துதிக்'கை'

   எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறுபதாவது வயது நிறைவை ஒட்டி எழுதிய கட்டுரை. 

                                                                   துதிக்‘கை

எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்,தி.ஜா,கி.ரா,சு.ரா,நாஞ்சில்நாடன் போன்று நான் நூலகங்களில் எழுத்தாளர் ஜெயமோகனை கிடைக்கப்பெறவில்லை. சிலப்பதிகாரத்தின் நவீனவடிவைத்தேடி ஜெ வை அடைந்தேன்.




எங்கள்பக்கம் துறையூரில் நடைபெறும் மிகச்சிறிய புத்தகக்கண்காட்சியில் ‘நாவல் கோட்பாட்டின்’ அழுக்கான பழையபிரதி ஒன்று மிஞ்சியிருந்தது எனக்காகவே என்று நினைத்துக்கொள்கிறேன். அதிலிருந்து காடு, கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்களை அடுத்தடுத்து வாசித்தேன்.

ஒருபுத்தகத்தை வாசிப்பதுடன் இணைந்து நம் வாழ்வில் எந்த காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் முக்கியமானது என்று நினைக்கிறேன். மிகநொய்மையான காலகட்டத்தின் மத்தியில் ஐெ புனைவின் வழி அறிமுகமானார். இந்த நாவல்களை அடுத்து வெண்முரசிற்கான அறிவிப்பு வரும் பொழுது வீட்டில் இணையஇணைப்பு வந்தது. எனக்கு காலை மாலை ஒவ்வொரு மணிநேரம் அனுமதி. வண்ணக்கடலுக்குப் பிறகு தொடுதிரை அலைபேசியில் வாசிக்கத்தொடங்கினேன். வாசிப்பின் வழி மெல்ல நான் என் தேடுதல்களுக்கான விதவிதமான பதில்களை, அல்லது பாதைகளின் துவக்கப்புள்ளிகளை கண்டுகொண்டேன். இந்தகாலகட்டத்தில்தான் எழுதத்தொடங்கினேன். அதற்குமுன் நாவல் கோட்பாடு (நாவலை இன்னும் எழுதினப்பாடில்லை) ,நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்,எழுதும் கலை மற்றும் ஜெவின் இணையதள கட்டுரைகளை தீவிரமாக வாசிக்கத்தொடங்கினேன். 

தனிப்பட்ட முறையில் கிருஷ்ணமதுரம், அரதி மற்றும் தன்னை எழுத்தாளராக, அரசூழியராக, குடும்பத்தலைவராக பகுத்துக்கொள்ளுல் பற்றிய கட்டுரைகள் மிகத்தொடக்கத்தில் என் அகமலர்ச்சியை தூண்டியவை.

சுயநலம் என்று பொதுவில் சொல்லப்படுகின்ற ஒன்றை தன்னறம் என்று புரியவைக்க,அதை செய்வதற்காக நீ எந்தவித குற்றவுணர்வும் கொள்ள வேண்டியதில்லை என்று உணர ஜெ வரை நான் வந்து சேரவேண்டியிருந்தது. வரிசைகிரமமாக அடுக்கி வைக்கப்பட்ட குடும்ப கடமைகளை மீறிய ஒன்று நம்மிடம் இருப்பது நம் குறை அல்ல என்று சொல்லவும்.

வாசிக்க எழுதத் தெரிந்தவர் தனக்கு உலகியலில் சில விஷயங்கள் கைவராததற்காக கவலைப்பட்டு உழல வேண்டிய அவசியம் இல்லை என்ற ஜெ வின் வரிகள் வாசிப்பின் உண்மையான தகுதியை எனக்குக் காட்டின. எட்டுவயதில் வாசிப்பை தொடங்கிய எனக்கு அதன் மதிப்பை ஒரு எழுத்தாளர் சொல்ல வேண்டியிருந்தது.

ஐெ எனக்கு என்னவாக இருக்கிறார்? எளிய தனிமனுஷியாக என்அகத்தில், ஒரு வாசகியாக என்னுள்,  எழுத்தாளரான என்னில், அவர் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? என்பதை தனித்தனியாக கோடிட்டு பிரிக்கமுடியாது என நினைக்கிறேன். இந்த மூன்றும் இணைந்த ஒன்றை இங்கே கொடுக்கமுடியும் என நம்புகிறேன்.

