[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை]
அந்தராளம்
இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில் நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது.
மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவுகிறது.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே
கண்களைத் திறந்தேன். வடகிழக்குப் பக்கமாக கருகருவென மழை மேகங்கள் திரண்டிருந்தன. தென்கிழக்குப் பக்கமாக சூரிய வெளிச்சம் மேகங்களுக்குள் நசிந்து வந்தது. மழை பொழியக் காத்திருக்கிறது. ஐப்பசி என்பதால் நசநசவென்று நினைத்த நேரமெல்லாம் பெய்கிறது.
மீண்டும் கொண்டல் வண்ணன் மனதிற்குள் சதங்கை ஒலிக்க ஓடினான். விரல்கள் தத்தின. சத்தமில்லாத தாளம். ஸ்ரீராம் மாமாவுடன் சேர்ந்து முதன்முதலாக ரங்கனை சேவிக்கச் சென்ற அன்று ஆண்டாள் சந்நிதி மண்டபத்தில் இந்தப் பாசுரத்தை சட்டென்று பாடச்சொன்னார். இந்தப் பாசுரத்தை நான் முதன்முதலாகப் பாடின அன்று மாமா தன்னுடைய தம்பில்ஸ் கைகளை என் தலையில் வைத்தார். சம்மணமிட்டு நிமிர்ந்து அமர்ந்திருந்த அவரை, தரையில் நெற்றி தொட குனிந்து வணங்கினேன். என்னை கையமர்த்திவிட்டு மாமியை அழைத்தார்.
“எதானும் தித்திப்பு கொண்டு வா..”
உள்ளே மாமி பாத்திரங்களை எடுக்கும் சத்தம்.
“சுருக்க.. இந்த வருஷம் பப்ளிக் எழுதறாளோ இல்லியோ... பொழுது பத்தாது,”
கிளிகள் பறக்கும் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு மாமி வெல்லமிட்ட உளுந்து வடையை எடுத்து வந்தார்.
“சாப்பிடு தீபூ.. இன்னிக்கு ரங்கனுக்கு தித்திப்பு வடை”
“உங்களுக்கு மாமா..”
“கேக்கறாளோன்னோ..நேக்கும் கொண்டு வாயேன்டீ,”
“இந்தப் பாசுரத்தை பாடினது யார்ன்னு தெரியுமோ..”
நான் அவர் முகத்தையே பார்த்தேன்.
“திருப்பாணாழ்வார்ன்னு ஒரு ரங்கநேசர் பாடினது.. நம்ம உறையூர்ல பிறந்தவா..அவா நாமமெல்லாம் மனனம் பண்ணிக்கனும்.. நாழியாறது,” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.
மாமா திருச்சியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை செய்கிறார். மாமி கொண்டு வந்த வடையைப் பிட்டு முதல் விள்ளலை மாமியிடம் நீட்டினார்.
“அமுது.. நீ என்ன சொல்ற?”
மாமி புன்னகைத்து, “பின்ன இல்லியா?” என்று என்னைப் பார்த்தார். மாமியின் வட்ட முகத்தின் கன்னத்தில் விழும் குழியைப் பார்த்தபடி, “ஆமாம் மாமி..வடை நல்லாருக்கு..” என்றேன். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
மாமா அப்பாவின் நண்பர். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பாட்டு சொல்லிக்கொடுப்பது இல்லை. வீட்டில் தவிர வேறு எங்கும் பாடுவதும் இல்லை. அவரிடம் பாட்டு கற்றுக்கொள்ள அமர்ந்தபோது எனக்கு எட்டு வயது.
பத்தாம் வகுப்பு மே விடுமுறையில் அனுதினமும் காலையில் மாமா வீட்டில் சாதகம், அந்தியில் அவருடன் காவிரிக் கரைக்கு நடந்து சென்று ஆளோய்ந்த மரங்களின் நிழல்களில் அமர்ந்து நான் பாடுவதுமாக கழிந்தது. காலையில் எழுந்ததும் மாமாவின் முகம்தான் கண்களுக்குள் வரும். அவரின் தாளம் தட்டும் விரல்களையும், கண்களை மூடி ஸ்ருதி சேர்க்கும் விதத்தையும் நினைப்பது பரவசம். எப்போதாவது திடீரென்று காவிரிக் கரையில் அமர்ந்திருக்கும்போது பாடுவார். இதை அப்பாவிடம் சொன்னால், “ஸ்ரீராம் காவிரிக்கரையில பாடினானா?” என்று மட்டும் கேட்பார்.
அடுத்து வந்த மார்கழியிலிருந்து ஆண்டுதோறும் மார்கழி மாதம் அவருடன் கோயிலிற்குச் சென்று ஆண்டாள் சன்னிதி மண்டபத்தில் பாசுரங்களைப் பாடுவது வழக்கமானது.
“தீபூ... மார்கழிக்குன்னு பட்டு தாவணி சல்வார் குர்தா எடுத்து வச்சுக்கோ... எதாவது சரி பண்ணனுமானா தைக்கனுமானா கொண்டு வந்து கொடுடீ,” என்று மாமி முன்கூட்டியே நினைவுபடுத்துவார்.
மார்கழியின் பனிக்கு, பட்டுப்பாவாடை சட்டை இதமாக இருக்கும். அம்மா மதிலோரப் பூ சந்தையில் ஏலம் எடுக்கும் மல்லிகையையும் கனகாம்பரத்தையும் நெருக்கிக் கட்டிய நீண்ட சரத்தைப் பின்னலில் சூட்டிக்கொண்டு கைகள் இரண்டையும் குளிருக்கு இறுக்கிப் பிடித்துக்கொண்டு மாமாவுடன் டிவிஎஸ் 50யில் சென்று இறங்கினால் கோயில் பட்டப் பகல் போல இருக்கும். அங்கு எப்போதாவது அரங்கன் முன் நின்று பாட வாய்க்கும். அப்போதெல்லாம் மாமா திருக்கண்டேன் பாடு.. பச்சை மாமணி.. இல்லாட்டா ஆரா அமுதே பாடு என்று பரபரப்பார்.
கழிந்த மார்கழியின் முதல் நாள் நானாகவே ஆண்டாள் சன்னிதியில் கொண்டல் வண்ணனைப் பாடினேன். அந்தப் பாசுரத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடியது. மாமா குனிந்தபடி தலையாட்டிக்கொண்டார். பட்டர் குங்குமம் தரும்போது ஆண்டாளின் கழுத்திலிருந்து துளசி மாலைகளில் ஒன்றை மாமாவிடமும், பாதத்திலிருந்த செந்தாமரைகளில் ஒன்றை என்னிடமும் கொடுத்தார்.
“நோக்கு வாரிசு..”என்று பட்டர் மாமாவின் முதுகில் பட்டும் படாமலும் மெல்ல தட்டினார்
துளசிமாலையைக் கையில் பிடித்தபடி கோவிலிலிருந்து திரும்பி வரும் வழியில் மாமா என் தோளில் கைபோட்டுக் கொண்டார். அத்தனை மின்விளக்குகள் இருந்தாலும் அதிகாலை இருள் அங்கங்கே தூண்களில் திருப்பங்களில் தேங்கி நின்றது. பட்டரின் வார்த்தைகளை நினைக்கும்போது அழுகை வந்து முட்டிக்கொண்டு நின்றது. இத்தனை வருடங்களில் அவரை நமஸ்காரம் செய்யும் போது மட்டும் தலை உச்சியில் கை வைப்பார்.
“பட்டுப் புடவையெல்லாம் உடுத்தி பெரியவளாயிட்டே” என்று சிரித்தார்.
“அம்மாவோடது மாமா... மாம்பழக் கலர் நேக்குப் பிடிக்கும்”
“நல்லாருக்கு”
பனியில் ஈர கல்தரையில் கால் வைத்து நடக்க நடக்க சில்லிப்பு பாதங்களைத் தொடுவது சிந்துபைரவியில் ஆலாபனை செய்வதுபோல இருந்தது.
கல்லூரியில் இரண்டாமாண்டில் சாதகத்திற்கு அதிக நேரம் ஒதுக்கினேன். பாசுரங்களைப் பாடும் போது குளிர்ச்சியில் மனம் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. காலையில் காவிரித் தண்ணீரைத் தொடுவதைப்போல ஓர் இனம் சொல்ல முடியாத துள்ளல் மனதுக்குள். பாசுரங்கள் மீது ஒரு இனம் தெரியாத ஈர்ப்பு. தினமும் கல்லூரிப் பேருந்து திருச்சிக்குள் நுழையும்வரை காவிரியையும், கொள்ளிடத்தையும், மலைக்கோட்டையையும் பார்க்கும் போது ராகஸ்வரங்கள் மட்டும் மாறிமாறி உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அண்ணா சிலை நிறுத்தம் வந்ததும் வலுக்கட்டாயமாக மனதைத் திருப்பி கல்லூரிக்குள் நுழைவேன்.
