Skip to main content

அகமும் புறமும் : 2

                

2022 ஆகஸ்ட் 1,வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.


           மொட்டவிழும் கணம்



                                



ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்

கோடை அவ் வளி குழலிசை ஆக,

பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக,

கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,

மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,

இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,

மந்தி நல் அவை மருள்வன நோக்க,

கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்

நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்

உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,

செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,

புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,

மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்

பலர்தில், வாழி தோழி! அவருள்,

ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,

ஓர் யான் ஆகுவது எவன்கொல்,

நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?


அகநானூறு:82    

பாடியவர்:கபிலர்  

திணை:குறிஞ்சி




அகநானூற்றில் களிற்று யானை நிரை என்ற முதல் பகுப்பில் வரும் பாடல்.

தலைவி தோழிக்கு கூறியது.

‘அவனை ஆயத்தார் பலரும் கண்டாரென வந்தோன் முட்டியவாறும்,அவருள் நெகிழ்த்தோளான் யானே எனத் தானே கூறியவாறும்’ காண்க,என்பர் நச்சினார்க்கினியர் என்று உரையில் எழுதப்பட்டுள்ளது.

கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு திட்டக்கட்டுரை சமர்ப்பித்தலிற்கான ஆய்விற்காக திருச்சியில் நான்கு மாதங்கள் இருந்தோம். உறையூரின் ஒரு அடுக்ககத்தின் எட்டாவது மாடிக்குடியிருப்பில் பதினைந்து தோழிகள் தங்கியிருந்தோம். பத்துநிமிட நடையில் ஆய்வகம் இருந்தது. நாங்கள் நுண்ணுயிரியல் [microbiology] மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் [Biotechnology] துறை மாணவிகள். எங்களுடன்  திருச்சி கல்லூரியிலிருந்து மணிகண்டன் என்பவன் வந்து சேர்ந்திருந்தான். 

சரியாக நேரத்திற்கு வந்து சென்றுவிடுவான். ஒருநாள் மணிகண்டன் விடுமுறை எடுப்பதாக இருந்தான். அவனுடைய முயல்களுக்கு உணவு தந்து, தண்ணீர் ஊட்ட சொல்லி [water feed] ரெஜியிடம் கேட்டான். ரெஜியின் முயல் கூண்டு, அவன் கூண்டின் அருகில் இருந்தது. அவள் பதில் ஏதும் சொல்லாததால் நான் சரியென்று சொன்னேன். ரெஜி நெற்றியை சுருக்கியபடி ஆய்வகத்தின் படிகட்டுகளுக்கு சென்று விட்டாள்.

மெதுவாக அவன் எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பன் ஆனான். ரெஜி மட்டும் அவனிடம் சரியாக பேசவில்லை.

ஒருநாள் மதியவிடுமுறையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றோம். உறையூரிலிருந்து சாலைரோடு வழியாக கல்லூரி சாலையில் நடந்தால் மலைக்கோட்டை நுழைவாயில் வந்துவிடும். பேசிக்கொண்டே நடக்கலாம் என்று முடிவு செய்தோம். உற்சாகமாக வந்த ரெஜி அவனும் நிற்பதைக் கண்டதும் பேருந்தில் ஏறிவிட்டாள்.

இரவு அவளை  அனைவரும் கடிந்து கொண்டோம். அவள் பதில் சொல்லாமல் கோவித்துக்கொண்டு பால்கனிக்கு சென்று அமர்ந்து கொண்டாள். இரவு உணவிற்கும்  பக்கத்திலிருந்த மாமி மெஸ்ஸிற்கு வரவில்லை. 

நான் கோபமாக, “என்னாச்சு உனக்கு…அவன் நல்லப்பையன் மாதிரிதான் இருக்கான். ஒரு இடத்துல படிக்கறோம். அவன மட்டும் தனியா விட்டுட்டு போலாமா? இன்னொருத்தன்  இருந்தாக்கூட பரவாயில்ல,” என்றேன்.

சற்று நேரம் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அங்கிருந்து திருவரங்கத்தின் கோபுரம் அந்த இரவில் மின்விளக்குகளுடன் அழகாகத்தெரிந்தது.

அவள் நிதானமாக ‘He bothers me’ என்றாள்.

எனக்கு சட்டென்று ஆங்கிலத்தின் ஆழத்தை பிடிக்க முடியாது.

“நீயா தப்பா எதையாச்சும் புரிஞ்சுக்காத,” என்று கோபமாக எழுந்து நின்றேன்.

“நாவல்லாம் படிக்கிற…நான் சொல்றது புரியலையா,” என்றவளின் கண்களை பார்த்தேன். சிவந்து கலங்கியிருந்தது. 

அந்த நான்கு மாதங்களும் நான் அவள் அருகில் இருந்து அவளிடமிருந்து  கோபமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருந்த வேறொன்றை கவனித்தேன். எங்கள் அனைவருக்கும் நண்பனாக இருந்த அவனுக்கே தெரியாத அழகிய கள்ளம் அது. அவளுக்கு மட்டும் தன்னை பிடிக்கவில்லை என்றே அவன் கடைசி நாள் வரை நினைத்தான். 

இதை எழுதி முடித்து வெளிநாட்டிலிருக்கும் அவளை அழைத்தேன்.

நான் தயங்கியபடி,“சிறுகாம்பூர் தலைவனை ஒரு கட்டுரையில் எழுதிட்டேன்,” என்றேன்.

