ஆழி : என்னுரை

                 



எழுத்துமுன்னோடிகளுக்கு எப்பொழுதும் என் பேரன்பும் வணக்கங்களும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.



முதலும் முடிவும் அற்ற முழுமை


மனித மனத்தின் உணர்வுநிலைகளை மாற்றத்திற்கு உள்ளாகும் ஒன்றாகவே நாம் பார்க்கிறோம். ஆனால் மொத்தமாக மானுடம் என்ற அளவில் பார்த்தால் உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுதல் என்பது  மாறாத நியதி. மானுடம் என்ற எல்லையை கடந்து உயிர்க்குலத்திற்கு பொதுவான நியதி. அடிப்படைஉணர்வுகளை நியதிகள் என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மாற்றத்திற்குள்ளாகும் ஒன்றை நியதி என்று எப்படி சொல்வது? 

தனி மனிதனுக்குள் உணர்வுகள் கொந்தளித்து மாறிக்கொண்டே இருக்கின்றன. மானுடத்திரளிற்கு ‘மாறிக்கொண்டே இருக்கும் உணர்வுகள்’ பொதுவானவை என்பதால் அவை அடிப்படை உணர்வுகள் என்ற இடத்தில் இருந்து  நியதியாகவும் ஆகிறது. 

நம்பள்ளி வயதில் கணித வகுப்பில் கைகளில் காம்பஸ்ஸுடன் அமர்ந்த அந்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். தொடங்கிய வட்டத்தை முடிக்கும் பதட்டத்துடன்,நம்முடைய அனைத்து புலன்களையும் அந்த சிறுபுள்ளியில் குவித்து அந்த வட்டத்தை நிறைவு செய்யத் தொடங்கினோம். சிலருக்கு முதல் முயற்சியில்  சரியான வட்டம் வந்துவிடும். சிலருக்கு சற்று விலகியும், சிலருக்கு மிக விலகியும், இன்னும் சிலர் தொடங்கிய இடத்திலேயே நின்றிருந்தோம்.

கணித ஆசிரியர், “காம்பஸ்ஸையும் பென்சிலையும் இறுகப்படிச்சு சுத்து..ரொம்பவும் இறுக்கிப்பிடிச்சு அங்கியே நிக்காத.நோட்டை சுத்தாத..உன்னோட கையை சுத்தி வரை..கைய எடுக்காம முடி,” என்று எத்தனை எத்தனை அதட்டல்களும், கரிசனங்களுமாக நம்  வட்டத்திற்கு மேலே குனிந்து நின்றார். ஒரே வட்டம் தான். நமக்கு எத்தனை எத்தனை விதமாக சிக்கல்கள். எத்தனை விதமான வட்டங்களை வரைகிறோம். கணிதத்தில் வேண்டுமானால் முழுமையாகாதவை வட்டங்கள் இல்லை என்ற விதி இருக்கலாம். இலக்கியத்தில் பூர்த்தியாகாத வட்டங்கள் வசீகரமானவை அல்லது மையத்திற்கு உரியவை. வட்டத்திற்கான தொடக்கம் எங்கோ நிகழ்கிறது. முடிகிறதும் நம்மிடம் இல்லை. இடையில் உள்ள பயணம் நமக்கு முக்கியமானது. அதைத்தான் இலக்கியம் எப்போதும் பேசுகிறது. இங்கே உணர்வு,செயல் என்ற  தன்னுடைய சின்னஞ்சிறு வாழ்க்கை வட்டத்தை மானுடம் வாழ்ந்து முடிக்கிறது.