“இப்பதான் நார்மலாயிருக்கா..பஸ் ஜன்னல் வழியா வானத்துல மிதப்பா.. என்னமோ ரங்கனையே காதலிக்கறாப்ல..பாசுரம் பாறதுன்னா இவளுக்கு பாசிபருப்பு பாயாசம்” என்று காவேரி எப்போதும் கிண்டலடிப்பாள்.
“ஸ்ரீராம் மாமா சின்ன வயசிலே அப்படி தேனா... பாகா... கச்சேரி பண்ணுவாராம். அப்பா சொன்னார்” என்று காவேரி ஒருமுறை சொன்னாள். இப்போது அவர் பாடும்போது இருக்கும் வெட்டும் அழுத்தமும் பற்றி அவ்வப்போது யோசனை வரும்.. அப்படி உருகி பாகா இருந்த குரல் கெட்டித்தட்டி இப்படியாகுமா என்று.
“ஆண்டாளாவே மாறிடப் போறடீ... இன்னிக்கெல்லாம் ரங்கனுக்கு இறங்கி வர காலமில்ல பாத்துக்கோ” என்று வினோ மண்டையில் கொட்டுவாள்.
வகுப்பில் கவனத்தை இழுத்துப் பிடித்து பாடத்தைப் பற்றிக்கொண்டாலும் அவ்வப்போது மனம் தவறி தாளத்தில் விழுந்துவிடும். அனிச்சையாக விரல்கள் டெஸ்க்கில் சத்தமில்லாமல் தத்தும்போது ஆசிரியர்கள் அதட்டுவதுண்டு. இமைகளைத் திறக்காமலேயே இருந்துவிடலாம் என்ற பைத்தியக்காரத்தனமான திளைப்பு இருந்த நாட்களில்தான் தாத்தாவிற்கு முடியாமல் ஆனது.
நரம்புச் சிக்கல் என்று சொன்னார்கள். தலையில் அறுவை சிகிச்சை நடந்தது. அன்று கண் விழித்ததும் மருத்துவர் இராமசந்திர ஈஸ்வரன், அம்மாவைச் சுட்டிக்காட்டி, “இது யாருங்கய்யா,” என்று கேட்டபோது, “எங்க பிள்ளைங்க,” என்றார்.
அப்பாவைக் காட்டியபோது பதில் சொல்லாமல் திரும்பி கொண்டார். மீண்டும் கேட்டபோது தெரியவில்லை என்றார். அப்பா மீது ப்ரியம் கொண்ட தாத்தா அப்படி சொன்னதும் அப்பா முதலில் முகம் வாடினாலும் சட்டென்று மாற்றிக்கொண்டு “நான் உங்க மருமகப்பிள்ளை மாமா,” என்று சிரித்தார். படிப்படியாக நினைவு தெளிந்து வீட்டிற்கு அழைத்து வந்தபின், அனைவருக்கும் தூக்கத்தின் மீது ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது. தாத்தாவை கீழே விழுந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள். அதனால் தூக்கத்திலிருந்து திடீர் திடீரென்று அப்பாவும் அம்மாவும் விழித்துக் கொள்வார்கள். தாத்தா இருந்த பெரிய அறையில் அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் படுத்துக்கொண்டார்கள். படுக்கையறைக் கதவு திறந்தே இருக்கும். அதற்கு எதிரே உள்ள சிறிய அறை என்னுடையது. அவ்வப்போது எழுந்து தாத்தாவின் படுக்கையைப் பார்த்துக் கொள்வேன். இருபது நாட்களுக்கு மேலாக சரியான உறக்கமில்லாத ஒருநாள் இரவில் மூவரும் நன்றாக உறங்கிய வேளையில், தாத்தா மெதுவாக எழுந்து நடந்து கதவுப்பக்கம் வரும் போது விழுந்துவிட்டார். தலையில் நல்ல அடி. சட்டென்று எழுந்த அம்மாவின் குரல் ஒரு கத்தியை போல மண்டைக்குள் நுழைய பதறி எழுந்து அமர்ந்தேன். என்னால் சட்டென்று எழும்ப முடியவில்லை. அப்படியே பாயில் அமர்ந்திருந்தேன். கைகால் முதுகு என்று சகலமும் அதிர்ந்து நடுங்கியது. சட்டென்று உடல் சொடுக்கியதில் மாத சுழற்சி தவறான நாளில் வந்தது.
