Skip to main content

2022_ மீண்டும் மீண்டும்:2

விடைபெறுதலும் தொடக்கமும்

 2022 ஜனவரியில் என்னுடைய நான்காவது சிறுகதை தொகுப்பான கடல் வெளியானது. என்னுடைய சிறுகதை தொகுப்பில் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பு கடல் என்று நினைக்கிறேன். வாசகசாலையின் ஸ்பாட் லைட் நிகழ்வில் விமர்சகர் ஜா.ராஜகோபாலன் கடல் தொகுப்பை குறித்த முக்கியமான உரையை வழங்கினார். 

வழக்கம் போல இந்த ஆண்டும் தொடர்ந்து மாதம் ஒரு சிறுகதை வெளியானது . இரண்டு மாதங்கள்  இரண்டு மூன்று கதைகள் வெளியாகின. 

வெந்தழலால் வேகாது கட்டுரை தொடருக்காக தொடர்ந்து கி.ராவையும் அழகிரிசாமியையும் வாசிக்கிறேன். நிதானமாக ஒரு நாளைக்கு இருகதைகள் என்று வாசிக்கிறேன். துணை நூல்களாக அழகிரிசாமி கி.ராவிற்கு எழுதிய கடிதங்கள்,கி.ராவின் சங்கீத நினைவலைகள்,பெண் எனும் பெருங்கதை,முரண்பாடுகள் என்ற நாடகம்,கரிசல் காட்டு கடுதாசி மற்றும் கி.ராவின் உரைகளை, பேட்டிகளை யூடியூபில் பார்க்கிறேன். இந்த நேரத்தில் அழகிரிசாமியின்  கொலாக்கால் திரிகை என்ற ஆவணப்படத்தை பார்த்தது முக்கியமானது. எப்போதும் ஒரு எழுத்தாளரின் நூலை முடித்தப்பின் அடுத்ததாக என்ன என்று பார்ப்போம்.

இந்த நண்பர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் இணையாக வாசிப்பது புதுவாசிப்பு அனுபவமாக உள்ளது. முற்றிலும் வேறுவேறான எழுத்து. மனதில் அழகிரிசாமியின் கரிசல் ஒருமாதிரி விரிகிறது. கி.ராவின் கரிசல் முற்றிலும் வேறானது.

முதலில் மொத்தமாக வாசித்து பதினோரு கட்டுரைகளை எழுதி வைத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் மெதுவாக மாதமாதம் வாசிப்பது நன்றாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மூன்றாவது கட்டுரையை முடித்தேன். காலவரிசைப்படி வாசித்து எழுதுகிறேன் என்பதால் தேர்வு செய்து வாசிப்பதற்கு வழியில்லை. ஆனால் மூன்றாவது கட்டுரைக்கான வாசிப்பில் முக்கால்வாசிக் கதைகள் காதல் கதைகள். 

அகமும் புறமும் கட்டுரைக்கும் தொடர்ந்து சங்கப்பாடல்களை புரட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் படித்த பாடல்கள் முன்பே தீர்ந்துவிட்டன. அய்யா வாங்கி வைத்திருக்கும் சங்கப்பாடல் புத்தகங்களை இதற்காக எடுத்துள்ளேன்.

இந்தத்தொடரை எழுதத்தொடங்கியதன் தனிப்பட்ட பயன் ஒன்று நடந்திருக்கிறது. சங்கப்பாடல்களை இயல்பாக வாசிக்க முடிகிறது. அர்த்தமாகிறது. ஒன்றிரண்டு வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் கூட வாசிக்கும்போதே பாடலின் மனநிலை, பேசுபொருளை கண்டுகொள்ள முடிகிறது. கடந்த ஆறுமாதங்களாக சங்கப்பாடல்களுடன் இருக்கிறேன். என்னென்ன மண்டைக்குள்,நனவிலிக்குள் புகுந்திருக்கின்றன என்று பின்னால் தெரியும். இப்போது சங்கப்பாடல்கள் மிகவும் பிடிக்கிறது. அய்யா அடுக்கிக்கலையாமல் இருக்கும் சில புத்தகங்களை மெதுவாக இனி வாசிக்கலாம். ஒரு ஐந்து ஆண்டுகளாவது வாசிக்கலாம். கலிங்கத்துப்பரணியை வாசிக்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.

சுனில் வேறு ஆயிரம் மணி நேரம் வாசிப்பு சவால் தொடங்கியிருக்கார். வம்பாக சென்று நானே பெயர் கொடுத்துள்ளேன். நானாகவே சிவனே என்று வாசித்தாலும் வாசித்துவிடுவேன். நேரக்கெடு பதட்டமாக்கும். என்றாலும் வாங்கிய புத்தகங்களை எல்லாம் முடிக்க வேண்டும் என்றால் இவர்களுடன் இருக்கத்தான் வேண்டும். விஷ்ணுபுரம்,கொற்றவை போன்ற நாவல்களை மீண்டும் வாசிக்க வேண்டியுள்ளது.

