மைத்ரி : நாவல் வாசிப்பனுபவம்

 புரவி ஜூலை இதழில் வெளியான கட்டுரை. 


           பேரெழிலின் சங்கமங்கள்

எழுத்தாளனுடைய, கவிஞனுடைய, இசைக்கலைஞனுடைய, ஓவியனுடைய, சிற்பியுடைய, யோகியுடைய பார்வையிலிருக்கும் அதே பாவத்தோடு ஒன்றிப் போகச்செய்யும் போது படைப்பாளனும் நுகர்வோனும் ஒரு பிறப்புகணத்தின் இரு பகுதிகளாகின்றனர்.

                                 _ நித்ய சைதன்ய  யதி





                   நாவலாசிரியர் அஜிதன்


உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல்.

மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு நிலைகள். மனமும் மனமும் சங்கமிக்கும் இடங்கள். ஆணும் பெண்ணும் சங்கமிக்கும் இடங்கள். இறுதியில் தானே தன்னை அறிந்து தன்னுடன் சங்கமிக்கும் ஒரு அறிதல் நிலையில் நாவல் முடிகிறது.

மேலே கூறியவை எழுத்தாளர் அஜிதனின் ‘மைத்ரி’ நாவலை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு நிலை. இந்த நாவல் அஜிதனின் முதல் நாவல்.



மேலே உள்ள வரிகளை எழுதும் போது  புன்னகை எழுகிறது. இங்கு அனைத்துமே சங்கமம் தானே. பிரிவும் கூட சங்கமத்திற்கு முன் நிலை தானோ என்று தோன்றியது. எனில் இவ்வுலகில் சங்கமம் என்பதே வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறதா? ஏதோ ஒரு சங்கமத்தை நோக்கியே அனைத்து உயிர்களும் நகர்கிறதா? என்று நினைத்துக் கொண்டேன்.

நாவலில் ஒரு இடத்தில் மிகப்பெரிய புல்வெளியில் மழை பெய்யும். மண் விரிந்து கிடக்க, வானம் எங்கோ இருந்து மழைத்தாரைகளாகி  நிலத்தில் சங்கமிக்கும் காட்சி. அத்தனை பெரிய காட்சி பின்புலத்தில் நிகழும் இயற்கையின் சங்கமம் மன எழுச்சியை உண்டாக்குகிறது.

இந்த நாவலின் ஆகப்பெரிய பலமே  கதை நிகழும் களம் தான். கங்கை உருவாகும் மலைப்பகுதிகள். கதைக்களமே நாவலின் முதன்மை கதாப்பாத்திரம் என்று எனக்குத் தோன்றியது. உத்ரகாண்டின் இமயமலைத்தொடரின் பள்ளத்தாக்குகளும், மலையுச்சிகளும் நம்மை வாசிப்பில் உள்இழுத்துக் கொள்ளும். சிறுபுல்லாய்,சிறுபூவாய், தேவதாரு மரமாய்,மலையுச்சிகளாய்,பள்ளத்தாக்குகளாய்,மாபெரும் புல்வெளியாய் நாமே மாறும் அனுபவத்தை நாவல் தருகிறது.

அதே போல கதைக்களத்தின் புற இயல்பே, நாவலின் முக்கிய கதாப்பாத்திரமான ஹரனின் அகஇயல்பாகவும் இருக்கிறது . பள்ளத்தாக்குகள், மலையுச்சிகள் என்று மாறி மாறி வரும் கதைக்களன் போலவே, அவனும் கள்ளமற்ற ஆளுமையாகவும்,தன்னிரக்கம் மிக்கவனாகவும் தன்  குணவியல்புகளால் மாறி மாறி வருகிறான்.





ருத்ரபிரயாகையிலிருந்து சோன்பிரயாகைக்கு ஹரன் பயணப்படுவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. மந்தாக்கினி ஆறு ஒரு உடன்பயணி போல வந்து கொண்டே இருக்கிறது. 

