வெந்தழலால் வேகாது : 1

    எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகிரிசாமி நூற்றாண்டில் அவர்களின் சிறுகதைகள் குறித்த வாசிப்பனுபவக் கட்டுரைத்தொடர்  ஒன்றை புரவி இதழில் எழுதுகிறேன். நவம்பர் 2022 இதழில் வெளியான கட்டுரை.   

ஆட்டிப்படைத்தல்

ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்? 

நாம் காலத்தை நூறுநூறு ஆண்டுகளாக பிரித்து கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும் தான். தொடக்கமும் முடிவும் அற்ற ஒன்றின் முன் நிற்கும் பதற்றம் மனிதனுக்கு மட்டுமேயான தனித்த உணர்வுநிலை. 

காலத்தின் முன்னால், இலக்கிய செயல்பாடு என்பது மனிதன் தன்னை நிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் தலையாயது என்று நினைக்கிறேன்.

ஊழித்தீ என்பது காலம் தான். அது அணுகணத்தையும் எரித்து  ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. நாமே அணுகணமும் எரிந்து கொண்டேயிருக்கும் ஊழித்தீயின் சின்னஞ்சிறு வடிவம் தானே. காலம் தன்னை நிகழ்த்திப்பார்க்கும் களம் நாம். நாம் நம்மை  நிகழ்த்திப் பார்க்கும் களம் கலைஇலக்கியம். 

நிலையின்மை என்ற பதற்றத்திற்கு  மாற்றாக நடுகற்கள், பிரமீடுகள், கல்லறைகள், கோவில்கள்,சிலைகள் என்று உலகம் ஏதோ ஒன்றை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதில் உலகப்பொதுமையானது இலக்கியம். தனிமனிதன் தன் உள்ளுணர்வால் கண்டடைந்தவை மற்றும் சமூகமாக  கண்டுகொண்டவை என்று இருவகையான கண்டடைதல்கள் உண்டு. அவற்றை கலையாக, இலக்கியமாக கைமாற்றி வைக்கிறான். இலக்கியம் மனித வாழ்வுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. புறவாழ்வு தொடர்ந்து அதிவிரைவாக மாறிக்கொண்டே  இருக்கிறது. அதற்கு மாற்றாக அகம் ஆதித்தேடல்களையே ஆதாரமாக  கொண்டிருக்கிறது. அதனால் அகத்தை கையாள்வது நமக்கு தொடர்ந்து சவாலாக உள்ளது. தொடர்ந்து இலக்கியம் அகத்தையே பேசிவந்திருக்கிறது. இனியும் அதையே பேசும்.

இதன் அடிப்படையில்  படைப்பாளியின் நூற்றாண்டு முக்கியத்துவம் பெறுகிறது.  காலத்தால் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும் இந்த நிலத்தில் மாறாதவை என மனிதனுக்கு எஞ்சுவபவை  எவையோ, அவற்றுடன் உரையாடும் படைப்பு எப்போதைக்குமானது.

கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணன் இருவருக்கும் இந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நூற்றாண்டு தொடங்குகிறது. ஒரே ஊரில் ஒரே காலகட்டத்தில் பிறந்து,ஒரே  சூழலில் வளர்ந்து நண்பர்களாக இருந்த இரு படைப்பாளிகள் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை எழுதியிருக்கிறார்கள். இருவரும் தமிழ் இலக்கியம் தவிர்க்க முடியாத படைப்பாளிகள். இவர்களை இயக்கிய விசை என்ன? அவர்களின் படைப்புகளின் வழியே அந்த விசையை கண்டுகொள்ள முடியும். அந்த விசை வாழ்வின் விசை. அதை கண்டுகொள்ளும் வாய்ப்பாக அவர்களின் நூறாவது ஆண்டில் அவர்களின் கதைகளுடன் இருப்போம். கி.ராவின் நாச்சியாரோ, அழகிரிசாமியின் ராஜாவோ நம் அருகிலேயே இருக்கக்கூடும். அவர்களே இந்த வாழ்வை தித்திப்பாக்குகிறார்கள் அல்லது நிறைவு கொள்ள செய்கிறார்கள்.