தாத்தாவின் காரியம் முடியும் வரை மெதுவாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஸ்ரீராம் மாமா “மனசு சமாதானமாகி பாடனுன்னு தோன்றப்ப வா,” என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஒருநாள் காலையில் அப்பா என்னை உறக்கத்திலிருந்து எழுப்பினார்.
“சாதகம் பண்ணலியா தீபூ?”
“இல்லப்பா... பண்ணனுன்னு தோணல”
“அப்படியே விட்றபிடாது... மாடியிலேந்து ரங்ககோபுரத்தை சேவிச்சுட்டு சாதகம் பண்ணு...” என்று முதுகில் தட்டி கையைப் பிடித்துக்கொண்டு போய் குளியலறையில் விட்டார்.
குளித்துவிட்டு மொட்டை மாடியில் நின்றேன். இருள் விலகாத வெளிச்சத்தில் கோபுரங்கள் குன்றுகள் போல அங்கங்கே நின்றன. பக்கத்து வீட்டு மாமி செம்மண் கோலம் வரைந்து கொண்டிருந்தாள். கீழ் வானத்தில் வெளிச்சம் ஆரஞ்சுக் கோடுகளைத் தீற்றிக்கொண்டிருந்தது. காகங்களின் கரகர சிட்டுகளின் கிச் கிச். தொண்டையை செறுமிக்கொண்டு கண்மூடி அமர்ந்தேன். மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு ஸ்வர பயிற்சிக்கு வரும்போது தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. எதுவோ தொண்டையின் அடியில் தத்தி நின்றது. சாதகம் செய்யாததால் அப்படி இருக்கும் என்று நினைத்து மெதுவாக செய்யலாம் என்று முயற்சி செய்து எதிலும் சேராமல் குரல் கிரிக் கிரிக் என்று தயங்கித் தயங்கி நின்று நின்று நகர்ந்தது.
சடாரென்று கீழே இறங்கி சீக்கிரமே கிளம்பி கல்லூரிப் பேருந்து நிற்கும் நிறுத்தத்திற்கு அப்பால் ஐந்தாம் சுற்றுக்குள் உள்ள நாதமுனிகள் சன்னிதியின் பக்கவாட்டு மண்டபத்தில் கண்மூடி அமர்ந்தேன். கணீர் என்ற குரலில் ஒருவர் பாசுரங்களைப் பாடுவதைக் கேட்டநொடி சடசடவென்று எழுந்து வேகமாக நடந்து மூச்சுவாங்க பேருந்து நிறுத்ததில் நின்றேன். கிட்டத்தட்ட ஓடி வந்தேன். எதையாவது பிடித்துக்கொண்டால் தேவலை. பக்கத்தில் ஒன்றுமில்லை. துப்பட்டா நுனியை சுற்றி கைகளுக்குள் வைத்தேன்.
அன்றைக்கு சாயங்காலமாக அப்பா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் கழுத்துப் பகுதியை பல இடங்களில் தொட்டு வலி இருக்கா என்று கேட்டார். ஒரு எக்ஸ்ரே பின்னர் ஸ்கேன் எடுத்தோம்.
“எப்போ இருந்து இப்டி இருக்கு..”
“காத்தாலேந்துதான் பாட முடியலே,”
“பாடி எவ்வளவு நாளாகறது,”
“ஒரு மாசத்தக்கு மேல இருக்கும் டாக்டர்... தாத்தா இறந்ததுலேந்து பாடல...” என்றேன்.
“பாடறவாளுக்கு இப்படி ஆகறது சகஜம்தானே... சரியாயிடும்,” என்று அப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டு என்னிடம் பேசத் தொடங்கினார்.
“ஏதாச்சும் பாட முடியுமா?”
“என்னால பாட முடியல டாக்டர்”
“எனக்கு சங்கீதம் தெரியாது... பாட்டு கேக்க மட்டும்தான் புத்தியிருக்கு... பாடுங்க”
அமைதியாக இருந்தேன். அவர் என் தோளில் தட்டினார்.
“பாடறதுக்கு பயம் வரக்கூடாது... நீங்க தனியா இருக்கச்சே மெதுவா பாடனும்”
“இன்னிக்கு நாள் முழுசும் பாட்டுக்குன்னா குரல் எழும்பல”
“இப்போ நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணாம பாடுங்க”
பாசுரங்களை மனம் துளாவியது.
வாரா அருவாய் வரும் என்மாயா... என்று பாடத் தொடங்கினேன். முதல் வரியிலேயே குரல் கம்பி போல தடுக்கியது. மருத்துவர் நிறுத்த வேண்டாம் என்று சைகை காட்டினார். உடைந்து உடைந்து வந்தது பாசுரம்.
கடைசி வரி குரலாக வராமல் காற்றாய் மாறி தொண்டைக்குள் புதைந்தது. இதமான வெந்நீர் தொண்டையில் இறங்கும் போது டாக்டர் சிரித்தபடி, “சினிமா பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா... சிரமப்படுத்திக்காம மெதுவா பிடிச்ச பாட்டு ஒன்னு பாடுங்க...” என்றார்.
நான்கைந்து வரிகள் பாடி நிறுத்தினேன். மருத்துவர் சில மருந்துகளை எழுதினார். இப்போதைக்கு சாதகம் செய்ய வேண்டாம் என்றார். “தாத்தாவின் மரணம் தந்த அதிர்ச்சியா?” என்று அப்பா கேட்தற்கு “அப்டில்லாம் எதுவும் கான்க்ரீட்டா சொல்லிட முடியாது” என்று சொல்லி அனுப்பினார்.
மனதிற்குள் நான் சொல்லிக்கொள்ள மறுத்த விஷயத்தை மருத்துவர் சொல்லிவிட்டார். ஸ்ரீராம் மாமாவின் வீட்டிற்குப் பக்கத்தில் பாட்டு பழக பிள்ளைகள் வருவார்கள். அவர்களுடன் எனக்கு பழக்கமுண்டு. ‘குரல் போயிடுச்சு’ என்று பாட்டுக்காரர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு வாரமோ பத்து நாளோ ஒரு மாதமோ கழித்து திரும்பி வருவார்கள். வாய்ப்பாட்டு பழகும் எல்லோருக்கும் அந்த பயம் நினைக்க விரும்பாத தூரத்தில் இருக்கும்.
“எப்போ போகுன்னு தெரியாது... எப்போ வருன்னு தெரியாது” என்று ஒருமுறை மாமியிடம் மாமா யாருக்கோ நடந்ததை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மருத்துவரிடம் சென்று வந்த அடுத்தநாள் சாயுங்காலம் மாமா வெளியில் அழைத்துச் சென்றார். காவிரிக் கரைப் பக்கம் வந்ததும் அமைதியான இடத்தில் மரம் முழுவதும் இரத்தச் சிவப்புப் பூக்களால் நிறைந்திருந்த இயல்வாகை மரத்தடியில் நின்றார். காய்ந்த பூக்கள் மிதிபடும் மெல்லிய சத்தம். காவிரி மணலில் காலடிகள் பதியும் சத்தம். அப்பால் கரை பக்கத்திலேயே ஒரு சிறு மணல் திட்டில் செங்காகம் கத்திக்கொண்டிருந்தது.
“மருந்து எடுத்துக்கிறியா தீபு?”
“எடுக்கறேன் மாமா”
“சரியா எடுக்கனும்... சாதகம் வேணாம்... சரியா? சும்மா வீட்டுக்கு வாயேன்...” என்று சொல்லிவிட்டு என்னிடமிருந்து பார்வையைத் திருப்பி ஆற்றைப் பார்த்தார்.
சட்டென்று நான் யோசிக்காமல், “நேத்து காலையில காவிரியில குதிச்சிடலான்னு தோணுச்சு மாமா” என்றேன்.
“ச்சே... ச்சே... வீட்ல இதை சொல்லி வைக்காதே...”
“பாடமுடியலேன்னா அப்புறம் எதுக்கு...”
