Skip to main content

அகமும் புறமும் : 6

                அன்னையும் அத்தனும்


நன்னலந் தொலைய நலமிகச் சாய்அய்

இன்னுயிர் கழியினும் உரையலவர் நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே


குறுந்தொகை : 93

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்

திணை:மருதம்



பரத்தையை பிரிந்து வந்த தலைவனுக்குத்  தூதாக வந்து “நீ சினவற்க. அவர் அன்புடையவர்” என்ற தோழிக்கு , “அவர் நம்மால் உபசரித்து வழிபடுவதற்கு உரியவரே அன்றி அளவளாவி மகிழ்வதற்குரியவர் அல்லர்” என்று தலைவி கூறியது.


ஊடலிற்கு காரணப் பொருள் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இப்பாடலில் பரத்தை இல்லம் சென்ற தலைவன் காரணப்பொருள். காலம் தோறும் காரணப்பொருள்கள் மாறி மாறி ஊடல் என்ற உணர்வு நிலை அப்படியே நின்றிருக்கிறது.

அத்தை கிருஷ்ணவேணி எனக்கு தூரத்து உறவு. ஒரு கோடைவிடுமுறையில்  ஊர்த்திருவிழா நடந்தது. அப்போது அத்தை, மாமா, யது மூவரும் பதினைந்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். அத்தை கிண்டலும் கேலியுமாக மாமாவை மற்றவர்கள் முன்பு சங்கடப்படுத்தி வைப்பார். 

அவர்களின் மகன் யதுவிற்கும் எனக்கும் ஒரே வயது. ஒரு நாள் அப்பாயி அத்தியிடம் ‘புருசன மரியாதையா பேசமாட்ட..அவனோட ஆம்பளப்பய கூட்டாளி மாறி பேசற’ என்று  கடிந்து கொண்டார்.

‘விடுங்க அத்த...அங்க நம்ம வீட்ல இப்படி பேச முடியாது. தனியா பேசும்போது எப்பவும் இப்படித்தான் பேசும். நான் சிரிக்கறதே அதால தான்’ என்றார். அவரின் பொறுப்புகள் அப்படி. அவர்களுடைய கூட்டுக்குடும்பம் ஆறுதம்பிகளை கொண்ட பெரியக்குடும்பம். மாமாதான் மூத்தவர். 

நம் குடும்பங்களில் அம்மா தலைமுறை பெண்கள் இத்தனை வெளிப்படையாக இருப்பது கொஞ்சம் அரிதான விஷயம். நான் இன்றுவரை அத்தையை மட்டுமே இத்தனை வெளிப்படையான பேச்சுடன் பார்த்திருக்கிறேன். 

மீண்டும் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அத்தையின் தந்தை இறப்பிற்கு அப்பாயி சென்றார். ஒரு மாதம் கழித்து  மூவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். ‘பத்துநாள் நம்மளோட இருக்கட்டும்’ என்று மட்டும் பொதுவாக சொல்லிவிட்டு மருமகனை தன் பக்கத்திலேயே வைத்து பேசிக்கொண்டிருந்தார்.

அடுத்து வந்த இரண்டு நாட்களில் அத்தை மாமாவிடம் சாப்பாட்டிற்காக மட்டும்தான் பேசினாள். இது போல வீட்டில் அவ்வப்போது நடக்கும். வெளியூருக்கு செல்லும் போது உறவில்  யாரையாவது நம் கிழவி அழைத்து வந்தால் ஏதோ சிக்கல் என்று புரிந்துவிடும். 

இந்த சமயங்களில் நம் வீட்டில் உள்ள சின்னசின்ன பிணக்குகள் மாறி வீட்டின் நிறமே மாறிவிடும். முக்கியமாக என்னை ஒரு மனுசியாக மதித்து அய்யா ஒரு பொறுப்பை கொடுப்பார். மளிகைக்கடை நோட்டை என்னிடம் தந்துவிடுவார். அம்மாவும் ,சித்தியும் என்ன கேட்கிறார்களோ அந்த பொருட்களை உடனே வாங்கிவந்து தரவேண்டும். சைக்கிளில் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு.

உடன் நடந்து வந்தவர் சாலை திருப்பத்தில் காணாமல் போனதைப்போல அத்தை மாமாவின்  காதல் எங்கோ மறைந்து போயிருந்தது. அவர்களை சமாதானம் செய்வதற்காகத்தான் அப்பாயி ஊரிலிருந்து அழைத்து வந்திருக்கிறார் என்று புரிந்தது.

சித்தப்பாவும் மாமாவும் முற்றத்தில் அமர்ந்து மணிக்கணக்காக பேசினார்கள். அப்போது முக்கியமான பேசுபொருளாக இருந்த கணினித்துறை படிப்பில் யதுவை சேர்ப்பது பற்றி ஓயாமல் பேச்சு நடந்தது. அப்படியே நேரு நினைவுக்கல்லூரி பற்றி பேச்சு மாறியது.

தமிழகத்தில் முதன் முதலாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரியில் தான் கணினிகல்வி தொடங்கப்பட்டது என்றும் அதை எழுத்தாளர் சுஜாதா தொடங்கி வைத்தார் என்றும் அய்யா குறுக்கே புகுந்து சொன்னார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் சுஜாதா வந்தாரா? எந்த வருஷம் வந்தார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். உயர்நிலை பள்ளி வயதில் நானும் அண்ணனும்  கல்கியையும் சுஜாதாவையும் போட்டிப்போட்டு வாசித்துக் கொண்டிருந்தோம்.

அன்று இரவு அத்தை வாசல் படிகளில் அமர்ந்திருந்தாள். அம்மா அத்தையின் அருகில் சென்று அமர்ந்தாள். நிலைக்காலில் தலைவைத்து படுத்திருந்த எனக்கு அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது. காற்றுக்காக வீட்டுக்கதவை வெயில் காலங்களில் அடைப்பதில்லை. அம்மா பேசத்தொடங்கினாள்.


“அண்ணன்கிட்ட முன்ன போல சுமூகமா இருக்லால்ல..அவரும் பாவமில்லண்ணி,” 

அவர்கள் இருவரும் தங்களுக்குள் இன்றுவரை ரகசியங்கள் அற்றவர்கள்.

அத்தைக்கு ஒரு அக்கா மட்டும் தான். அவரின் அப்பாவிற்கு தலையில் உள்ள நரம்பில் பிரச்சனை என்பதால் அறுவைசிகிச்சை செய்து அவர் கோமாவில் படுத்த படுக்கையாகி விட்டார். அதற்காக இரு பெண்களும் மாற்றி மாற்றி அவருடன் இருந்தார்கள். இதனால் மாமாவீட்டில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது.

அத்தை நேரடியாக ‘பெத்தவங்களுக்கு நாங்க ரெண்டு பொட்டப்பிள்ளைக தான். அவரு ஒரு வருஷம் கட்டிலோட கிடந்தாலும் அங்கதான் இருப்பேன். இத்தன வருசம் இங்க தானே ஆக்கிக்கொட்டி, வீட்டை கழுவி துடைச்சேன்.  அண்ணனுக்கு கொஞ்ச நாள் சோறு ஆக்கி போட மாட்டாங்களா உங்க பொண்டாடடிங்க. நான் எத்தன வருஷம் உங்களுக்கு சாப்பாடு  போட்டிருக்கேன். கல்யாணம் ஆன மறுநாள்ல்ல இருந்து  சின்னவன குளிப்பாட்டி இடுப்புலேயே துக்கிக்கிட்டு திரிஞ்சிருக்கேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டார்.

குடும்பம் சிறு சிறு வேறுபாடுகளுக்காக சிதறும் என்று மாமா நினைக்கவில்லை. அத்தையும் மாமா ஒரு வார்த்தை கூட தனக்கு சாதகமாக பேசவில்லை என்ற மனஉடைவில் இருந்தார்.

அத்தையுடன் சேர்ந்து மாமாவின் நம்பிக்கையும் ஒரு சேர உடைந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. மாமா தம்பிகளை தன்னிலிருந்து பிரித்தறியாத இயல்பு கொண்டவர். இன்று இதை நாம் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் இப்படியான நம்பிக்கையும், வாழ்க்கைமுறையும் கொஞ்ச காலம் முன்பு வரை இருந்தது. பொருளாதார ரீதியான நம்பிக்கைக்காவும், மனிதர்கள் மீதான நம்பிக்கைக்காகவும் சேர்ந்து இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் நாம்  அதன் திருப்பத்தில் இருக்கிறோம் என்று மாமாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.


தந்தை இறந்து அனைத்தும் முடிந்தும் கூட அத்தை பற்றில்லாமல் இருந்தார். அவரின் அக்கா எத்தனையோ சமாதானப்படுத்தியும் அத்தையின் மனது சமாதானம் ஆகவில்லை.