இருவரின் கதைகள் பற்றிய கட்டுரைகளை தராசின் இருதட்டுகளை போல எண்ணிக்கொண்டு இவர் உயர்த்தி,இவர் தாழ்த்தி என்ற கணக்கு வேண்டாம். சூரியன் சந்திரன் சூழற்சி போல ஒன்றை ஒன்று நிரப்பி ஒரு நாள் என ஆகும் காலத்தின்,நிலத்தின் பிரதிநிதிகள் இவர்கள் என்று கொள்வோம். ஒரு கதையில் ஔி சுள்ளென்று இருக்கலாம். மறுகதையில் தண்மை விரிக்கலாம். அந்தியின் அறியாத துயரம் போல ஒன்று. இரவின் ஔிரும் கண்கள் என ஒன்று என்று இவர்களின் கதைகளில் பல்வேறு உணர்வு நிலைகள் கொண்ட மாந்தர்களும், அவர்களின் வாழ்வும், அகமும் உள்ளன. தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவரே எந்த படைப்பையும் கண்டுகொள்ள முடியும். இந்த கட்டுரைகள் அத்தகையதொரு பயணமாக அமையட்டும்.

ஆட்டிப்படைத்தல் என்ற சொல்லானது பாற்கடலை கடைந்து நஞ்சையும், அமுதையும் எடுத்த புராணநிகழ்வை குறிப்பிடும் பேச்சுவழக்கு சொல். இலக்கியம் அத்தகைய  ‘ஆட்டிப்படைத்தலை’ தான் செய்கிறது என்று நினைக்கிறேன். இந்த வாழ்வை, நிலத்தை, அதன் ஜீவராசிகளை, அவற்றின் உணர்வுகளை, படைப்பாளி தன் மனதிலிட்டு தானே மந்திர மலையாகி, தானே பாற்கடலாகி ,தானே அசுரனாகி, தானே தேவனுமாகி படைப்பது இலக்கியம்.

கி.ரா ஒரு காணொளி நேர்காணலில் உங்களை யார் அதிமாக வாசிக்கிறார்கள் என்ற கேள்விக்கு புன்னகையுடன், “என் வாசகர்களில் பெண் வாசகர்கள் அதிகம். என்னுடைய எழுத்துக்களை பி.எச் டி பண்ணினது பூராவும் பெண்கள். இப்பவும் கூட தூரத்துல எங்கியோ இருந்து பேசறது பெண்ணாதான் இருக்கா..பெண்களை பற்றி நான் எழுதுகிற அத்தனை விஷயங்களும் அவங்களுடையதா இருக்கு,”என்கிறார்.


 

   கி.ரா[ நன்றி:புதுவை இளவேனில்]



கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையை,பாடுகளை எழுதும் கதைசொல்லி என்ற பொது பிம்பம் கி.ரா விற்கு உண்டு. அந்த பொது பிம்பத்திற்குள் இருக்கு சிறப்பு அம்சங்கள் உலகம் முழுமைக்குமானவை. அந்த வகையில் கி.ரா பெண் உணர்வுகளை உணர்ந்து எழுதிய படைப்பாளிகளில் தனித்துவமானவர் என்று ஒரு வாசகியாக என்னால் சொல்லமுடியும். கன்னிமை என்ற கதை அந்த வகையில் ஒரு உதாரணக் கதை. ஒரு பெண் எந்தப் பருவத்தில் அன்னை என்ற சுயநலம் தீண்டாத பேரன்னையாக இருக்கிறாள் என்பதை கவித்துவமாக சொல்லும் கதை.

கு.அழகிரிசாமியின் வரும் பெண்கள் வேறுவகையானவர்கள். ராஜா வந்திருக்கிறார் என்ற கதையில் கு.அழகிரிசாமியின் தாயம்மாள் தாய்மையின் விரிவைத் தொடும் கதாப்பாத்திரம்.


                       கு. அழகிரிசாமி


இருவருமே இளமையில் பொதுஉடைமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். இயக்குநர் தங்கர்பச்சான் எடுத்த நேர்காணலில் “இன்னும் எதையாவது எழுதாமல் விட்டுவிட்டோம் என்ற ஏக்கம், தவிப்பு உங்களுக்கு இருக்காப்பா?” என்று கேட்கிறார். “ஆசைன்னு வேணுன்னா சொல்லலாம். என்னுடைய ஜெயில் வாழ்க்கையை இன்னும் எழுதவில்லை. உடல் நலம் சரியில்லாமல் நிறைய நாட்கள் மருத்துவமனையில் இருந்திருக்கேன். அதையெல்லாம்  எழுதவில்லை,”என்கிறார்.

அடுத்ததாக படைப்பாளியின் அகமும், வாழ்வும் கூட அவன் படைப்பிற்கு நிகரானது தான். உலகம் முழுவதும் படைப்பாளிகளுக்கேயான தனிப்பட்ட அலைவுகள் உள்ளன. கு.அழகிரிசாமி 1970 ல் மறைந்து விட்டதால் கி.ராவின் பகிர்தலின் வழியே இவரை அறியமுடிகிறது. கு.ஆழகிரிசாமி வாழ்வில் மிகவும் சிரமப்பட்டார் என்று கி.ரா சொல்கிறார். இடைசெவலில் முதன் முதலாக எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர் அழகிரிசாமி. முதலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலை பின் பத்திரப்பதிவு அலுவலக வேலையில் இருந்தார். அவ்வாறே நல்ல சம்பளம் உள்ள வேலையில் இருந்திருக்கலாம். ஆனால் இலக்கிய இல்லாமல் வாழமுடியாத தவிப்பு அவரை அலைகழித்ததது. இருக்கும் வேலையை விட்டுவிட்டு சென்னையில் இதழாளராக வேலையில் சேர்ந்தார். இதழாளருக்கு உரிய ஊதியத்தில் வாழ முடியாமல் மீண்டும் பத்திரபதிவு அலுவலக வேலைக்குத் திரும்பினார். மறுபடியும் ஆனந்தபோதினி இதழில் சென்று சேர்ந்தார். பின் மலேசியாவில் சக்தி நேசன் இதழில் ஆசிரியராக இருந்தார். தமிழகம் திரும்பி மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார். இறுதி காலத்தில் சுதந்திரமான எழுத்தாளராக மட்டும் இருந்தார்.

கி.ரா வும் கு.அழகிரிசாமியும் மாறி மாறி எழுதிக்கொண்ட கடிதங்கள் வழியே இருவரின் நட்பை நாம் அறிய முடிகிறது. தினமும் கடிதங்கள் எழுதினார்கள் என்பதை அறியும் போது எத்தனை அணுக்கமான நண்பர்கள் என்ற வியப்பு நமக்கு தோன்றுகிறது. இருவரும் தங்களுக்குள் எழுதிக்கொண்ட கடிதங்கள் மற்ற எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

அடுத்த சிறப்பம்சம் இசை. இசை என்பது உலகப்பொதுமை என்பதை விட அனைத்து உயிர்களுக்குமே பொதுமையானது. இருவருக்கும் காருக்குடி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசைமீது ஈடுபாடு தொடங்கியிருக்கிறது. அந்த ஈடுபாடு இசையின் மீதான ஈடுபாடாக வளர்ந்திருக்கிறது. குரலிசை கலைஞரான விளாத்திக்குளம் சுவாமிகள் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜரத்தினம் பிள்ளையின் இசையில் இவர்கள் இருவருக்கும்  ஈடுபாடு அதிகம். கு.அழகிரிசாமி கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். கி.ரா வாய்ப்பாட்டு, நதஸ்வரம் போன்றவற்றை  முயற்சித்து உடல் ஒத்துழைக்காததால் விட்டுவிட்டார். இருவரும் தொடர்ந்து இசை சார்ந்த தேடல்களில் இருந்திருக்கிறார்கள். அது அவர்களின் படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

படைப்பாளர்களுக்கு இசை ஒரு விஷேசமான தகுதி என்று தோன்றுகிறது. உதாரணமாக இசை பற்றி பேசும் கி.ராவின் ஓரிரு வார்த்தைகளிலேயே அதை நம்மால் கண்டு கொள்ள முடிக்கிறது. கர்நாடக சங்கீதம் மட்டுமல்ல அமெரிக்க ஐரோப்பியா இசை பற்றிய தன் அனுபவத்தை சொல்லும் போது, “ரொம்ப ஸ்ருதி சுத்தமா இருக்கு,” வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் சொல்கிறார்.

எழுத்திலும் ஒரு தாளம் உண்டு. அந்தத்தாளம் வாசிப்பவர்களின் உணர்வுநிலையை படைப்பில் இருந்து மேலேற்றும் வல்லமை கெண்டது. உரைநடை இலக்கியத்தில் அந்த தாளத்தை கி.ராவின் கதைகளை வாசிக்கும் போது உணரமுடியும். அழகிரிசாமி புலவர்களின் தனிப்பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தியவர். நான்காயிரம் பாடல்களை வாசித்து  இருநூறு பாடல்களுக்கு விளக்கம் எழுதியிருக்கிறார். அதே அளவு நாட்டுப்புற பாடல்கள், கதைகள் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர். இதழாசிரியராக இருந்தவர். எனவே இருவரின் மொழி நடையும் வேறு வேறு. 