சோன்பிரயாகையை அடைந்ததும் அவன் எப்படி வழிமாறுகிறான். இறுதியாக கேதார் நாத்தை அவன் எப்படி தரிசிக்கிறான், என்ன பெறுகிறான், எது அவனில் இருந்து விலகிறது,எது காட்சிப்படுகிறது  என்பதை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

பயணத்தின் போது சகப்பயணியான மைத்ரிக்கும் ஹரனிற்கும் வெகுஇயல்பாக காதல் உண்டாகிறது. சோன் ப்ரயாகையிலிருந்து அவனும் அவளும் அவளுடைய பூர்வீக ஊருக்கு செல்கிறார்கள். கிட்டதட்ட ஆறு அத்தியாயங்கள் அந்தப்பயணம் எழுதப்பட்டுள்ளது.

அதனூடாக இமயமலை புல்வெளி மேய்ச்சல் நிலத்தின் புராணக்கதைகள்,அங்குள்ள கிராமங்களின் சடங்குகள், இசைவாத்தியங்கள்,குறிப்பாக மசக் பின் என்ற காற்று வாத்தியம் பற்றி, குலதேவதைகள் வழிபாடுகள்,அந்த நிலத்தின் பறவைகள்,குறிப்பாக மோனல் என்னும் நீலப்பறவை,விலங்குகள்,தாவரங்கள்,ஊர்களின் அமைப்பு என்று நாவல் அந்த நிலத்தின் பண்பாட்டு கூறுகளை சொல்கிறது.

மலர்களில், பறவைகளில், ஔிமாறுபாடுகளில், மைத்ரியின் ஆடை நிறத்தில்,ஒலிகளில்,அடர்ந்த தைல வாசனையில், எழுந்து வரும் சிவப்பு ஊதா வண்ணங்களில் நாவல் வாசிப்பவருக்குள் இருக்கும்  ஆழமான ஒரு தளத்திற்குள் செல்கிறது.

முக்கியமாக பூக்கள். எத்தனை வண்ண பூக்கள் நாவலில் உள்ளன. நாவல் இயற்கையை, அதன் அழகை ஆராதனை செய்கிறது. அதனூடாக மானுட அழகையும் தொட்டு தொட்டு செல்கிறது. பொதுவாக இயற்கைக்கு முன்பாக நாமெல்லாம் என்ன அழகு என்று தன்னிரக்கம் கொள்வது நம் வழக்கம். அப்படி எல்லாம் இல்லை நாமும் இயற்கையின் அங்கம் என்பதால் அந்த எழில் நம்மிடமும் இருக்கத்தான் வேண்டும் என்று நாவலை முடித்தப்பின் நம்பலாம்.

இந்த நாவலை வாசிக்கும் போது எழுத்தாளர் லா.சா.ராமாமிர்தத்தின் நாவலான அபிதா  நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. 

நாவலில் தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டின் கம்பீர சித்திரமும், அங்கு கதாப்பாத்திரங்கள் கொள்ளும்  உணர்வு நிலைகளும் அழகாக வந்திருக்கின்றன.

கஸ்த்தூர் என்ற பொன்மானின்  பின்னால் சென்று பெண்கள் தொலையும் ஐதீகம்,ஜீது பகட்வாவ் என்ற வீர இளைஞனின் கதை என்று நாட்டுப்புறக்கதைகள்,வசந்தைத்தை வரவேற்க குழந்தைகள் செய்யும் வழிபாட்டு முறைகள் போன்றவை நாவலில் வருகின்றன. மொத்தமாக அந்த மலைப்பகுதியின் பண்பாட்டில்  மக்களின் உணவு, உடை, தாவரங்கள், வாழிடம், கலைகள் போன்றவற்றை நாவல் தொட்டு செல்கிறது. ஒரு இடத்தில் ஹரன் எனக்கு பொன்மானாக தெரிந்தான்.

இந்த மலைமுழுக்க நீதான் நிறைந்து நிற்கிறாய் என்று ஹரன் மைத்ரியிடம் சொல்லும் இடத்தில் எனக்கு பள்ளிகொண்டபுரம் நாவல்   நினைவிற்கு வந்து விட்டது. செளந்தர்யம் என்றால் எனக்கு லா.சா.ரா தான் நினைவிற்கு வருவார். இந்த நாவல் முழுக்க சௌந்தர்யம் நிரம்பி பூக்கிறது. சங்கரர் மிகப்பிந்திதான் எனக்கு அறிமுகமானார். அவரைப் பற்றிய மிக அடிப்படையான புரிதல்கள் மட்டுமே எனக்கு உண்டு. என்றாலும் கூட மைத்ரியின் பாதங்களின் வர்ணனையின் போது சங்கரர் சட்டென்று மனதில் எட்டிப்பார்த்து உள்நுழைந்து வாசிப்பை வழிநடத்தியது எதிர்பாராத ஒன்று. நாவல் வாசிப்பிற்கு பின்னரே இந்த நாவலைப்பற்றிய முன்னுரையை வாசித்தேன்.

இது மாதிரி புது நிலங்களை எழுதும் போது உவமைகள் வாசிப்பவருக்கு கைக்கொடுக்கும். இங்கே ஒன்றை உதாரணமாகக் கூறுகிறேன்.

இயற்கை சார்ந்த நாவல் என்பதால்  இயல்பாகவே நிறைய படிமங்களை மனம் உருவாக்கிக் கொள்கிறது. உதாரணத்திற்கு ‘கௌரி குண்டம்’ என்ற படிமத்தை தவிர்க்கமுடியாது. ஒவ்வொரு பெண்ணுமே அதன் அம்சம் என்று தோன்றியது.

தேவதாருவை ஆழத்திலிருந்து எழும் ஓங்காரம் என்று எழுத்தாளர்  சொல்லும் போது நமக்கு அதன் பிரமாண்டம் மனதிற்குள் வந்து விடுகிறது.

அதே போல மந்தாக்கினியை பார்த்துக்கொண்டே ஹரன் கொள்ளும் வியப்பு. இவ்வளவு சிறிய மந்தாக்கினியா பெருவெள்ளமாகி கேதார் நாத்தை சுற்றியுள்ள ஊர்களை அழித்தது என்று ஹரன் வியப்படைகிறான். நாவலின் உணர்வு தளத்திற்கும் தரிசன தளத்திற்கும் நெருக்கமான ஒருஇடமாக வாசிப்பிற்கு பின் இதை உணர்ந்தேன்.

கௌரி குந் என்னும் இடத்தில் பார்வதிதேவி தன் ஹரனுடனான காதல் நிறைவேறுவதற்காக தவம் இருந்ததாக ஒரு ஐதீகம் இருக்கிறது. இப்படி சொல்லும்போதே நமக்கு மனத்திற்குள் பிரிவாற்றாமையில் இருக்கும் ஈசன் தானாகவே தோன்றிவிடுகிறார். நாவலின் முக்கிய காதாப்பாத்திரமான ஹரன் அதே உணர்வின் மானுடரூபமாகதான் இமயத்தை  நோக்கி ஆங்காரமான, சோர்வான, நிலைஇல்லாத மனத்துடன் வருகிறான். ருத்ரனின் ருத்ரப்ரயாகை.

அந்த நிலத்தின் எழில் ஏற்படுத்தும் உணர்வு நிலையால் ஹரனிற்கு அங்கு சந்திக்கும் பெண் பேரழகாகிறாளா..அந்த நிலம் தன் பேரழகால் அவளாகிறதா? இரண்டுமில்லை. அழகின் இரு நிலைகளும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி சௌந்தர்யத்தால் அவனை ஆற்றுப்படுத்தி ஒரு விழிப்பு நிலைக்கு கொண்டு செல்கிறது.

ஹரன் என்ற இளைஞனின்  அலைகழிப்பு. அதுவும் அவன் ஒரு கலைஞன் என்பதாலேயே அவனுக்கு  காதல்பிரிவு கொடுக்கும் உளைச்சல்களும் அசாதாரணமானவை. அவன் சுற்றியலைந்து தன்னை கண்டு கொள்கிறான். 

