Skip to main content

சித்திரக்கூடம்

 தமிழினி ஜனவரி இதழில் வெளியான சிறுகதை. தமிழினியில் இது என் முதல் சிறுகதை. நன்றி:தமிழினி


                          சித்திரக்கூடம்

ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல்பக்கமாக நின்றேன். வயல்வேலைக்கு செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண்அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாக கருப்புத்  திரையில் கனன்று கொண்டிருந்தன.

மாரியம்மன் கோவில் ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலி பரவி  ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் மார்கழிபனி போல காதுகளில்  நுழைந்தது.

காற்றாகி கனலாகி கடலாகினாய்…

நிலமாகி பயிராகி உணவாகினாய்

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…

அறையின் விளக்கை ஔிரசெய்தேன். இரவு முழுவதும் வரைந்த படங்களால் நிறைந்திருந்தது சிமெண்ட் தரை. ஒன்றுகூட இதற்கு முன் வரைந்த வடிவங்கள் இல்லை. அனைத்தும் விசிறி இழுக்கப்பட்ட கோடுகளால் ஆன புரியாத வடிவங்கள். இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை. இதெல்லாம் எப்படி வரைய வருகிறது என்று தெரியவில்லை.

கீழே கிடந்த சாக்கட்டிகளில் ஒன்றை எடுத்து எஞ்சிய இடத்தில் நான்குமுறை விசிறி இழுத்தேன். தாழை மடலோ,காய்ந்த நாணல்களோ,வீச்சுக்கத்தியைப் போலவோ ஏதோ ஒன்று. வரைய வரைய தான் அது என்னவென்று தெரியும். அதற்கு மேல் கையெழவில்லை. ‘இதுவும் போச்சா’ என்று எழுந்து சன்னலோரம் வந்து நின்றேன்.

இன்னேரம் சுப்பிரமணி வயலில் வடகிழக்கு மூலையில் வெற்றிலையில் சாணத்தில் செய்த பிள்ளையாரை அமர்த்தி விட்டு சூரியனை எதிர் பார்த்துக்கொண்டிருப்பான். நாம் சம்பாதித்த காசுபணத்தில்  வயல்வரப்புகளை சொந்தமாக வாங்கி முதல் விதைப்பு செய்வது என்பது மூணு நாலு மாதத்தில் தாய்முகத்தை கண்டுகொள்ளும் பிள்ளையின் சிரிப்பை போல. மனம் இனம் தெரியாமல் பறந்துகொண்டேயிருக்கும் காலம். அவன் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வயல் சேற்றில் சிரித்தமுகத்துடன் நின்று கொண்டிருக்கலாம். கதவைத் திறந்து வெளியே பார்த்தேன்.

அதோ அந்த மாட்டுப்பட்டிக்கு அடுத்ததாக இருந்த புளியமரத்தில் தூக்கில் தொங்கும் அய்யாவின் கால்களை மூர்த்தி அண்ணா தாங்கிப்பிடித்திருக்கிறார். மரத்தின் கிளையில் ஏறி யாரோ கயிரை வெட்டி விட்டதும் அவரின் முழுஉடலும் மூர்த்தி அண்ணா மேல் சரிய அவர் ஊரே பதறும் அலறலுடன் கட்டிப்பிடித்துக் கொள்கிறார். தலையை ஒருபக்கமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கினேன்.

இருள்விலகாத முன்இரவுகளில் அய்யா சைக்கிளில் பால்கேனை வைத்துக்கட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தது இந்த வாசல் முற்றத்தில்தான். அந்த நாட்களில் பால்கறவை பழகுவதற்காக அய்யா பின்னால் செல்லும்போது அவர் வேகத்துக்கு சைக்கிளை மிதிக்கமுடியாது. காலையில் பறக்கும் பறவைகணக்காக சரியான நேரத்துக்கு நிறைந்த பால்கேனுடன் திருச்சிவண்டிக்கு பால் ஏற்றிவிட வந்துவிடுவார்.

