தமிழினி ஜனவரி இதழில் வெளியான சிறுகதை. தமிழினியில் இது என் முதல் சிறுகதை. நன்றி:தமிழினி சித்திரக்கூடம் ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல்பக்கமாக நின்றேன். வயல்வேலைக்கு செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண்அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாக கருப்புத் திரையில் கனன்று கொண்டிருந்தன. மாரியம்மன் கோவில் ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலி பரவி ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் மார்கழிபனி போல காதுகளில் நுழைந்தது. காற்றாகி கனலாகி கடலாகினாய்… நிலமாகி பயிராகி உணவாகினாய் தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்… அறையின் விளக்கை ஔிரசெய்தேன். இரவு முழுவதும் வரைந்த படங்களால் நிறைந்திருந்தது சிமெண்ட் தரை. ஒன்றுகூட இதற்கு முன் வரைந்த வடிவங்கள் இல்லை. அனைத்தும் விசிறி இழுக்கப்பட்ட கோட...