கௌரிகுந்த்தில் தேவி ஈசனை ஆட்கொள்கிறாள். இந்த வரிகள் விரிந்து விரிந்து நாவலில் ஒரு  தரிசனமாகிறது. மேலும் எந்த ஒரு தொடுகையிலும்,நெகிழ்வான தருணங்களை உடலில் உணர்கையிலும் ஹரன் அவன் இறந்துவிட்ட அம்மாவையே நினைத்துக் கொள்கிறான்.

நாவலில் பனிமலை சிகரங்களும், அதன் குளுமையும், காற்றும் நீரும் இயற்கையும் அசாதாரணமான இயல்புகளை கொண்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தீவிரமான குளுமை. அதனை சமன்படுத்தும் வெப்பத்தை இயற்கை எங்கே உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை நாவலை வாசிக்கும் போது நமக்கும் புரியும். இதை எழுதும் போது ஹரனின் மனமும் கூட அப்படித்தானே என்று வந்து  இணைந்து கொள்கிறது.

ஹரனும் தீவிரமான மனநிலையில் தான் அங்கு வருகிறான். அவன் தன் ஐம்புலன்களால் உணரும் இயற்கை உன்னதங்களை நாவல் பேசுகிறது. 

அதே சமயம் வலி என்ற ஒன்று எப்படி இவை அனைத்தையும் ஒன்றுமில்லாது ஆக்கும் என்ற மறுதரப்பையும் முன் வைக்கிறது.

உயர் மானுட துக்கம் அல்ல வலியில் சென்று மோதும் கணம்தான் உண்மையான பொருளுலகை எதிர்கொள்கிறோம் 

என்ற வரியும் அந்த அத்தியாயமும் நாவலின் ஒட்டு மொத்த உணர்வு தளத்தின் கீழ் அடித்தளமாக நிற்கிறது. அம்மாவின் பிரிவு கொடுத்த ஆன்ம வலி,இன்னொரு பிரிவு கொடுத்த நிலையின்மை என்ற இரண்டையும் தாங்க முடியாமல்தான் அவன் அங்கு வருகிறான். பிரிவிற்கான காரணம் இவனை சார்ந்ததாக இருப்பதால், அலைகழிப்புகளும் இவனையே வந்து மோதுகின்றன. இயற்கையின் பேரெழில் இங்கே  அவனுக்கு அன்னையாக மாறுகிறது.

இமயமலை பக்கம் சென்றிராதவர்களுக்கு பார்த்தறியாத நிலம் என்ற வசீகரமே நாவல் வாசிப்பை விசைகொள்ள வைக்கும்.

அம்மை அப்பனின் லீலைகளின் ரூபமாக இயற்கை பேரழிலுடன் விரிந்து நிற்கிறது. அதன் ஒரே ஒரு அழகியப் பூ இந்த மானுடம். அழிப்பதும் பிறபிப்பதுமான ஓயாத ஆடல்.  அதில் மானுடம் கொள்ளும் மீச்சிறு லீலை. நாவல் அந்த மீச்சிறு  லீலையை மையமாக்கி பிரபஞ்சத்தின் பெருலீலையில்  வாசலை தொட்டுக்காட்டுகிறது.

நாவலை அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறுமணி வரை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். முடித்ததும் மாடியேறி சென்று கொல்லிமலைத் தொடரை பார்த்துக்கொண்டே நின்றேன். நீரெல்லாம் கங்கை என்பது மாதிரி எனக்கு மலையெல்லாம் கொல்லிமலை தான். இப்படி எழுதுவதால் கிழக்கிலிருக்கும் பச்சைமலைத்தொடர் கோவித்துக் கொள்ளக்கூடும். நான் வாழ்வதும்  இருமலைகளுக்கிப்பட்ட பள்ளத்தாக்கு என்பதால் என்னால் நாவலுடன் நன்றாக இணைத்துக் கொள்ள முடிந்தது.




