2019 நவம்பர் 25 சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை
மழைத்திரை
கண்விழிக்கும் போதே சாந்திக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.பக்கத்துக்கட்டிலில் பையன்கள் உறங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.சரியான உறக்கமில்லாத கண்களில் எரிச்சல் காந்தியது.
சமையல்கட்டினுள் நுழையும் போது படபடப்பு சலிப்பாக மாறியது.அடுத்த நொடியில் எந்தக்கஷ்ட்டம் இருந்தாலும் இதை செஞ்சுதான் தீர்க்கனுமா என்று எரிச்சலானது. லைட்டரை கொப்பரைத்திண்ணையில் வீசினாள்.மூன்றுநாட்களாக நசநசத்து பெய்து அனைத்தையும் சில்லென்று மாற்றியிருந்தது மழை.
காலை உணவின் பொழுது சாந்தி,“அம்மா பாவக்கா குழம்புல கடைசியா கொஞ்சூண்டு வெல்லமும் எண்ணையும் சேப்பாங்க.நானும் சேக்கறேன் ருசி வரமாட்டிக்குது,”என்றாள். சக்திக்கு ஆத்திரமாக வந்தது.எதையோ தூக்கலாகப்போட்டு சாம்பர் தொண்டையில் திமிறிக்கொண்டு நின்றது.எதுவும் சொல்லிவிட்டு சிக்கலாகுமோ என்று மென்று விழுங்கினார்.
சின்னவன்தான், “ம்மா..குழம்பு ருசியாதான் இருக்கு.குடைய காணுமே? லேட்டானா முதலாளி பேச்சுக் கேக்கனும்,”என்று எழுந்தான்.
தன் பேச்சை மாற்றுவதற்காக தான் இந்த பொய்யான அவசரம் என்பதை உணர்ந்த சாந்தி முகம் சுருங்கி தன்னுள் ஆழ்ந்தாள்.அது தெரிந்தும் தெரியாததைப்போல மூவரும் சாந்தியை வெவ்வேறு உதவிகளுக்காக அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
“சாவு வந்திட்டாக்கூட தேவலை.பேசறத காதுகொடுத்து கேக்க ஆளிருக்கா இங்க,”
“என்னம்மா,”
“போடா.. நான் பேசினாலே உங்களுக்கெல்லாம் சலிப்பா இருக்கு,”
“மூணுநாளா நீ நீயாவே இல்ல…கோவிலுக்காச்சு போயிட்டு வரலாமா சாந்தி,”
“ஆமா..அதுமட்டுந்தான் கொறச்சல்..என்ன நடக்குதுன்னு புரியாம..”என்றபடி பாத்திரத்தை கழுவும் இடத்தில் தூக்கி எறிந்தாள்.
“என்னாப்புரியல..அதான் காரியம் முடிஞ்சாச்சுல்ல..கோயிலுக்கு போறதுக்கென்ன? மாமன் மச்சானுக்கு ஒருகணக்குமில்ல,”
“எங்கம்மாங்க...நெஞ்சிலேபோட்டு வளத்தவங்க..அது எப்டிங்க உங்கள கட்டினதும் முப்பதுநாள் கூட துக்கமில்லாம ஆயிருமா?”
“வழக்கத்த சொன்னேப்பா..விடு,”
அவர்கள் அவசரமாகக்கிளம்பி வெளியேறினார்கள்.வானம் மென்தூரலாய் கசியத்தொடங்கியது.
குனிந்து துடைப்பத்தை எடுத்தவள் அடிவயிற்றின் நழுக்கம் தெரிந்ததும் நாள்காட்டியைப் பார்த்தாள்.பத்துநாள் கூட ஆகல என்று சலித்தபடி பீரோவின் மேலிருந்த நாப்கின் பெட்டியை எடுத்தாள்.
“நின்னுதொலையறதுக்கு இத்தன கொடுமையா ..ஒரு ஒழுங்கில்லாம,” என்று தனக்குத்தானே பேசியபடி குளியலறைக்குள் சென்றாள்.
தட்டிலிட்ட இரண்டுகரண்டிசோற்றை முழுமையாக உண்ணாமல் மீதம் வைத்துவிட்டு, “சாப்பிட்டியான்னு கேக்கக் கூட ஆளில்லை,”என்றபடி எழுந்து பாத்திரங்களைக் கழுவினாள்.
