எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகள் மிகப்பிரலமானவை. அறம் கதைகளை எத்தனையாவது முறை வாசிக்கிறேன் என்று நினைவில் இல்லை. அறம் எப்போதும் புதுப்பிரதிதான். ஒவ்வொரு கதைக்கும் கண்ணீரில் தேங்கி நின்றுதான் வாசிக்க வேண்டும்.
நேற்று இரவு தாயார்பாதம் வாசித்தப்பின் தூக்கம் வர வெகுநேரமானது. ஆனாலும் ஏன் திரும்பத்திரும்ப அறத்தை வாசிக்கிறேன். ஜெ சொல்வது போலவே ஏதோ ஒரு தேக்கத்தை கடக்கவே அறத்தை நோக்கி செல்கிறேன் என்று நி்னைக்கிறேன். நான் சென்று பிரார்த்திக்கும் ஒரு இடம் போன்ற ஒன்று அது. என் வெறுமையை திசை திருப்ப வல்லவை இந்தக்கதைகள். என் முதல்வாசிப்பிற்கு பின் கதைகளை புத்தகத்தில் உள்ள வரிசையில் வாசிப்பதில்லை.
'மனசில தீ இருந்தா சரஸ்வதி வந்து ஒக்காந்தாகனும். அது அவ விதி' என்று அறம் என்ற கதையில் வரும்.
இப்படி எத்தனையோ இடங்கள். வரிக்கு வரிக்கூட சொல்லலாம். இந்த அனைத்து கதைகளிலும் உள்ள சன்னதம் மாதிரியான ஒன்று நம்மையும் பிடித்துக்கொள்ளும்.
அறம் அதற்குரிய இடங்களை அடைந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி நான் என்ன எழுத இருக்கிறது என்று தோன்றும்.
ஆனால் தாயார்பாதம் விடவில்லை. அறத்தில் மனதிற்கு மிக நெருக்கமான கதை. பெண்ணை பாடிய எந்த இதிகாசத்திற்கும் குறையாத உணர்வு எழுச்சி கொண்ட நவீனக்கதை என்று தோன்றும்.
அவளுக்கென்று ஊரில்லை. அவளுக்கென்று தெய்வமில்லை. அவளுக்கென்று தாய்தகப்பனில்லை. அவளுக்கென்று கணவனில்லை. இறுதியில் அவளுக்கென்று அவள் மனம் கூட இல்லை.
இருப்பதெல்லாம் கைகள் மட்டும் தான். வேலை செய்யும் கைகள். துடைத்து கழுவிக்கொண்டே இருக்கும் கைகள். தன் மீது விழுந்த அசிங்கத்தை துடைத்து துடைத்து மாளாத கைகள். அத்தனைக்குப் பிறகும் எஞ்சியிருக்கும் அது என்ன? கதையில் கூறப்பட்டுள்ள மலம் என்பது மலம் மட்டுமா? அதை அன்றே குழந்தை தன் மடியில் இருந்த மலமாய் சுத்தப்படுத்தியிருப்பாள். பெண்ணென அவள் மீது வைக்கப்பட்டவற்றை அனுதினமும் சுத்தப்படுத்துகிறாளா?
தோற்றம் என்று சொல்லப்படும் மாயையா, தன் சங்கீதத்தை நிறுத்திய ஆணவத்தையா,தன் தந்தை மீது விழுந்த அவமரியாதையையா,செல்வமில்லாத தன் வறுமையின் மீது விழுந்த அதிகாரத்தையா,ஒரு பெண் என தன்கணவனின் அலட்சியத்தையா,காதல் அறியாத தன்னுடலில் படிந்த கரங்களையா? மனுசி என்றே தன்னை உணராதவர் தந்த தாய்மையின் வடுக்களையா? என்று எதை அவள் துடைக்கிறாள்.
சிற்றுடலையும் மடித்து குறுஉடலாக்கி அவள் இந்த பூமியில் தேடுவது எதை?
அவள் கைகள் அத்தனை சுத்தப்படுத்தியும் மாறாத ஒன்று எத்தனை களிம்பேறியிருக்க வேண்டும். இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டும்... அந்த களிம்பை அகற்றி அதனுள் உறையும் ஆதியை காண்பதற்கு.
கொட்டி பரவி அவள்மனதை கொன்ற விஷம் எது?
இந்த அனைத்தையும் அவளை யாருமறியாமல் கடித்த கருந்தேள் அறிந்திருக்கக்கூடும்.
காதல் ஒருபுறம் பொய்யான ஒன்றாகவே கிடக்கட்டும். அன்பு இல்லாத மனதில் எங்கிருக்கிறது ஔி? கனியாத ஒன்றில் எங்கிருக்கிறது இனிமை? பூக்காத ஒன்றில் எப்படி வந்து அமர்கிறது தெய்வம்?
மனம் இல்லாத இடத்தில் சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?
இந்தக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரைக்கும் கேள்வி இதுதான். சங்கீதம் அமர்ந்திருக்கும் இடம் எது?
Comments
Post a Comment