Skip to main content

அகமும் புறமும் _ 1

  வாசகசாலையின் இணைய  இதழில் சங்க கவிதைகள் சார்ந்து புதிய தொடர் ஒன்றை எழுத உள்ளேன். இதுதான் என னுடைய முதல் 'தொடர் எழுதும் ' முயற்சி. இதற்காக என்னுடைய வாழ்வனுபவத்திற்கும், நான் கேள்விப்பட்ட மனிதர்களின் வாழ்வனுபவத்திற்கும் ஒத்துப்போகும் பாடல்களை தேடுவது தான் சவாலானது. நிறைய கவித்துவமான பாடல்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான அனுபவம் எனக்கு கிடைக்கும்போது ஒருவேளை மீண்டும் எழுதலாம். இந்த சிறிய வாழ்வின் எல்லைக்குள் எத்தனை சங்கப்பாடல்களுக்கான அனுபவங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஏற்கனவே உணர்ந்த சில தருணங்கள் சட்டென தெளிந்து வருகின்றன. பாடல்களை வாசிக்கும் போது சில வாழ்க்கைகளை புதிதாக இணைத்து கொள்ள முடியலாம். நானே என்னுள் இருப்பவற்றை தேடி கண்டடையும் அனுபவமாகவும், உணர்ந்தவைகளை பகிரும் அனுபவமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் நன்கு அறிந்த சில சங்கப்பாடல்கள், என் வாழ்வின் வெளிச்சத்தில் எனக்கு என்னவாக இருக்கின்றன என்பதாகவும் இருக்கலாம்.

செங்காந்தலின் இதழ்




எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே  இலக்கியங்கள் தன் ஆன்மாவாக கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலத்தில், ஒரு பொழுதில், யானை மேல் துஞ்சிய தலைவனை காலத்தின் முன் அழியாமல் ஒரு நட்சத்திரம் என்று இன்று வரை நிறுத்த இலக்கியத்தால் முடிகிறது. அனைத்தையும் ஊழித்தீ என, ஆழிப்பேரலை என அடித்து சென்று ஒன்றுமில்லாமல் ஆக்கும் காலத்தின் முன்னால் வாழ்க்கையையும், இயற்கையையும் பின்னி கட்டிய அழியாத சரம் போன்றது சங்க இலக்கியம்.

ஒரே கவிதையை நாவல் என விரிக்கும் அளவிற்கு செறிவுடனும், ஒரு காட்சியாக மின்னலென வெளிச்சம் காட்டி மறையும் நுண்மையுடனும் நம் கைகளில் வைத்துக் கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக  நமக்கு நன்கு அறிமுகமான ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற கவிதையை சொல்லலாம். 



சங்க கவிதைகளை செங்காந்தள் மலராக உருவகித்துக் கொள்வேன். கார்த்திகை மாதமானால் நெடுக வயல் வரப்புகளில், மலையோரங்களில், வேலிகளில் என்று எங்கும் பூத்து செறிந்திருக்கும். மலரின் கீழ்பாகம் மஞ்சள் நிறம். மேல்பாகம் செஞ்சிவப்பு. அகமும் புறமும் ஒன்றான மலர். புறமாக வாழ்க்கை ஒரு சிவந்த மலரென கிடக்க,அகத்தே மெல்லிய மஞ்சளில் தனக்கே உரிய மென்மையில் பூத்துக்கிடக்கும் மலர். புறத்தை சமனிக்கும் அகம். கார்த்திகை மாதத்தில் பூக்கும் ஒரு சிறுசெடியானது நம்மை நமக்கே  பூப்பித்துக் காட்டுகிறது. அதை அன்றாடம் பார்த்தவன் எப்படி கவிதை எழுதாமல் இருந்திருக்க முடியும். கண்முன் பசுமையாய், பாலையாய் விரிந்து கிடக்கும் நிலத்தினை தன் அகத்தினுள்ளும் உணர்ந்தவன் அந்நிலத்தை எப்படி எழுதினாலும் அவன் தன்னையே எழுதுகிறான். தன் மூலம் தன் மக்களை,நிலத்தை எழுதுகிறான்.

வாழ்க்கை ஒரே கணத்தில் அகமாகவும் புறமாகவும் இரண்டு நிலைகளில் இருக்கிறது. அதனால் தான்  சங்கப்பாடல்கள் காட்டும் பாடுகள் இன்று வரை அதே தீவிரத்துடன் நம் வாழ்வில் உள்ளன.