வானம் மெல்ல இருட்டி புழுக்கமாக இருந்தது.வியர்வையைத் துடைத்தபடி நாற்காலியில் குனிந்து அமர்ந்தாள்.வயிற்றை இழுத்துப்பிடித்த வலியின் பிடிமானம் தளர்வது வரை அங்கேயே அமர்ந்திருந்தாள்.பின் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.
அம்மா ,மனைவி என்ற நேர்க்காட்டிலிருந்து இருபதுநாட்களாக வீட்டில் யாருமற்ற பகல்வேளைகளில் சாந்தி சாவித்ரியம்மாவின் கடைக்குட்டியாக திசை மாறுகிறாள்.
இந்தப் பின்காலையில் முற்றத்து சாய்ப்பில் சேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு அமர்ந்தாள்.ஓடுகளின் மடிப்புகளில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்து.நான்குவிரல்அளவு இடைவெளியில் நீர்த்தாரைகள் ஒழுகுவது அசையும் திரைசீலை என நழுங்கிக்கொண்டிருந்தது.திரைக்குப்பின் பாதிவெளிச்சத்தில் மழை.சாந்திக்கு எங்கோ விழுந்து கொண்டிப்பதைப்போலத் தலைகிறுகிறுத்தது. தரையில் கைகளை அழுத்தி ஊன்றிக்கொண்டாள்.
அடைமழைக்காலங்களில் சாந்தி அம்மாவுடன் ஒண்டிக்கொண்டே அம்மாவின் ஒருபாகம் போல இருப்பாள்.ஒரு மழைநாளில் இடிமின்னலைக்கண்டு உடலை குறுக்கிக் கொண்ட சாந்தியை அணைத்தபடி அம்மா, “வானத்துல என்ன நடக்குது தெரியுமா?”என்றாள்.
“என்ன?”
“அப்பா..பையன் விளையாட்டு,”
“விளையாடறாங்களா!”
“மழைய வெயிலும்காத்தும் மறிச்சி நிக்குமாம்.. காத்துக்கு ஒரு அசப்பு குடுத்தா மழ வந்துருமாம்,”
“யாரு அசைக்கறது?”
“இந்திரமகராஜா..”
“அவ்வளவு பெரிய கையிருக்குமா?!”
“அது அவங்க அப்பாவோட கையும் சேந்தக்கை ..”
கண்களை விரித்துப் பார்க்கும் சாந்தியின் கன்னங்களைத்தட்டி , “மாயக்கிளிக்கிட்ட வரம் வாங்கி அப்பாவையே கையா மாத்தி தன்னோட வச்சிக்கிட்டார்,”
“அது எப்படிம்மா..”
“அப்பல்லாம் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்..அதனால அப்படியாக முடியுமாம்,”என்றாள்.
அதிரசெய்யும் இடியோசை எழுந்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.மழை சடசடவென வழுத்தது.அம்மாவின் கை சாந்தியின் முதுகை பசுவின் நாவென தடவிக்கொண்டிருந்தது.மிகஅருகில் காதுக்குள் அம்மாவின் குரல் கேட்டது.
“அர்ஜீனா..அர்ஜீனா ன்னு சொல்லு குட்டி,”
“அர்ஜீனா…னார்ஜீனா…னார்ஜீனா..”
இடிமுழக்கம் நின்றதும், “ஏம்மா இந்திரமகராஜன சொல்லாம அர்ஜீனன கூப்பிட சொல்ற..”
“அப்பாவும் மகனும் சத்தம்போடறப்ப பேரப்பிள்ள வந்தாதான் எடத்தவிட்டு நகருவாங்க ..”என்று சிரித்தாள்.சாந்தி அம்மாவின் மார்பில் முகத்தை ஒட்டிக்கொண்டாள்.
ஜலதாரியின் தகரசாய்ப்பில் தூரல்களின் தளம் கேட்டது.தட்..தடட்..தட்ட் என்று ஒரு மொழியிலாப்பாடல்.சாந்தியின் மத்திமவயது மனதைப்போல.இப்பொழுதெல்லாம் சாந்தி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தாள். இங்கிருந்து கொண்டு அம்மாவைத் தேடுவது.
சில நாட்களில் நள்ளிரவிலோ,சிலநாட்களில் அதிகாலையிலோ கண்டுபிடித்துவிடுவாள்.இப்போதெல்லாம்அம்மா தோற்பதே இல்லை. அம்மா மாறிவிட்டாள்.ஆனால் சிறுபிள்ளையில் சாந்தி அழத்தொடங்குவதற்குள் குதிரின் பின்னாலிருந்தோ ,அடுக்குப்பானைகளின் பக்கத்திலிருந்தோ வந்துவிடுவாள்.
“தாங்கமுடியலடீ குட்டீ..ரங்கன்தான் வேடிக்க பாக்கறான்னா..அந்தக்காட்டுமிராண்டியும் கைக்கொடுக்க மாட்டிக்கிறாண்டி..”என்று வலிக்கொல்லி மாத்திரைகளை போட்டுக்கொண்டும் வலி நிற்காமல் கோபப்படுவாள்.அம்மா அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறுகையில் சாந்திக்கும் அங்கே கூச்சம் போல் ஒரு வேதனை எழுந்து உடல்முழுவதும் பரவியது.
காலம் தள்ளி ஆயுதம் போட்டிழுத்த பிள்ளை அவள்.அந்த ரணம்தான் காரணமா என்று சாந்தி டாக்டரிடம் கேட்டபோது அவர், “ காரணம் தேடாதீங்கம்மா. வந்திருச்சு அவ்வளவுதான். எண்பதுவயசுக்கு ட்ரீட்மெண்ட் தாங்க முடியுமா ?வலிய குறைக்கமுடியுமாங்கறததான் பாக்கனும்,” என்றார்.
மலைக்கோட்டையின் அடிவாரத்தில் நாற்பதுநாட்கள் அம்மாவுடன் மாறி மாறி இருந்தார்கள். அம்மா உறங்கும் நேரங்களில் சாந்தி விஸ்வநாதப்பிள்ளை சிலைக்கருகே தான் அமர்ந்திருப்பாள். ‘இந்த மனசுக்கு அப்பவே தோணியிருக்கே இத்தனை வலி இல்லாதப்பட்டவங்களுக்கு வந்தா என்னப்பண்ணுவாங்கன்னு’ என்று நினைத்தபடி அந்த சிலையைப் பார்த்திருப்பாள்.இரவுநேரங்களில் அந்த மார்பளவு சிலையைத்தொட்டு பார்ப்பாள்.சிலை செய்தவர்களுக்கு கைகளோடு செய்யவேண்டும் என்று தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக்கொள்வாள்.
அம்மாவின் கடைசிநாட்கள் சாந்தியின் நினைவில் இருந்து கொக்கி மாட்டியது.எடுக்க வேண்டிய பொருளில் ஆழப்பதிந்து இழுக்கும் கொக்கி.அதை மறக்கத்தான் இந்தகண்ணாமூச்சி விளையாட்டைக் கண்டுபிடித்தாள்.சமையலறையில் சுரைக்காய் தீய்வது தெரியாமல் நின்றிருந்த அன்று இதை கண்டுகொண்டாள்.
எட்டுவயதிருக்கலாம் அம்மாவும் அவளும் கண்ணாமூச்சி விளையாடிய அன்று இதேமாதிரி சுரைக்காய் அடிப்பிடித்துக் கொண்டது. “ச்சோ..இந்த கொடுக்குக்கிட்ட விளையாண்டு சுரக்காய கருப்பாக்கிட்டனே,”என்று சொல்லிக்கொண்டே பதறாமல் மேலாக எடுத்து வேறுபாத்திரத்தில் வைத்தாள்.
உண்ணும் போது தீய்ந்த வாசனையோடு கூடிய சுரைக்காயின் மணம் ஆழத்தில் கிடந்த நினைவுகளை மேலே கொண்டு வந்தது. அந்த நேரத்தில்அந்தக்கொக்கி தன்பிடியை தளர்த்தியிருப்பதன் விடுதலையை உணர்ந்த சாந்தி காலத்தில் பின்னோக்கி விழுந்தாள்.
தினமும் தன் கண்ணாமூச்சி விளையாட்டிற்காக வெவ்வேறு ஔிந்துகொள்ளும் இடங்களை மாற்றினாள்.கொப்பரைத்திண்ணையில் ஒருநாள் , தாழ்வாரத்தில் ஒருநாள், ஆற்றில் ஒருநாள், வயல்பாதையில் என்று ஊரின் இடங்களைத் தேர்ந்தெடுத்தாள்.
முதலில் கண்ணாமூச்சி விளையாட்டாகத் துவங்கியது.பின்பு பேச்சாக சிரிப்பாக மாறியது.சாந்தி தன்கதவுகள் அனைத்தையும் இறுக சாத்திக்கொண்டாள்.கதவுகளைத் திறக்க வேண்டிய நேரம் மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள்.திறப்பதற்குள் பையன்களும் கணவரும் சலித்துக்கொண்டு வாயிலில் நின்று குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ ஒரு உறுதியான அழைப்பில் திடுக்கென்று விழித்து அவர்களுக்காக எழுந்தாள்.துயில் நிலைகொண்டிருந்த கண்களும், உயிரில்லாத உரையாடல்களும் அவளை மற்றவரிடமிருந்து விலக்கின.