அவர் பின்னாலேயே பறந்துவந்து முச்சாமி களத்தை அடுத்து மாட்டுப்பட்டியின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினேன். மூச்சுவாங்கியது. பசுவின் மடிக்கு கீழே குத்துக்காலிட்டுஅமர்ந்தேன்.

 “டேய்…தஸ் புஸ்ங்காத…மாடு மெரளும். பசுமாடு தொட்டாசிணுங்கி செடிமாதிரிடா…”

எழுந்து கொண்டேன். எத்தனை நாட்களாக இவர் பின்னால் சைக்கிளில் அலைவது என்று சலிப்பாக இருந்தது.

அவர் அந்தப்பக்கம் நின்ற வெள்ளையில் பால் கறக்கும் சத்தம் சர் சர்ர்…என்று கேட்டது. கிழக்கே வானத்தில் பச்சைமலைக்கு மேல் சிவந்து வருகிறதா என்று பார்த்தேன். ஒரே ஒரு நட்சத்திரம் பால் சொட்டு போல முணுக்கு முணுக்கென்று கிடக்க வானம்  கருத்துக்கிடந்தது. அய்யா வேகமாக செருமினார். சட்டென்று திரும்பினேன்.

அவரின் காப்புகாய்த்த பெருவிரலின் மடங்கிய முட்டிக்கும், மடங்கிய ஆள்காட்டிவிரலின் முட்டிக்கும் இடையில் பால்காம்பை பிடித்திருந்தார். இருகைகளும் ஒரே சீராக ஏறி இறங்க, அவரின் இரண்டு கால்களுக்கும் இடையில் இடுக்கி பிடித்திருந்த பால் வாளியில் ராகம் போல நுரைமேல் பால் பிய்ச்சும் சத்தம் எழுகிறது. 

அவ்வளவுதான் என சட்டென்று கருப்பியின் மடிக்கடியில் அமர்ந்தேன். அது முன்னும் பின்னும் நகர்ந்து மறுத்தது.

“டேய்…மடப்பயலே…பிள்ளைய பயங்காட்டாதடா. நீ எந்திரி மொதல்ல…”

பல்லை கடித்தபடி எழுந்து நின்று கொண்டேன். அங்கிருந்த வேப்பமரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இரண்டு காட்டு காட்டினால் ஒழுங்காக நிற்கும் என்று கருப்பியின் மீது ஆத்திரமாக வந்தது.

அய்யா பால்வாளியை கையில் தந்து, “ஒரு சொட்டு சிந்தாம கேனுல ஊத்தனும்,”என்றார். விவரம் தெரிந்ததிலிருந்து  நாளெல்லாம் இதையே கேட்டு கேட்டு எரிச்சலாகிறது. வீட்டில் அம்மாவிடம்,என்னிடம், சம்பளத்திற்கு பால்கறக்கும் மூர்த்திஅண்ணா,ரகுவிடமும் இதே பாட்டைத்தான் பாடுவார். சைக்கிள் பக்கமே நின்று கொண்டேன்.



அவர் எழுந்து நின்று கால்களை உதறிக்கொண்டார். வெள்ளையின் முதுகில் கையூன்றி முட்டிக்கால்களை பிடித்து விட்டுக்கொண்டார்.

“பசுமாட்டு மடிய உங்கம்மா சுருக்குப் பையின்னு நெனச்சியா. நெனச்சதும் தொட விட்ருமா…பயந்த சுபாவங்கறதால மெரட்டி நிக்க வைக்கலாம். பால் சுரக்கனுமே…அது ஒன்னோட விரலுக்கு பழகனுண்டா…”

கருப்பியின் அருகில் வந்தார். 

“என்னத்தா…”என்றபடி அதன் நெற்றியை தடவினார். அது நாக்கை நீட்டி பனியனுடன் நின்ற அவரின் வெற்றுத் தோளை நக்கியது.

“ரெங்கா…இங்கவாடா…”

கருப்பியின் நெற்றி முதுகு உடல் என்று தடவிக்கொடுக்கச் சொன்னார். அதன் வாயைப்பற்றி, முகத்தை தூக்கி, “இந்தப்பய நம்ம பயதானே…எதுக்கு அடம் பிடிக்கிற…”என்று பேசியபடி கழுத்து சதையை பிடித்து ஆட்டினார்.

