2022 மார்ச்மாத சொல்வனம் இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை. சிவகாமி நேசன் எனும் இனிமை பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல்,ஒலி,கவித்துவம்,மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான் அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன். நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவன...