வயதில் வாசிக்கத்தொடங்கி பதின்வயதில் விட்டவர்கள் அனேகர். பதின் வயதில் வாசிப்பை வழக்கமாக்கிக்கொண்டால் பின்னால் சிக்கலில்லை என நினைக்கிறேன்.
எல்லாக்கலைகளையும் போல வாசிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டும். வாசிப்பின் நிலைநிறுத்தல் காலகட்டமான பதின்வயதில் வரலாற்றுமிகு புனைவுகளின் தேவை முக்கியமானது. அவை சிறிய கதைகளின் வாசிப்பிலிருந்து நீண்டவாசிப்பில் நுழையும் தோரண வாயிலாக இருப்பவை.கண்களை ஈர்க்கும் தோரணவாயில்களுக்கே உரிய அலங்காரங்களும் வண்ணங்களுமாக ஜொலிப்பவை. நீண்டபயணத்தின் துவக்கமாக அவற்றை வாசிப்பது பரவசமானது.
Comments
Post a Comment