“பால்காரனுக்கு மாட்டுக்கிட்ட பழகத்தெரியனுண்டா…நம்ம பிள்ளையாட்டம். உனக்கு வயசு பத்தல…ஒரு பிள்ள பெறந்தா தானா வந்திரும்…”

தண்ணீரை வாளியில் எடுத்து அதன் மடியை நன்கு கழுவினார். அதன்  வயிற்றில் மெதுவாக செல்லத் தட்டு தட்டிவிட்டு குத்துகாலிட்டு அமர்ந்தார். கருப்பி ஆடாமல் அசையாமல் நின்றது. விரல்களில் விளக்கெண்ணைய்யை தடவிகொண்டார்.

“இங்க பாரு ரெங்கா…இத்தன நாள் எங்கூட வர…ஆனா பொருப்பில்லாம விடியிற வானத்தையும்…காக்காகுருவிகளையும், மரமட்டையையும் பாத்துக்கிட்டு நிக்கற. பள்ளிக்கூட படிப்பும் ஒனக்கு எறல. தொழில் கத்துத்தர ஆளிருக்கப்ப கத்துக்க..படம் வரையறேன்னு பொழுதன்னைக்கும் கண்டஎடத்துல கிறுக்கிக்கிட்டு பயித்தியகாரனாட்டம் திரியாத…”

வானத்திலிருந்து கண்களை திருப்பி அய்யாவைப் பார்த்தேன். அவர் குரல் முன்போல இல்லை. ஆள் தளர்வாக இருப்பது என்னவோ போல இருக்கிறது. காலில் விஷ முறிவு கல் வைத்துவிட்டு வந்ததிலிருந்தே இவர் பழைய ஆளாக இல்லை. இரத்தத்தில் நாள்ப்பட்ட விஷம் என்று அந்த வைத்தியர் சொல்கிறார். 

அவர் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்கிக்காட்டினார்.  கைகளை காம்பில் வைத்தபடி, “ இறுக்கி பிடிச்சிறபிடாது…உசுருள்ள சீவன்ங்ற நெனப்பு இருக்கட்டும். ரொம்ப தளர பிடிச்சின்னாலும் வேலைக்கு ஆகாது…பால் குடிக்கிற கன்னுக்குட்டியப் பாத்தின்னா…பிடிமானம் தெரிஞ்சிரும்…”என்றபடி கறந்தார். வாளிக்குள் மெல்லிய அலையடித்தலுடன் பால் நிரம்பத்தொடங்கியது. நான் பால்குடிக்கும் வெள்ளையின் கன்றை கொஞ்சநேரம் பார்த்துவிட்டு அய்யாவிடம் திரும்பினேன்.

நிலைக்கொள்ளாத கருப்பி திரும்பித்திரும்பி அய்யாவின் தோள்களை முகத்தை நக்கியது. 

“சரித்தா…சரித்தா….”என்று பேசியபடி எப்போதாவது மிக மெதுவாக வயிற்றில் தட்டிவிட்டு கறந்தார்.

“கறக்குறதுக்கு முன்னாடி நமக்கு இது பிள்ளை…மடித்தொட்டு பால் கறக்குறப்ப பசுவுக்கு நாம பிள்ளை…சரியாடா..”

நான் தலைப்பாகை துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்துக்கொண்டேன்.

அய்யா எழுந்து வாளியை தந்துவிட்டு என் கண்களை பார்த்தபடி, “இனிமே நீ தனியா கறவைக்கு போலாண்டா…”என்று சொல்லிவிட்டு அடுத்த பசுவிடம் சென்றார்.

பனிக்காற்று முகத்தில் அறைந்தது. முடியை ஒதுக்கிக்கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கினேன். பட்டியில் கடைசியாய் ஒற்றை மாடு நிற்கிறது. ம்மா..ம்மா என்று ராவும், பொழுதும் கத்திக்கொண்டே கிடக்கிறது. 

“ஒத்த மாட்டுக்கு ஒரு தொணமாடு இல்லாம போயிருச்சே இந்தப்பட்டிக்கு. பதினஞ்சு இருவது மாடுகன்னுகளோட கிடந்த இந்த மாடு இப்படி ஒத்தையில தவிக்கறத பாக்கனுன்னு எந்தலையில எழுதியிருக்கே…”என்றபடி அம்மா வாசலுக்கு சாணம் தெளித்தாள்.

வயசாகிபோன மாடு என்று எவனும் விலைபேச வராமல் தங்கிவிட்டது.  பிறந்ததிலிருந்து பட்டியில் இருக்கிற மாட்டை  கறிக்கடைகாரனுக்கு வித்துட்டு சோறுதிங்கமுடியுமா? பால்காரன் மட்டும் மாட்டை கறிக்குன்னு வித்துறக் கூடாதுன்னு சொல்லித்தான் அய்யா முதல்நாள் கறவைக்கு புதுவாளியுடன் அனுப்பினார். அன்று அய்யா நின்று அனுப்பிய இடத்தில், இன்று வீடு,வயல்,பட்டிமாடுகள் என்று எல்லாவற்றையும்  தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

ஒடுவில்லை ஓட்டத்தின் கதவு சாத்தியிருந்தது. சித்ரா படுத்திருப்பாள். இரண்டு பயல்களும் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர்களுடன் படுக்கமுடியவில்லை. பொழுதணைத்தும் இவனை கட்டிக்கிட்டு வந்து சீரளியிறேன் என்று திட்டி தீர்க்கமுடியாத ஆத்திரத்தை படுத்தே தீர்க்கிறாள்.

கடனிற்காக ஐம்பதுமாட்டு கறவையை மூர்த்தி அண்ணனிடமே கொடுக்கும்படி ஆகிவிட்டது. அய்யா பத்து வீட்டு கறவைகளை கொடுத்துவிட்டு போனார். இருபத்தைந்து ஆண்டுகளாக நாற்பது வீட்டுக்கறவைகளை பாடுபட்டு சேர்க்க எத்தனை எத்தனை வெம்பாடுகள். மொத்தமாக தூக்கிக் கொடுத்துவிட்டு வெற்று ஆளாகி ஆறுமாதங்களாகிறது. திரும்பி தெருவில் நடந்தேன்.

கால்கள் மெல்ல தெற்குதிசை நோக்கி திரும்பின. ஹரிகேசர் வயலில் அரளிச்செடிகள் நிழல்கள் என அசைந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் குடிசாமி ஒன்று அரளி செடிகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு இடம் மாற்ற மாட்டேன் என்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பார். மற்றவயல்களில் அரளிச்செடிகளை அழித்துவிட்டார்கள். 

கோலமிட்ட வாசல்படிகளில் ஓரத்தில் அகல்விளக்குகள் அவிந்தும் கரிந்தது போக, நேரம் சென்று ஏற்றிய அகல்கள் மினுங்கிக் கொண்டிருந்தன.

தெற்கு முனைக்கு திரும்பும் முன், வடக்கே திரும்பி பங்காருஅக்கா வீட்டை ஒருமுறை பார்த்தேன். அக்கா வாசல்படிகளில் குனிந்து நிற்கிறாள். இப்போதுதான் எழுந்திருப்பாள். எப்படியும் ஐம்பத்தைந்து வயதாவது இருக்கும். அக்கா வீட்டுக்கு வர சொல்லுச்சு என்று அம்மா நேற்றே சொல்லியது.

திரும்பி அவளை நோக்கி நடந்தேன். அகலை பொருத்துவதற்காக தீக்குச்சிகளை உரசி போட்டுக் கொண்டிருக்கிறாள். இந்தக்குச்சி பற்றிவிட்டது. அகல் ஔியில் அவளின் வலப்பக்க முகம் தெரிகிறது. நெருங்க நெருங்க மூக்குத்தியின் வெளிச்சம் பிரகாசமாகிறது. சுற்றிலும் இருள். நான் ராசுவீட்டு வேம்பின் அடியில் நின்று கொண்டேன்.

