Skip to main content

உயிர்த்தெழல்: சிறுகதை

 ஜூன் 16, 2022 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை.


உயிர்த்தெழல்

எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்  வரை காலமுண்டு. காலத்தின் நினைவாக எஞ்சுவது எதுவாக இருக்கும். என் அன்பரின் சொற்களே  இனிவரும் காலத்தின் நினைவாகும். காலத்தை முன் பின் என பகுக்கும்.

இதோ அவர் எருசலேமின் மதிலிற்கு வெளியே சிலுவையில் நிற்கிறார். எருசலேம் பாறைகளின் நிலம். இந்த பாறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர். அவர் எப்போதும் மதில்களை  அன்பின் பொருட்டு பொடித்துக் கொண்டே இருந்தார். என் மனதின் மதில்களை கணத்தில் உதிர்த்தவர். இங்கே எத்தனை எத்தனை மதில்கள் நீண்டு கிடக்கின்றன. காற்றென மதில்களைக் கடக்கும் அவரின் சொற்களின் பொருட்டு இப்போது அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். சொற்களை சிலுவையில் அறைய முடியும் என்று நம்பி அறைந்திருக்கிறார்கள்.

எருசலேமின் நீண்ட கல்மதிலில் புழுதிக்காற்று மோதித் திரும்புகிறது.  மற்றவர் ரணங்களை தன் சொற்களால், தொடுகையால், புன்னகையால் சொஸ்தமாக்கியவர் ரணங்களை சுமந்தபடி எப்போதும் போலவே மதிலுக்கு வெளியே இன்றும் நிற்கிறார். 

கண்களை திறந்து பார்க்கிறேன். சூரிய ஔி விரிந்திருக்கிறது. கல்வாரி மலையெங்கும் ஊற்றுபோல அனல் பொங்கிவழிகிறது. ஔியை பார்க்க என் கண்கள் கூசுகிறது. 

கல்வாரி மண்ணில் ஊன்றப்பட்ட சிலுவையின் அடிப்பகுதி என் கைப்பிடிக்குள் இருக்கிறது.  மண்டியிட்டவாறே மடிந்த கால்களுடன் அதன்கீழ் அமர்ந்திருக்கிறேன். என் தலைக்கு மேல் ஒன்றன்மீது ஒன்று குறுக்கி வைக்கப்பட்ட என்தேவனின் சிவந்த கால்கள் இருக்கின்றன. அவரின் கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த நிலையில் வலியால் குரல் அனற்றுகிறது. 

அன்னாந்து பார்க்கிறேன். அவரின் கால்முட்டிகள் சிவந்து கருமை கொள்ளத் துவங்கியிருக்கின்றன. ஒரு சிறு துணி சுற்றிய இடைக்கு மேல் வயிறு வற்றி உலர்ந்து எக்கி மிக மெல்ல அசைகிறது. நேற்றெல்லாம் சிவந்த நிறமான சிலுவை இன்று கருமை கொண்டிருக்கிறது.    குனிந்து சிலுவையில் தலையை சாய்த்துக்கொண்டேன். என் நாசியில் அவர் கடும்மணமாக நிறைகிறார். என் தேவனின் இரத்ததின் மணம். சிலுவையின் கால்களை இறுகப்பற்றிக் கொள்கிறேன். 

என் கால்களில் கடுமையான உளைச்சல். வலியைக்கூட தாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. இந்த உளைச்சலை என்ன செய்வது என்று தெரியவில்லை. மூச்சுவிடுகிறேன். காற்று இருக்கிறது. எப்படி காற்று அமைதியாக இருக்கிறது? இரண்டு நாட்களுக்கு மேலாக இப்படியெல்லாம் என் சிந்தை என்னைவிட்டு நழுவும் போதெல்லாம் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்துக் கொள்கிறேன்.