முதன் முதலாக தமிழில் சிறுகதைக்கான சாகித்யஅகாதமி விருது பெற்ற படைப்பாளி கு.ஆழகிரிசாமி. கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலிற்காக கி.ரா  சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.

எங்கிருந்து எழுதப்பட்டாலும்,எந்த கருவிகளை கொண்டு கையாளப்பட்டாலும் [அறிவியல் உட்பட] இலக்கியம் அடிப்படை உணர்வுகளையே பேசுகிறது. வாழ்வின் அடிப்படை சிக்கல்களை, கேள்விகளை, தேடல்களை கையாள்கிறது. எந்த எல்லைக்குள் நின்று [கரிசல் இலக்கியம்,நாஞ்சில் நாட்டு இலக்கியம், காவிரிக்கரை கதைகள் என்று எத்தனையோ வகை] பேசினாலும் இலக்கியம் உலகப்பொதுவான விஷயங்களையே பேசுகிறது.

வெந்தழலால் வேகாது என்ற தலைப்பின் கீழ்  இடைசெவல் நண்பர்களின் கதைகளை கண்டடையும் தருணமாக நமக்கு இந்த ஆண்டு அமையட்டும்.

பின் வரும் வாசிப்பனுபவம் இருவரின் முதல் பத்துக்கதைகள் பற்றியது. காலவரிசைப்படி கதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அழகிரிசாமியின் முதல்பத்து கதைகள்:

கு.அழகிரிசாமி  1942 ம் ஆண்டிலிருந்து 1943 ம் ஆண்டிற்குள் ஆனந்த போதினி,பிரசண்டவிகடன்,தமிழன்,சக்தி போன்ற இதழ்களில் தன்னுடைய பதினெட்டு, பத்தொன்பதாம் வயதிற்குள் முதல் பத்துக் கதைகளை எழுதியுள்ளார். இவர் வளரிளம் பருவ எழுத்தாளர்!

உறக்கம் கொள்ளுமா? என்ற முதல்கதை  ஆனந்த போதினி இதழில் வெளியானது.

இந்த பத்துக்கதைகளின் பொது உணர்வாக ‘பதின் பிள்ளையின் மெல்லுணர்வுகள்’ என்று சொல்லலாம். மெல்லுணர்வு என்ற பதத்தை காதலுடன் மட்டும் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. மனிதர்கள் மேல் கொண்ட கரிசனம்,சக உயிர்கள் மீது கொண்ட அன்பு என்று விரித்துக்  கொள்ளலாம். அந்த இளைஞனின் மெல்லுணர்வில் பொதுஉடைமை சிந்தனையும்,ஒரு கிராமத்தானின் பார்வையும் இணைந்து  உருவான கதைகள் இவை. வள்ளியம்மையின் அதிர்ஷ்ட்டம் என்ற கதையில் மட்டும் ஐம்பது வயதிற்கு மேலான வள்ளியம்மை என்ற கதாப்பாத்திரம் உள்ளது. மற்ற ஒன்பது கதைகளிலிலும் இருபத்தைந்து வயதிற்குள்ளான கதாப்பாத்திரங்களின் மனஉணர்வுகள் சார்ந்த கதைகள் உள்ளன.

உறக்கம் கொள்ளுமா? என்ற கதையானது மிக இளம் வயதில் மனைவியை இழந்த கணவன் மறுபடி ஒரு சந்தர்ப்பத்தில் மனைவியின் வீட்டில் தங்க நேர்கிற பொழுதின் கடுமையை கூறுகிறது.

இரவு என்பது கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு வேலையாக நண்பன் திருவனந்தபுரம் சென்றுவிட, நண்பனின் மனைவியுடன் இருஇரவுகள் ஒரு அறையில் தங்க நேரிடும் ஒருவனின் கதை. இரவின் விந்தையான மனநிலையையும், விடிந்ததும் எல்லாம் இயல்பாக மாறிவிடும் அதிசயத்தையும் அவன் வியந்து நினைத்துக்கொள்கிறான். பொழுது எப்படி மனிதமனநிலையை தீர்மானிப்பதாக உள்ளது என்பதன் விந்தையை பேசும் கதை. அதோடு இணைந்து கதை நாயகனின் கள்ளமின்மை இன்றைய வாசிப்பிற்கு நிறம் சேர்க்கிறது. 

