[ 2024 ஜனவரி 5 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை] மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக கண்ணாமூச்சி ஆடியது. வெளிச்சம் மங்கும் போது கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. சுமதி தோட்டத்திலிருந்து வரிசையாக படுக்கையறைகள் வரை மின்விளக்குகளை ஔிரச் செய்து கொண்டே நடந்தாள். அவள் கொலுசின் ஒலி கலைந்தும், நின்றும், தயங்கியும், சடசடவென்றும் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் நடக்கும் போதெல்லாம் மஞ்சள் வாசம் வந்து வந்து போனது. “லட்சுமிஅக்கா,” என்று அழைத்தபடி நிலைப்படிகளில் மெதுவாக ஏறி தெய்வானை உள்ளே வந்தாள். மஞ்சள் நிற சுங்குடிச் சேலை. விளக்கு வெளிச்சத்தில் அவள் முகமும் மஞ்சளாகியது. “என்ன…கொஞ்சநாளா இங்க எட்டிப்பாக்கலை,” “கடைக்குட்டி பேத்திக்கு தலைச்சம்பிள்ளை…கை வேலை எதுவும் முடியாட்டாலும் கூடவே இருந்தேன்… சொல்லியனுப்பினேனே?” “…” ...