இற்றைத்திங்கள் அந்நிலவில் 15

 [செப்டம்பர் 2024 சொல்வனம் இதழில் வெளியாகிய கட்டுரை]

காவிரி சூழ் நாடன்

பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது. இது காவிரி பாயும் மருதநில மன்னனை பற்றிய கதை. ஆற்றுப்படைகள் செய்யுள்வடிவில் எழுதப்பட்ட நீண்ட கதைகள் எனலாம். இது பாடாண் திணையில் பாடப்பட்டுள்ளது. இது புறப்பாடல். 

சோழ அரசன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஆற்றுப்படை இது. பாடப்படும் தலைவனை உயர்த்திப்பாடும் பாடலாக இருந்தாலும் நிலவியல்காட்சிகள்,பாடிணியின் பாலை நில வழிபாடு,யாழின் அமைப்பு மற்றும் யாழிசை பற்றி கூறும் பகுதிகள் நுட்பமானவை. கரிகால் பெருவளத்தான் புலவர்களை வழியனுப்பும் பண்பு தனிச்சிறப்பானது.



 கரிகாலனை பெருவளத்தான் என்று குறிப்படுவதே அழகிய சொல்லாட்சி மட்டுமல்லாது அதிலேயே அவன் நாட்டின் வளம் பற்றிய குறிப்புள்ளது. அவன் தந்தை இளம்சேட்சென்னி இளம் வயதில் இறந்ததால் மிக இளமையிலேயே கரிகாலன் அரசுகட்டில் ஏறுகிறான். இளமையில் தீவிபத்தில் கால் கருகிவிட அவனுடைய எரிந்த கால்களாலேயே சிறப்புபெயர் பெற்ற மன்னன் கரிகாலன். முடத்தாமகண்ணியார் பொருநறாற்றுப்படையின் இறுதியில் மூவுகளந்தவனின் கால்களை குறித்துப் பாடியபின் கரிகாலனின் கால்கள் சோழநாடளந்தன என்று பாடுகிறார்.

ஒரு அரசனிடம் பரிசில் பெற்று திரும்பும் பாணர், கூத்தர்,பொருநர் போன்றவர்கள் அவ்வாறே புரவலர் தேடிச் செல்லும் பாணர்கள், கூத்தர்கள்,பொருநர்களிடம் தான் பரிசில் பெற்ற அரசனின் பெருமைகளைக் கூறி அரசனிடம் சென்று நலம் பெறுமாறு பாடப்படும் பாடல் வகை ஆற் றுப்படை ஆகும். அதில் நாட்டுவளம்,உணவுபொருட்கள், வணிகம் போன்றவை சொல்லப்படும். ஏர்க்களம் பாடுவோர்,போர்க்களம் பாடுவோர்,பரணி பாடுவோர் என்று மூன்று வகை புலவர்கள் உண்டு. இதில் போர்க்களம் பாடுவார் பொருநர் எனப்படுவர். பொதுவாக பொருநர்கள் படாண்திணை பாடல்களை பாடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

பொருநறாற்றுப்படையில் கரிகாலனையும் சோழநாட்டையும் பற்றி முடத்தாமக்கண்ணியார் பாடியுள்ளார். இது 248 அடிகளைக் கொண்ட நீண்ட பாடல். கரிகாலன் திருச்சியில் உள்ள கல்லணையை கட்டியவன். காவிரிபூம்பட்டிணம் மற்றும் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மன்னன்.

பாணர்களும், பொருநர்களும், விறலியரும்  ஊர்விட்டு ஊர் பயணம் செய்து கொண்டே இருப்பவர்கள். ஆடலும், இசையும், கவிதையும் வாய்க்கப்பெற்ற அவர்கள் ஊர்ஊராக சென்று பாடியும், ஆடியும், இசைத்தும் வாழும் வாழ்க்கை வாய்க்கப்பட்டவர்கள். ஒருநாள் அரசவாழ்வும் மறுநாள் பாலை நிலத்தின் மணல் படுக்கையிலும் வாழ்வதற்கு அறிந்தவர்கள். தங்கள் நிலத்தை கால்களால் அளந்து இசையாலும், பாடல்களாலும் காலத்தில் பதியவைத்தவர்கள். 