கவியும் ராஜனும் மற்றும் வனஜம் போன்ற கதைகளில் காதல் உணர்வு தோன்றும் விதத்தை கதையாக்கியிருக்கிறார். எவனோ [எவளோ]

என்னகந் தொட்டு விட்டான்.

வினவக் கண்விழித்தேன்; - சகியே! என்ற பாரதியின் வரிகள்  இந்தக் கதைகளை வாசிக்கும் போது நினைவிற்கு வந்தது. இதில் வாசிப்பவருக்கு எந்த க்ரெடிட்டும்’ இல்லை. எழுத்தாளர் எங்கு அழைத்து செல்கிறாரோ அங்கு நாம் செல்கிறோம். நம்முடைய பங்கு என்பது ஒரு கதையை வாசித்தப்பின் அதை ‘யூஸ் அண்ட் த்ரோ’ ஆக்காமல் மனதில் ஒரு முறை ஓட்டிப்பார்ப்பது மட்டுமே. இந்த இரு கதைகளில் நாயகர்களில் ஒருவன் இளவரசன்,அடுத்தவன் 1940 களின் இளைஞன்.

விதவை, பைரவி போன்ற கதைகளில் நண்பனின் பிரிவு துயரத்தை கதையாக்கியிருக்கிறார். அந்த வயதில் ஸ்கேனித பிரிவுத் துயர் மிக ஆழமானது.

வள்ளியம்மையின் வாழ்க்கை என்ற கதையில் பெண்களின் பாடுகள் கதையாகியுள்ளன.

பித்தளை வளையல்,குழந்தையின் தியாகம் போன்ற கதைகளில் வறுமையான வாழ்வின் இக்கட்டுகளை கதையாக்கியிருக்கிறார்.

இவரின் ராஜா வந்திருக்கிறார் என்ற கதை தான் நான் வாசித்த முதல்கதை. ராஜா வந்திருக்கிறார் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. அங்கிருந்து திரும்பிப் பார்க்கும் போது இந்த கதைகள், அந்த உயரத்தை அடைய அவர் ஏறி வந்த தடங்கள் என்று கொள்ளலாம்.  முதல் அடியை எடுத்து வைப்பதற்குரிய பலகீனங்கள் உள்ள கதைகள். 

அன்றாடமான விஷயங்களை கதைகளாக்கி இருக்கிறார். அதிகாலையில் வீட்டு வாசல்களுக்கு சாணம்தெளிக்க வரும் பெண்ணின் காலையை ஒரு இளைஞனின் பார்வையில் கதையாக்கி இருக்கிறார்.பித்தளை வளையல்களை அணிந்து கொண்டு தன் கணவனின் உயர் அதிகாரி வீட்டு விழாவிற்கு செல்லும் பெண்ணின் மனநிலையை கதையாக்கியிருக்கிறார்.

அடுத்ததாக அன்றாடத்தின் தீவிரமான தருணங்கள் வருகின்றன. ஜாதிக்கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நண்பனின் மரணத்தை,அகதியாக வரும் இளம் விதவையின் ஒரே நம்பிக்கையான கைக்குழந்தையின் இறப்பை எழுதியிருக்கிறார். அன்றாடத்தின் ஈரம் போல இந்தக்கதைகளில் இசையுடன் இழையும் மனிதர்களும் வருகிறார்கள்.

மொத்தமாக இந்த பத்து கதைகளில் இருப்பது பரிவு என்ற உணர்வு நிலை. முதல் வாசிப்பிற்கு மிகஎளிய கதைகளாகவே இருக்கின்றன. என்றாலும் அதில் செயல்படும் பத்தொன்பது வயது எழுத்தாளன்  கவனிக்கும் வாழ்க்கை எனக்கு முக்கியமாக உள்ளது. 

பைரவி என்ற ராகத்தின் பெயரில் ஒரு நட்பின் கதையை எழுதியுள்ளார் . இதில் நண்பர்கள் இருவரின் நட்பின் ஆழமாக இருப்பது இசை ரசனை. வனஜம் கதையின் நாயகனும் கோயிலில் அமர்ந்து மணிக்காணக்காக  நாதஸ்வர இசை கேட்பவன்.