அக்கா வாசலில் கோலமிட தொடங்குகிறாள். நான் ஒன்பதாவது வகுப்புத்தேர்வை  மூன்றுமுறை எழுதி தோற்றுப்போய் வீட்டில் இருந்த போதுதான் அக்கா கல்யாணமாகி இங்கு வந்தாள்.

“ஒனக்கு தம்பிமுறை தான்…”என்று அந்த வீட்டுக்கிழவி சொன்னது.  நெற்றிசுட்டியின் கற்கள் மின்னும்  முகத்தில் கன்னத்தில் திருஷ்ட்டி பொட்டுடன் திரும்பி முகத்தப் பார்த்து சிரித்து உம்பேரு என்னடா என்றாள். அவர்கள் வீட்டுமுற்றம் சிமெண்ட் தளமிட்டது. சாக்பீஸால் கல்கி புத்தகத்தில் வரும் படங்களை வரைவதற்காகவே அவர்கள் வீட்டிலேயே பழியாகக்கிடப்பேன். அவள் நான் வரைவதை அதிசயமாக பார்த்து மாமாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவர் தலையாட்டியபடி நின்று பார்ப்பார். 

ஒருநாள் பொன்னியின் செல்வன் தொடரின் பூங்குழலியை வரைந்தேன்.  அக்கா சின்னப்பிள்ளையைப் போல ஓடிச்சென்று மாமாவை இழுத்து வந்து காட்டினாள். அவர் அவள் கையைவிலக்கியபடி பார்த்துக்கொண்டே இருந்தார்.

“ரெங்கா…எப்படியாச்சும் பத்தாவது பாஸ் பண்ணிடு… விசாரிச்சு ட்ராயிங் டீச்சர் ட்ரெய்னிங் சேத்துவிடுறேண்டா…இங்கக்கெடந்தா வீணா போயிருவ,”

அக்கா மாமாவை முறைத்தாள்.

“எதுக்கு இப்பிடி பாக்கற…ஆடுற காலு நிக்காதும்பாங்க. வரையற கை இவனுக்கு…எனக்கென்னமோ பால் கறக்க அனுப்பறது சரியில்லன்னு படுது…”

“நீங்க கண்டதையும் பேசி அவன மாத்திறாதீங்க. இந்த மாறி கிறுக்குத்தனத்தை எல்லாம் உங்களோட வச்சுக்குங்க. படிக்க முடியாதப் பயல தொழிலுக்கு பழக்காம என்ன பண்றது…எத்தன வருஷம் பரிட்சை எழுதிக்கிட்டே இருப்பான்,”

“இவன் வரையற எடத்தையெல்லாம் வெளக்கமாறு போட்டு கழுவாத பங்காரு…இந்தபயலயே ஈரத்துணியால துடச்சுவிடச் சொல்லு…”என்று மீண்டும் நான் வரைந்ததையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பாயி செத்தப்பிறகு எங்களுக்கான வீட்டுமனைகளில் ஒன்றை எங்கள் அத்தைக்கு கொடுக்க அம்மா சம்மதிக்கவில்லை. அந்த தகராறில் மாமாவுடன் மனஸ்தாபமாகியது.

“நம்ம வீட்ல பெறந்த பிள்ள…சரியான சுவாதினமில்ல. இதெல்லாம் அந்தக்கெழவியோடது தானே.  அது பெத்த மவளுக்கு ஒரு மனைய சகாயவிலைக்கு குடுத்தா என்ன? கொடுக்கலேன்னா பெரியாளுங்கள வச்சி பைசல்தான் பேசனும். நம்ம சொந்த பந்தத்துக்குள்ள பேசி முடிச்சிக்கிட்டா நல்லது,”

“பொட்டப்பிள்ளைய கட்டிக்குடுத்தா எல்லாம் முடிஞ்சு போச்சு…வீட்டுமன வேணுமோ…அடிச்சு தொரத்திவிடுங்க..”என்று ஆங்கியத்து சித்தப்பா எகிறினார்.

