2021 சொல்வனம் வங்கச்சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
ஒரு வாழ்க்கை நாடகத்தின் கதை
நாவல்:பொம்மலாட்டம்
ஆசிரியர்:மாணிக் பந்தோபாத்யாய
தமிழாக்கம்:த.நா.குமாரஸ்வாமி
வெளியீடு:சாகித்திய அக்காதெமி
புதுல் நாச்சேர் இதிகதா என்ற வங்கநாவலின் தமிழாக்கம் பொம்மலாட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகள் நாவலின் காலம். சுதந்திரத்திற்கு முன்பான வங்ககிராமமான காவுதியா என்ற ஊரின் கதை.
ஆங்கிலமருத்துவம் பயின்று தன் கிராமத்தில் மருத்துவம் பார்க்கத் தொடங்கும் சசி என்ற இளைஞன் மையக்கதாப்பாத்திரம். படித்துமுடித்தவுடன் இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் மிக்க லட்சிய கனவுகளும், நேர் வாழ்க்கை அதனுடன் முரண் நிற்கும் களமாக மாறுகிறது. நடைமுறை வாழ்வில் நுழையும் சசியின் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும் மாற்றங்கள், அவனுடன் தொடர்புடைய குடும்பங்களின் அமைப்பு, தனிமனிர்கள், அவர்களின் வாழ்க்கை முறை என்று நாவல் விரிகிறது.
ஹாருகோஷ் என்ற விவசாயி இடிவிழுந்து ஊரின் பெரியவாய்க்கலுக்கு அருகில் குறுங்காட்டில் இறப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் சசி அவர்களின் வாழ்வை நெருங்கி அறிபவனாகவும்,அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளில் கூட அவனிடம் அலோசனை கேட்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஹாருகோஷின் மரணத்தை நிதானமாகக் கையாளும் சசி ஒரு சிறுவனின் இறப்பிலிருந்து மனப்போராட்டங்கள் நிறைந்தவனாக மாறுகிறான். மழைக்காலத்தில் மலேரியா பரவுகிறது. ஹாருகோஷின் மகள் மதிக்கு மருத்துவம் பார்க்க செல்கிறான். தினமும் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து அவளை காப்பாற்றுகிறான்.
மதியின் அண்ணி குஸீமாவின் குணாதிசயம் நாவல் முழுவதுமே வசீகரிகக் கூடியதாக உள்ளது. நாவலில் அவள் அறிமுகமே அதைச் சொல்லும். அடுப்பிலிருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து அந்தி விளக்கேற்றுவாள். அவளுக்கும் சசிக்குமான உறவை சொல்ல வேண்டும் என்றால் இன்று சொல்லப்படும் பெஸ்ட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். அந்த உறவு நாவல் முழுதும் வளர்ந்து வரும் விதத்திலேயே அது புலனாகும். நாவல் துவங்கும் போது எளிதில் உணர்ச்சிவசப்படுபவளாக,உடல்வலிமையும், தைரியமும்,துடுக்கும் நிறைந்தவளாக இருக்கும் குஸீமா இறுதியில் நிதானித்து முடிவெடுப்பவளாக பக்குவமாக நிறம் மாறுவது படிப்படியாக நாவலில் நிகழ்கிறது. மதி மேல் சசிக்கு உள்ள அன்பும் அக்கறையும் கிராமத்து மனிதர்களிடையே உள்ள இயல்பான பிணைப்பை காட்டுகிறது.
சசியின் தந்தை கோபால்தாஸ் ஒருதரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியை பயன்படுத்தி தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரியவியாபாரியை மகளுக்கு திருமணம் செய்விக்கிறார். தந்தை மேல் உள்ள கோபத்தால் அவன் அவளை கல்கத்தா அழைத்துச் சென்று ஒதுக்குப்புறமாக குடிவைக்கிறான். கிராமத்து பேதைப்பெண்ணின் வாழ்க்கையில் குடி,நடனம் போன்றவற்றை பலவந்தமாக திணிக்கிறான். சசி அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தும் அவளால் இருக்கமுடிவதில்லை. குடிக்கு அடிமையான அவளுக்கு சகோதரனே குடிக்கத்தருவது நாவலின் முக்கியமான தருணம். நந்தலால் தன் தவற்றை உணர்ந்து அவளை குடும்பத்தில் சேர்க்க விழையும் போதும் அவளால் அது முடிவதில்லை.
யாமினிகவிராஜ் என்ற நாட்டுமருத்துவரின் மனைவி ஸேன்திதிக்கு பெரியம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இரவுபகலாக சசி அவளை கவனித்து காப்பாற்றினாலும் பேரழகியான அவள் தன் அழகை இழந்து ஒரு கண்ணை இழக்கிறாள். என்னை எதற்கு இப்படி காப்பாற்றினாய் சாகவிட்டிருக்கலாம் என்று அவள் கேட்கும் போது மீண்டும் சசி மனக்குழப்பத்திற்கு ஆளாகிறான். ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவன் கேள்விகள் அதிகரித்தபடியே இருக்கின்றன.
நாடகநடிகனும் சசியின் நண்பனுமான குமுதன் கிராமத்திற்கு ஜாத்ரா என்னும் நாடகம் நடிக்க வருகிறான். மதியும் அவனும் காதல் கொள்கிறார்கள். சசியே பேசி திருமணம் செய்து வைக்க வேண்டியதாகிறது. வாழ்க்கை பற்றிய எந்த பொறுப்பும் இன்றி தன் விருப்பம் போல நாளைப்பற்றிய கவலையின்றி நாடோடியாகத் திரியும் அவனுடன் தன்காதலால் கிராமத்து அறியா இளம்பெண்ணான மதியும் அவ்வாறே மாறுவது நாவலில் கவித்துவமான பகுதி. பிரவீரனை கண்டுகொண்ட மதனமஞ்சரி அவள்.
காயஸ்த தெருவில் யாதவ் என்ற யோகசாதகர் சசிக்கு நெருக்கமானவராக இருக்கிறார். அவர் சசியை தன் யோகப்பாதைக்கு அழைத்துக்கொண்டேயிருக்கிறார். ஒருகட்டத்தில் சசியிடம் பேசும்போது தன்இறப்பு தனக்கு தெரியும் என்று சொல்லிவிடுகிறார். ஊர் முழுவதும் அந்த செய்தி பரவிவிடுகிறது. சொல்லிய சொல்லிற்காக அதை நிறைவேற்றுகிறார்.
யாதவின் சொத்துக்கள் அனைத்தையும் சசியின் பெயரில் எழுதி வைத்து கிராமத்தில் ஒருமருத்துவமனை கட்டும்படி உயில் எழுதிவிடுகிறார். யாதவ் நினைவு மருத்துவமனையைக் கட்டிமுடித்து சசி மருத்துவம் பார்க்கிறான்.
சசி மீண்டும் மீண்டும் கிராமத்திலிருந்து வெளியேற விழைகிறான். ஆனால் கிராமத்தின், அதன் மக்கள்மீதான பிணைப்பு அவனை விடாமல் பற்றுகிறது.
குஸீமா ஊரைவிட்டு தகப்பனர் ஊருக்கே செல்வதில் இருந்து சசியின் வெறுமை தீவிரமாகிறது. தன் பேரழகை இழந்த ஸேன்திதி காலம்தாழ்ந்த பிள்ளை பேற்றில் தன்மகனை அதே அழகுடன் பெற்று விட்டு உயிர்நீக்கிறாள். அந்தக் குழந்தை தன் தகப்பனாருடையது என்பதை அறியும் நேரத்தில் சசி தன் ஊரை துறக்க முடிவு செய்கிறான்.
மருத்துவமனையை வேறொரு மருத்துவரிடம் ஒப்படைக்கும் போது மனசஞ்சலம் அடைந்தாலும் மனஉறுதியை பிடித்துக் கொள்கிறான். ஆனால் அதற்கு முன் தகப்பனார் காசிக்கு கிளம்பிவிடுவதால் மறுபடியும் சசி ஊரில் பெரியகுடும்பத்திற்கும், அழகியகுழந்தைக்கும், மருத்துவத்திற்கும் பொறுப்பேற்க தள்ளப்படுகிறான்.
இந்த நாவலில் பெண்கள் மனநிலை தடுமாற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள். குஸீமா முதல் யாதவின் மனைவி வரை. யாதவின் மனைவி பைத்தியக்கார அக்கா என்றே நாவல் முழுதும் சொல்லப்படுகிறாள்.
குஸீமாவின் கணவன் பரான் போன்ற கடின உழைப்பாளிகள் மண்ணில் கிடந்து உழைப்பைத் தவிர ஏதும் அறியாத அப்பாவிகளாக,வாழ்க்கைப்பற்றிய எந்த கேள்விகளும் அற்றவர்களாக வாழ்கிறார்கள்.