இந்தத்தொகுப்பில் சிறுவர் சிறுமியரிலிருந்து, நூறுவயதை எட்டப்போகும் பழுத்த முதுமையான மனிதர்கள் வரையான கதாப்பாத்திரங்கள் உள்ளனர். அவர்களின் அன்றாட சிக்கல்களும், உணர்வு ரீதியான போராட்டங்களும்,மௌனங்களின் ஆழங்களும் கதைகளில் கையாளப்பட்டுள்ளன. சிறிய சிக்கல் தானே என்று நாம்  எதையும் ஒதுக்கிவிட முடியாது. உற்ற காலத்தில் சிறுதுகளும் கண்ணை பதைக்கவைப்பது . ஜீவா என்ற கதையில் அந்த சின்னப்பையன் ஜீவாவிற்கு அந்தத்துயரம் கடக்கமுடியாததாக இருக்கிறது. இந்தத்தோணிக்கு அந்த ஆழி மிகப்பெரியது. சிலுவைப்பாதை என்பது ஏசுவிற்கு வேறு. இந்தக்கதையில் உள்ள குட்டிப்பெண் சாந்திக்கு வேறு. இரண்டும் சிலுவைப்பாதைதான்.

இந்த அனைத்துக்கதைகளிலும் மனிதவாழ்க்கையில் வெவ்வேறு வயதுகளில் மனிதன் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமாக அலைகழிப்புகளும், அதிலிருந்து அடுத்த நகர்த்தலுக்கான சிறு தொடக்கமும் உள்ளன . இந்த உணர்வுப்பூர்வமான சிக்கல்களை கொண்ட சக்கரம் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆரக்காலிற்கும் ஒவ்வொரு அலைகழிப்புகளால் ஆனது இந்தப்பயணம். 

இன்னொரு தளத்தில் மானுடத்திற்கான பொது உணர்வு தளங்களில் இருந்து  நுண்ணிய வேறுபாடுகளை கொண்ட ‘தனியாள் வேறுபாடுகளைக்’ கொண்ட கதைகள் இவை. அப்படிப்பார்த்தால் ஒவ்வொன்றும் தனித்தன்மையானவை. ‘தனியாள் வேறுபாடு’ என்பது கற்றலில் இருந்து வாழ்வின்  சிக்கல்களை எதிர்கொள்வது வரையான விஷயங்களில் உளவியலின் மிகமுக்கியமான கருதுகோள். [Henry Sidgwick), 1894 என்ற அறிஞரின் தேடல் இது]  .

உணர்வுகளே இதுவரை மானுடத்தை நகர்த்தி வந்திருக்கின்றன. அறிவு என்பது அன்பை நடத்திக் கொள்வதற்கான கருவி என்று நினைக்கிறேன். அந்தக்கருவி ஒரு எல்லையில் அன்பின் முன்னால் பணிகிறது அல்லது அன்பின் துணையால் வெற்றிக்கொள்கிறது அல்லது தோல்வி அடைகிறது. கனிந்த குணாம்சம் கொண்ட அனைத்தையுமே அன்பென்று சொல்லலாம். அன்பின் வரையறைகள் என்று நாம் கொண்டவற்றுள் இருப்பது மட்டும் அன்பல்ல. அது ஒரு ஆக்கும் விசை என்பதைப்போலவே அழிக்கும் விசையும் கூட.

அன்பு ஆதி உணர்வு. அன்பிலிருந்து பிறந்தவையே கருணை,சமாதனம் போன்ற ஒத்தவிசைகள். வெறுப்பு, சுயநலம்,வன்முறை இன்னபிற மாற்று அம்சங்களும் அதிலிருந்து பிறந்தவையே.எனில் உருவாக்கிய ஒன்றால் மட்டுமே, தான் உருவாக்கியவைகளை கையாள முடியும் என்று நம்புகிறேன். அன்பு என்பது தனி மனிதனுக்கானது என்பதைக் கடந்து இதுவரையான மானுடத்தை நகர்த்தி வந்த விசை என்றும், இனிமேலும் நகர்த்தி செல்லும் வலிமை உடைய விசை என்றும் நம்புகிறேன்.

ஒன்றை ஒன்று அழித்து உருவானது தானே இன்றுள்ள உயிர்குலங்கள் என்று கேட்கலாம். அது நியதி. இனிமேலும் அதுதான் நியதி. இந்த நியதிக்குள் மாறா நியதியாக இருப்பது ஒன்று. அதுதான் தன் சந்ததிகளை காக்கிறது. அது பசி இன்றி வேட்டைக்கு ஒருஅடியைக் கூட முன்னெடுத்து வைக்காது. காட்டுக்குள் தன் இனத்தின்  பலகீனமாக உயிர்களை பாதுகாப்பது. தன் எச்சத்தில்  எல்லைகளை உருவாக்குவது. அந்த எல்லைகளை  மீறலாகாது. 