“இங்க பாருங்க மாமா…ஆங்கியம் அழகாபுரியில பேசுற பேச்செல்லாம் இங்க வேணாம். விட்டத்துக்கு வலுவான வேலமரமின்னா…தாழ்வாரத்துக்குன்னு ஒரு நொணாமரத்து குச்சிக்கூடவா இல்லாம போயிரும்…”

“என்ன தம்பி பேச்சு மாறுது…அரசாங்க உத்தியோகம் குடுக்கிற தெகிறியமா?”

“என்ன சின்னம்மா இது? கடைசியா பெறந்தது. எனக்கு அக்காமாதிரி. சூது வாது தெரியாத பிள்ளைய எங்க தொரத்த சொல்றீங்க…”

மாமா அமர்ந்திருந்த மரபெஞ்சின் கீ்ழ் அத்தை அமர்ந்திருந்தது. ஒருநாளில் இருமகன்களை கிணற்று நீரில் எமனுக்கு கொடுத்த பதற்றம் தீராத அத்தையின் கண்களை வரைந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

“எல்லாரும் பேசறாங்க…உங்க தங்கச்சிதானே மாமா. வாயத்தெறக்காம நிக்கிறீங்க…”என்று அய்யாவிடம் திரும்பினார். அய்யா அம்மாவின் முறைப்பை தவிர்த்தபடி தலையாட்டினார்.

“சகாய வெல போட்டு காச வாங்கிக்குங்க…”என்று சட்டென்று முடித்தார். யாரும் அதற்குமேல் பேசமுடியவில்லை. குடும்பங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் ஆனது. மாமா ஒருநாள் சாயங்காலமாக தெற்குபக்க  கிணற்றில் குளித்துவிட்டு திரும்பிவந்து கொண்டிருந்தார். செங்கமலம் கொட்டாயிலிருந்த நான் அவரை கவனிக்கவில்லை.

மாமா வந்த வேகத்தில் என் முடியை பிடித்து இழுத்து வரப்பில் போட்டு அருகிலிருந்த புங்கங்குச்சியை ஒடித்து விளாசினார்.

“வயசுப்பயலுக்கு குடிக்கக் குடுத்து பழக்கறதெல்லாம் உன்னோட வம்சதுக்கே பழிம்மா..”என்று செங்கமலத்திடம் சொல்லிவிட்டு என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார்.  மாமாவின் கலங்கிய முகம் இப்போதும் குடிக்கும் போதெல்லாம் கண்ணில் வந்து தொலைக்கிறது.

என் கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து மாமாவுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்த அய்யாவை அம்மா விடவில்லை. அக்கா தண்ணியெடுக்க வரும் வழியில் காத்திருந்து கல்யாணத்திற்கு வரச்சொன்னேன்.

“நீங்க வேற பத்திரிகை வைக்கலை… எங்க வூட்ல அத்தன பேரும் கொதிச்சு போயி கிடக்குங்க…பொண்ணு எப்பிடியிருக்கா. ஒனக்கு பொண்ணு பாக்கறதுக்கு வரனுன்னு எத்தன கனவு கண்டிருப்பேன்…”என்று அழுதது.

கொஞ்சம் நேரம் சென்று, “  முடியெல்லாம் ஒட்டவெட்டாத…உங்க மாமனாட்டம் வுட்டு வெட்டுடா…கிறுதா வச்சா தான் நல்லாருக்கும். மொழுக்குன்னு வழிச்சிட்டு போய் நிக்காத…உங்க மாமனப்பாரு கமலஹாசனாட்டம்…” என்று சிரித்தது.

கல்யாணத்தன்று அக்கா காலையிலேயே குளித்துவிட்டு பழைய சீலையைக் கட்டிக்கொண்டு வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்ததாம்.

“எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிருக்க. பத்திரிக்கை வைக்காம எப்படி கல்யாணத்துக்கு போறது…”

“நீங்க வரவேணாம். நாம்போறேன்…தண்ணியெடுக்க போறப்ப ரெங்கா என்னைய கூப்பிட்டான்…”

“இதென்ன சின்னப்பிள்ளைதனமா இருக்கு…”என்று கிழவி ஆத்திரப்பட்டது.