நம் தந்தைகள் தங்கள் கைகளில் இருந்து நம்மை நழுவவிடும் ஒரு காலகட்டம் நம் அனைவருக்கும் பொதுவானது. இயல்பானது. அது எனக்கு எப்படி நடந்தது என்பது ஊழின் கடின வழிகளில் ஒன்று. வசீகரிக்கும் நேர்மறையான ஆளுமையாக வீட்டிலும், பள்ளியிலும், சமூகத்திலும் எழுந்து ரூபம் கொண்ட தந்தையை, மிக மெல்ல மெல்ல ஆளுமைசிதைந்து பேதை என கண்முன் காணும் தினசரி வதைகள் என் இருபதுகளின் பிற்பகுதியில் தொடங்கின. இந்தக்கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் எப்பொழுதும் என்னுடன் பேசிக்கொண்டேயிருந்தவர், இப்பொழுது மொழியை எங்கோ தொலைத்துவிட்டு மௌனமாக புன்னகைக்கிறார்.

அவருடன் இணைந்து என்னையறியாமல் நானும் தீவிரமான மனஅழுத்த நோயில் பிடியில் சிக்கினேன். சிறுபிள்ளையில் தந்தையை தொலைப்பதற்கு நிகரானது கல்லூரி முடித்த காலகட்டத்தில் தொலைப்பதும். நடைமுறை நம்மை வந்து அறையும் காலகட்டம். மேலதிகமாக அவர் நான் மதிக்கும் என்னுடைய ஆசிரியராக இருந்தது இன்னும் கடுஊழ். அவரின் இறப்பு என்பதைவிட ஒருபடி மேலான பிரிவு. அனுதினமும் மனதை குத்தி பயாப்ஸி க்கு எடுப்பதைப்போல, மனதின் துணுக்குளை ரத்தமும் தசையுமாக உயிருடன் வெட்டி எடுப்பது.

நம் தலைக்கு மேல் ,நம் கைப்பிடியில்,நடந்து கொண்டிருக்கும் பாதையில், நம்முடன் இருந்த துணை மறைந்து போவது, நம்மை வெறுமையின் உச்சத்தில் நிறுத்தி வெட்டவெளியில் நின்று பதைக்கசெய்வது. அய்யாவின்அல்சைமர் நோய் நான் வாழ்வில் அதுவரை அறியாத இருளில் தள்ளியது. அதற்குமுன் மிகஇளமையில் இருஆண்டுகள் நீடித்த நோய் தந்த தனிமை இருளில் எனக்கு, கூட்டுக்குடும்பத்துடன் அறியாமை துணையிருந்தது. இந்தமுறை மருத்துவரோடு இணைந்து இன்னொருகரம், தந்தையுடையது போல ஒன்று. அதை பற்றியே மீண்டுவந்தேன். என் டிப்ரஷன் ஆண்டுகளில்தான் எஸ்.ரா, ஜெயமோகன் என்று இருவரையும் மாறிமாறி தீவிரமாக வாசித்தேன். அதே காலகட்டத்தில் தான் எழுதத்தொடங்கினேன்.

முன்பே சொல்லியதைப்போல எழுத்து, இலக்கிய அறிமுகம் பற்றிய ஜெவின் நூல்கள் எனக்கு எழுதும் தைரியத்தை கொடுத்தன. பதினேழு வயதிலிருந்து எதையாவது தொடர்ந்து எழுதிப்பார்க்கும் பழக்கம் இருந்தது. கல்லூரிகளில் கூட ஒவ்வொரு பருவத்துவக்கத்தில் ‘வாட்ஸ் யுவர் எய்ம்?’ என்ற கேள்விக்கு தொடர்ந்து எழுத்தாளராவது என்றே சொல்லியிருக்கிறேன். ஜெவின் தளத்தில் சொல்வனம் பற்றி அறிந்து அனுப்பிய முதல்கதை பிரசுரமாகியது.