ஒரு புஞ்சைபூமியின் இலக்கியம் படைக்கூடிய பையன்கள் இருவரும் இசை ரசனையுடனும் இசையை ஆராதிக்கும் நிலையிலும் வாழ்ந்திருக்கிறார்கள். காவிரிக்கரையில் வாசிக்கப்படும் இசை இடைசெவலில் வேறு ஒரு தன்மைக்கு மாறலாம். அது வெயிலில் விழுந்து கிடக்கும் கேப்பைசெடியின் கருஇலைகளில் மினுக்கும் ஒரு சொட்டு தண்ணீர் என உருளும் ஔியாக தானும் மாறும். இவர்களின் படைப்பிற்கு அடியில் உள்ள ஈரத்தை இசை என்ற அனுபவம் அவர்களுக்கு அளித்திருக்கலாம்.

மணலூர் போன்ற சிறுகிராமம் முதல் மதுரை, திருச்சி வரையான பெருநகரம் வரை பலஊர்கள் இந்த கதைகளின் நிகழ்விடமாக உள்ளன. குறிப்பாக மண்ணின் அடையாளம் இல்லாத கதைகள்.

கு.அழகிரிசாமி காட்டும் மனிதர்களின் உணர்வுகள் மற்றும் குறிப்பிட்ட நிலமில்லாத கதைக் களங்கள் போன்றவை பின்னால்  வரும் கதைகளில் என்னவாகின்றன என்று அடுத்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

கி.ராவின் முதல் பத்துக்கதைகள்:

கி.ராஜநாராயணன் 1958 லிருந்து 1962 வரையான காலகட்டத்தில் சரஸ்வதி, தாமரை ,கலைமகள் இதழ்களில் எழுதியிருக்கிறார்.  தன்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயற்குள்ளாக முதல் பத்துக் கதைகளை எழுதியுள்ளார்.

இவர் தன்னுடைய மாயமான் என்ற முதல் கதை சரஸ்வதி இதழில் வெளியானது.

முதல் பத்து கதைகளிலேயே தோழர் ரங்கசாமி,தாத்தையநாயக்கர்,ராமசாமி நாயக்கர் போன்ற வழுவான கதாப்பாத்திரங்களை எழுதியிருக்கிறார். இரண்டாவது கதையான கதவு அவருடைய ஒட்டுமொத்த படைப்புகளை வாசித்தப்பின்னும் கூட ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நிற்கும் தகுதி உடையது. கரிசல் மண்ணின் மனிதர்கள் அதன் வீரியத்துடன் ஜடாயு,கரண்டு போன்ற தொடக்கக் கதைகளிலேயே எழுந்து வந்து விட்டார்கள்.

மண்ணின் கதைகள் என்று சொல்லுமளவிற்கு கதவு,மின்னல்,கரண்டு போன்ற கதைகள் நிறம் கொண்டுள்ளன.

இந்த பத்துக் கதைகளை மூன்று வகையாக பிரிக்க முடிக்கிறது. அன்றாடம்,அன்றாடத்தின் தீவிரதருணங்கள்,லட்சியவாதம் என்ற வகைக்குள் நம் வசதிக்காக வைத்து பார்க்கலாம். இப்படியெல்லாம் நினைத்து எழுத்தாளர்கள் எழுதுவதில்லை.

மின்னல் என்ற கதை. அன்றாடமான பேருந்து பயணத்தின் நெருக்கடியான சூழலை ஒரு இளம் தாயும், குழந்தையும் சட்டென மாற்றி போட்டுவிடும் தருணத்தை காட்டுகிறது. கி.ராவின் கதை சொல்லும் முறையில் உள்ள அந்த சரளம் வாசிப்பனுவத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்து செல்லும் தன்மையை தொடக்க கதைகளிலேயே கொண்டிருக்கிறது. இலக்கியத்தில் வயது ஒரு பொருட்டில்லை என்றாலும் கூட முப்பத்தைந்து வயதிற்கு மேலான கிராமத்து மனிதரின் இயல்பான நகைச்சுவை, எள்ளல், லாவகம் போன்றவை கைகூடிய கதைகளாக இருப்பதால், அழகிரிசாமியின் கதைகள் பற்றி இணைத்து எழுதுவதால், வயதை இங்கு கூற வேண்டியிருக்கிறது. அப்பொழுதே பாட்டாவிற்கு கதை சொல்லலில் அழகிய  ‘தோரணை’ வந்துவிட்டிருக்கிறது. 