அவர் சொற்களே முகமானவர். அவர் முகம் மட்டும்  போதும். பல உரையாடல் பொழுதுகளில் கேட்பவளாகவே இருந்திருக்கிறேன். சொற்களாகவே நான் உன்னில் நிறைந்திருக்கிறேன் மேக்தலீன்… என்று புன்னகையுடன் எத்தனை முறை சொல்லியிருக்கிறார். நான் அவர் சொற்களை என் சொற்களாக்கி அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று முதலில் அறிந்தவர், அறிவித்தவர்  அவரே.

மீண்டும் முகத்தைப் பார்க்க வேண்டும். கைகளை உயர்த்தினால் அவர் பாதங்களை தொட்டுவிடலாம்.  அருகில் இருக்கிறேன். மிக அருகில். என் தோள்களில் ஒரு சொடுக்கல். தோள்கள் தானாக குறுகிக் கொண்டன. வெயில் சுள்ளென்று தோள்களில் பட்டு எரிந்தது. அப்படியே அன்னாந்துப் பார்த்தேன். முகம் வாடிய மலரைப்போல மண்ணை நோக்கி குனிந்து துவண்டிருந்தது. தலையில்  முடிக்கற்றைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி திரிகளாகித் தொங்கின. முகத்தின் முடிகளும் திரண்டு ஒட்டிக்கொண்டிருந்தன. கூம்பிய மலரென முகம். மூடியிருக்கும் மொட்டென கண்கள். பேசக்காத்திருக்கும் இதழ்கள்.  எதிலும் சலனமில்லை.

வானெங்கும் விரிந்து எரிகிறது வெயில். ஒற்றை மேகம் கூட இல்லாத வானம். விரிந்து எரிகிறது. ஒரு துளி நீரைப்போல அவரின் முகம் மண்ணை நோக்கி விழக் காத்திருக்கிறது. விரித்த கரங்கள் ஒரு பூமரத்தின் பாதி முறிந்த  கிளைகளைப் போல நீட்டிக் கொண்டு நிற்கின்றன.

என்னிடம் இனி எதுவும் இல்லை. நான் என்பது கூட இனி என்னிடம் இல்லை. எத்தனை முறை நீண்டு தவித்த என் கைகளால் இனி அவரை தொடமுடியாது. இனி எனக்கு எதுவும் தேவையில்லை. 

மிக மெல்ல வெயில் தன் பாதையில் சுட்டெரித்து கடந்து கொண்டிருந்தது. சிலர் வந்து நின்றார்கள். சிலுவையை இறக்கினார்கள். என்னை சுற்றி எதேதோ நடந்து முடிந்தன. அவர் கைகள் கொண்டு முட்டித் தள்ளிய பாறைகள் இன்று தானாக விலகுகின்றன. அவர் கால்கள் கொண்டு நடந்த பாதைகள் முடிவில்லாமல் நீண்டு கிடக்கின்றன. அவரின் ஆட்டுக்குட்டிகள் எங்கோ சென்று தங்கள் பட்டிகளில் தாங்களை அடைத்துக் கொண்டன. அவர் கைகளின் அணைப்பில் இருந்து நெஞ்சின் ஓசை கேட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் குரல் மிக மெல்லியதாய் அருகே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவருடன் சேர்த்து கல்லறை குகை மூடப்பட்டது. அதன் வாசல் மூடப்பட்ட பாறையில் தலையை  சாய்த்தபடி அமர்ந்தேன். எப்படி அவர் இறக்கமுடியும். 




கூட்டத்தின் நடுவே புன்னகைக்கிறார். முழுநிலா பொழுதில் தலைக்குமேல் நிலவின் ஔிசூழ தன்னந்தனியே பாறையில் அமர்ந்து வான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆட்டுமந்தைகளின் நடுவில் நடக்கிறார். மரத்தச்சனாக அமர்ந்து செதுக்குகிறார். மரத்துகள்கள் பூக்கள் என அவர் மடிமீது பரவிக் கிடக்கின்றன. குட்டி ஆடுகள் அவரின் கைகளுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. புன்னகையுடன் அவற்றை அணைத்துக் கொள்கிறார்.

இரவில் தீயின் முன் அமர்ந்து சீடர்களான எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தீயின் அனல் நிறமே அவரென்று மாறுவதைப் போல சொற்களின் பிழம்பாக மாறிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சொல்லும் தீ என வெளிவந்து தண்மையென மாறும் மாயத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரின் முகத்தின் நீண்ட முடிகள் செந்நிறமாகி அசைகின்றன. தலைமுடிகள் காற்றில் பறந்து அலைந்து அமைகின்றன. அவர் தன் பேச்சை நிறுத்தவில்லை.



வலிமையான வளர்ந்த ஓக் மரம் அது. மிக இளம் கன்றாக இருக்கும் போதே பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்க வைத்தமரம் என்று கலிலேயா என்ற இந்த ஊரின் மக்கள் சொல்கிறார்கள். செந்நிற இலைகளை விரித்த ஓக் மரத்தின் அடியில் பலநாட்களாக அமரும் பாறை மீது இன்றும்  அமர்ந்திருக்கிறார். தந்தையே என்று என் மனம் ஓயாமல் அழைத்து அழைத்து தன்னுள்ளே எதிரொளிக்கிறது. அந்த அழைப்பை ஏற்றுதான் அவர் அடிக்கடி என் பக்கம் திரும்பி தலையசைத்துப் புன்னகைக்கிறார்.

“மேக்தலீன்.. நீ சொல்…அன்பை எப்படி ஔியாக பரப்புவது,”

“அன்பு புன்னகையாகும் போது  ஔிகொள்கிறது தந்தையே,”

அவர் புன்னகைத்தார்.

“அதே அன்பை பேரன்பாக்குவது எது?”

“அது தீயென பற்றும் போது பேரன்பாகிறது தந்தையே,’

“தீயென பற்றினால் அழிக்கத்தானே செய்யும்,”

“இங்கு உயிர் கொண்டு எழுந்த அனைத்தும் ஆயிரம் ஆயிரமாயிரம் கரங்கள் கொண்ட சூரியன் தொட்டு எழுப்பியவைதானே தந்தையே. அன்பானது சூரியனை விட அனல் கொண்டது தந்தையே. இல்லையில்லை சூரியன் அன்பென மாறி இங்கே உயிர்க்கிறான் தந்தையே,”

அவர் புன்னகைத்தார். அனல் புன்னகை.

கடலோர ஊரான செசாரியாவில் தங்கியிருந்தோம். அதிகாலைகளில், அந்தி வேளைகளில் கடல் அலைகளுடன் பேசியபடி அந்த  நீண்ட கடற்கரையில் நடந்து செல்வார். சீடர்கள் உடன் சென்றாலும் அவர்களிடமும் அதே பேச்சுதான். தனக்குள்ளே எப்போதும் பேசுபவராகவும் இருப்பார்.

உடைந்த மீன்பிடி படகின் மரத்திண்டில் அமர்ந்திருக்கிறார். இருளில் கருநிற அலைகள் வந்து திரும்புவதை சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கடலை பார்த்தவாறே,“கடலை சுவைக்கமுடியுமா மேக்தலீன்,” என்று கேட்கிறார்.

“சுவைக்கலாம் தந்தையே,”

அவர் மாறாத புன்னகையுடன் என்னைப் பார்க்கிறார்.

“கடலை உப்பாக்கி கைகளில் அடைத்து வைத்திருக்கிறோம் இல்லையா ,”

“உப்பாக உருமாற்றம் கொள்ளும் வரை வெயிலில் காய்ந்து ஒன்றுமில்லாமல் ஆக வேண்டும் அல்லவா,’

“ஆம்..தந்தையே..உப்பாவது அத்தனை எளிதில்லையல்லவா தந்தையே,”

“ஆம் மேக்தலீன்…உப்பாவது அவ்வளவு எளிதில்லை. ஏனெனில் மீண்டும் துளியினும் துளிக்கும் கரையும் பொருட்டே உப்பு உப்பாகிறது என்பதை அறிவாயா,”

ஓடிச்சென்று அவரை கட்டி அணைத்துக் கொள்ள எழுந்தது உள்ளம். அவர் கண்களை விரித்து புன்னகைத்தார். 





என்னிலிருந்து அவர் கண்களை மாற்றி சீடர்களைப் பார்த்தார். அவர்கள் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். திகட்டி திகட்டி கரிப்பாகி மீண்டும் நீர்த்து நீர்த்து விரிந்து பரவி சுவையாகும் ஒன்று. 

நான் முகத்தை உயர்த்தி  அமைதியான வானத்தையும், அலையடிக்கும் கடலையும் மாற்றி மாற்றி பார்க்கிறேன். அனுதினமும் தலைக்குமேல் கவிந்திருந்தாலும்,அருகிலேயே ஒயாமல் அலையடித்துக் கிடந்தாலும் என்றும் வானமும் கடலும் பார்வைக்கு புதிது. மனம் ஓயாது பார்க்க விரும்புவது.

கண்களை திறந்து கல்லறை நிலத்தை பார்க்கிறேன். சுள்ளென்று எரித்த வானம் அவிந்து இருள் செறிகிறது. கண்களை திறந்திருந்தாலும் மூடிக்கொண்டாலும் எதுவுமில்லை. தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். எங்கோ ஒற்றை செடியில்லாத வெம்மணலில் நடந்து கொண்டிருக்கிறேன். திரும்பிச் செல்ல மனமில்லாத பாதைகளுக்கு முடிவில்லை. எங்கும் சென்று சேர வேண்டியதும் இல்லை. கண்களை மூடிக்கொண்டேன்.

இசுரேலின் ஊரான மகதலாவின் புழுதிபடிந்த முக்கியத்தெருவில் மக்கள் குவிந்து நிற்கின்றனர். அவர் அந்த தெருவின் முனையில் இருந்த பழுப்புநிற கல்கட்டிடத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறார். அவரை காண்பதற்காக வந்த நான் ஊர்மன்றில், முச்சந்தியில் கிழிந்த ஆடையுடன் நின்று கொண்டிருக்கிறேன். அவரின் வெள்ளை அங்கிமட்டும் தெரிகிறது.

என் கன்னத்தில் முதல் கல் விழுகிறது. என்றோ தன் இதழ்கள்  சுவைத்த கன்னங்களை துளைக்கும் ஆவேசத்துடன் அது எய்யப்படுகிறது. என்றோ என்னை  தொட்டுத் தொட்டு மீண்ட கரங்களுக்குதான் இத்தனை வலிமை இருக்க வேண்டும். இரண்டாவது முறையாக சிலகற்கள் எய்யப்படுகின்றன. என்றோ தான் முத்தமிட்ட இதழ்களை, தொட்டுப் பிடித்த கரங்களை வந்து தீண்டின. சில கற்கள் இலக்கை எய்தாமல் தவறி சென்றன. வலியில் உடல் பதறி நடுங்கி பின்வாங்கி நகர்கிறது. எங்கு நகர்வது. சுற்றிலும் என் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. 

மக்கள் கூட்டத்தின் ஆவேசம் அதிகமாகிறது. என்னை சூழ்ந்த சத்தங்கள் வெறி கொள்கின்றன.

“கல்லெறி…”

“கொல்..”

“பாவி...”

மூன்றாவது முறையாக ஒரு கல்  என் மார்பை குறி வைத்து வந்து விழுகிறது. வீசியவன் என் மார்பில் உறங்கி எழுந்தவனாக இருப்பான். நான்காவது கல் என் கைகளில் பட்டுத் தெரித்தது. அவன் என் அணைப்பில் கிடந்தவனாக இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் கற்கள் என்னை நோக்கி வந்து கொண்டேயிருந்தன. ஐந்தாவது முறையாக அவர்களின் பொய்க்கதைகளை கேட்ட என் செவிகளில் விழுந்து தெறிக்கின்றன. ஆறாவது முறையாக ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எய்யப்பட்ட கற்கள்  என் வயிற்றில் விழுகின்றன. வயிறு அதிர்ந்து கசிந்தது. 

