தாபதன்
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்;
கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந் தீ வேட்டுப்,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!
புறநானூறு: 251
பாடியவர்: மாரிப்பித்தியார்
திணை: வாகை
துறை : தாபத வாகை
தாபதவாகை என்னும் துறையில் கீழ் உள்ள பாடல்கள் இல்லற வாழ்க்கைக்குப் பின்னர் துறவறம் மேற்கொண்டு வாழும் துறவு வாழ்க்கையின் வெற்றியைக் குறிப்பனவாக உள்ளன என்று புறநானூறு துறை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. 'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது.
தாபதம் என்பதற்கு
வெப்பம்,
கனன்று எரியும் ஆசை,
காடு என்று
பல பொருள்கள் உள்ளன.
காடு என்பது இங்கு பொருந்தும். துறவிகளின் இருப்பிடமான காடு தாபதம் என்று அழைக்கப்படுகிறது.
தாபதநிலை என்பதற்கு கைம்மை நிலை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. துணையை இழந்த நிலை. இருபாலாருக்குமானதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு தாபதனை பற்றிய சங்கக் கவிதை இது.
தாபதம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே தனிமை அல்லது வெறுமை, இன்மை போல ஒன்றை உணர முடிகிறது. சொற்களின் வலிமை அது. மனிதன் பட்டுப்பூச்சியைப்போல தன் ஆதி உணர்விலிருந்து நெய்தெடுத்த பட்டுச்சரடு மொழி. மெல்லியதும் வலியதுமான ஒன்று. அதில் முத்துக்களை, அணிகளை, மலர்களை கோர்க்கலாம். இன்னொரு பக்கத்தில் அறுத்துப் போடக்கூடிய வலிமை கொண்டது.
முனிவர்களுக்கு ஒரு சொல்லே மந்திரமாக ஆகக்கூடும் என்பார்கள். இது அந்த மாதிரியான வசீகர வார்த்தை.
வசீகரம் என்ன செய்யும்? தன்னைத் தவிர வேறு எதையும் பார்க்க, நினைக்க, கவனிக்க விடாது. அது அழகோ, அருவருப்போ எதுவானாலும் அதன் அதீதநிலையின் வசீகரத்தில் வேறெதையும் நடுவில் விடாது.
துறவும்,காதலும் இந்த இருத்தன்மை கொண்ட பட்டுசரடைப் போல.
நம் அனைவருக்கும் வாழ்பனுபவம் போல கேள்வி அனுபவம் உண்டு. ஒன்றை பற்றி கேள்விப்பட்டு வாழ்வின் பாதையில் அது என்ன என்று தெரிந்து கொண்டு,பின் இப்படியாக இருக்குபோல என்று புரிந்து கொள்ளும் அனுபவம் அது. சிலவற்றை உணர்வதற்கு முழு வாழ்க்கையும் கூட தேவைப்படலாம்.
அப்படி நான் நினைவு தெரிந்த வயதிலிருந்து முப்பாட்டனாராகிய நாராயணசாமியையும், அவர் வாழ்க்கையையும் மூத்தவர்களிடம் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அண்மையில் தம்பியின் திருமணம் பத்திரிக்கை வந்ததும் அவர் தான் முதலில் பேசப்பட்டார். மீண்டும் மீண்டும் சிறு சிறு வேறுபாடுகளுடன் அதே கதை. அவர் மந்திரவாதி, கேரளம் சென்று மாந்த்ரீகம் கற்று திரும்பி வந்தவர், இலங்கையில் திரிந்து திரும்பியவர்,ஸ்ரீரங்கம் கோவிலில் ‘ரங்கசேவை’ செய்து அங்கேயே மாண்டவர் என்று அவரைப்பற்றி பல கதைகள்.
ஸ்ரீரங்கம் கதைதான் விரிவாக சொல்லப்படுவது. ‘என்னைய ரங்கன் காலடியில வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். கொல்லிமலைக்குள் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொல்கிறார்கள். இங்கு கொல்லிமலையில் சென்று மறைந்தவர்களின் கதைகள் நிறைய உண்டு.
அவருக்கான ‘விளக்கு கோவில்’ ஒன்று கொத்தம்பட்டியில் உள்ளது. அங்கு தான் எங்கள் குடும்பங்களின் திருமண பத்திரிகைகள் படைக்கப்படும். இதில் மட்டும் குலதெய்வம் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து விடும்.
