விடாய்
ஊரே பயிர்ப்பொங்கலுக்கு சேவல், கெடாய்கைளை ஊர்சுற்றியிருந்த சாமிகளை எண்ணித் தேர்ந்து கைமாற்றி கொண்டிருந்த வெயிலேரும் பொழுதில் மெய்யன் வயல்வெளி கடந்து மாசிகுன்றடிக்கு வந்திருந்தார். கார்த்திகை வெயில் கழனிக்கு நல்லதில்லன்னு சொரக்கா வாத்தியர் சொன்னதை துன்முகி கார்த்திகையில ஆமான்னு சொல்லுது காடு மேடெல்லாம்.
தெற்கே கும்பிட்டு “ஓங்கிட்ட இத்தன சுழச்சிக்கு பிறவு இழுத்தாந்துட்ட போறவழிக்கு தொணைக்கு வாய்யா ”என்று ஓங்கி சொல்லிவிட்டு இடைதுண்டை அவிழ்த்து கரியதோளில் போட்டு வேட்டியை மடித்துக்கட்டி பெரியண்ணசாமியின் எல்லைக்கடந்து தாயம்மாளின் எல்லைக்குள் நுழைந்தார்.
எங்கால் அவமூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா. விறகை தலையில வைச்சு திரும்பையில முந்தானய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும். அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான். மழைநின்றகாலையில் அம்மாவோட வந்தப்ப மழவில்லுல இருக்கற அத்தனநெறத்துலயும் கருப்பு சிறகுல புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்சிகளை பாத்து கண்ணுக்கு சலிக்கல.
“வெவரங்கெட்டவனே ஆளுக வாரதுக்குள்ள காளான கிள்ளி மடியில போடுவியா..வெறும் பார்வ பாத்தா கொழம்பு வந்துருமா...” என்ற அம்மாவின் குரலால் குனிந்து நெருக்கமாகப் பார்த்தான் மெய்யன்.
இலையுதிர்ந்திருந்த கொம்புநீட்டி தலையிடித்தது கோட்டுப்புளி. மன்மதமழை கொடுத்த உயிர் வாங்கிநின்றன வேம்புகளும்,வேர்கள் புடைத்து நின்ற புளியமரங்களும். காற்றில் சரிந்துகிடந்த சுற்றுலாத்தளம் எனச்சுட்டியப் பலகையை மிதித்தபடி சுள்ளிகள் , கலர்கடுதாசிகள் ,சருகுகள் மீது நடந்தார்.
அம்மா சொல்லிக்கொடுத்தப் பாட்டு வாயில் வந்தது.
“பெருங்காட்டுல பெரியண்ணே துணைக்கு வா
அடர்வனத்துல அறப்பள்ளிஈசனே அனணச்சபடி வா
பசிதாகம் தாங்க தாயம்மாளே தணிஞ்சு வா
விறவுவெட்ட எட்டுகையாளே இறங்கி வா
காலுவலிக்கு கரு..”
செருப்பிற்குள் அடங்காத விரலை கண்ணாடி உடைசல் கிழித்தது.
"இத்தன சுழச்சிக்கு எட்டிப் பாக்கலன்னு ரத்தகாவா.. " என்று மெய்யன் புன்னகைத்துக் கொண்டார்.
வியர்த்து வழிந்த உடலுடன் கல்லாற்றின் கரையை அடைந்தார். இடப்புற குண்டுக்கல் உச்சியில் ஏறி நின்று ஒவ்வொரு குன்றாய்ப் பார்த்து, “கொல்லிப்பாவே, அறப்பளியானே,அறம்வளத்தவளே,எட்டுகையாளே,சித்த சாமிகளே...இங்கன இருந்துக்கிட்டு இத்தனநாளா பாக்க வராத கல்லா போயிட்டனே..” என்று கூப்பிய கரங்களை பிரிக்காமல் நெடுநேரம் குன்றுகளைச் சுற்றி பார்த்தபடியிருந்தார். இடப்புறம் கைநீட்டி விரிந்திருந்தது சாம்பல் பூசிய தோரணையோடு வெள்ளெருக்கு.
செருப்பை உதறிவிட்டு கற்கள் மேல் கால்வைத்து கவனமாக நடந்தார். ஒவ்வொரு அடிக்கும் கண்ணாடிச்சில்லுகள் வெண்வெயிலை பிரதிபலித்து தடுமாற வைத்தன. ஆறுகடந்து கரைவழி காய்ந்தநாணல்களைக் கடந்து "இருக்கிறேன்” என்ற புளியங்காட்டைக் கடந்து மடுவின் எல்லைக்கு வந்தார். சருகுகளுக்கடியில் சுருட்டை அரவமின்றி படுத்திருந்தது. ஒரு ஓரமாக தாழம்புதர் காய்ந்தடர்ந்து தண்ணிவந்தா தழைக்க உயிர்க்கட்டியிருந்தது.