[எழுதிவிட்டு உற்றவரிடம் பதட்டமாக சொல்வது அடிக்கடி நடக்கிறது]

“நீ ஒரு lovable idiot டீ…என்னத்த எழுதி வச்சிருக்க,” என்றாள். எப்போதும் Lovable idiot என்பதுதான் அவளின் உச்சப்பட்ச அன்பின் வெளிப்பாடு.

“சிறுகாம்பூரான் என்ற பெயரே சங்ககாலத்து பெயர் மாதிரியே இருக்குல்ல ,” என்று இந்தக் கட்டுரையை கூறினேன்.

அவள் வழக்கம் போல ஆங்கிலத்தில்,” fraud…do it like this..betray everyone for your stories,” என்று சிரித்தாள்.

எனக்கும் வழக்கம் போல பேசி முடிக்கும் போதுதான் அவள் என்ன சொன்னாள் என்று விளங்கியது.

“யாருடைய உண்மையான பெயரையும் எழுதல,” என்றேன். உண்மையான பேரை எழுதினா தான் என்ன? என்று மீண்டும் சிரித்தாள்.

Bothers me  என்ற வார்த்தை இந்த சங்கக்கவிதைக்கு மிகத்துல்லியமாக பொருந்துகிறது என்று நினைக்கிறேன். 

அதை கடந்து வர இருபத்துமூன்று வயதில் அவள் எவ்வளவு அலைவுற்றாள் என்று அருகில் இருந்து உணர்ந்திருக்கிறேன்.

அவள் உயிர்தொழில் நுட்பவியலில் நுண்ணிய அறிவும் தேடலும் உள்ளவள். குட்டி  மேதை என்று கூட சொல்லலாம். அதிகாலையில் எழுந்து படிப்பது அவள் வழக்கம். நானும் அந்த வழக்கத்தை உடையவள். ஆனால் நாவல், கவிதைக்காக எழுவேன்.

ஒருநாள் காலையில் ஐந்துமணிக்கு எழுந்த போது அவளைக் காணவில்லை. அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். எதிரில் இருக்கும் மாமியின் மெஸ்ஸில் தேநீர் குடிக்க சென்றிருக்கலாம் என்று நினைத்து குளிக்க சென்று திரும்பியப் பின்னும் அவள் திரும்பவில்லை. எனக்கு அவளைப் பற்றிய பதற்றம் இருந்தது. நன்றாக படிக்கும் பிள்ளைகளின் கிறுக்குத்தனங்களை ஏற்கனவே சிலரிடம் பார்த்திருக்கிறேன். மெஸ்ஸில் அவள் இல்லை. அவளிடம் ஒரு குட்டி நோக்கியா அலைபேசி இருந்தது. மெஸ்ஸிலிருந்து அவளை அழைத்தேன். 

அந்த விடியாத காலையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள். அடுத்த குறுக்கு சந்தின் கடைசியில் கோவில் இருந்தது.

நான் கோவிலுக்குள் நுழையும் போது ஆறுமணி பூஜை முடிந்து கூட்டம் கலைந்திருந்தது. ஏழுமணிக்கு மேல் கோவிலில் அப்படியொரு கூட்டம் இருக்கும். இரவு வரை அம்மனுக்கு ஓய்விருக்காது.

கருவறைக்கு எதிரே நடைசுற்றில் அமர்ந்திருந்தாள். அம்மனை வணங்கிவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தேன்.

படிக்க முடியல தேவி..அதான் கோவிலுக்கு வந்தேன் என்றாள். [அறிவாளிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று  நினைக்கிறேன்]

என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி வெட்டவெளி கருவறையை பார்த்துக் கொண்டிருந்தேன். வெக்காளியம்மன் கோவில் கருவறை மேற்கூரை இல்லாதது. விண்ணை நோக்கி திறந்திருக்கும். இப்போது தோன்றுகிறது மனமும் கூட அப்படித்தானே. சிலவற்றை கடந்து செல்லலாம் தவிர்க்க முடியாது.

தன்னுடைய கவனகுறைவிற்காக ஆய்வத்தில் அடிக்கடி கலங்கும் கண்களுடன் UV chamber ரின் உள்புறத்தை பார்த்தபடி முகத்தை மறைத்து நிற்பவளை,தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே புரிந்து கொள்ள முடியாது பால்கனியில் நிற்பவளை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.





காற்றில் துளையுண்ட மூங்கில்கள்

அசையும் இந்த மலையில்

மேற்கிலிருந்து வரும் காற்று

அந்தத்துளைகளில் புகுந்து இசையாகிறது,

குளிர்நீர் அருவி

இன்னிசை தொகுதி என ஒலிக்கிறது

அடிக்குரலில் கலைமான் கூட்டம் வங்கியம் போல ஒலியெழுப்புகிறது

மலையகத்துப் பூங்காட்டை 

வண்டுகள் யாழ் என இசைக்கின்றன

இந்த மலையிசை கேட்டு வியந்து

மந்திகள் மிரண்டு பார்க்கின்றன.

மூங்கில் வளரும் மலையடுக்கத்தில்

நாட்டிய மங்கையாய் மயில்கள் உலவும்

நாட்டில் தோன்றியவன் அவன்

கைகளில் பெரியவில்லும் அம்பு கொண்டு

நீண்டதந்தமுடைய யானையைத் தேடி..நம்

திணை புனத்தின் வாயிலில் வந்து நின்றான்

காடு ஒலிக்கும் அந்த அதிகாலையில்

அவனை பார்த்தவர் பலர் தோழி நீ வாழ்க

அவர்களுள் நான் மட்டும்

காடு ஓசையிடும் நள்ளிரவில்

தலையணையில் முகம் புதைத்து

நீர் நிறையும் கண்களுடன் நெகிழ்வது ஏனோ!








  





Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...