“பங்காருக்கு ரெங்கா பெறந்தவீட்டு சொந்தமா... நம்ம சொந்தந்தானே. அறியாத மனசுக்கு பாசந்தான் பெரிசு. ரோசம் பெருச்சுன்னா நம்ம போகவேணாம். பங்காரு போறதுன்னா போகட்டும்…”என்று மாமா அக்காவிடம் மொய்ப்பணம் கொடுத்தனுப்பினார் என்று அக்கா சொன்னது.

அக்காவின் கோலத்தை பார்த்தபடி வந்து நின்றேன். வளைவு நெளிவில்லாது நேர் கோடுகளாக இழுத்து வைத்திருந்தது.

“என்னடா ரெங்கா…இந்த நேரமே…கோலத்தை பாத்து தானே சிரிக்கிற. இந்த ஊருக்கு இது போதும். எங்கஊர்ல எவ்வளவு பெரிய வாசல் தெரியுமா?”

“கறவைக்கு எந்திருச்சு பழகின பழக்கம். தூக்கம் வரமாட்டுதுக்கா…”

“ம்…எங்கியோ தெசமாறி போயி வீடு வாச, வயவஞ்சி எல்லாத்தையும் தொலச்சிட்டு நிக்கிறியே…”

“….”

“செல் போனுல சீட்டு விளையாட்டுன்னு உங்கம்மா சொல்லுது. பங்குவியாபாரன்னு எம்மவன் சொல்றான்,”

“…”

“நாஞ்சொல்றத கேளு…இதுவும் உங்க மாமாதான் சொன்னாங்க,”

“என்ன சொன்னாரு…”

“நேத்து ராத்திரி ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தோம்…பகல்ல வூட்டுக்கு வரலாமின்னு இருந்தேன். ஒருமாசமா ராத்திரியானா இதையே பேசிப்பேசி மனசழிஞ்சு போவுதுடா. வீட்டை காலிபண்ணனுமாமே,”

“ம்…”

“நாங்க சொன்னா உங்க அத்தை கேக்கும். அந்தமனையில பாதி சும்மா தானே கெடக்கு. ஒரு தகர கொட்டாயி போட்டு இருந்துக்குங்க…மூர்த்திக்கிட்ட பேசி சம்பளத்து கறக்க ஏற்பாடு பண்ணிக்கலாமா?” என்று என் கன்னத்தில் கைவைத்து கேட்டாள். அவள் இப்படி செய்தால் ஆணையிடுகிறாள் என்று சொல்லாமல் சொல்வது.

நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். 

“துறையூர்லருந்து படம் வரையறதுக்கு ஒரு பலகைய எம்மவனுக்கு வாங்கியாந்து வச்சேன். அவனுக்கு கை வளைஞ்சா தானே. அதை கொண்டு போய் உங்க அத்தவீட்ல வைக்க சொல்றேன்… சரியா. எனக்கு கண்ணுபாக்க நீ வேணுண்டா,”என்று கழுத்தை வேறுப்பக்கம் திருப்பி நெஞ்சில் கிடந்த சேலையை இறுக்கிப்பிடித்துக் கொண்டது. 

ஆட்டுக்காரங்க வீட்டு சினையான பசுக்கள் வீட்டுப்பட்டியிலிருந்து வயலுக்கு சென்றுகொண்டிருந்தன. மிகமெல்ல நடந்துவந்த கபிலநிற பசு என் பக்கம் வந்து மூச்சுவாங்க நின்றது. என் கை அனிச்சையாக அதன் முதுகை தடவியது. உருண்டு விரிந்த அதன் கண்மணியில் அகலின் ஔி மினுமினுத்தது. சாணமிட்டு விட்டு மெதுவாக நகர்ந்தது.

அக்கா சிரித்தமுகத்துடன் சாணத்தை எடுத்து வீட்டின் ஓரமாக வைத்தாள்.

“இனிமே நல்லாருப்படா…”

ஆட்டுகார மாமா ஆமாம் என்பது போல தலையாட்டி விட்டு பசுவின் முதுகில் தட்டி ஓட்டினார். நான் பசு நடந்து செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...