சரீரம் போலவே உறுதியான பருத்தக்குரல் அம்மாவுக்கு.அவளின் தடுமாறாதநடை போன்ற குரல்.ஒரு சொல்லில் அண்ணன்களும் அக்காவும் நின்றுவிடுவார்கள்.அப்பாவுக்கு பார்வை போதும்.ஆனால் சாந்தியிடம் கெஞ்சிக்கொண்டிருப்பாள்.நினைத்துப்பார்க்கையில் பேரப்பிள்ளைகளிடம் கூட கண்டிப்பானவள்தான் அம்மா.
அம்மா தான் அவளுக்கு இரண்டு குழந்தைப்பேறையும் பார்த்தாள்.அந்த இரண்டுநாட்களில் தான் அம்மா மிரட்டி அறிந்தாள்.குழந்தையை கையில் எடுத்ததும் குரல்மாறிவிடும்.“பய பொறந்திருக்கான்டீ குட்டி..எழுந்து பாருடீ,”என்று சொல்லி சிரித்தக்குரல் இன்னும் காதின் நினைவில் இருக்கிறது.
ஊரில் கார்த்திகைமாதம் பயிர்பொங்கல் நாட்களில் நல்லத்தங்காள் நாடகம் போட்டால் பார்க்க விடமாட்டாள்.பிள்ளைகளுக்கு அந்தக்கதை மனசில விழுந்துட்டா வாழ்க்கை கசந்து போவும் என்று நளதமயந்தி கதையை சொல்வாள்.அண்ணன்களும் அக்காவும் அப்பாவும் கூரைசாய்ப்பில் அமர்ந்திருப்பார்கள்.சாந்தி அம்மாமேல் சாய்ந்து கொண்டு கதைகேட்பாள்.
அந்தக்கதையை அம்மா குரலை மாற்றி மாற்றி சொல்வாள்.அது மாறும் நேரங்களில் அக்காட்ட பேசற,அண்ணங்கிட்ட பேசுற,என்ட்ட பேசற என்று சாந்தி இடையில் சொல்வாள்.அவள் சொல்லும் போது அவர்களுடன் சேர்ந்து அம்மாவும் சிரிப்பாள்.
வெயிலின் உக்கிரம் எஞ்சியிருக்கும் கோடை இரவில், மெல்ல வந்துபோகும் காற்றில் ,அம்மாவின் அருகாமையில் அவள் மனம் பொங்கி வழிய காரணமில்லாமல் அழுதிருக்கிறாள்.அவளுக்கு நளதமயந்தி கதையை சொல்லும் போது அருள் கூடும் என்று நைனா சொல்வார்.கண்களில் அந்தக்கதை கதையிருக்கும்.கண்கள் விரிய நளதமயந்தியின் காதலை சொல்வாள்.கண்களை சுருக்கி புருவம் நெறிய வீழ்ச்சியை அமைதியான குரலில் முகம் கூர்மையாக சொல்வாள்.நளன் மீண்டெழ எழ அம்மாவின் முகமும் மீண்டெழும்.
அக்காவுக்கு கல்யாணமானப்பின் குடும்பமே பெருமாள்மலை ஏறினார்கள். அம்மா மூச்சுவாங்க நல்லத்தங்காள் கதையை சொன்னாள். “புறப்பட்ட எடத்துக்கும், சேந்த எடத்துக்கும் அலையறத்துக்கு இப்படி மூச்சப்பிடிக்கனும்.விட்றப்பிடாது குட்டிகளா..பொம்பளப்பிள்ளைக்குதான் அத்தன தெம்புண்டு,” என்று பேசியபடி ஆயிரத்து ஐநூறு சொச்சம் படிகளை ஏறுவது தெரியாமல் ஏற்றிவிட்டாள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் மலை ஏறும் போதெல்லாம் இதை சாந்தி சக்தியிடம் சொல்வாள்.அம்மாவுக்கு ஏனோ சிவன்தான் மானசீகன்.
