எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும். நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என் முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை. 'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும். இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும். அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும். ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்க...