இவ்வளவையும் சொல்லிமுடித்த அத்தை  அம்மாவிடம்,‘கடனேன்னு திரும்பி வந்தேன்..உள்ளுக்குள்ள பசபசன்னு இருந்த ஒன்னு இல்லாம ஆயிருச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல கூட அவரு டி.வி. எஸ் வண்டிய வாசலில் நிறுத்தறப்பவே மனசு குதிக்கும்.. அத்தன கும்பலான குடும்பத்துல அவர பாக்கறதுக்கு ,பேசறதுக்கு, சிரிக்கறதுக்கு ஆல்லாடிப் போகனும் பாத்துக்க. பட்டாம் பூச்சிக்கணக்கா அவர சுத்தி வருவேன். அவருதானே எல்லாத்தையும் முறிச்சு போட்டுட்டார். வேணியோட வெங்கிட்டு அப்பவே காணாம போயிட்டாரு’ என்று சொல்லிவிட்டு அழுதாள்.

மாமாவிற்குமே அப்படித்தானே என்று தோன்றுகிறது. குடும்பத்தின் மீது இருந்த நம்பிக்கை உடைந்திருக்கும். அன்பு உடையும் தருணம். 

‘தம்பிகள கடிஞ்சு ஒரு வார்த்தை சொல்லல…பெத்தவங்க, உத்தவங்க, உடன்பிறந்தானுங்க எல்லாம் அவுங்களுக்கு மட்டுந்தான்னா..என்ன கண்றாவிக்கு மறுபடியும் நான் போய் ஈசிட்டு நிக்கனும்’ என்று கோபமான அத்தையின் குரலிற்கு முன்னால் அம்மா எதுவும் பேசவில்லை. மூச்சை இழுத்து விட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

சற்று நேரம் சென்று அத்தை, “நல்ல மனுசன்ங்கறதால அவர மதிப்பு குறச்சு பாக்க முடியல,” என்றாள்.

அய்யா அடுத்தநாள் அத்தையை மட்டும் துணிகள் துவைப்பதற்காக ஆற்றுக்கு  சைக்கிளில் அழைத்து சென்றார். சித்தப்பா ஒரு நாள் வயலிற்கு அழைத்து சென்றார். சித்தி சமையலறையில் அத்தையுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் முற்றம் வரை கேட்கும். கிழவி மெதுவா சரிங்கடீ என்று பேச்சுக்கு சொன்னாலும் அதுவும் புன்னகைத்துக் கொள்ளும். மாமா சாயுங்காலமானால் வீட்டின் முன்னால் பெரிய பந்தலில் உள்ள முல்லைப்பூக்களை மடித்து கட்டிய கைலியில் பறித்து வந்து முற்றத்தில் கொட்டி வைப்பார். தினமும் மாமாவுடன் சித்தியும், அம்மாவும் பூக்கட்டும்போதும்,பாத்திரங்களை முற்றத்தில் பரப்பி வைத்து கழுவும் போதும் பேசுவார்கள். மாமா அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார். கழுவிய பாத்திரங்களை கட்டிலில் எடுத்து வைப்பார்.

பத்துநாள் சென்று பக்கத்து ஊர் கொட்டகையில் அவ்வை சண்முகி படத்திற்கு நானும் அய்யாவும்  வரிசையில் நின்று பதிமூன்று கட்டணசீட்டுகள்  எடுத்தோம். எங்களூரில் பழைய படங்கள் தான் ஓடும். அப்போது அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தது.

அத்தை திரும்பி ஊருக்கு செல்லும் போது அய்யாவிடம் மாவை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னாள். அய்யா தலைகுனிந்த படி சிரித்தார். அது மட்டும் என் நினைவில் இருக்கிறது. அந்த பத்துநாட்களில் வீட்டில் கூடிக்கூடி பேசி என்னவோ செய்திருந்தார்கள்.

இந்தப்பாடல் எனக்கு கல்லூரியில் பாடப்பகுதியாக இருந்தது. அம்மையும் அத்தனும் என்றால் உயர்வான உறவுதானே என்ற நினைப்பு நமக்கு இருக்கும். காதலில் அப்படி இல்லை என்று அத்தை ‘மனதின் வேறு ஒரு கோணத்தை’ சிறுவயதிலையே எனக்கு அறியத் தந்திருந்தாள்.

அத்தை சொல்லியதை போலவே அவ்வளவு உயர்வான தகப்பனின் இடத்தில் காதலனை வைப்பது காதலிற்கு  சரியான இடம் இல்லை என்று இந்தப்பாடல் சொல்கிறது. மாரியாதையை விட மேலான ஒன்று காதலில் உண்டு என்று தலைவி கூற்று வழி காட்டுகிறது.


என் பெண்மையின் அழகு குறைந்து

உடலழகு நலிந்தாலும்

இனிய உயிர் போனாலும்

அவர் பற்றி எதுவும் சொல்லாதே,

அவர் நமக்கு 

தாயும் தந்தையும் அல்லவா தோழி,

அன்பு இல்லாத இடத்தில்

ஊடல் ஏது?


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...