பொருநர் ஒருவர் பாலை நிலத்தில் பாடினி முதலிய தன் குழுவுடன் நெடுந்தூரம் நடந்து களைத்து சென்றுக் கொண்டிருக்கிறார்.  கரிகாலனிடம் பரிசில் பெற்று ஊர் திரும்பும் பொருநர் இவர்களைக் கண்டதும்,

அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்

சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது

வேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந

ஏதோ ஒரு திருவிழா முடிந்து திரும்பி பலநாட்களாக நடந்து திரியும் பொருநனே நான் உன்னை கண்டது நல்லவேளை என்று கூறுவது போல பொருநறாற்றுப்படை தொடங்குகிறது. 

குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்

விளக்குஅழல் உருவின் விசிஉறு பச்சை

பாணனின் கைகளில் உள்ள பாலை யாழ் மானின் கால் குளம்பின் தடம் போன்ற அடிப்பகுதியை [பத்தர்] உடையது.  பார்ப்பதற்கு விளக்கின் சுடர் போன்ற நிறத்தில் சுடரும் யாழ். யாழின் தோல் நண்டு போன்ற ஆணியால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கிறது. கரும்பாம்பு தலைதூக்கி நின்றது போல யாழின் தண்டு நீண்டிருக்கிறது  .யாழ் ஒரு மணப்பெண் போல அழகுகொண்டுள்ளது என்று பாடி யாழை நம் கண்முன்னே காட்டுகிறார்.

 மணல்வரி போன்ற கூந்தலை உடைய பாடிணி பிறை போன்ற நெற்றி ஒளிர,கொலை வில் போன்ற புருவங்கள் வெயிலில் நெளிய,மூங்கில் போன்ற தோள்களுடன் பொருநருடன் நடந்து வருகிறாள். நாயின் நாக்கு  போன்று சிவந்த பாதத்தை பாலை மணலில் எடுத்து வைத்து நடக்கிறாள். பாலை நிலம் வருத்தியதால் கழல்கள் அணிந்த கால்களில் வெம்மையின் தடங்கள் அவளை வருத்துகின்றன.

அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதழ்

கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்…

இவற்றையெல்லாம் காணும் பொருநர் நீங்கள் இவ்வளவு தொலைவு வருத்தும் பாலையில் பசியுடன் நடந்து திரிந்தது போதும் கரிகால் சோழனின் அரண்மனை நோக்கி செல்லுங்கள் என்று ஆற் றுப்படுத்துகிறார்.

ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு

நீடுபசி ஒராஅல் வேண்டின் நீடுஇன்று

எழுமதி வாழி ஏழின் கிழவ

பழுத்த மரம் நோக்கி சென்ற வௌவ்வால் போல நாங்களும்  அவன் வாயில் சென்று நின்றோம். பறை ஒலித்து எங்கள் வரவை அறிவித்ததும் சோழன் வாயிலில் வந்து எங்களை  வரவேற்றான்.

பழுமரம் உள்ளிய பறவையின்,யானும்,அவன்

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்

 அழுக்கான அடையும் தளர்ந்த உடலுமாக சென்ற என்னை அருகினில் அமர வைத்துக்கொண்டான். என் உடல் முழுவதும் வியர்வையில் ஊறியிருந்தது. எங்களுக்கு புத்தாடைகள் அளித்தான். அவன் அரண்மனையில் தங்க வைத்தான். எங்களுக்கு  வேண்டிய அனைத்தும் அங்கு கிடைத்தது.

ஆரஉண்டு பேர் அஞர் போக்கி

செருக்கொடு நின்றகாலை

மாலை அன்னதுஓர் புன்மையும் காலைக்

கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்

பாம்பின் தோல் போன்ற மெல்லிய அழகிய ஆடையுடனும், பசி நீங்கிய நடையுடன் மறுநாள் மன்னன் அவைக்கு சென்ற எங்களை  முதல்நாள் பார்த்த கண்கள்  வியந்து கண்ணிமைக்காமல் நோக்கின.

முதல்நாள் கள்ளுண்ட மயக்கம் தவிர எந்த நடுக்கம் இருந்தது தவிர உடல் நலிவால் வந்த தளர்வு  எங்களுக்கு இல்லை…

அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்

மனம்கவல்பு இன்றி மாழாந்து எழுந்து

நாள்தோறும் அவன் அளித்த  உணவை மாற்றி மாற்றி உண்டு மண்ணை உழுத கலப்பை போல எங்கள் பற்கள் தேய்ந்தன.

ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி

அவைஅவை முனிகுவம் எனினே….

….கொல்லைஉழு கொழு ஏய்ப்ப பல்லே

எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி

ஒரு நாள் நாங்கள் விடைபெற்ற போது முதலில் சினம் கொண்ட கரிகாலன் பின், பிரிவு இயல்பு என்று ஏற்றுக்கொண்டு குதிரைகளும் யானைகளும் பொன்னும் மணியும் என  பரிசில்களை அளித்து ‘ஏற் றுக்கொள்க’ என்றான். வேண்டியவருக்கு அளித்து மகிழ்க என்று கூறி விடைதந்தான்.

அகறிரோ எம்  ஆயம்விட்டு என்

சிரறிவன் போல் செயிர்த்த நோக்கமொடு

துடிஅடி அன்ன தூங்குநடைக் குழவியொடு

பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்க…

அவன் பிறந்து தவழும் போதே அரசன். அவன் குணம் அது.

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்தநன்

நாடுசெகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப

 அவன் நாள்தோறும் வளர்ந்தைப்போலவே அவன் நாடும் செழித்தது. சிங்கம் போன்ற வலிமை உடையவன் அவன். என்றாலும் அவன் நம்மை பசு தான் ஈன்ற கன்றை பார்ப்பதைப்போல பார்க்கும் அன்புடையவன்.

ஆளிநன் மான் அணங்குடைக் குருளை

மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி….

ஈற்றுஆ விருப்பின் போற்றுபு நோக்கி …

…..பால்புரை புரவி நால்குஉடன் பூட்டி

காலின்ஏழ் அடிப்பின் சென்று கோலின்

தாறுகளைந்து ஏறு என்றுஏற்றி ….

இத்தனை பெறுமைகளை உடைய அவன் என்னை வழியனுப்புவதற்காக வாயில் வரை வந்தான். அவன் அளித்த தேரில் என்னை ஏறி அமர செய்து நான் ஏறிய தேரின் பின் ஏழுஅடி நடந்துவந்து வழியனுப்பினான்.

என்னால் போர்வீரன் போல வரைவாக தேரை செலுத்த இயலாது என்பதால் என் கைகளில் தார்க்கோலை தரும் போது அதன் முள்நுனியை எடுத்தப்பின் எனக்கு அளித்தான். 

அவன் ஆளும் சோழ நாடு கடல் வரை விரிந்தது. மயில்களும் பறவைகளும், அவை கொத்திதின்ன பழமரங்களும் செறிந்தது.

திரை பிறளிய இரும் பௌவத்துக்

கரை சூழ்ந்த அகன் கிடக்கை…

இளையோர் வண்டல் அயரவும் முதியோர்

அவைபுகு பொழுதில் தம்பகை முரண் செலவும்

பிள்ளைகள் மணலில் விளையாடுகிறார்கள். பகையும் வழக்கும் கொண்டு சபை புகும் முதியவர்கள் தம் பகை நீங்கி வெளியேறும்படி அவைகள் அமைத்து கரிகாலன் ஆட்சிசெய்கிறான். ஐவகை நிலங்களையும் தன னுள் அடக்கியது சோழனின் நாடு. 

இருபெரு வேந்தரும் ஒரு களத்து அவிய

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்

கண்ஆர் கண்ணி கரிகால் வளவன்….

…தண் வைப்பின் நால் நாடு குழீஇ

மண் மருங்கினான் மறுஇன்றி

ஒரு குடையான்…..

….நகுமுல்லை உகு தெறுவீப்

பொன் கொன்றை மணிக் காயா

நல்புறவின் நடை முனைவின்

கறவழங்கும் இரும் பௌவத்து

இறவு அருந்திய இன நாரை……

…… தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்

மீன் நெய்யொடு நறவு மறுவும்…

மிகஇளமையில் தன் முதல் போரை வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் எதிர்கொண்டான். வேப்பம்பூ சூடிய பாண்டியனையும் பனம் பூவை சூடிய சேரனையும் வென்ற வீரன் கரிகாலன். பறவைகளும் நாரைகளும் கரும்பு கொல்லைகளையும், நெல் வயல்களையும் கடந்து செல்கின்றன.  பின்னர் அங்கிருந்து பூங்கொடிகளும் பகன்றை மலர்கள் பூக்கும் கடற்கரை கொடிகளின் மேலே பறந்து அங்குள்ள புன்னை மரங்களை தங்கும் நாடு காரிகாலனுடையது. தென்னையும் அதன் மறுபக்கம் வழை மரங்களையும் காந்தலும் சுரபுன்னையும் மலரும் நாடு அது.

