சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம். அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன். இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம். பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்...