Skip to main content

Posts

Showing posts from January, 2025

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

எரிக்கும் துக்கம்

  [2024 நவம்பர் நீலி இதழில் கவிஞர் பெருந்தேவி சிறப்பிதழில் வெளியான கட்டுரை] குவிந்த உள்ளங்கை நிறைந்திருக்கிறதா அல்லது ஒன்றுமில்லாதிருக்கிறதா? அது எதையோ கொடுப்பதற்காக நீள்கிறதா அல்லது பெற்றுக்கொள்வதற்காக நீண்டிருக்கிறதா? இந்த சாத்தியங்களைப் போலவே கவிதை தன் சொல்லில் எதை கொண்டிருக்கிறது என்ற சாத்தியங்களும் பலவாறாக  உள்ளன. பெருந்தேவியின் கவிதைகளை அந்த குவிந்த உள்ளங்கையில் அள்ளிய வழிந்தோடக்கூடிய  நீர் எனலாம். சில நேரங்களில்  தொண்டையில் சிக்கிய முள் போல நம்மை தொந்தரவு செய்கின்றன. சிலதை துப்பிவிடலாம். சிலதை விழுங்கிவிடலாம். சில உறுத்திக்கொண்டே இருக்கின்றன இந்தக்கவிதை போல. ஆமென் இல்லைக்கும் இருப்புக்குமிடையே குதித்தோடுது சாம்பல்வட்டம் எரிபடாத பிணக்கணக்கில் இன்றென் பெயர் ஆகுக. ஒரு மெல்லிய சருகு மண்ணிற்கு தன்னை ஒப்புக்கொடுக்காமல் காற்றுக்கு  ஒப்புக்கொடுத்து அலைகழியும் வதைகளின் சொல்வடிவம் இந்தக்கவிதைகள். அந்த ஒற்றை சருகு பலவாக உருமாறி எதிர்காற்றில் சுழல்கிறது. காற்று நின்றால் தரையுடன் படிந்து விடக்கூடும். ஆனால் நிற்காத காற்று அதை சுழற்றிக்கொண்டே இருக்கிறது. மேலும் எங்கும் ...

அமுது

  காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி புனிதவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாரளங்களின் இடைவெளிகளை பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது. கண் முன்னே கடல் தழும்பிக்கொண்டிருந்தது. பரதவர்கள் கட்டுமரங்களை கரையில் இழுத்துவிட்டுக்கொண்டிருந்தனர். பரமதத்தனை நினைக்கும் போதே அவளுக்கு  தொண்டையில் விண்னென்று ஒரு வலி வந்து போனது. வரும் திங்களோடு அவளுக்கு பதினாறு அகவை திகைகிறது. கடல் அலைகளை பார்த்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில கணங்கள் புறாவென தத்தும் விழிமணிகள் பின்  கடலில் நிலைகொண்டன. மென்னிளம் மாங்கொழுந்தின் நிறம் அவளுக்கு. எதிரே மேற்கு சாளரத்தின் வழி வந்த ஔிப்பட்டு அவளின்  மஞ்சள் பூசிய முகம் வியர்வையில் மினுங்கியது. “இப்படியே நாள் பொழுது இல்லாமல் உப்புக்காற்றில் வெயில்பட நின்றால் உடல் வெம்பிப்போய் விடும் புனிதா,” என்று சொல்லியபடி பூங்கொடி உணவுத்தட்டை மனைபலகைக்கு க...

என்னுரை _ பெருங்கனவின் வெளி [கட்டுரைத்தொகுப்பு]

  எழுத்தாளர் அம்பைக்கு சமர்ப்பணம். வாசகியாக மட்டும்….. கட்டுரைகள் எழுதும் போது ஒரு வாசகியாக மட்டும் இருக்கிறேன். அது ஒரு ஒப்புக்கொடுத்தல் நிலை. வாசகநிலை என்பது படைப்புகளுக்கு முழுவதுமாக மனதை கொடுத்தல்.   பெருங்கனவின் வெளி என்ற தலைப்பில் இந்த நூலில் ஒரு கட்டுரை உள்ளது என்றாலும் இந்த நூலிற்கு இந்த தலைப்பை வைப்பதற்கான காரணம் வேறு.  ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவர்களின் அகத்தில் விரிக்கும் கனவு வெளி வெவ்வேறானது. ஒருவர் வாசிப்பது அவருக்கு மட்டுமேயான அனுபவம். அவருக்கு மட்டுமேயான கனவு பரப்பு. நம்முடைய கை ரேகை கண்ரேகைகள் போல தனித்துவமானது. வாசிப்பவர்களுக்கிடையே சில ஒற்றுமைகள் இருக்கும் என்றாலும் கூட வாசிப்பு  அவரவருக்கு உரியது. வாசிப்பவரும், அந்த புத்தகம் விரிக்கும் கனவும் இணைந்தது. இந்த இயல்பே புத்தகங்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. நம் நடைமுறை தினசரி வாழ்வில் இருந்து ஒரு எம்பு எம்பி அந்த கனவு வெளிக்கு சென்று திரும்புகிறோம். வாசிப்பு என்பது ஒரு பெருங்கனவு வெளி. எனில் வாசிப்பு என்பது கனவு மட்டுமா? என்று கேட்கலாம். கனவு என்பது நம் ஆழ்மனம். கனவு என்பது நம் கற்பனை. கனவு என்பது...