Skip to main content

ஈசனின் பாதங்களில்

 


இன்று தீபாவளி. நேற்றிலிருந்து சத்தங்கள் அதிர்ந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் தள்ளி சென்றால் தலை தப்பிக்கும் என்று நினைத்தேன். தம்பியின் நண்பனின் குடும்பம் 'பெரியண்ணசாமிய பாத்துட்டு அப்பிடியே அய்யாத்து தண்ணியப் பாத்துட்டு வரலாம்' என்று அழைத்து சென்றார்கள்.

சற்று தள்ளியிருந்து கண்டாலும் அருகிருந்து உணர்ந்தாலும் கொல்லிமலை தரும் ஆசுவாசம் மனதை அமிழ்த்தி வைக்கக்கூடியது. 'வேறெதையும் நினைக்காது என்னுடன் இரு' என்று அது முதலில் தன் குளிர் காற்றால் தொடும். மேற்கே ஊர்எல்லையை கடந்த உடன் சில்லென்று காற்று சட்டென்று தழுவும். அப்போதே நம் அன்றாட மனதை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. முன்பெல்லாம் இங்கு உயிர்வளியின் அளவு உச்சத்தில் இருக்கிறது அதனால் மூளை நல்ல உயிர்வளியை பெறுவதால் இப்படி இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் இந்த சில ஆண்டுகளில் உயிர்வளியின் அளவு அதிகரிக்கும் என்றால் சுறுசுறுப்பாகாமல் மனம் எப்படி அமிழ்கிறது என்று கேள்வி எழுகிறது. கொல்லிமலையின் அடியில் அய்யாற்றின் கர்ஜனையில், அதன் வேகத்தில் மனம் அமிழ்ந்து விடுகிறது. மௌனமாக அடுக்கடுக்காக எழுந்து நிற்கும் மாமலை. கடந்த இருமாதங்களின் ஓயாத மழையால் எப்பொழுதும் பனிமூட்டமும்  சில்லென்ற காற்றுமாக இருக்கிறது. மழை வரும் முன் மட்டும் புழுக்கம். மலைஅடுக்குகள் எங்கும் அங்கங்கு நீராவி இணைந்து மேகம் போலாகி தவழ்கிறது. அந்த நீராவி விரிந்து பரவி மலைசிச்சிகரங்களை மூடி விட முயற்சித்து நழுவுகிறது.



சித்தர்கள் உலவும் மலை.  இந்த மலை அடுக்கங்களே அவர்களை இங்கு வரச்செய்கிறது. 

கர்ஜிக்கும் அய்யாறும், மௌனமாய் எழுந்து நிற்கும் மலைஅடுக்கங்களும் இயற்கையின் ஆகிருதிகள். அவற்றின் முன் எண்ண சுழற்சி அப்படியே சட்டென்று மறைந்துவிடும். 

மற்றவர்களுக்கும் அப்படிதான் என்று சொல்லமுடியவில்லை. எங்கேயும் போல இங்கேயும் பசங்களின் அட்டூழியங்கள் எரிச்சலடைய செய்கிறது. 

[பெரியண்ணசாமிக்கான அந்திபூசைக்காக அய்யாற்றிலிருந்து நீரெடுக்கும் பூசாரி]

பெரியண்ணசாமி கொல்லிமலை பாதத்தின் காவல் தெய்வம். அங்கு அமர்ந்திருக்கிறோம் என்ற துளிஉணர்வும் இல்லாது வருவோர் போவோரை எரிச்சலையடை செய்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். எங்கும் உள்ள கும்பல் அது. அந்த கும்பல் எந்த இடத்தையும் இயல்பாக இருக்கவிடாது. அதை கடந்து சென்றால்தான் நமக்கானதை காணமுடிகிறது.

அந்த கும்பல் பைக்குகளில் அமர்ந்திருந்த ஆலமரத்தடியில் நானும் அய்யாவும் நிறைய நாட்கள் அமர்ந்திருக்கிறோம். அங்கிருந்து மாசிக்குன்றை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அய்யா சொல்வார். இன்று அங்கு சென்று நிற்க முடியவில்லை.

இந்தசந்தடிகளுக்கு கடந்து மலைப்பாதைக்குள் நடந்து அய்யாற்று கரையை அடைவதற்கு முன்பே கர்ஜனை கேட்கத்தொடங்கியது. ஒரு மாதமாகவே வெள்ளம். சுழித்து ஓடுகிறது. மனம் அடங்கி அதன் கரையில் அமர்கிறது. இதற்காகத்தான் இங்கு வரத்தோன்றுகிறது. 

மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அய்யாவிற்கு பிறகு ஈசனே மனதறிந்து அனுப்புவதைப் போல ஏதோ ஒரு துணை வந்து சேரும். ஆண்டுக்கு இருமுறையாவது அவன் பாதத்தில் அமர்ந்து கொள்கிறேன். எஞ்சும் என்னில்  அவனே ஔிரட்டும்.





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...