ஆறுவயதில் பெருமாள்மலையின் சோபனமண்டபத்தில் நின்ற பத்துப்பெருமாளையும் அம்மாதான் அறிமுகப்படுத்தி வைத்தாள்.மடியில் அரக்கனை வைத்து குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டிருந்த சிங்கத்தைக்கண்டு அம்மா சேலைத்தலைப்பில் ஔிந்த அவளை முன்னால் இழுத்துவிட்டு, “ கண்ணைத் திறந்து பாருடி குட்டி…பெருமாள்டீ..கஷ்டத்துக்கு கூப்பிடா நாலுகால் பாய்ச்சல்ல வருவாரு,” என்றாள்.
அக்கா அப்படியே அம்மாவைப் போன்ற உடலும் நடத்தையும் அதிகாரமும் வாய்க்கப்பட்டவள்.அதனாலோ என்னவோ குடிகாரக் கணவனால்,ஓடிப்போன பிள்ளையால் ,வறுமையால் அவளின் நிமிர்வை மாற்றமுடியவில்லை.சாந்திக்கு துணைத் தேடுகையில் அம்மா தீவிரமாக இருந்தாள்.
அவள் பேசும்போதே தாக்கல் சொல்ல வருபவர்கள் மாப்பிள்ளையின் லட்சணத்தை பூசிமெழுகாமல் பின்வாங்கினார்கள்.கல்யாணத்திற்கு முன் சக்தியிடம் பேசும்போது , “இவ அக்காமாதிரி தனியா நிமிந்து நிக்கற மரமில்ல தம்பி..அதுக்காவ கொறச்சி நெனச்சிறாதீங்க,”என்றாள்.
காலம் அம்மாவை தனியாளாக்கியது.சாந்திக்காகத்தான் இறங்கி வந்தாள்.ஒருபோதும் அண்ணன்களும் அக்காவும் இந்தஅம்மாவை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பது அவளை குதூகளிக்க வைக்கும்.
சாந்தி எழுந்து முற்றத்து மழையில் நின்றாள்.உடல் விதிர்த்து அமைந்தது.கைகளைக் கட்டிக்கொண்டாள்.மழையில நனையாத குட்டீ ..இழுப்பு வந்துரும் என்று அம்மா மழைக்கு நடுவில் நின்று கொண்டு வாசலில் இருந்து கத்தினாள்.
சாந்தி மழையைப்பார்த்து கொண்டிருந்தாள்.துளிகளாய் விழுந்து முற்றத்தில் நிறைந்து பொந்து வழியாக வெளியே சென்றது.மழடா குட்டி என்ற அம்மாவைக் கடந்து தெருவில் இறங்கினாள்.
நீர் வெளியேறி சாக்கடையில் நிறைந்து கொண்டிருந்தது.சாக்கடையை ஒட்டி நடந்தாள்.மழையோடு நடந்து சென்று கொண்டேயிருந்தாள்.ஏதோ ஒன்று பிடித்து இழுத்து செல்வதைப்போல வேகமாக நடந்தாள்.மழை வழுத்துக் கண்களை மறைத்தது.
நடுங்கும் உடலுடன் நடந்தாள்.வேலிக்காத்தான்வீதி கடந்து ஊர்எல்லைக்கு வந்திருந்தாள்.மனதின் பழக்கதோசத்தில் கால்கள் தயங்கி நடந்தன.இடியோசை எழுந்ததும் சாந்தி திடுக்கிட்டு உடலை உலுக்கிக் கொண்டாள்.ஏன் இங்கு நிற்கிறோம் என்று மனம் துணுக்குற்ற அடுத்தநொடியில் தன் பின்புறத்தை திரும்பிப்பார்த்தாள்.மழை நனைந்து வழிந்து குருதித்தடங்கள் வெளிறியிருந்தன.தன் முந்தானையை பின்புறம் படறவிட்டு நுனியை பிடித்தபடி திரும்பி நடந்தவள் நின்றாள்.வெயிலுக்கும் மழைக்கும் காற்றுக்கும் கூரை தேடாத அன்னை.
நெற்றியிலிருந்து நாசி கன்னம் புன்னகைக்கும்இதழ்களில் வழிந்து முகவாயிலிருந்து மார்பு நனைத்து இறங்கிய நீர் வெக்காளியின் பாதங்களில் வழிந்து சொட்டியது.சுண்டப்பட்டவள் என சாந்தி கருங்கல் மடியில் தலையைப் புதைத்தாள்.அவளின் உடல் அதிர்ந்து கசிந்தது.மழைநின்று வானம் வெளிறிக்கொண்டிருந்தது.காற்று தொட எழுந்தவள் வீடு நோக்கி நடந்தாள்.
Comments
Post a Comment