மாயமான் கதையில் அரசு அளிக்கும் மானியத்தை நம்பி கிணறு வெட்டும் அப்பாவு செட்டியார் தன்னுடைய மொத்த சொத்தையும், வியாபாரத்தையும் இழந்து ஊரை விட்டு வெளியேறுகிறார். விவசாயத்தை பொருத்தவரை புதிதாக கிணறு வெட்டுவது என்பது தன்னையே அடகு வைப்பதைப் போன்றது. கிணறு வெட்டுதல் என்பது இன்று ஆழ்குழாய் கிணறு தோண்டுவதாக மாற்றம் பெற்றுள்ளது. பொதுவாக அறுபதுஅடியில் தண்ணீர் காட்டி… நூறுஅடியில் ஏமாற்றாத எங்கள் ஊரிலேயே எத்தனை அடி இறக்கினாலும் ஆழ்குழாயில் தண்ணீர் வராமல் சில  விவசாயிகளை கடனாளியாக மாற்றியிருக்கிறது. சிறு, குறு நில விவசாயிகளுக்கு இன்று விவசாயம் என்ற தொழிலே மாயமானை துரத்துவதைப் போலத்தான் மாறியிருக்கிறது.

ஜடாயுவில் வயோதிக தாத்தைய்யா ஒரு இளம் பெண்ணை நான்கு ஆண்களிடமிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் இறங்குகிறார். தோழன் ரங்கசாமி ஒரு லட்சியவாத இளைஞனின் கதை.

மனிதம், பலாப்பழம் போன்ற கதைகள் அன்றாடத்தின் பசியை, மனித ஆழத்தை விசாரிக்கின்றன. நெருப்பு கதையில் தீப்பற்றி எரியும் ஊரில் மனிதர்கள் ஒன்றுபடும் உணர்வை எழுதியிருக்கிறார்.

முன்பே கூறியதைப்போல கதவு அவரின் ஆகச்சிறந்தகதை. மிகஇயல்பாக குழந்தைகளின் வழியே மண்ணும் ,மனிதர்களும், உணர்வுகளும் எழுந்து வரும் கதை. இறுதியில் வாசிப்பவர்களையும் அந்த குழந்தைகளைப் போல   கதவுடன் கதை இணைத்துவிடுகிறது.

கி.ரா நடைமுறை விவேகத்திற்கு தான் வந்தப்பிறகு, அந்த விவேகத்தை இழக்கும் கதாப்பாத்திரங்களை கதையாக்கியிருக்கிறார். தோழன் ரங்கசாமி மற்றும் அப்பாவு செட்டியார் என்ற இருவரின் கதைகளும் ஒன்றுதான். அனுபவம் இல்லாமல் அகலக்கால் வைப்பது பற்றிய கதைகள்.குழந்தை நடைபயிலும் போது அகலமாக எட்டு வைத்தால் விழுந்துவிடும். அப்பாவு செட்டியார் லௌகீகத்திலும், தோழர் லட்சியவாதத்திலும் தங்களின்  இளமையின் தொடக்கத்தில் உண்மை நிலை புரியாமல்  அகலக்கால் வைத்து வீழ்கிறார்கள். நடைமுறைவாதிக்காவது குடும்பம் மிஞ்சியது. லட்சியவாதிக்கு உயிர்கூட மிச்சமில்லாமலாகிறது. இந்த இரண்டு கதைகளிலும் வருகிற தந்தைகள் தங்களின் மகன்களை பற்றிய பதட்டத்துடன் மறுப்பு சொல்கிறார்கள். பின் மகன்களின் வீழ்ச்சியை கண்முன்னால் கண்டு ஒன்றும் செய்யமுடியாதவர்களாக  இருக்கிறார்கள். ஆனால் ரங்கசாமி போன்ற கிறுக்கர்கள் தான் இலக்கியம்,கலை,புரட்சி என்ற மீசெயல்பாடுகளின் விதைகளாக இருந்து மானுட அறவேலியின் தொடர் கண்ணிகளாக தங்களையே ஒப்புக்கொடுக்கிறார்கள்.

கி.ரா இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர்.  விவசாய சங்க போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு முறை சிறை சென்றிருக்கிறார். பின் தன் அரசியல் நிலைபாடுகளில் இருந்து முற்றிலும் விலகி இறுதிவரை எழுத்தாளராக மட்டும் இருந்தார்.

ஒரு விவசாயியின் சீற்றம் கரண்டு  என்ற கதையில் வெளிப்படுகிறது. மேழி பிடித்து, மண்ணோடும் தானும்  காத்திருந்து, மழையோடும் போராடும் போராட்டங்களை தாண்டி அரசுசார்ந்த திட்டங்கள்  நடைமுறையில் என்னவாகின்றன என்பதை ஒரு விவசாயிதான் சொல்லமுடியும். நம்முடைய ‘டைமிங்’ அல்ல விவசாயத்தின் டைமிங்.