அவர் கொத்தம்பட்டியில் வீடும், நிலமுமாக இருந்த விவசாய கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறக்கும் போதே மாட்டுத்தொழுவம் முழுவதும் மாடுகள் இருந்தது.
‘அது ஒரு நேரம். வீட்ல பிள்ளைகளும், தொழுவுல கன்னுக்குட்டிகளும், வாயல்ல கம்பும், கேப்பையும் மொச்சையும்,கிழங்கும், ஏரி நிறைய தண்ணீருமா இருந்த காலத்துல பெறந்திருக்காக…ஒருப்பிள்ளை அவ்வளவு நிறையா பெறக்கக்கூடாது’ என்று அப்பாயி சொல்வார்.
எனக்கு கொத்தம்பட்டியை அவ்வளவு வளமாக கற்பனை செய்து பார்க்க சிரமமாகத்தான் இருக்கிறது. வரண்ட ஊர். பச்சமலையின் மிச்சசொச்ச கரடுகள் நிற் கும் பூமி அது.
நாயக்கர்கள் கால இடப்பெயர்வில், துறையூர் பாளையத்தினுள் கிடந்த வரட்டு பூமியில் மக்கள் குடியேறி அதை வாழ்விடமாகவும், விளைநிலமாகவும் மாற்றியிருக்கலாம். கொத்தம்பட்டி, கெம்பியம்பட்டி,கொல்லப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி,வீரமச்சான் பட்டி [வீரமச்சானிற்கு தனி கதை உண்டு] ,சித்திரப்பட்டி என்று அந்தப்பக்கத்து ஊர்களை காணும் போது கி.ராவுடைய கரிசல்பூமியின் ஒருகுட்டிப் பிரதி ஒன்று இங்கும் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.
அவரை,துவரை,உளுந்து,மொச்சை,கேப்பை,தட்டைப்பயிறு ,கானப்பயிறு என்று கெட்டிப்பயிர்களின் பூமி அது. வயலில் கிடந்து மாய்ந்து போக வேண்டும். எங்கள் ஊர் போல சுகமான விவசாயம் கிடையாது என்று ஊருக்கு வரும் போதெல்லாம் இந்தப்பக்கத்து ஊர்க்காரர்கள் சொல்வார்கள். அந்த ஏழு ஊர்களில் வாழ்ந்த பல்வேறு சமூக மக்கள் ஒரு பஞ்சகாலத்தில் எங்கள் ஊரின் தெற்குப்பகுதியில் குடியேறினோம் என்று வாய்மொழி வரலாறு உண்டு. இன்றும் எங்கள் ஊரோடு மணஉறவுகள் வழுவாக உள்ள ஊர்கள் அவை.
முப்பாட்டனார் நாராயணசாமி நல்ல உயரம், நிறம். வெற்றிலைப்பாக்கு சிவக்கும் வாயும், வெள்ளநிற கல் கடுக்கனும், கெட்டி வெள்ளித்தண்டையும் அணிந்தவர் என்று சொல்லுவார்கள். நல்ல அழகன் என்றும்.
அவர் ஏர் பிடித்தால் மதியத்திற்குள் ஒருகுழி வயலை உழுது போட்டுவிட்டுதான் மதிய கஞ்சிக்கு உட்காருவார். அத்தனை பிடிவாதமும், வழுவும் உடையவர். என்னுடைய பாட்டனாரின் சொந்த ஊர் அது.
பாட்டனாரின் அத்தை ரெங்கநாயகி. முப்பாட்டனாருக்கும் ரெங்கநாயகி அப்பாயிக்கும் சிறுபிராயத்திலிருந்தே கிண்டலும் கேலியுமாக இருந்த உறவு பதின்வயதில் காதலாக மாறியது . ஏழைகள் எப்போதும் பணக்காரர்களை நம்புவதில்லை என்ற ஒரு காரணம் தான். அவர்களின் திருமணம் மறுக்கப்பட்டது.