சங்கசித்திரங்கள் நூலில் ‘செம்புலப்பெயல் நீர் போல்’ என்ற  பிரபலமான சங்கப்பாடல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். இந்தப்பாடலை எழுதியவர் ஒரு விவசாயியாக இருக்கலாம் என்று தனக்குத் தோன்றியதாக கட்டுரையை முடித்திருப்பார். அதை வாசித்ததும் என் மனதிற்குள் ‘இருக்காதா பின்னே…’ என்று தோன்றியது. ஏனெனில் கொல்லிமலையில் செம்மேடு என்ற ஒரு செம்மண் நிலம் உண்டு. கொல்லிமலை மற்றமலைகளைப் போல குளிர்ந்த மலை அல்ல. கோடையில் காய்ந்து தீய்ந்து கிட்டத்தட்ட பாலை போல கிடக்கும். கோடைமழைக்குப் பின் குப்பென்று தீ பற்றியதைப் போல பசுமை எழும்பும். கோடையின் முதல்மழையின் போது இந்த மலைநிலம் அளிக்கும் சித்திரம் அபாரமானது. அங்கு ஒருகவிஞன் இருந்தால்[ இது குறிஞ்சி நிலப்பாடல்] அவன் மனதிற்கு ‘செம்புலப்பெயல் நீர்’ போலத்தான் அன்பு நெஞ்சங்கள் சங்கமிக்கமுடியும் என்று நினைத்துக்கொள்வேன். 

செம்புலப்பெயல் நீர் பாடலின்  தலைவன் தலைவி போலவே இந்த நாவலிலும் ஹரனும் மைத்ரியும் காதலிற்கு தங்களை அளிக்கிறார்கள். அது ஒரு கள்ளமற்ற நிலை. அந்த கள்ளமற்ற தன்மை நம் ஆதி குணம். வயதடைதலின் தெய்வீக குணம். அதன் பிறகு நமக்கு நடைமுறை வந்து கற்றுக்கொடுத்துவிடும். இயற்கையுடன் இணைந்த அந்த கள்ளமற்ற அன்பை நாவல் கொண்டிருப்பதால்  வாசிக்கும் போது ஏற்படும் pleasure நாவல்  முழுவதும் இருக்கிறது. 

இயற்கை தன் அழகால் அந்தக் காதலின் புறவடிவாகவும்,இளமையின் எழில்  ரூபமாகவும் நிற்கிறது. ஹரன் இயற்கையுடன் அடையும் அக சங்கமம் நாவல் முழுதும் ஒரு புறம் நடந்து கொண்டே இருக்கிறது. அதுவே நாவலின் உணர்வு தளத்தை தீர்மானிக்கிறது. நாவல் அகமாகவும் புறமாவும் தன் தளங்களை, கடவுள் என்ற அகமான உணர்தல் நோக்கியும், இயற்கை எழில் உறையும் தெய்வீகத்தன்மையை நோக்கியும் விரிந்துக் கொண்டே செல்கிறது. 

வாசிப்பவருக்கு புறத்தின் வழி அகம் நோக்கிய நகர்வு நிகழ்கிறது. துவக்கத்தில் நித்ய சைதன்ய யதியின் வரிகள் குறிப்பிட்டதைப் போல நாவலாசிரியரும் நாமும் ஒரு பிறப்பு கணத்தின் இருபகுதிகளாகிறோம்.

செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்ததுவே..என்ற ஒற்றை வரி… இயற்கையில் நிகழும் சங்கமத்தையும்,மனித மனதில் நிகழும் சங்கமத்தையும் ஒரு சேர சொல்லிவிடுகிறது. இந்த நாவல் சங்கமத்திற்கு முன் இருக்கும் அகப்பயணத்தையும்,புறபயணத்தையும் கூறி அந்தப்பயணங்களின் மூலம்  மனிதமனம் பிரபஞ்சத்தை சென்று தொடும் ஒரு கணத்தையும் நமக்கு காட்டிவிடுகிறது.

முன்னுரையில் எழுத்தாளர்  குறிப்பிட்டதைப் போல அவர் மனம் அவரை முதன்மையாக திரைப்படக்கலைஞன் என்று சொன்னாலும் கூட எழுத்தும் அவருக்கானது  என்பதை சொல்லிக் கொள்ள இந்தத்தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். அஜிதனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

 




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி

கர்ணனின் கவசகுண்டலங்கள்