2021 ஜூன் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை. எஞ்சும்சூடு தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்றுகுனிந்து களைகளை பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது. வெயில் ஏற ஏற தண்ணீரின் ஆவிஅடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும் போது ஒருவருஷம் போல ஊருக்குவந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசிதங்கம் இருந்த இடத்தை சைகையில் காட்டி எடுத்து, த...