எல்லாவற்றிலும் எல்லைகளும், கட்டுப்பாடுகளும் உண்டு என்பதே இன்றைக்கு நாம் உணரவேண்டியது. அந்த எல்லை அன்பால் ஆனதாக இருத்தால் அது எளியதும் வலியதுமாகும். காலந்தோறும் அந்த எல்லை அழிக்கிறது, ஒடுக்குகிறது,அதிகாரம் செய்கிறது மற்றொரு புறம் அதுவே தன்னவர்களை  பாதுகாக்கிறது. நாம் அதற்கு நாடு என்றும், ஊர் என்றும், இனம் என்றும், குடும்பம் என்றும், உறவு என்றும், ஜனநாயகம் என்றும் எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளலாம்.

இந்த எல்லையை அன்பின் நியதி என்று கொள்ளலாமா? என்ற கேள்வி எனக்கு  உள்ளது. அதற்குள்ளே இருந்தும், அதை மீறியும், நாம் அடைந்த வாழ்வும்,சமூகஅமைப்பும்,அறிவும், ஞானமும் நம்முடைய பெரும்சொத்து. அதன் பின்னே உள்ள அழிவிற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டியவர்கள். இந்த ஆக்கங்களாலும் அழிவுகளாலும் ஆனதே மானுடத்தின் கதை. ஆனால் அந்த நியதி என்றும் அங்கேயே நிற்கிறது. நண்பர்களே... நாம் அதன் எல்லைகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்..ஆனால் மாற்றி மாற்றி நாம் வரைவது அந்த மாறாத நியதியைத்தானே. அதுவே நம்மை முன்செல்ல அனுமதிக்கும். நம்மை  வாழச்சொல்லும். இங்கு பிறந்த நமக்கு வாழ்வதை விட,வாழவிடுவதை விட   முக்கியமான பணி என்ன?


                                                            அன்புடன்  ,

                                                             கமலதேவி

                                                       

                                                         03/12/2022                           

                                                     காலை 6.20

                                                     பா.மேட்டூர்

                       

kamaladevivanitha@gmail.com


நன்றி

சொல்வனம் இணையஇதழ்

தமிழினி இணையஇதழ்

வாசகசாலை இணையஇதழ்

புரவி கலைஇலக்கிய இதழ்



ஆழியின் முதல் பிரதியை சிறை கைதிகளுக்கான புத்தகசேகரிப்பிற்காக அளிக்க சொல்லியிருந்தேன். நான் சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்றதில்லை என்பதால் நான் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. எதேச்சையாக கார்த்திக்அண்ணாவிடம் பேசும் போது அவரிடமுள்ள பழைய புத்தகங்களை இங்குக் கொடுப்பதாக சொன்னார். எப்பொழுதும் என் புத்தகங்களின் முதல்பிரதி இவர்கள் இருவரில் யாருடைய கைகளிலாவது இருக்கும். இந்த முறை இங்கு கொடுக்கலாம் என்று தோன்றியது. ஐந்து என்பது ஒரு மிகச்சிறிய எல்லை. சின்னஞ்சிறு முழுமை. ஐந்துபுத்தகங்களும் அங்கு தேவைப்படும் யாரோ ஒரு வாசகருக்காக அங்கிருக்கட்டும். அனைவரின் ஆழியும் சுழலட்டும். எங்கோ எதனாலோ எப்படியோ சிக்கிக்கொண்ட ஆழிகளின் அடுத்த ஆரக்கால் மெல்ல சுழன்று திரும்பட்டும் என்று இந்த அதிகாலையில் கிழக்கே உதிக்கும் பொழுதின் முதல்வனை பார்க்கிறேன். அவனின் தேர்ஆழி யாருக்காகவும் நிற்பதும் இல்லை.. யாருக்காகவும் சுழல்வதும் இல்லை. அது தன்னியல்பான ஒன்று. அது அனைவருக்கும் உடனிருக்கட்டும்.


Comments

Popular posts from this blog

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்