படக்கதைகள் தொடங்கி சிறுவர்களுக்கான நூல்கள், கல்கி,அகிலன்,நா.பா, வைரமுத்து, ஜெயகாந்தன்,புதுமைப்பித்தன், சு.வெங்கடேசன், எஸ்.ரா, தி.ஜா,லா.சா.ரா,ஆண்டாள்,சங்கப்பாடலாசிரியர்கள் என்று நீளும் அனைவரும் என்னில் படிப்படியாக செல்வாக்கு செலுத்துபவர்கள்தான். அவர்கள் இணைந்து உருவாக்கியதுதான் என் எழுத்துஅகம். அந்த அனைத்தையும் சேர்த்துப்பிடித்து எனக்கான எழுத்தை உருவாக்கிக்கொள்ள, ஏகலவன் கற்றதைப் போல ஜெ வின் எழுத்துக்களில் நிழலில் நின்று எனக்கான எழுத்தை உருவாக்கிக்கொண்டேன். ஜெவின் செல்வாக்கு என் எழுத்துக்களில் அதிகம் என்பதை குறையாக நான் நினைக்கவில்லை. என் தனிபலமான கிராமம் சார்ந்த கதைகளில் அவர் இல்லை என்பது எனக்குத்தெரியும். மற்றக்கதைகளை எழுதிப்பார்க்கையில் அந்த நிறம் வருவதை நான் தவிர்ப்பதில்லை. மெல்ல மெல்ல அது என் நிறத்துடன் கலந்துவிடுதலோ அல்லது அதுவும் என்னின் ஒருநிறமாக ஆவதோ நிகழலாம். தன்வீட்டில் வெல்லக்கட்டியை எடுத்து ஔித்துக்கொள்ளும் பிள்ளையின் சிரிப்புடன்தான் இந்த விமர்சனத்தை நான் எதிர்கொள்கிறேன். 

சு.ராவின் ‘எழுது அதுவே எழுத்தின் ரகசியம்’ என்ற வாக்கியம் என் எழுத்திற்கான ஆப்தவாக்கியம். அதற்கான  நடைமுறை சாத்தியங்களை ஜெவின் பல்வேறு கட்டுரைகள், புனைவின்வழி கண்டுகொள்கிறேன். 

ஜெ வின் புனைவுகளுக்கு பதில் கூறும் வகையில் எழுதிப்பார்ப்பதும் உண்டு. சமீபத்தில் எழுதிய பொன்சிறகு என்ற ராணிமங்கம்மாள் பற்றிய கதை ஒருஉதாரணம். மேலும் தினமும் அவர் தளத்தை பார்க்கும் போது தொடர்ச்சியாக எழுதும் ஒருவர் நம்மை பாதித்துக்கொண்டேதான் இருக்கிறார். ஒத்திப்போடுவதை கேள்வி கேட்பவராக.

மிகமுக்கியமாக எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்கள் தான் சொல்லிவிட்ட எழுதிய ஒன்றிற்காக வருத்தப்படவோ, குற்றவுணர்வோ அடையத்தேவையில்ல என்றும், சில இடங்களில் சற்று இழுத்துப்பிடித்தும், சில இடங்களில் ‘போ’ இதைகவனிக்க தேவையில்லை என்று பின்னிருந்து தள்ளிவிடும் துதிக்கையாக இருக்கிறார். 

எழுதுபவளாக என் மிகப்பெரிய சிக்கல் என் இயல்பான அகவயத்தன்மை அல்லது அகமுகத்தன்மை. இன்னுமே நடைமுறை வாழ்வில் அப்படியே நீடிக்கும் என்னை, எழுத்துப்பாதையில் சற்றேனும் புறமுகத்தன்மைக்கு திருப்பிவிட்டது அதே துதிக்கைதான். பொதுவாக வாழ்வின் யதார்த்தத்தன்மை மற்றும் பிரபஞ்சத்தின் எதிர்பாராத்தன்மைக்கு முன்நிற்க, இறப்புகளை எதிர்கொள்ள அவர் எழுத்தின் துணை மிகஅந்தரங்கமானது.

எழுதும் கதைகளில் அங்கங்கே காதல் பற்றி ஆழமாக எழுதுகிறேன் என்று இன்றுவரை குடும்பத்தாருக்கு தெரியாது (எழுதறதை வாசித்தால் தானே) தெரிந்தால் பாப்பாவா! (எத்தனை வயசானாலும் வீட்டுக்கு பாப்பா தானே) என்று நெஞ்சைபிடித்துக்கொள்ள வாய்ப்புண்டு. எழுதிய பிறகு எனக்கே ஆச்சரியமாகதான் இருக்கும். இந்த அகத்தன்மையின் மறைவிற்குள் இருந்து இந்தத் துதிக்கை என்னை இழுத்து வெளியே போட வேண்டியிருந்தது.

இவையெல்லாம் மிகச்சிறிய விஷயங்களாக இருக்கலாம் ஆனால் என்னுள் இருந்த எழுதும் ஒருத்திக்கு அன்று மிகப்பெரிய சிக்கல்களாக இருந்தன. 