வீட்டில் இரவோடு இரவாக சொந்தகார பையனுக்கு தன்னை மணமுடித்துவிட இருப்பதை தெரிந்த அப்பாயி, வீட்டின் பின்னால் இருந்த முப்பாட்டனாரின் வீட்டு தொழுவத்தில் தூக்கு மாட்டிக்கொண்டார். அப்பாயியை முப்பாட்டனார் தான் அவிழ்த்து தூக்கியிருக்கிறார். இப்போது போல் அல்ல. அப்பொழுதெல்லாம் மேற் கூரைகள் தாழ்வாக இருக்கும். கல்பாவிய தொழுவத் தரையில் அவளின் உடலோடு மண்டியிட்டு அமர்ந்த நாராயணசாமி பாட்டனாரின் சித்திரத்தை மறக்க முடியாத என்னுடைய பாட்டா மிகவும் சிரமப்பட்டார். சிறுகுழந்தைகளின் மனதில் பதியும் நிகழ்வுகள் அழிவதில்லை. இந்தக்கட்டுரை எழுதும் போது அப்பாயியிடம் மீண்டும் கதை கேட்டேன். பாட்டாவிற்கு இறுதிப்படுக்கை வரை அந்த பதற்றம் இருந்ததாக சொன்னார்.
அன்று வீட்டைவிட்டு இறக்கி சென்ற முப்பாட்டனார் மறுபடி பிடிமண்ணாகதான் கொத்தம்பட்டிக்கு வந்து சேர்ந்தார். எங்கெங்கோ சுற்றி அலைந்து திரிந்தார். ஸ்ரீரங்கம் கோவிலை கூட்டிப்பெருக்கும் வேலை செய்யும் நேரம் போக மிச்ச நேரத்தில் காவிரிக் கரையில் கண்மூடி அமர்ந்திருந்து அங்கேயே செத்துப் போனார்.
பிடிமண் எடுப்பது என்றால் ஒருவர் இறந்து உடல் கிடைக்காமல் போனால் அவர் உயிர்விட்ட இடத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து உள்ளூர் கோவிலில்,சொந்த விளைநிலத்தில் வைப்பது. அவர்களை இறைவனுடன் சேர்த்து விடும் ஒரு சடங்கு சார்ந்த நம்பிக்கை நமக்கு உண்டு. காவிரி கரையில் அவர் மணிக்கணக்காக எப்போதும் அமரும் இடத்திலிருந்து எடுத்தமண். அவரின் பிடிமண்ணை பூர்வீக நிலத்தின் நடுவில் வைத்து வணங்கத்தொடங்கி இன்று விளக்கு கோவிலாக மாறியிருக்கிறது. இது குற்றஉணர்வு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவரை வணங்குவது ரெங்கநாயகியின் வம்சாவழிகள்.
இந்த இடத்தில் கட்டுரையை நிறுத்தி விட்டு அப்பாயியை மறுபடி தொல்லை செய்தேன். ‘அவங்கதான் கல்யாணம் பண்ணிக்கலயே உங்க சம்பிரதாயம் எப்படி பாட்டாவை கும்பிடலாம் என்று சொல்லுது’ என்றேன். கிழவி கோபமாக ‘நல்ல மனுச பெத்த பிள்ளைங்க ராயர அறிஞ்சு ராஜ்ஜியத்தை வென்னுட்டு வருது. உனக்கெல்லாம் ஆட்டுப்புழுக்கைய எருவுக்கு சேக்கற கூறு கெடையாது’ என்று திட்டத்தொடங்கியது. சம்பிரதாயங்களின் மீது கேள்வி கேட்டால் கோபம் வந்துவிடும். நாயக்க மன்னர்களின் முதல் மன்னரான விஸ்வநாத நாயக்கரின் சாமார்த்தியத்தை இன்றுவரை அன்னைகள் கொஞ்சி சீராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவ ராயரை அறிந்து மதுரைராஜ்ஜியம் வென்ற விஸ்வநாதரின் சமர்த்தியமும், வீரமும் பழமொழியாகி அன்றாடத்தில் உள்ளது.
“வெவரம் பத்தாத சின்னக் கழுத…அவுகளுக்காவே அந்த பெரிய மனுசி செத்தே போயிட்டா. அவுங்க சாமியாராவே போனப்பிறவு வேறென்ன சம்பிரதாயம்…உன்னத் தவிர வேறாரும் இல்லன்னு சொல்றதுக்கு…ஊருக்கு தெரிஞ்சு ரெண்டு சம்சாரம்…தெரியாம ரெண்டு சம்சாரம்ன்னு இருந்த காலத்துல இது எம்புட்டு பெரிய விவகாரம். நீ என்னத்த கதபாட்டு எழுதி’ என்று முறைத்தது.