இறுதியாக அனைவரும் சேர்ந்து குறி வைத்தார்கள். நான் பதறி குனிந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தேன். மண்டியிடுதலை கற்கள் அறியவில்லை. அவை வந்து தீண்டுவதற்கு முன் இருகரங்கள்  என் உடலை முழுமையாக அணைத்துக் கொண்டன. அவை என் உடலாகவே மாறின. அந்த  அணைப்பில் மலர் போன்று அத்தனை குளுமை. அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி போல உடலை குறுக்கிக்கொண்டேன். தலையை, முகத்தை முழுமையாக அந்தக் குளுமையில் அமிழ்த்திக் கொண்டேன். 

என் உச்சந்தலையில் இருந்த மலர் மெல்ல அசைந்தது.

“மேக்தலீன்,”

வெம்மை பட்டு உடல் முழுவதும்  சிலிர்த்தது. நான் கண்களை திறக்கவில்லை.

“மேக்தலீன்,”

இனி அசைய முடியாது. உடல் மண்ணில் படியத்தொடங்கியது. கைகள் ஓய்ந்து விழுந்தன. என் உடல் முழுவதும் பாறையாய் கனத்தது.

“என் அன்பு மேக்தலீன்,”

சட்டென எடையிழந்து உடல் உதறியது. மீண்டும் மீண்டும் பதறி உதறிக்கொண்டே இருந்தது. நேரம் சென்று ஔி தொட்ட மலர்முகை போல மெல்ல கண்கள் திறந்து கொண்டன. எங்கும் பிரகாசமான ஔி. ஔியில் அனைத்தும் மறைந்து ஔி மட்டுமேயான ஔி. கண்கள் கூச்சம் கண்டு மூடித்திறந்தன.

வானத்தில் வெள்ளை புள்ளி ஒன்று எழுந்தது. பின் மெல்ல மெல்ல அது தான் இதழ்களை விரித்தது. அது ஒரு வெள்ளைப்பறவையாகி மென் சிறகுகளை விரிந்து பறந்தது. பறவை மழையானது. பின் வெயிலாகி சுட்டது. நீருக்கடியில் மீன்களாகி நீந்தின. புற்களாகி  மென்பசுமை முளைகளை நீட்டி வானத்தை எட்டிப்பார்த்தன. கண்களை திறக்கமுடியாது மீண்டும் மீண்டும் தத்தளித்த நாட்கள் அவை. பின் எப்போது என்று சொல்ல முடியாத அதிகாலை பொழுதில் வழித்துக்கொண்டேன்.

நான் சாய்ந்திருந்த கல்வாரி மலையின் குகை வாயிலில் பிரகாசமான ஔி. அந்த ஔி என் தலையைத் தொட்டு என் உடலை நனைக்கிறது. கண்முன்னே விரிந்து செல்கிறது.

ஆம்..அவர் உயிர்த்தெழுகிறார். இனி நாள்தோறும் உயிர்த்தெழுவார். இதற்கு முன்பும் இதற்கு பின்பும். எப்போதும்.

அவர் சொல்லிய சொற்கள் என் மனதில் எதிரொளிக்கின்றன. 

மேக்தலீனாகிய நீயே என்னுடைய உயிர்தெழுதலை உலகிற்கு அறிவிப்பாய். மேக்தலீனாகிய நீயே என் சொற்களை வசனங்களாக எழுதுவாய். மேக்தலீனாகிய நீயே என்  முகத்தை உலகின் நினைவிற்காக தருவாய். மேக்தலீனாகிய நீயே  நாள்தோறும் என் உயிர்ப்பை பாடுவாய்.

 சொற்களுக்காக காத்து… சொற்களால் உயிர்க்கும் நிலம் நோக்கி, அவர் அளித்த சொற்களை ஏந்தி நடக்கத் தொடங்கினேன். இனி இந்த நிலமெங்கும் சொற்கள் பூக்கும்.




Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...