அலையடித்த நீரை எத்திக்கொண்டிருந்த மெய்யனிடம் அப்பன், “கண்ணுக்கு ஆசையாயிருக்குன்னோ ,ஆணவத்திலயோ, அதோ ...மடுவுக்கு மேல உசந்திருக்கே பாற அங்ஙனருந்து தண்ணிக்கு சொரக்கான் அடிச்சிராத. காவு வாங்கிப்புடுவா. அந்தக் கெளையிலயிருக்க குருவாயி..அஞ்சுக்கெளையில இதபாத்துதான் ஒக்காந்திருக்கா. இவளோட மடுவு. வெளிச்சம் விழறதுக்குள்ள தாயாம்மா,பெரியண்ணே எல்லையெல்லாந் தாண்டிரனும். மடுவுல தத்தி தவந்து நீஞ்ஞினின்னா சுத்திவர ,குறுக்க போய்வர பசியும் வந்துரும். தண்ணில படுத்து கைகால ஆட்டுடே. பொதர்க்கிட்ட வாசத்த நம்பி போகாதடா,” என்ற அப்பனின் குரல் காதில் இங்ஙன என இப்போதும் ஒலிக்க...ஒலிக்க மெய்யன் தலையை ஆட்டிக்கொண்டார்.
மலைத்தழை வாசம் கொண்ட நீரை மூச்சில் நினைத்துக் கொண்டார். முயல்,மீனைப் பிடிச்சுக்கிட்டு கிளிய பாப்பாத்திக்கிட்ட கொடுத்து சிரிப்பை வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.
வாசப்படி ஏறுறப்பவே அம்மா, “கிறுக்குப்பய வயலுக்கு விடியலுல போனா வயத்துக்குப்போட வந்தோன்னு இல்ல. மடுவுலயே கிடந்து ஊறி உச்சிக்கு வந்தா ஒடம்பு என்னத்துக்காவும். இந்தக் கூத்துல மீனாச்சிக்கு கிளி வேற. மீனாச்சி எவன்னுத் தெரியலயே,”ன்னு பாரதம் படிக்கும்.
மடுவின் நீர்விழியும் மூணுக்கல்லி்ல் வந்து நின்றார். மென்சேறு காய்ந்து விரிசல்கள் கைரேகைகளென விரிந்திருந்தது.
சங்கிலி நாத்துக்கு ஓட்டிப்போட்டுட்டு ஓடுறானா நடக்குறானான்னு கணிக்கிறத்துக்குள்ள மடுவுக்கு வந்து இங்க நின்னு, “பயிர் அறுக்குமுட்டும் தண்ணி பிடிச்சு நின்னிறுத்தா,”ன்னு தழும்புவான். அவனை சுட்டு கரைச்சு பத்து சுழச்சியாச்சி.
நெஞ்சில் கைவைத்து முகத்திலறைந்த காகிதத்தை வேறுதிசையில் பறக்க கைத்தள்ளிவிட்டு எட்டுவைத்தார். நடக்க நடக்க கண்ணாடிகளிடமிருந்து தப்ப பூக்குழியில் நடப்பதாய் கால்கள் நிலைமாற வேண்டியிருந்தது. காடை,கௌதாரிகளின் இருப்புத் தெரிந்தது. வெளிச்சம் இறங்கும் நேரம் வந்திருந்தது. காய்ந்து முறுகிய மலைமென்வண்டல்ஏடுகள் சத்தம் கொடுக்காமல் காலடியில் நொருங்கி நடந்தவழியை வரைந்தன.
சிறுமலை என முதல்பார்வைக்குத் தோன்றும் அந்தப்பாறையின் நீண்டமுனை சரிந்துசரிந்து மடுவின் மையம்வரை நீண்டிருந்தது. பாறையில் சாய்ந்த அவர் அண்ணாந்து உச்சியைப் பார்த்தார். பாதிக்குமேல் நீரிருந்த அடையாளம் கரியகோடாய் நீண்டிருந்தது. அதற்கு மேல் ஆபத்தான பகுதி என்ற அறிவிப்பில் மரநிழல் அசைந்து கொண்டிருந்தது. காரித்துப்பியபடி இருமினார். பாறையின் மடிப்பில் உள்ளங்கைக்குழியிலிருந்த நீரையள்ளி வாய்முகம் நனைத்து “அம்மா..அப்பனே..”என்று அரற்றியபடி பாறையில் சாய்ந்தார்.இருட்டிக் கொண்டிருந்தது. பாறைக்குப் பின்னால் தலைக்கு மிகஉயரத்திலிருந்த வாகை அசைந்து காற்று கடந்து கொண்டேயிருந்தது.
தேடி வந்த மகன் சத்தமாக,“யப்பா...யப்பா . இங்க வந்தா கிடப்பாங்க. காலப்பாரு..செருப்பெங்க..வா. ஊர்க்கோடாங்கியில மழை கேட்டதுக்கு வெள்ளப்பூ வந்திருக்கு. நாத்து போடலாம் ப்பா," என்றான்.
“எதுக்கு மழுங்கன் பொறுத்துப் பொறுத்து போறான். இத்துணூண்டு ரோசம் வேணாம். மதிக்காதவங்களுக்கு எதுக்கு மல்லியப்பூமால . இல்ல மழ வராது...நாத்து போடாத,”
“உளறாம வா. மேற்க தனியா நீ வரப்பயே அம்மா வயல தாண்ட வேணாண்ணுச்சு...கேக்கறியா..எத்தன ஆத்துமா அனாதரவா அலையற எடம். பூசாரிய பாத்துட்டு போலாம்,”
நிலவொளி படர கொம்புகளை மட்டும் நீட்டிய நிழல் ஒவியமாய் புளியஞ்சோலை மாற அவர்கள் அதை கடந்து கொண்டிருந்தார்கள்.
****************
முதல் சிறுகதை சொல்வனம் 2016 டிசம்பர் இதழ். நன்றி சொல்வனம்.
Comments
Post a Comment