2019 ஏப்ரல் 10 பாதாகை இதழில் வெளியான சிறுகதை அன்பில் தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின்புறம் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டது கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தினார். சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார். சற்று மூச்சுவாங்கியது.அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது. இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா? என்று தோன்றியது. இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழேவந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்தவயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்துவிட்டு சரிசெய்து திரும்பினார். வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம் திருச்சியின் நம்பர்ஒன் டோல்கேட் ...