நாம் போர்களை இன்னும் விலக்கவில்லை. வெவ்வேறு போர்களை உருவாக்கிக் கொள்கிறோம். காதலை மறுதலிக்கவில்லை. கலம் மாற்றி ஊற்றி வைக்கிறோம். பொருள் தேடி பிரிவது ஓயவே இல்லை. மரணத்தை தவிர்க்க முடியுமா என்ன?  ஆண்பெண்ணிற்கான பேரன்பிற்கு பிறகும் கூட மற்றொரு களிப்பை [பரத்தமை] நாடிச்செல்லும் இயல்பு கூட மாறாமல் அப்படியே தான் இருக்கிறோம். அதனால் காயப்படும்  ஒருத்தியோ, ஒருவனோ தன் தோழமையிடம் ‘கேள் தோழி’ என்று வெதும்பிக் கொண்டு தான் இருக்கிறாள்[ன்].

இந்த நொடியில் ‘சிறு கோட்டுப்  பெரும் பழம்’ என ஒரு தலைவிக்கு காமம் பெரும் சுமையாகிறது. எங்கு காணினும் அன்னையர் தன் மைந்தருக்காக டாஸ்மாக்கின் முன் நெஞ்சம் புடைக்க ‘கையறு நிலை’யில் நிற்கிறார்கள். ஏய்த்து சென்றவனை[ளை] எண்ணி ‘மடலேறுவது’ நம் வீட்டின் அருகில் நடக்கிறது. எங்கோ ‘பெருந்திணை’யால் வதியும் உள்ளங்கள் இருக்கக்கூடும்…

எங்கோ உடன்போக்கு சென்ற தலைவியின் செவிலித்தாய் மண்மகள் அறியாத பாதம் கொண்ட என் பிள்ளை, கடும் சுரத்தில் எப்படி தலைவனுடன் நடந்து செல்கிறாளோ என்று எண்ணி எண்ணி கண்ணீர் உகுக்கிறாள். எங்கோ ஒரு தலைவி இற்செறிக்கப் படுகிறாள். தலைவியை காண தலைவன் யாரும் அறியாது இரவில்  வருகிறான். ஊர்எல்லையில் கல்லில் தடுக்கிக்கொள்ளும் தன் கால்களை உதறிக்கொண்டு ‘இவ்வூரில் நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கற்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள்’ என்று பதட்டத்தை எள்ளலாக மாற்றியபடி தலைவியின் ஊருக்குள் நுழைகிறான்.

மென்பஞ்சு காந்தள் மலர் அன்ன கரங்கள் நோக தலைவி, தலைவன் உணவிற்காக முளிதயிர் பிசைவது கண்டு அவளின் தாய் வியப்படைகிறாள்.

‘வினையே ஆடவர்க்குயிரே’ என்று ஏன் எழுத வேண்டும். 

கள்ளே ஆடவர்க்குயிரே என்றோ காதலே ஆடவர்க்குயிரே என்றோ ஏன் எழுதவில்லை. ஒருவன் தனக்குரிய செயலிலேயே நிறைவடைய முடியும்.

இவற்றுக்கு எல்லாம் மறுதிசையில் தன் மென் பிஞ்சு கால்களால் நிலத்தை மிதித்தபடி ‘இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்’ ஒரு குழந்தை அனைத்தையும் மாற்றி மாற்றுலகம் செய்கிறது.

பின் எப்படி சங்க கவிதைகள் பழையதாகும். என்றும் உள்ள வாழ்வை தன் கருப்பொருளாக்கி வைத்திருக்கும் சங்க கவிதைகள் வாழ்வுள்ள வரை புதுப்புது நிலத்தில்,புதுப்புது மனத்தில் செங்காந்தளின் கிழங்கு என பொதிந்திருந்து காலம் வருகையில் பூத்துக்கொண்டே இருக்கும். தானே மண்கண்ட இடத்தில் புதைந்து, நீர் வந்து சேரும் காலத்தில் பூக்கும். சங்க கவிதைகளும் வாழ்க்கையில் நின்று மனதில் பூப்பவை என்பதால் அந்த மலர்வெளிக்கு அழிவில்லை.

நினைத்துப் பார்த்தால் அனைத்துமே மலர்கள் தானே..சூரியன் மலருகிறான். நிலவும், நட்சத்திரங்களும் அந்தந்த பொழுதில் மலருகின்றன. அது போலவே மனம் மலரும் தருணங்கள்  கவிதைகளாக ஆகின்றன. மரணத்தை  போலவே மலர்தலும் தவிர்க்க முடியாதது என்பதே இந்தக் கவிதைகள் சொல்லும் ஒன்றின் இருமை.