சொல்ல மறந்த கதை என்ற கதையில் ராஜா குடியானவனாகவும், குடியானவன் ராஜாவாகவும் மாறுகிறார்கள். ‘வந்து இருந்து பாருய்யா’ என்ற எள்ளல்  அழைப்பு இந்தக்கதையில் உள்ளது.

ஆவணப்படத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் தற்கால அரசியல் நிலை பற்றி கி.ராவிடம் கேட்கிறார். பாட்டா கொஞ்சம் கேலியாக, “அப்படிதான் இருக்கும். அப்டில்லாம்  மனச விட்றபிடாதுய்யா…மூணு வருஷத்துக்கு ஒரு தேர்தல் வரனும்,”என்கிறார்.

இயல்பான படைப்பூக்கம் மிக்க மனநிலையில் எழுதப்பட்ட கதைகள் இவை. சொல்ல மறந்த கதையை தவிர அனைத்து கதைகளிலும் கரிசல் மண் அதன் வெப்பத்தோடும், மெல்லிய ஈரத்தோடும் எழுந்து வருகிறது. பலாப்பழம் என்ற கதையில் பெண்ணின் மன ஆழத்தை கி.ராவால் தொட்டு பார்க்க முடிந்திருக்கிறது.

“அப்பாவுக்கு காதல்தோல்வி இருக்கில்லையா? அது இன்னும் மனசில இருக்கா?” என்று அவரிடம் கேட்ட போது மிக இயல்பான பதிலை பாட்டா சொல்கிறார்.

“காதல் தோல்வி மனசில இருக்குங்கறது எப்படின்னாக்க…நம் மனதுக்கு நெருக்கமான, அந்தரங்கமான நண்பர் தூர தேசத்துக்கு போயிட்டாலோ..பிரிஞ்சு போயிட்டாலோ..இறந்து போயிட்டாலோ மனசில நெனச்சுக்கிறமில்லையா..அது மாதிரி தானே,” என்கிறார்.  உணர்வுக்கும்  சேதாரமில்லாமல்,தோற்ற மனதிற்கும் வலி கொடுக்காத சொற்கள் இவை. கி.ரா வின் கதைகளில் உள்ள இந்த நிதானம் முக்கியமான அம்சம் என்று தோன்றுகிறது. இனிவரும் கட்டுரைகளில் அடுத்தடுத்த கதைகளில் அவர் கதை மாந்தர்கள் எப்படி எழுந்து வருகிறார்கள் என்று பார்க்கலாம். 

கரிசலின் சொற்கள்

காலம் நெடுக சொற்கள் உருவாகி மாறிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு மண்ணுக்குமான  தனித்துவமான சொல்லாட்சிகளை வட்டார வழக்கு என்று சொல்லலாம். கி.ரா வட்டார வழக்கு சொல்அகராதி உருவாக்கினார். இந்த அகராதியை தொகுக்கும் பணியில் கி.ராவிற்கு உதவியவர்களில் எஸ்.எஸ் போத்தையா என்பவரும் எழுத்தாளர் பூமணி இருவரும் முக்கியமானவர்கள். 

இந்த அகராதியிலிருந்து சில சொற்களை  ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்கலாம். இவை  இரு படைப்பாளிகளுக்குமான சொற்கள். எழுத்தாளர்களின் படைப்பை போலவே அவர்களின் சொற்களும் சுவையானவை.

அ வரிசை சொற்களில் சில:

1.அக்கு தொக்கு இல்லை: அனாதை.

2.அகப்பை நோய்: பட்டினி.

3.அச்சலாத்தி:நிறைவில்லாத தவிப்பு

4.அம்பாரம்: பெரிய்ய குவியல்

5.அருப்பம்:இளமீசை

6.அருமாந்த: பிரியமான.

7.அன்னவஸ்திரம்: பெற்றோர்களுக்கும் தள்ளிவைக்கப்பட்ட மனைவியருக்கான ஜீவனாம்சம்.

8.ஆலவட்டம்: கவன ஈர்ப்பு

9.ஆலி: சிறு தெய்வங்களின் கோயில் முன்பு செய்து வைக்கப்பட்ட பெரிய உருவம். 

10. ஆள் பாதி ஏர்பாதி: இரண்டும் திருத்தமாக இருக்க வேண்டும்.

                    ♦♦♦♦♦♦♦


நினைவிற்காக




 






Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்