என் எழுத்துசகர்களை அவர்களின் தொடக்ககாலத்திலேயே ஜெ வின் இணையதளம் மூலம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்களுடன் உரையாடலில் இருக்கிறேனா பார்த்திருக்கிறேனா என்பதை மீறி பிசிராந்தை நட்புகளாக தொடர்கிறது.

கல்கியில் தொடங்கி நான் வாசிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரின் மற்ற சில புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துவிடுவது இயல்பு. ஒரு எழுத்தாளரில் தொடர்ந்து இருப்பது எனக்குப்பிடிக்கும். வீட்டில் கூட அதை கேலி செய்வார்கள்.  அவர்கள் கதைகளைப்பற்றி பேசுவது அவர்களைப்பற்றி சொல்வது என்று தொடர்ந்து அவர்களில் இருப்பது. ஜெவைத் தொடங்கியது முதல் இந்த பேச்சை முடிந்தஅளவு தவிர்க்கும் மாற்றம் என்னையறியாமல் நிகழ்ந்தது. முடிந்தவரை இலக்கியம் பற்றி பேசுவதில்லை. ஐெ வில் தொடர்ந்து இருக்கிறேன். ஐெ விலிருந்து அடுத்ததொரு ப்ரியப்பட்ட எழுத்தாளர்களின் வரிசையை அடைந்திருக்கிறேன். தொடர்ந்து அவர்களை வாசிக்கிறேன். ஒருக்கட்டத்தில் வாசிக்க முடியாமலாகி திகைத்து நின்ற நாட்களை நினைத்துக்கொள்கிறேன். இனி மூளை ஒத்துழைக்கும் வரை அந்தத்தருணம் வரப்போவதில்லை என்று நம்புகிறேன்.

புன்னகைதான் அழகு வாய்விட்டு சிரிக்கக்கூடாது.. என்று சொல்லிவளர்த்தவர் அய்யா. தலைமுறைத் தலைமுறையாக சிறுகிராமத்தில், சிறுபான்மையினராக வாழும் குடும்பத்தின் பெண்பிள்ளையை, முதல்தலைமுறை பட்டதாரியாக்க பலஆண்டுகள் வெளியே அனுப்ப வேண்டும். சமைப்பது, குடும்பம் தவிர பெண்பிள்ளைகள் வேறுஉலகை காண உதவவேண்டும் என்று கனவுகண்ட தந்தையின் நியாயங்கள் அவருக்குண்டு. ஆனால் ஒருகட்டத்தில் இனிமேல் சிரிக்கலாம்ப்பா…என்று சொல்ல மறந்துவிட்டார். அதை சொல்லும் ஒருவர் ஜெ.

முதல்நூல் வெளியீட்டிற்காக துறையூரிலிருந்து சென்னை பேருந்தில் தம்பி தங்கையுடன் பயணிக்கிறேன். திருமணம் நிச்சயமான பெண்ணை அனுப்ப ஒப்புதல் அளிக்காதவர்களை புறம்தள்ளிய தங்கை தன்வருங்கால கணவருடன் பேசியபடி உடன் அமர்ந்திருக்கிறாள். வெளியே கடந்துபோகும் பொட்டல் வெளிகளை பார்த்தபடி இருக்கும் என்னிடம், “அய்யாவை நினைச்சுட்டிருக்கியா பிள்ள?”என்றவளிடம், அவளை சிரமப்படுத்தக்கூடாது என்று, “ இல்லையே வெளிய வந்து ரொம்ப நாளாச்சுல்ல… வேடிக்கை பார்க்கறேன்,” என்கிறேன். ஆனால் என் கைகளில் புத்தகங்களை தந்து சிரித்தவர் ‘புத்தகம்’ என்ற கான்செப்ட்டை மறந்துவிட்டதை நினைத்து கொண்டிருந்தேன். அந்த வெம்மை தாளாது உடனே ஜெ விற்கு மின்னஞ்சல் எழுதத்தொடங்குகிறேன். அந்தத் தருணத்தில் ஜெ இருந்தார்.