என்னுடைய வெவ்வேறு வயதுகளில் வாசித்த சங்கக் கவிதைகளை என்னால் மனப்பாடம் செய்ய முடிந்ததில்லை. அவற்றை காட்சிகளாக மனதிற்குள் பொத்தி வைத்திருந்தேன். அவற்றை மீள எடுத்துப் பார்க்கும் எளிய வாசகியின் பார்வைகளாக இனிவரும் கட்டுரைகள் இருக்கும். பழந்தமிழ் பாடல்களின் வாசிப்பனுபவம்.

இந்தக் கட்டுரையை முடித்துவிட்டு துறையூர் அரசுமருத்துவமனைக்கு கிளம்புகிறேன். இருபது வயது நிறையாத பிள்ளைக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. உடன்போக்கு திருமணம் என்பதால் தாயும் தமையனும் கைவிட்ட பிள்ளை. தந்தையும் இல்லை. சித்தப்பாவும் சித்தியும் பிள்ளைப்பேறு பார்க்கிறார்கள். இதன் பின்னால் உள்ளது என்ன? சித்தப்பாவிற்கு தன் சகலையின் மீதுள்ள அன்பும் நட்பும் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு அறம் விவசாயிக்கு உண்டு. கருவுற்ற பெண்ணை, பசுவை ,மண்ணை தனித்து விடக்கூடாது என்ற அறம். தனக்குப்பின் இந்த நிலத்தில் எஞ்ச போவது அந்த புதுஉயிர் மட்டுமே என்ற ஆழ்பிரக்ஞை. ஒரு  விவசாயிக்கு இந்த நிலமும், விண்ணும், விசும்பும், மழையும், காற்றும், காலமும்  அனைத்தையும் சொல்லித்தரும்.

இத்தகைய மனிதர்கள் தங்களின்  ஐவகை நிலத்தின் அறங்களை,வாழ்க்கையை பழந்தமிழ் பாடல்களில் நிரப்பி வைத்திருக்கிறார்கள். 

மொழி என்பது அகமாகிய ஒன்று புறமாக ஒலி என எடுத்த வடிவம். மனிதன் தன்னையே அதில் வைத்து பத்திரப்படுத்தும் கருவூலத்தின் பேழை. காலத்தின் முன் தன்னை  நிறுத்தி வைக்கும் அரூபம். காலம் கடந்து மனிதன் நடந்து செல்லும் சூட்சுமப் பாதை. இன்னொரு மனம்  சென்று அமரும் பொற்பீடம். 

பழந்தமிழ் பாடல்களின் வழியே மொழியாகி வருகிறார்கள் முன்னவர்கள். மொழியாகி வருகிறது அவர்கள் உணர்ந்த அறம். மொழியாகி வருகிறது அன்பு. மொழியாகி வருகிறது வன்மம். இவை அனைத்தும் இணைந்து மொழியாகி வருகிறது வாழ்க்கை. வாழ்க்கையே பழந்தமிழ் இலக்கியத்தின் பாடுபொருள். எனில் அழிவில்லாதது…அந்தமில்லாதது என்றே பழந்தமிழ் கவிதைகளை சொல்ல விழைகிறேன். 

இந்தத் தொடர் வழியே பழந்தமிழ் இலக்கியத்தின் ஒரு சில கவிதைகளை நம் வாழ்க்கையின் வெளிச்சத்தில், இருளில் எடுத்துப் பார்க்கலாம். நம் எளிய மனதிற்கு அவை என்னவாகத் தெரிந்தாலும் அதன் பொருட்டே அது எழுதப்பட்டுள்ளது. வைரத்திற்கு எண்ணற்ற பட்டைகள். காலத்தால் இறுக்கி செறிக்கப்பட்ட வைரங்கள் இந்தக் கவிதைகள். நிலத்திலிருந்து எழக்கூடிய நம் மனதின் ஔியுடன் இணைந்து, இந்த வைரங்களில் ஔிர்வது விசும்பின் ஔியும் தான். இவை மனம் என்னும் பிரபஞ்சத்தின் இருண்மை என்னும் முதன்மையை அசைத்த ஒளிப் புள்ளிகள்.  மொழியும், கவிதையும் மனிதன் கண்டடைந்த வெளிச்சங்கள். 

இந்தத் தொடரை எழுதுவதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற நூலை முன்னோடி நூலாகக் கொள்கிறேன். அவருக்கு என் வணக்கங்களும்,அன்பும்.

                         ♦♦♦♦♦

இந்தத் தொடருக்காக வாசகசாலை வெளியிட்ட அறிவிப்பு: வாசகசாலை நண்பர்களுக்கு நன்றி.





Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...