என்னுடைய உடன்போக்கு என்ற சிறுகதை மொழிபெயர்ப்பாளர் சஹாவால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள முதல்கதை. கதைக்கான சுட்டி https://vishnupuramusa.org/2025/11/28/elopement/
ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார். யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கையை கொஞ்சம் மாற்றினாலும் சட்டென்று அய்யாவை பிடித்து...