“அப்டில்லாம் நினைக்கப்பிடாது.. எனக்கும்தான் குரல் போச்சு.. எனக்கும் இருவது வருஷத்துக்கு முன்னுக்க அப்படிதான் தோணினது.. அந்த நினைப்பை மழுங்க அடிச்சுடு”
“திரும்ப வரவே இல்லல்ல மாமா..”
“எனக்கு ஒருத்தனுக்கு வரலேன்னா என்ன? எத்தனையோ பேருக்கு திரும்ப வந்திருக்கே...”
“உங்களுக்கு வரலல்ல...”
“நீ அதையே மனசுல பிடிச்சுண்டு இருக்கப்படாது... உங்க அப்பாக்கு நல்ல குரல் வளம்... நீ அதை நினைக்கனும்,” என்று காவிரியைப் பார்த்தபடி சொன்னார். நடந்துவிட்டு திரும்பி வரும்போது வலுவாக வீசிய காற்றில் இரத்த சிவப்புப் பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.
“காவிரியை பாரு... இப்ப சீரான ஓட்டம்... வெய்ய காலம் வந்தா குட்டையா அங்கங்க தேங்கி நிப்பா... ஆடி வந்தா கூலம் கொப்பு குலையெல்லாம் அடிச்சுட்டு போவா... அப்படித்தான் எல்லாமும்...”
“.......”
“நீ சின்ன பொண்ணு.. உனக்கு இது முதல் அடியாக்கூட இருக்கலாம். பயந்தறக்கூடாது. குரல் போனதால பாட முடியாம ஆனவாளைவிட பயத்தால விட்டவா அதிகம். மெதுவா பாடிண்டே இருக்கலாம்... விட்றக்கூடாது தீபு..”
மௌனம். மரங்கள் அடர்ந்த பாதை இன்று என்னவோ நடக்க நடக்க முடியாமல் நீளமாக இருந்தது.
“நீ மட்டுந்தான் எனக்கு வாரிசு” என்று சொல்லிவிட்டு தோளில் கை போட்டு நடந்தார். நான் நடக்க நடக்க குர்தா பூ பூப்பது போல காற்றில் உப்பிப் பறந்தது.
அடுத்தநாள் சாயுங்காலம் மாமா வீட்டு வாசல்முற்றம் வரை சென்று துளசிச் செடி அருகே நின்றேன். காலெடுத்து வைக்க முடியவில்லை. அங்கே போய் என்ன செய்வது என்ற எண்ணம் உள்ளுக்குள் சுழன்றது. நெற்றியில் கழுத்தில் என்றுமில்லாத வியர்வை. ஒருவித நடுக்கம். அப்படியே திரும்பி விடுவிடுவென்று நடந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று இரவு அப்பாவை எழுப்பி “அப்பா எங்கேயாவது போகலாம்” என்றேன். முதலில் புரியாமல் விழித்த அப்பா சட்டையைப் போட்டுக்கொண்டு வந்தார். இருவரும் நடந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஐந்தாம் மதில்சுற்றில் உள்ள கம்பராமாயண மண்டபம் வந்ததும் கால்கள் களைத்து அமர்ந்து கொண்டோம்.
அன்று கல்லூரிலிருந்து சாயுங்காலம் திரும்பி வந்தபோது ஜன்னல் வழியே அம்மா பேசுவது கேட்டது.
“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... அவருக்கே பாட்டு, குழந்தைன்னு எதுவுமே அமையல... அங்க கொண்டு விடாதீங்கோன்னு... கச்சேரி பண்ண காலம் வந்தாச்சு... இப்ப போய் இப்படியாச்சே”
“நமக்குன்னு சிக்கல் வந்ததும் அவன் ராசியில்லாதவனாயிட்டானா... நமக்கு மட்டும் எதுவுமே வராதோ..அவ நமக்கு மட்டுமில்ல அவனுக்கும் பிள்ளை தான்” என்று அப்பா ரௌத்திரமானார்.
இன்றோடு ஒரு மாதமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்பே மருந்துகள் முடிந்துவிட்டன. இன்று மாமா வீட்டிற்கு வந்தாலும் வருவார். அலைபேசியை எடுத்து முடுக்கினேன். நன்கு விடிந்திருந்தது. கொட்டில் கன்றுகள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. கீழிருந்து அம்மா அழைக்கும் குரல்.
சாயுங்காலமாக மாமாவுடன் கோவிலுக்கு சென்றேன். ஆண்டாள் சந்நிதியில் குங்குமப் பிரசாதம் வாங்கிக்கொண்டு மண்டபத்தில் அமர்ந்தோம். மேற்கூறையில் அந்தியின் இருள் தேங்கத் தொடங்கும் நேரம். ஆட்கள் இல்லாததால் பட்டரும் எங்களைப் பார்த்து நின்றார்.
“ஏதானும் பாடு தீபு” என்றார் மாமா. நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
“மெதுவா பாடு,” என்று என் கண்களைப் பார்த்தார்.
கங்கையிற் புனிதம் ஆய
காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன்...
என்று பாடிக்கொண்டிருக்க இடையில் குரல் வெட்டி நின்றது.
“போறும்” என்றார் மாமா.
பட்டர் நெற்றியை சுருக்கி பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்தியில இந்த சமயத்துக்கு வந்து கோதையை சேவிச்சுட்டு நாலு வரி பாடறியா?” என்று கேட்டார்.
நான் குனிந்து கொண்டேன்.
“ஏன் சொல்றேன்னா...அடுத்த மாசம் ரங்கனுக்கு முன்னால நின்னு நீ பாடற..அவன் கேக்கறதுக்கு முந்தி நாச்சியார் கேட்டு ருசி பாக்கனுமோ இல்லியோ...” என்று சிரித்தார். நான் குனிந்தே அமர்ந்திருந்தேன்.
“சரியான பேச்சு... சூடிக்கொடுத்தவ முதல்ல கேக்கட்டும்..”
“அதுக்குள்ள சரியாகுமா? எப்படி பாடறது,”என்று கேட்டேன்.
“மனுஷாளுக்குதான் கணக்கு. ரங்கனுக்கு அதெல்லாம் ஒன்னுமில்ல... மனசுதான்... அவன் முன்னுக்க உடையாத எதுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை,” என்றது மாமாவின் குரல்.
என் மனதிற்குள் மீதிப் பாடல் ஓடிக்கொண்டிருக்க விரல்கள் தொடையில் தத்தின. குனிந்தபடியே கண்களைத் திருப்பினேன். மாமாவின் விரல்கள் தரையில் தத்தின... சத்தமில்லாத தாளம். பட்டரின் கால்கள் ஒரே லயத்தில் அசைந்து கொண்டிருக்க, அவர் சுற்று மதிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்கு வரும் போது நன்றாக இருட்டி விட்டது. மழை நாட்களின் தண்மை. மாடிக்குச் சென்றேன். வாகனங்களின் மனிதர்களின் சத்தங்கள் குறைந்து கொண்டிருந்தன. கைப்பிடிச் சுவரில் விரல்கள் தத்தின. கன்று கொட்டிலில் மின்விளக்குகளின் வெளிச்சம். நடுவில் எந்த காலத்திலோ ஊன்றி வைத்திருந்த கல் தூணில் நுனியில் அகல் போல குழி செய்த கல் விளக்கு சுடர்ந்தது. அதனடியில் அந்த செப்பு நிறக் கன்று முன்னங்கால்களை மடக்கி தலையை நிமிர்த்தி அமர்ந்திருந்தது. வாய் அசைந்து கொண்டிருந்தது. நான் கீழே இறங்கி வந்து படுத்துக்கொண்டேன்.
மாமாவின் குரலில் நீலாம்பரி மனதிற்குள் காற்றை போல மிதந்தது. அம்மாவின் விரல்களைப் போல வருடியது. கண்களை மூடிக்கொண்டேன். அந்த சிவப்பு மரம் நிறைய பூக்கள். காவிரியின் சலசலப்பு. இலகுவான மூச்சிற்குள் எந்த கனமும் இல்லை. தொண்டைக்குள் ஒரு காவிரி ஓடுவதைப்போல ஒரு தண்மை. கை குரல் வளையை தடவியது. மெல்ல மெல்ல நினைவல்லாது ஒரு தித்திப்பு மட்டுமாக ஒரு உணர்வு. சட்டென்று எழுந்து மாடிக்கு சென்றேன். கல்தூணில் தீபம் அணையாமல் மாமாவின் கண்களைப் போல பாடு என்று சொன்னது. சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடினேன்.
Comments
Post a Comment