2023 மார்ச் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந,என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல். [தலைவி கூற்றை தோழி கூறுவது. பரத்தை இல்லம் சென்று நீண்ட காலம் கழித்து திரும்பும் தலைவனுக்கு தோழி உரைத்தது] காதலில் எப்போதும் ஒருவித பித்து நிலை உண்டு. உற்றவரைத் தவிர அது பலநேரங்களில் மற்றவருக்கு புரிவதில்லை. எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் உள்ள அம்மாவின் பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தங்கவேலு பெண்டாட்டி என்றே அழைப்பார்கள். அவரின் மகன் வயதில் உள்ள நாங்கள் விஜயகுமார்அம்மா என்று சொல்வோம். விவரம் தெரிந்ததில் இருந்தே நான் தங்கவேலுவை பார்த்ததில்லை. அவர் பக்கத்து ஊரில் எங்கோ வேறொரு அம்மாவுடன் வாழ்ந்தார். விஜயகுமார்அம்மா தன் கணவரின் பரம்பரை சொத்தான ஒரு ஏக்கர்நிலத்தின் விவசாய வேலைகள் முழுவதையும் தனி ஒருவராகவே செய்வார். மற்றநாட்களில் கூலி வேலைக்கு செல்வார். ...