கமலாதேவியில் இருந்து கமலதேவி சற்றே திரும்பிட ஒரு உந்துதல் தேவையாக இருந்திருக்கிறது. கமலாதேவியை எதுவரை இழந்துவிடக்கூடாது, கமலதேவியின் எல்லைகள் எது என்று பின்னிருந்து செல்லமாகவோ, முறைத்தோ, கடுஞ்சொற்களின் வழியாகவோ( எல்லாம் பொதுவான கட்டுரைகளின் வழி), எழுத்தை கண்டுகொள்ளாமை வழியாகவோ ஆதுரத்துடன் தொட்டுக்கொண்டிருக்கும் தும்பிக்கை அது. அதன் ஓராயிரம் கைகளில் அருவமான ஒன்று என் பின்னாலும் இருக்கிறது.

கல்லூரிகாலக்கட்டத்திலிருந்து நான் நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் இடையில் நசுங்கிக்கொண்டிருந்தேன். தினமும் விடுதி வளாகத்தில் பாலமுருகனிடமும், அரசமரப்பிள்ளையாரின் நிழலிலும், நவகிரகபாதங்களிலும் அமர்ந்தே படித்தேன். அதே நேரத்தில் நாத்திகம் பக்கமே சாய்ந்துகொண்டிருந்தேன்.

படித்துமுடித்து வெளிவந்து நின்ற வாழ்வின் வெட்டவெளியில் நாத்திகம் எனக்கு நிழல் தரவில்லை. மீறிய வெறுமை வாழ்க்கை மீது படமெடுத்தது. யார் கூடவும் பேசி என்ன ? என்ற தீவிர எல்லையின் முடிவில் இருந்த பாதாளத்தை காட்டிய வாழ்க்கை அதே நேரத்தில் விஷ்ணுபுரத்தை கைகளில் தந்தது.

வெண்முரசை வாசிக்கும் நாட்களில் எத்தனை எத்தனை தந்தைகள். மனதில் அள்ளமுடியாமல் அள்ளிக்கொண்டேன். இழந்த ஒன்றின் ஓராயிரம் வடிவங்கள். மெல்ல மெல்ல மனஅமைப்பு மாறி காணும் அனைவரிலும் இருக்கும் தந்தையின் சிறு கூறை கண்டுகொள்கிறேன். என்னின் இளையவர்கள், சகவயதினர், மூத்தவர் என்ற வேறுபாடில்லாது. ஒன்னறை வயதான என் தங்கையின் மகனை என் அய்யால்ல நீ என்றும், என் தந்தையை அய்யாவுக்கு என்ன வேணும்? என்று கேட்கிறேன். அது வெண்முரசு எனக்குத்தந்த வாழ்நாள் கொடை . மீட்கவே முடியாது என்று நினைத்திருந்த ஒன்றை காலத்திற்கும் எனக்குக் கொடுத்த கருணை. 

என் ஆளுமையின் அடித்தளமான ஒன்றை, எதன்மீது நிற்கிறேனோ அதை, அது நழுவும் நேரத்தில் அனைத்தையும் சேர்த்து பிடித்து நிறுத்திய ஒன்றை வாசிப்பு எனக்கு அளித்தது. இனி எல்லைவரை தடுமாற்றங்கள் இருக்கலாம் தன்னைமீறி விழவாய்ப்பில்லை.

இந்த அடித்தளம் தகர்ந்திருந்தால் இன்றுவரை வந்திருக்க என்னால் முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. அதிலிருந்து மெல்ல நடந்து என் திசைகளை தேடுகிறேன். சென்றடைய முயல்கிறேன். அந்த அடித்தளத்தை நிறுத்தும் விசைகளை கண்டடையாத என்போன்ற ஓரிருவரின் வாழ்வு சிதறுவதை கண்முன்னே கண்டு பதைக்கிறேன்.

நான் ஒன்றும் சுயம்பு அல்ல. மரபில் நிற்பதும், நம் ஆழ்மனதில் மரபால் உண்டான படிமங்கள் மீது சாய்ந்து கொள்வதும் எனக்கொன்றும் கீழான விஷயமல்ல. அனைத்தையும் வெட்டியெடுத்து தன்னந்தனியாக நிற்பது வாழ்விற்கு அத்தனை சாதகமானதில்லை என்று அந்தத்துதிக்கை என் தலையில் தட்டுகிறது.

மந்தைகளாகும் போதும், சிதறிசெல்லும் போதும் பூந்தடியால் தட்டி நினைவுபடுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்துகொண்டேயிருக்கும் தொடர்ச்சியின் பலநூறு கண்ணிகளில் ஒருகண்ணி அது.

அடுத்து எழுபதாவதுவயது ஆண்டுமலரில் இன்னும் திருந்த எழுதுவேன் என்ற வாக்குறுதியுடன்…

கமலதேவி



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்