2021 ன் தொடக்கத்தில் எனக்கான ஒரு வலைப்பூவை தொடங்கி எழுத வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஜூலை மாதம்தான் எழுதத் துவங்கினேன். தாமதம் என்று நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை இது இயல்பானதே. எதையும் நினைத்ததும் செய்யக்கூடிய இயல்பு எனக்குக் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செய்கிறேனா என்ற பரிசீலனைக்குப் பிறகே எப்போதும் செய்கிறேன். எழுத்து மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு. இப்படி ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை யோசித்தே தீர வேண்டிய வாழ்க்கை சூழல் பெண்களுக்குரியது. பெண்ணியம் பேசுவதாக சலித்துக்கொள்ள வேண்டாம். இந்த இயல்புதான் என் எழுத்து செயல்பாட்டின் ஆதாரமாக சொல்வேன். இல்லை என்றால் என் வாழ்க்கை எழுத்தல்லாத பாதையில் எங்கோ சென்று ஒன்றுமில்லாததாக மாறியிருக்கும். இங்கு பெண்களின் சிறு சிறகசைப்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அது மிகச்சரியாக அவர்கள் அறியாமலேயே களையப்பட வேண்டியதாக முதலில் தாய் தந்தையர்களை சமூகமும், குடும்பமும் எச்சரிக்கின்றன. "பொம்ளப்பிள்ளய எதுக்கு பள்ளிக்கூட புத்தகத்து மேல கதை புத்தகங்கள் படிக்கவிடனும். சொன்னப்பேச்சு கேக்காது ...வீட்டு வேலையப்பழ...