ஓதற்பிரிவு 😌😇
ஒரு குழந்தை பள்ளிக்கூடம் கூடம் செல்வது அந்தக்குழந்தைக்கு மிக இயல்பாக நடந்துவிடுகிறது. வீட்டில் தான் பரபரப்பு. ஒரு வாரமாகவே அவனை எப்படி பழக்குவது,அவனுடைய பை முதல் சகலபொருட்களையும் சேகரித்தல். தண்ணீர் பாட்டிலை பழக்குதல் என்று அது நீளும். அவன் இயல்பாக காலை எழுந்து பொம்மைகளுடன் விளையாடிவிட்டு, இரண்டு முறையாவது கீழே விழுந்து எழுந்து அழுதப்பின் அடுத்த விளையாட்டிற்கு தாவுவான். அவனை இழுத்து குளிக்க வைத்து கிளம்பும் வரை அவன் கவனமெல்லாம் கையிலிருக்கு பொம்மை மீதோ, பலூன் மீதோ இருக்க வீடே போராடிக்கொண்டிருக்கும். போர்க்களத்தில் பூக்கும் பூவாக அவன் உலகத்தில் அவன் இருப்பான். அதையெல்லாம் கடந்து பள்ளி செல்லும் முன் கையசைக்கும் அந்த நொடி இனி இருபத்துஐந்து ஆண்டுகளாவது இப்படி கிளம்புவான் என்று தோன்றியது. முதன் முதலாக தனித்து அவன் வயது சமூகக்குழுவிடம் விடுகிறோம். இனி அவனை சமூகம் கைகளில் எடுத்துக்கொள்ளும். சமூகம் என்றால் நேரடியாக அல்ல. சமூகத்தின் வெவ்வேறு பிரதிநிதிகளான அவனின் சகர்கள்.
சங்கக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பதால் வரும் சிக்கல் இது.
கூறுவார் யார் தோழி
பால்பாட்டிலை கைவிட்டு
பையை எடுத்துக்கொண்டு
பள்ளிக்கூடம் சென்றுவிட்டான்
அவன் கலைத்துவீசி
பிரிவாற்றாமையால்
முகம்திருப்பி கிடக்கும்
பொம்மைகளிடம்...தலைவன்
பொன்மதிய பொழுதில்
இல்லம் வந்து சேர்வான் என்று
கூறுவார் யார் தோழி? ☺
Comments
Post a Comment