அந்தநிலம் ‘பாடாவதி பொட்டலாக’ துளசி செடிகளும்,ஆவாரஞ்செடிகளும் கருவேலமரங்களுமாக காடாகக்கிடக்கிறது. காய்ந்து மேடாகிப் போன கிணற்றங்கரையில் வேப்பமரத்தின் அடியில் கல்விளக்கு ஔியில் கருங்கல் மேடையிட்டு முப்பாட்டா குட்டி இறைவனாக நின்றிருக்கிறார்.
அவர் ஊர்விட்டு காணாமல் போனப்பின் பலஆண்டுகள் கடந்து அவரை ஸ்ரீரங்கம் கோவிலில் நீண்ட தாடியும், வளர்ந்து நீண்டு தலைமுடியும்,ஒற்றை இடுப்பு வேட்டியுடனும் அடையாளம் கண்டு கொண்ட உள்ளூர் குடும்பம் ஒன்று திரும்பி வந்து ஊருக்குள் சொல்லியிருக்கிறது. கொத்தம்பட்டி ஊர் மன்றில் அந்த ‘செம்மாந்த பேரழகனின்’ வாழ்க்கை பல ஆண்டுகள் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஊரில் கூத்து நடக்கும் போது உள்ளூரின் பிரசிதி பெற்ற உண்மைக் கதைகளை கூத்துக்கலைஞர்கள் கேட்டு வைத்துக்கொண்டு இடையில் அதை பாடுவார்கள். நான் ஒரே ஒரு முறை இந்தக்கதையை கொத்தம்பட்டி திருவிழாவில் கேட்டேன்.
செம்மாந்த பேரழகன் அவன்…
நிக்காத படை அவனோடது…
உங்க ஊரு கண்ட ரெங்கநாயகி கதை சொல்லட்டுங்களா…
என்று தொடக்கினார் அந்தக் கூத்துக்கலைஞர். அப்போது எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததால் இந்த வரிகளை எடுக்க முடிந்தது.
இதில் படை என்பது அவருடைய அழகை,ஆளுமையை,நடையை,சிரிப்பை குறிப்பது.
துறவு என்பதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். சட்டென்று உள்ளம் தன் சரடை அறுத்துக் கொள்ளுமா? பிறவி இயல்பே அப்படி இருக்குமா? பாட்டனாரைப் போல எதிர்பாராத பெரிய துக்கம் வாழ்வை விட்டு விலக செய்யுமா? என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் வருகின்றன.
சிலருக்கு துறவியாகும் ஆசை இருக்கும் ஆகமுடியாது. அலைந்து திரிந்து வீடு திரும்பிவிடுவார்கள். துறவியாக ஆகப்போகிறேன் என்று சொல்லும் ஓரிருவரை காண்கிறேன். அது சொல் மட்டும் தான். அப்படியெல்லாம் சட்டென்று லௌகீகத்தை ஒரு சட்டை என கழட்டி வைக்க முடியுமா என்ன?
துறவிற்கு வெளியே துறவு எப்போதும் பெரும் வியப்பான ஒன்று. எப்படி இப்படி ஆயிட்டாங்க? என்று நமக்கு மனதாகாமல் அதை பேசிப்பேசி கடந்து செல்ல விழைவோம். தலைமுறை தலைமுறையாகக்கூட துறவை புரிந்து கொள்ளமுடியாது. பேசி கடக்க முடியாமல் அதை வணங்க மட்டுமே முடிகிறது.
அது போன்ற ஒரு வியப்பை இந்தப்பாடல் கொண்டிருக்கிறது.
ஓவியம் போன்ற
இல்லத்திலிருந்து பெண்கள்
அணிகலன்கள் அசைய இவனைக்
கண்டு நின்றதைக் கண்டோம்.
இன்று அவனே
மூங்கில் வளரும்
மலை அருவியில் நீராடி
யானைகள்
முறித்துவீசியகிளைகளில்
தீ உண்டாக்கி வேள்வி முடித்து
அவ்வெப்பத்தில்
தன் முதுகு புறம் நீண்டு திரண்ட
சடைமுடியை உலர்த்துவதை
காண்கிறோம்.
Comments
Post a Comment