யாதவ்,ஸேன்திதி போன்ற வயோதிகருக்கு வாழ்க்கைப்பட்ட பேரழகிகள் என்று சசி கடந்து வரும் மனிதர்கள் அவன் அகத்தை பாதிக்கிறார்கள். தந்தையின் குருவாக விளங்கும் பிரம்மச்சாரி என்பவருடனான விவாதத்தின் மூலம் தனக்கான பதில்களை தேடுகிறான்.
தன் தந்தை உட்பட பலரின் எதிர்ப்பை மீறி ஸேன் திதியை பெரியம்மை நோயிலிருந்து சசி காப்பாற்றுகிறான். அவளே காலம் தாழ்ந்த பிள்ளைபேறில் உயிருக்கு போராடும் போது அந்தக்குழந்தை தன் தந்தையுடையது என்று அறிந்ததும் மருத்துவம் பார்க்க செல்லாமல் தாமதிக்கிறான்.
அதட்டி உருட்டி மகனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசியின் தந்தை சிற்றின்பத்தின் விளைவாக ஒரு உயிரை காப்பாற்ற அவன் முன் பணிந்து நிற்கும் தருணம் அவர் வேறொரு ஆளாக மாறத்தொடங்குகிறார்.
யாதவ் என்ற யோகியை விழுந்து விழுந்து பணியும் மக்கள் கூட்டம் அவர் இறப்பிற்குப்பின் பணத்திற்காக இரவோடிரவாக அவர் வாழ்ந்த இல்லத்தை சிதைத்து அழிக்கிறார்கள்.
வாழ்வெல்லாம் பணம்,ஏமாற்று, சிற்றின்பத்தில் கழித்த கோபால்தாஸ் மகனின் பொருட்டு அனைத்தையும் துறந்து செல்வதும், அவ்வளவு பெரிய குடும்பத்தில் தனக்கென ஒரு திருமண உறவை ஏற்படுத்த விழையாத சசியும் வினையும் விளைவுமாக இருக்கிறார்கள்.
இறப்பு, பிறப்பு, வாழ்க்கையின் பொருள் பற்றி தேடித்தவிக்கும் இளம்மனம் ஒருக்கட்டத்தில் மனிதத்திட்டங்களுக்கு எந்த பயனுமில்லை, இந்த வாழ்க்கை ஏதோ ஒரு சக்தி நடத்தும் பொம்மலாட்டம் என்று கண்டுகொள்கிறது.
நாவல் வாசித்து முடிக்கும் போது சாவகாசமாக வங்கத்தில் எங்கும் வழியும் நீரோட்டங்களைப்போல மனமும் எந்த சலசலப்பும் இன்றி அடங்கி அமைதியாகிறது. வாசிப்பவரும் சசியைப்போல வாழ்வின் இனம் புரியாத வெறுமையை உணரமுடிகிறது. நான் வாசித்தவரை சிறந்த நாவல்கள் இந்த வெறுமை உணர்வை ஏற்படுத்த வல்லவையாகவே இருந்திருக்கின்றன.
ஆசிரியர் குறிப்பு:
இந்தநாவல் 1936ல் ஆசிரியரின் இருபத்தெட்டாவது வயதில் எழுதப்பட்டிருக்கிறது.
“என் எழுத்தில் கற்பனைக்கே இடமில்லை கற்பனைக்கு உண்மை வடிவம் கிடையாது என்பது என் துணிபு. மனிதத்தன்மைக்கு எங்குமே மரியாதை இல்லை,” என்று மனம் விட்டு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் கடுமையாக போராடினார். உடல்நலிவால் வதைந்தார். பிடிவாதமாக கொள்கைகள் உடையவர். மாணிக் கண்ணுக்கு நேராக உள்ளதை நோக்குபவர். நாட்டுப்புற மண்ணையும் அதில் உழலும் மாந்தரையும் நோக்குபவர் என்று முன்னுரையில் ஸசீந்திரலால் கோஷ் குறிப்பிடுகிறார்.
மாணிக் நாற்பத்தெட்டாவது வயதில் வலிப்பு நோயால் மரணித்திருக்கிறார். இயற்பெயர் பிரபோத பந்தோபாத்யாய. 192 சிறுகதைகள் நாற்பதிற்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நாவல்களுள் பொம்மலாட்டம் மற்றும் பத்மா ஆற்று படகோட்டி என்ற இரண்டும் முதன்மையானவை. ஆறடி உயர வசீகர தோற்றமும், பேச்சும், பார்வையும் வாய்க்கப்பெற்ற ஆளுமை என்று இந்த நாவலின் ஆசிரியர் குறிப்பில் உள்ளது.
Comments
Post a Comment