Skip to main content

மொட்டு மலர் அலர்

 [வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை]


மொட்டு மலர் அலர்

பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது.  நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என்  கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள்.

வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள்.

“உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,”

“ம்,”

“ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,”

“முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”

 பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள்.

வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநேரத்து இருட்டும் வெளிச்சமும் மாறிமாறி விளையாடியது. 



சாமியாடிஅய்யாவின்  கனத்த குரலால் தெரு அதிரத்தொடங்கியது. அவர் குரலை சிறு பிள்ளையிலிருந்து கேட்கிறேன். அது எங்கோ தரையிலிருந்து வருவதைப்போல உடலை அதிரவைக்கும். சிறுவயதிலிருந்து இதுபோல காலைசந்தி பொழுதிலும், அந்தியின் சந்தியிலும் அவர் குரலை கேட்டுக்கேட்டு அதற்கென்று மனதில் ஒரு இடம் உருவாகிவிட்டது. அவர் பாடும் போது யாரிடமும் பேசத் தோன்றாது. மனதை அழுத்தும் எடை போல அவர் குரலுக்கு ஒரு தன்மை. இதுவரை அவர் யாருக்கும் எதிராக எதையும் சொல்லி கேட்டதில்லை. அவரின் குரலும் உடுக்கையும் சேர்ந்து எதிரில் சோர்ந்து அமர்ந்திருப்பவரை விழிக்க வைப்பதற்கு முயற்சி செய்வதை போல இருக்கும். அவர் பாடும் வரிகளுமே அப்படித்தான். உடுக்கை அடித்துக்கொ ண்டே அவர் எப்போதும் பாடும் பாடலை பாடத்தொடங்கினார்.

யாருக்கும்

தாயுமுண்டு

தகப்பனுமுண்டு…

ரெண்டுமாய் ஈசனுண்டு.

ஈசன் வந்திருக்கான்

உடுக்கையாய் வீடுதேடி..

வீடு தேடி வந்திருக்கும்

அப்பனிடம் மனச சொல்லு..

சொல்லமுடியாதத

ஆயிக்கிட்ட சொல்லு..

அப்பனும் ஆயிமான அவன்

 நீ கேட்டத தருவான்..

நீ பயந்தது எதுக்கு

உடுக்கை உடனிருக்கு.. என்று பாடி உழவுகாட்டின் ஏர் போல அவள் மனதை கிண்டி எடுத்தார்.

தம் தம் தம் என்று உடுக்கை தலைக்குள் சத்தமிடுகிறது. கம்பீரமான அழுத்தமான கை ஒன்று தலைஉச்சியை தொடுகிறது. தலையை உலுக்கிக்கொண்டேன். அவர் எப்போதாவது கோவிலில், தெருவில் திருநீரு வைத்துவிடும் போதும் இதே உணர்வு ஏற்படும். குரலும் விரலும் ஒரே உணர்வை ஏற்படுத்தும் விதிர்ப்பான உணர்வால் எதிரில் உள்ளவர்கள் மனதில் உள்ளதை சொல்லிவிடுவார்கள்.

 ஈசனிடம் பரோட்டா கேட்ட ஆட்கள் உண்டு..பச்சை கல் மூக்குத்தி கேட்ட பெண்களும் உண்டு. அப்படி கேட்கும் போது மற்றவர்கள் சிரித்தால் ‘ அப்பனாத்தாக்கிட்ட தானே இதெல்லாம் கேக்க முடியும்’ என்பார். அப்படியாப்பட்டவரே மலைத்து போவது போல முழுகெடாதின்னி வீட்டுப்பிள்ளை முத்தம் கேட்டது. அது குழந்தையும் இல்லை..பெரிய பெண்ணும் இல்லை. அன்று தான் அய்யா ஆவேசமாக எழுந்து ‘பிள்ளைய கொஞ்சாம.. பேசாம.. அப்பனாத்தா என்னடா பண்றீங்க’ என்று கத்தினார்.

அவரிடம் முல்லையின் சொந்தக்காரர்கள் சத்தமாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“சொந்த சாதியில இல்ல வேத்து சாதியில ஏதாச்சும் செய்வினை வச்சிருக்கா,”

“நேந்துக்கனுமா..வெளக்கு போடனுமா,”

இன்னும் மாறி மாறி குரல்கள். 

“எல்லாம் வெளியாளாலதான் வரனுமா…வூட்ல ஒங்களால ஒன்னும் வராதா?” என்று அவர் அதட்டியதும் யாரின் குரலும் வெளிவரவில்லை.

“எம் மவ பேசட்டும்..’என்றார்.

முல்லையின் சன்னக்குரல் வெளியே கேட்கவில்லை.

மீண்டும் உடுக்கை அடித்தபடி கர்ஜனை போல ஒரு சத்தம். “அவக்கிட்ட ஒரு தப்புமில்ல ஒன்னுமில்ல..தலமேல வச்சிருந்து கீழ போட்டு உடைச்சா என்ன பண்ணும் பச்சப் பிள்ளை,” என்றப்பின் மீண்டும் உடுக்கை சத்தம்.

வெளியூர் வேலைக்கு பேருந்துக்கு செல்லும் ஆட்களும் பயிர்நடவுக்கு செல்பவர்களும் பேசிக்கொண்டே நடக்கும் சலசலப்பு. தெற்கு தெரு முத்தாத்தா அத்தை என்னைப் பார்த்து, “மாமியால்லாம் சோறாக்கி வச்சுட்டு போறோம்..இப்ப தான் மருமவ கோலம் போடறதா,”என்று சிரித்தாள். சிலர் சாமியாடி குறி சொல்வதை கேட்பதற்காக தயங்கி நின்றார்கள்.

 “இந்த முல்ல கொஞ்சம் மனச தெடமா வச்சுக்கப்பிடாது..”

“அவங்க மேல குத்தம் வரக்கூடாதுன்னு இன்னிக்கு சாமி பாப்பானுங்க..நாளைக்கு பேயோட்டுவானுங்க,” 

“இவ மாமங்காரன் இந்தப்பிள்ளைய ஊருக்கே வேடிக்கைக் காட்டி ,கெடா வெட்டி ,கறிசோறு திங்காம முடிக்கமாட்டான்,” என்று அவர்களுக்குள் பேசி கலைந்தார்கள்.

அங்கே,“என்ன பண்ணுன்னு சொல்லு,” என்று முல்லையின் மாமாவின் குரல். கதவை வேகமாக சாத்திவிட்டு உள்ளே சென்றேன். “காலங்காத்தல காதவ சாத்திக்கிட்டு,”என்று அப்பாயி பின்பக்கமிருந்து அதட்டினாள்.

தேநீருக்காக பாலை அடுப்பில் வைத்துவிட்டு கண்களை ஜன்னல் பக்கமாக திரும்பினேன்.  ஊதா நிறத்தில் வானம். கண்களை கீழே இறக்கினால் ஜாதிமல்லிக் கொடியின் தண்டுகள் தளதளவென்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. இன்னும் பூக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பூக்கலாம்.

முல்லை சாமியாடிஅய்யாவிடம் என்ன சொல்லியிருப்பாள்? என்று யோசனையாக இருந்தது. முல்லையை தாவணி அணிந்த வயதிலிருந்து எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவளுடைய அம்மாயியின் தங்கை வீடு இது. மே மாத விடுமுறை ஒன்றில் திருவிழாவிற்கு வந்திருந்தாள். பச்சை தாவணியும், மஞ்சள் பாவாடையும் சட்டையும், தலைநிறைய பூ வைத்திருந்தாள். நீண்ட கோரை முடியை சைடு பின் குத்தி பின்னியிருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தி..சந்தன நிற முகத்தில் மின்னும் மஞ்சள் பூச்சு. குதி வைத்த செருப்புக்கு மேல் ஜதங்கை கொழுசு. நான் அப்போதெல்லாம் இரண்டு ஊர் தள்ளியிருந்த பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளிலில் அலைந்து திரிந்து கருவாடு போல இருப்பேன்.

திருவிழாவில் கூட்டமாக கோயிலுக்கு மாவிளக்கு எடுத்து போகும் போது என் கை தாங்காமல் தாம்பாளம் சாய்ந்தது. தாம்பாளத்தை தலையில் வைப்பது அந்தவயதில் மானக்கேடு. அது கனமான கெட்டி பித்தளை தாம்பாளம். கரகம் என்று கிண்டலடிப்பார்கள். பக்கத்தில் நடந்து வந்த முல்லை தட்டிலிருந்து எதுவும் விழுந்து விடாமல் ஒரு கை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

“தாம்பாளத்தை நல்லா பிடிப்பா..எத்தனாப்பு படிக்கற,”

“பத்தாவது பரிட்சை எழுதியிருக்கேன்,”

“நானுந்தேன்..நீ என்ன எட்டாப்பு படிக்கற பிள்ள கணக்கா இருக்க,”

நான் திரும்பி முறைத்தேன்.

“கோச்சுக்காத..தாவணில்லாம் போட மாட்டியா,” 

“எனக்கு தாவணி இல்ல..”

“வயசுக்கு வந்தப்ப மாமாவூட்ல சீர் வைக்கல,”

“மாமா இல்ல..தாத்தா சுடிதார் வாங்கித் தந்தாரு,”

“சுடிதாரா..”என்று சிரித்தாள். என் சுருட்டை முடியை தொட்டு ‘முடியும் குட்டியா இருக்கு’ என்றாள். நான் பள்ளி உயர் நிலை முடிக்கும் போதே எங்கள் தெருவிற்கு மருமகளாக வந்துவிட்டாள்.  விடுதியிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த போது ரோஸ் நிற சேலையுடன் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். 

“பாத்தியா ஒங்க வூட்டுக்கே வந்துட்டேன்..இனிமே அண்ணின்னுதான் கூப்பிடனும் பாத்துக்க,”

“போ..முல்ல,”

“சரி..சரி…போனாப்போது பேரு சொல்லிக்க,”

கல்லூரி முதலாமாண்டு சேர்ந்து விடுதிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் மதியம் அவள் வீட்டு மாட்டுத்தொட்டிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு இடது பக்க உருளையில் வாளிகயிற்றை போட்டு கிணற்றுக்குள் வாளியை விட்டேன்.

நிறுத்தி நிறுத்தி இறைத்தவள் என் பக்கமாகத் திரும்பி, “இந்நேரத்துல எதுக்கு,”என்றாள்.

“அம்மா எழவுக்கு போயிருக்காங்க..வந்ததும் குளிக்க..”

கிணற்று கட்டையில் வாளியை வைத்து தண்ணீரை இருகைகளாலும் அள்ளி குடித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டாள்.

“ஒடம்பு சரியில்லையா.. கயிறு இழுக்க இவ்வளவு கஸ்ட்டப்படுற,”

அவள் முந்தானையை உதறி செருகிக்கொண்டு சிரித்தாள்

“ஒனக்குத் தெரியாதா,”

“என்னா..”

வியர்த்த முகத்தில் ஒரு சோபை இருந்தது. நாவல்களில் வருணிப்பதைப்போல அவளிடம் எல்லாமே மென்மையாய் ..

“உங்க அம்மாவுக்கு தெரியுமே…நீ இன்னும் பள்ளிக்கூட பையோடவே திரிஞ்சா எப்படி சொல்வாவ,”

என் கையை இழுத்து ஈரமான அவள் நாடியில் வைத்தாள்.

“என்னா,”

“துடிப்பு ரெண்டா கேக்குதா,”

“இல்லியே,”

“ச்..நல்லா கேளு பிள்ளன்னா,”

சத்தமில்லாத அமைதியான நடுப்பகல். கண்களை மூடி நன்றாக கூர்ந்து கவனித்தேன். ஒரு துடிப்புடன் இணைந்து இன்னொன்று. பின்னால் ஔிந்து கொண்டு நிற்பதை போல. சட்டென்று என் பாதங்கள் நின்ற ஈரத்தில் இன்னும் அழுத்தி ஊன்றிக்கொண்டன.

“இனிமே நீ அத்தையாம்,” என்றவளை அடிக்க கை ஓங்கினேன்.

“என்னிய அடிக்கக்கூடாது பிள்ள..உங்க அண்ணனே எதுக்கெடுத்தாலும் ஓங்குற கையை சுருட்டி வச்சிருக்கு,” என்றபடி குடத்தை தூக்கிக்கொண்டு நடந்தாள்.

நான் கல்லூரி முடிந்து வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது முல்லை காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வயலுக்கு சென்றுவிடுவாள். அந்தியில் வந்து சமைக்கவும் ,பிள்ளைகளை பார்க்கவும் என்று பரபரப்பாக இருப்பாள். நேருக்கு நேராக பார்த்தால் பக்கத்தில் யாரும் இல்லை என்றால்,“என்ன இப்படியே இருக்க உத்தேசமா,” என்பாள். கோபமாக முறைக்கும் என் தோளை பிடித்துக்கொள்வாள். அதற்குள் மூன்றாவது வீட்டிலிருந்து பிள்ளைகளோ அண்ணனோ அழைக்கும்  குரல் கேட்கும். 

அண்ணன் முழு குடிகாரன். அதை மறைக்க வேகமாக பேசுவது வழக்கம். ஒரு நாள் வண்டியில் போய் எங்கேயோ விழுந்துவிட்டு வந்தது. ஒரு மாதம் சென்று தலைசுற்றி விழுந்து மருத்துமனைக்கு சென்றார்கள்.  தலையில் இரத்தம் உறைந்துவிட்டது என்றார்கள். அப்படி இப்படி என்று மூன்றாம் நாள் நடு இரவு கடந்து பிணமாக வந்த போது முப்பத்தைந்து வயது என்பதே அனைவரையும் துன்புறுத்தியது. அவசரஊர்தி தெருவில் நுழையும் போது ஓங்கி கன்னத்தில் அறைபட்டது போல தெருவே அமைதியாக இருந்தது.

அந்த முன் அதிகாலை முல்லையின் குரலால் பதறி விழித்தது. அங்கு சென்ற என்னை பாய்ந்து இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். கொடி போல அவளின் ஒவ்வொரு அங்கமும் நடுங்கிக்கொண்டிருந்ததை கண்களை மூடினால் இப்போதும் உணர முடிகிறது. பின் யாரோ உறவுக்காரர்கள் அவசரமாக அவளை பிய்த்து எடுத்துக்கொண்டு போனார்கள்.

எல்லாம் முடிந்து உறவுகள் ஊருக்கு சென்றார்கள். கூட்டமும் பந்தலும் கலைந்து தெரு இயல்புக்கு திரும்பிவிட்டது. பள்ளிக்கு செல்லும்இரண்டு பிள்ளைகளையும் அனுப்பிவிட்டு முல்லை வயலுக்கு செல்வாள். அவளுக்கு வயலை பங்கு பிரித்தார்கள். காலையில் ஆண்கள் வயலிற்கு செல்லும்நேரத்தில் முல்லையும் வயலுக்கு மடைவாய் அடைக்க போவாள். பகலில் மற்றவர்களின் வயல்களுக்கு பயிர் நடவோ, களையெடுக்கவோ செல்லத் தொடங்கினாள்.

 தெருவில் எங்கள் குறுக்கு சந்தில் நேரும் எதிருமாக பதினான்கு வீடுகள். இதில் அத்துவீடுகளில் இரண்டு படுகிழவிகள். மற்ற பெண்களெல்லாம் பதின்வயதும் மத்திம வயதும் சிறு பிள்ளைகளும். எங்களில் முல்லை நல்ல உயரம். அண்ணன் இறந்த பிறகு அவள் உடலை குறுக்கியபடி குனிந்து நடப்பதை பார்ப்பதற்கு முதுகில் வலியுடன் நடப்பதைப் போல இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல தெருமத்தியில் நடக்காமல் ஓரமாக நடக்கத்தொடங்கினாள். 

அவள் பார்வையில் உடலில் பதுங்கல் போல ஒரு பாவனை வந்துவிட்டது. பயந்த முயல் போல. யார் வீட்டு முன்னால் வண்டி வந்து நின்றாலும் வீட்டிற்குள் சென்றுவிடுவாள். பொட்டு வைக்காமல் கொண்டை போட்டுக்கொண்டு சீலையை இழுத்து செருகிக்கொண்டு வயலிற்கு போனாலும் அவள் அப்படியே தான் இருந்தாள்.

குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலும் நல்லது கெட்டது தவிர நாங்கள் யாரும் யார் வீட்டிற்குள்ளும் செல்லும் வழக்கமில்லை. பேச்சும் சிரிப்பும் விசனமும் வாசலோடு முடிந்துவிடும். எனக்கு உடல் நலம் சரியில்லாத ஒரு நாள் மதியம் முல்லை வீட்டிற்குள் வந்து உட்கார்ந்தாள். அம்மா வயல் விஷயங்களை விசாரித்துவிட்டு படுத்துக்கொண்டார்.

“இன்னும் அண்ணனையே நெனச்சுக்கிட்டு இருக்கியா முல்ல,” என்று கேட்டேன்.

“ஆமா.. குடிகாரன் வம்படியா போவான்..அவனையே நினச்சுக்கிட்டு இருக்கோம் ..”

“அப்பறம் ஏன் இப்டி இருக்க..முடியை சடை பின்னலால்ல..இன்னிக்கெல்லாம் யாரு இப்படி இருக்கா,”

அவள் முகம் மாறியது. 

“இந்த மனுஷங்கல்லாம் பாம்பு..நெதம் நெதம் ஊசி குத்தறாப்ல..”

“யாரு..”

“எல்லாரும் தான்..”

“எல்லாருமா..”

சற்று நேர அமைதிக்குப்பிறகு,“நீ பாட்டுக்கு உன்னோட வேலையப் பாரு.அவங்களுக்கு வேணுன்னா அவங்க நேரத்துக்கு போவட்டும்,” என்றேன்.

“இதெல்லாம் சொல்லிக்குடுக்கறதே அவங்க வீட்டு பொம்பளைக தான்,”

“அப்டின்னாலும் அவங்க முகத்ததானே கலையில முதல்ல பாப்பாங்க,” என்ற என் கன்னத்தை சொடுக்கி சிரித்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு ஒருவித பெரியமனுசி தனம் வந்துவிட்டதை நினைத்து புன்னகைத்தேன். 

“ஒனக்கு இன்னுமா புரியலையா..ட்யூப் லைட்டு..அதுக்குதானே என்னைய கோத்துவிடறது..இவனுங்களுக்கும் ஒரு காரணம் இருந்தா போதும்,” என்று சிரித்தாள். பிறகு அவளே, “குனிஞ்சுக்கிட்டே கோலம் போட்டுட்டு போவாம …நாளைக்கு காலையில நிமிந்து நம்ம வீதியில நடக்கிற கோலாகல காட்சிய பாருபிள்ள..”என்று கேலியாக சிரித்துவிட்டு போனாள். இந்த கேலி பாவனை சிற்பத்திற்கு சிவப்பு பச்சை பெயிண்ட் பூசியது போல இருந்தது. 

அடுத்த நாள் காலை வீட்டுவாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். முல்லை வயலுக்கு கிளம்பி வாசலில் நின்றபடி பிள்ளைகளிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு அண்ணன் தன்னுடைய அதர பழைய டி.வி.எஸ்ஸின் ஆக்சிலேட்டரை திருகிக்கொண்டிருந்தார். அது டூர்…டூர் என்று பொதிதாங்காத மாடு போல முனகிக்கொண்டிருந்தது. பக்கத்தில் அந்த அண்ணி, “ கொஞ்ச நின்னு போலாம்..”என்று செயற்கையாய் சிரித்தாள். இந்தப்பக்கம் ஜோட்டுப்பயல் வயலுக்கு கிளம்பிக்கொண்டிருக்க அவன் வீட்டுக்காரம்மா வாசலில் இரண்டு புறமும் பார்த்துவிட்டு, “ கிழக்கமா போங்க,” என்றாள். நான் குனிந்து புன்னகைத்தப்படி வீட்டிற்குள் சென்றேன்.

அடுத்தநாளும் அதே நாடகம். கொஞ்சம் கூடுதலாக தலையை திருப்பினேன். கிழக்கு திசையில் போகச்சொல்லியவளின் மூன்றாம் வீட்டுப்பெண் அவள் வீட்டுக்காரரை மேற்காக போகச்சொன்னாள்.  இருவருமே அவரவர் வயல்களுக்கு எதிர்திசையில் சுற்றிக்கொண்டு போனார்கள். இப்படியே வரிசையாக…அதிகாலையின் என் கருநீல வானமும், வெள்ளியும் ,ஆரஞ்சு கீற்றும் காணாமல் போனது. முடக்கில் கோரமாக ஒரு பொம்மையின் முகம் ஆடியது. வரிசையாக அத்தனை வீடுகளிலும் கோர பொம்மையின் முகங்கள் எதிரேயுள்ள கோர பொம்மைக்கு முகம் திருப்பியிருந்தது. எங்கள்வீட்டு முனையில் இருந்த பொம்மை என்னை பார்த்து பெரிய மீசையுடன் சிவந்த விழிகளை விரித்தது.  சட்டென்று குனிந்துகொண்டேன். கீழே குட்டி கானகாம்பரச்செடி கொத்தாக மலர்ந்திருந்தது. 

முல்லை தன் வழக்கப்படி வயலுக்கு கிளம்பி  ஓரமாக  நடந்தாள்.

மார்கழி வந்துவிட்டது. முல்லை வீட்டில் அந்த அண்ணன் இறந்து இரண்டுஆண்டுகள் முடிந்திருந்தது. அதிகாலைகளில் வீட்டுவாசல்களில் அகல்கள் சுடர்ந்தன. பெரியகோலங்கள்.. அதன் கொண்டையில் பூக்கள் எல்லாம் அழகுதான். பூ செருகியிருக்கும் சாணத்தின் நாற்றம் தான் தாங்கமுடியவில்லை. சில சமயம் அதில் புழுக்கள். தினமும் அந்த அகல் வெளிச்சங்களின் ஓரத்தில் அவள் தயங்கித் தயங்கி வயலுக்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டிலும் பிள்ளைகள் அகல் ஏற்றி வைக்கிறார்கள்.

ஒரு நாள் அவள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களைப் பார்த்து மனம் அதிர்ந்தது. சின்ன பிள்ளைகளுக்கு பெரிய பொட்டாக வைத்துவிட்டிருந்தாள். பெரிய கோடாக குங்குமம். திடீரென்று வயலில் இருந்து ஒரு கல்லை எடுத்துவந்து வீட்டிற்கு முன் நாட்டி பட்டை பட்டையாக குங்குமும் மஞ்சளும் விளக்கும் வைத்தாள். கதவில் வட்டமாக மஞ்சளும் குங்குமும் என்று தீட்டி வைத்தாள். கவனித்தால் அவள் மட்டுமல்ல ஊரே தான் மாறி போயிருக்கிறது. 

நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இத்தனை சடங்குகள் இருக்கவில்லை. வயலிற்கு அலையும் ஆண்கள் பெண்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். அன்றும் கூட பேய் ஓட்டும் சடங்கு, சாமி பார்க்கும் சடங்கு என்று எல்லாம் உண்டு. நான் கல்லூரி படிக்கும் போது அலைபேசி வந்தது. அதற்கு முன்பே டீசலில் ஓடும் உழவு வண்டிகள் வந்துவிட்டன.

 களத்தில் நெல்லடிக்கும் ஆட்கள் ,ஆடு மாடு ஓட்டி செல்பவர்கள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியாய் வீட்டில் அமர்ந்ததும் தான் சாமிகள் பெருகின. ஊரை சுற்றி பல ஆண்டுகளாக அமர்ந்திருக்கும் சிறுதெய்வங்கள் திகைக்கும் அளவிற்கு இந்த பத்தாண்டுகளில் தெய்வங்கள் பெருகின. வீட்டிற்கு முன்பு அமர்ந்து எங்கிருந்து எந்த திசை பார்ப்பது என்று தெரியாத குழம்பலில்  விழித்துக்கொண்டிருக்கின்றன. 

 அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ‘டப்’ என்றது. அந்த சத்தத்தில் நினைவை மாற்றிக்கொண்டு தேநீரை கைகளில் எடுத்தேன். ஆறிப்போயிருந்தது. 

உடுக்கை சத்தம் ஓய்ந்து தெரு இயல்பாகியிருந்து. சற்று நேரத்தில் திடீரென்று ஆட்களின் சத்தங்கள். வெளியில் ஓடிப்பார்த்தால் முல்லை தெருவில் கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் மாமா அவளை நோக்கி கையை ஓங்கிக்கொண்டு வந்தார். இரண்டு ஆட்கள் அவரை பிடித்திருந்தார்கள்.

“என்ன செஞ்சிருக்கா..” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினார். பெண்கள் அவளை முறைத்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தெருவிலிருந்து எழுந்திருக்காமல் குத்துக்கால் போட்டு உட்கார்ந்தாள். ஐெயாக்கா அவளுக்கு பாதுகாப்பாக குறுக்கே நின்றாள்.

“ஆளுங்க தண்ணிக்கு என்ன பண்ணுவாங்க..கரண்டு வேற நின்னு போச்சு.. ஓக்காந்திருக்கற தோரணைய பாரு…”என்றாள் ஒருத்தி.

முல்லை யாரையும் பார்க்கவில்லை. 

“நாளைக்கு இருக்கு ஒனக்கு…இழுக்குற இழுப்புல பிடிச்சிருக்க எல்லா பேயும் ஓடிப்போயிரும்,” என்று சொல்லிவிட்டு காறி துப்பிக்கொண்டு அவளின் மாமா வீட்டிற்குள் சென்றார். 

முல்லை தெரு குழாயின் இணைப்பை வெட்டி விட்டிருந்தாள். சிறிய நீர் தேக்க தொட்டியிலிருந்த நீர் முழுவதும் சாக்கடையில் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது.

“ என்னோட வீட்டு வழியா போற தண்ணி மட்டும் இவங்க வீட்டு வழியா போலாமா,” என்று கத்திய முல்லை தரையிலிருந்து எழுந்து வாசல்படியில் அமர்ந்தாள். 

“ உங்க வீட்டுக்கும் ஒரு நாளு விதி வந்து நடக்குல்ல,”

அவளின் மாமா வேகமாக எதிர் வீட்டிலிருந்து வந்தார்.

“நாளைக்கு எவனாச்சும் பேயோட்ட வந்தான்னா..மம்பிட்டியால வெட்டி மடவாய்ல அவன மண்ணா வச்சு தண்ணியடைக்கிறேன் பாரு,” என்றாள். அவர் வந்த வேகத்தில் உள்ளே சென்றார்.

 அவள் பேச்சிற்காக சொல்லவில்லை என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். ஆளை வெட்டி மடைவாயில் வைத்து அடைத்த கதை எங்களூரில் உண்டு.  அவள் கன்னம் சிவந்து தசைகள் துடித்துக்கொண்டிருந்தது. 

அம்மா என்னிடம் மெதுவாக, “முல்லைக்கும் ஒனக்கும் ஒரே வயசு தானே... பொதுவா மனுசன்னா முப்பது வருஷக்கு ஒருக்கா மாறனுல்ல,”என்று புன்னகைத்தாள். மீண்டும் என் முகத்தை பார்த்து , “எத்தன பொண்ணுங்க இப்படி..இவ கொஞ்சம் நாசூக்கு..அதான் ரெண்டு வருஷமாயிருக்கு,”என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அந்த வழியே வந்த அத்தை, “பூ பூத்திருச்சு போலயே மருமவளே..இனிமே கவலையில்ல,”என்று என்னை பார்த்து கண்சிமிட்டினாள். வலது காலை மேல்படியிலும் மறுகாலை கீழ்ப்படியிலும் வைத்து கால்முட்டி மேல் கையை தொங்கவிட்டு உட்கார்ந்திருக்கும் முல்லையை பார்த்துக்கொண்டிருந்தேன்.





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...