வாசிப்பை 'சிலுவையின் பெயரால்' புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன்.

விஷ்ணுபுரம் விழாவில் தொடங்கிய கட்டுரையை அதிலேயே முடிப்போம்.

எழுத்தாளர் சிவாவின் புது சிறுகதைத்தொகுப்பான கரவுப்பழி நூலை ஜெ வெளியிட நான் பெற் றுக்கொண்டேன். முதன்முதலாக நண்பரின் நூலை எங்கள் இருவருக்குமான ஆசிரியரிடம் இருந்து பெறுவது என்பது முக்கியமான தருணம்.


சியமந்தகத்திற்கு கட்டுரை எழுதும் போது இதை எல்லாம் எழுதலாமா என்ற தயக்கத்துடன் தான் எழுதினேன். ஆனால் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கட்டுரை மிகவும் உணர்வுபூர்வமானது. அந்த நூல் ஜெ வின் கையெழுத்துடன் அவரிடமிருந்து எனக்குக்கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நூறு சதம் எதிர்பார்க்காத ஒன்று இது. சில திரும்பி வந்தே ஆக வேண்டும் நியதி இருக்கும் என்று நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. அவர் வாழ்ந்து காட்டியுள்ளது சமரசம் இல்லாத இலக்கிய வாழ்க்கை. அதில் நமக்கென பெற்றுக்கொள்ள அந்தரங்கமாக ஒன்றுண்டு. அது 'இயல்பாகவே செயலில் நம்பிக்கை ஏற்படுவது' என்று நினைக்கிறேன். செயலில் நம்பிக்கை ஏற்படுவதுதான் மிக மிக கடினம். செயலில் நம்பிக்கை ஏற்பட்டதும் செயலாற்றுவது என்பது இனிது. செயலின் விளைவு பற்றிய எண்ணம் இன்றி இருத்தல் விடுதலை. அப்போது செயல் திளைப்பாகிறது. செயல் என்பது புறம் சார்ந்ததோ அகம் சார்ந்ததோ..அவரவர் பிறப்பின் எல்லைக்கு உட்பட்டது. இதெல்லாம் ஜெ வினால் வந்த வினை. வினை என்றாலும் செயலே. இந்த ஆண்டும் அந்த 'வினை சூழ்க'.


விஷ்ணுபுரம் விழாவில் ஹமீத் அண்ணா ரொம்ப பிஸியாக இருந்தார். என்றாலும் அவ்வப்போது வந்து அட்டண்டென்ஸ் போட்டுவிடுவார். நான் வருவதற்கு முதல் நாள் மருந்து மாத்திரைகளை எடுத்து வைத்துவிட்டீர்களா என்று மின்னஞ்சல் செய்தார். எத்தனை பொறுப்புகளுக்கு இடையிலும் அன்பிற்கு நினைவு சக்தி உண்டு.


 டெய்சியும் அவ்வப்போது எதாவது உதவி தேவையா? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.


நாம் என்னத்தான் அறிவார்த்தமாக நடந்து கொண்டாலும் தமையன்களுக்கு நம்முடைய குறும்புத்தனங்களை கண்டு கொள்ளும் ஞானக்கண்கள் உண்டு. ஜா.ரா அப்படியானவர். விழா முடிந்து பெரும்பாலும் அனைவரும் விடைபெற்று சென்றுவிட்டிருந்தார்கள். தேவதேவன் அய்யாவிடம் ஒருமணி நேரம் போல பேசிவிட்டு கீழே வரும் போது ஜா.ரா நிற்கவும் மனதிற்குள் " ஐ..யாரிடமும் விடைபெறும் நாகரிகம் தான் இல்லை. இவரின் கேள்விக்காகவாவது இவரிடம் விடைபெறலாம்" என்று நினைத்துக்கொண்டே வந்தால் சுற்றி நான்கைந்து பேர் நிற்பதைக்கண்டதும் இடையூறு செய்ய வேண்டாம் என்று தோன்றிவிட்டது. சிவா சாரிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றோம். தமையன்களிடம் விடைபெறாத விழாக்கள் முடிவதில்லை.

 தொடங்குவதற்கு மீண்டும் ஒரு ஆண்டு என்பது பெரும்வரம். விரும்பிய எதையும் தொடங்கலாம். நடத்தலாம். தொடங்கியதை முடிப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...