 குறிஞ்சி நிலத்தவர்  தேன் கிழங்குளை கொடுத்து நெய்தல் நில மக்களிடம் மீனையும் கள்ளையும் பெறுகின்றர்.

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும் பூங்கண்ணி குறவர் சூடக்

இவ்வாறு ஐவகை நில மக்களும் தங்கள் நிலத்தின் உணவுபொருட்களை பண்டமாற்று முறையில் கொடுத்தும் பெற்றும் வாழ்கிறார்கள்.

கடுமையான நீண்ட வறட்சியான காலத்தில் கொல்லைகள் கருகுகிறது. காடுகள் தீப்பற்றி எரிகிறது. இந்த காலத்திலும் அகிலையும் சந்தனமரத்தையும் நரந்தம் புல்லையும் காடுமேடுகளில் இருந்தும், துறைகளில் இருந்தும் இழுத்துக் கொண்டு வரும் காவிரி. ப்ய்ந்தே வரும் வழிகளில் உள்ள குளங்களை நிரப்பியபடி பாய்ந்து செல்லும்.

பெருவறன் ஆகிய  பண்புஇல் காலையும்

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்

துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்

புனல்ஆடு மகளிர் கதுமெனக் குடைய…

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

…ஆயிரம் விளை யுட்டு ஆகக்

காவிரி புரக்கும் நாடுகிழ வோனே

காவிரியால் நெல் விளைகிறது. விளைந்த நெல்லரிந்து மலைபோல குவிக்கிறார்கள். மற்ற நாடுகளில் ஏரிகளாலும் கிணற்றில் ஏற்றத்தினாலும் பெறப்படுப்படும் நீரால் வளம் பெறுகும். அந்த வளங்கள் அனைத்திற்கும் மேலான வளத்தை சோழநாடு பெற்றிருப்பது காவிரியாலேயே.

இத்தகைய நாட்டை ஆளும் கரிகாலனிடம் செல்லுங்கள். சிங்கக்கட்டிலில் அமர்ந்து  எதிரிகளின்றி ஆட்சி செய்பவன். அறுவடை முடிந்த வயல்களின்  குத்துகளின் மீதும் தேன் தேடி வண்டுகள் சூழும் நாட்டை ஆளும் அவனுடைய கால் நெருப்பில் கரிந்தது. என்றாலும் மூவுலகை திருமால்  அளப்பதைபோல சோழநாட்டை அளந்தாழும் வேந்தன்.

அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர்நாடன்

கரிகாலன் கால்நெருப்பு உற்று.

இவ்வாறு பொருநறாட்டுப்படையில் முடத்தாமக்கண்ணியார் கரிகாலனை சோழநாட்டை பாடி முடிக்கிறார்.

இன்று நாம் காணும் காவிரி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தப்பாடலுடன் நம்மை பிணைக்கிறது. அந்த பிணைப்பிலிருந்தும் சோழநாடும், கரிகாலரும் நம் மனதில் விரிகிறார்கள். முதலில் சொன்னதை போல ஒரு கதை கேட்கும் அனுபவத்துடன் இணைந்து இப்பாடலில் சொல்லப்படும் உவமைகள் மூலம் நம் பழந்தமிழ் இசை கருவி, வழிபாடுகள்,நிலம் போன்றவற்றை ஊகிக்கமுடிகிறது. நாம் இங்கிருந்ததற்கான சான்று. நமக்கு ஒரு வாழ்க்கை முறையும்,வணிகமுறையும்,விவிவசாயமும்,தொழிலும், கலையும், இசையும்,ஊர்களும் இருந்ததற்காக சான்றாகவும் உள்ளது. பொருநறாற் றுப்படை ஒரே சமயத்தில் கரிகாலனை பற்றிய புனைவாகவும் ஆவணமாகவும் இருக்கிறது. அது இன்னொரு வகையில் நம்மை பற்றிய ஆவணமும் கூட.


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி