Skip to main content

அகமும் புறமும் 17

                   ஆம்பல் குளம்                   


அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

இளைய மாகத் தழையாயினவே

இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப்

பொழுதுமறுத்

தின்ன வைகலுண்ணும்

அல்லிப் படூஉம் புல்லா யினவே.


புறநானூறு 

திணை : பொதுவியல் திணை

துறை : தாபத நிலை

பாடியவர் : ஓக்கூர் மாசாத்தனார்.



ஒரு பெண் தன் இளம் வயதில் விருப்பத்துடன் தன்னை அழகுபடுத்திக்கொள்ள பயன்படுத்தும் பொருட்களை கணவன் மறைவிற்கு பின் பயன்படுத்த சமூகம் விடுவதில்லை. தற்காலத்திலும் இந்த நிலை முழுவதுமாக மாறவில்லை. 

கட்டாயப்படுத்தி சடங்குகளை  செய்ய வைத்துவிட்டு கைம்மை நோன்பு என்று சொல்கிறோம். இந்தப்பாடல் அந்த வகையான ஒரு கைம்மை நோன்பை காட்டுகிறது. 

உணவு பழக்க வழக்கங்களை கூட கணவனை இழந்தப்பின் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். சூரியன் உதிப்பதற்கு முன் ஒரு வேளை உணவு. அதுவும் எப்போதும் உண்ணும் உணவல்ல. அல்லி அரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவு. 

அல்லியின் கிழங்கு கோடையிலும் அழியாதது. தண்டிற்கு மேல் உள்ள சூழகத்தில் ஏராளமான அல்லி விதைகள் உள்ளன. அது அல்லி அரிசி என்று அழைக்கப்படுகின்றது. அதை உணவாக்கி கணவனை இழந்த பெண்களுக்கு ஒரு வேளை உணவாக கொடுக்கும் அன்றைய வழக்கத்தை இந்த புறநானூறு பாடல் சொல்கிறது. 

காதல் வீரம் என்பவற்றை கடந்து சமூக பழக்கவழக்கங்கள் சங்கஇலக்கியங்களில் அங்கங்கே உள்ளது. இந்தப்பாடல் அந்த வகையில் முக்கியமான பாடல். 



இந்தப்பாடலுக்கு உதாரணமாக  ஏராளமான வாழ்க்கை தருணங்களை எடுக்கமுடியும். நம் அன்றாடத்தில் தினமும் கணவனை இழந்த இளம் பெண்களைப் பார்க்கிறோம். இந்தப்பாடலை வாசிக்கும் போது எத்தனை முகங்கள் எத்தனை தருணங்கள் மனதில் வந்து போகின்றன. அதனால் இதை வாசிக்கும் போது யார் நினைவிற்கு வருகிறார்களோ அவர்களின் பாடல் இது.

இதற்கும் மேலாக நாம் இதில் உள்ள கவித்துவ தருணம் ஒன்றை உணரமுடியும். இந்தப்பாடல் அகமும் புறமும் மயங்கும் பாடல் என்று தோன்றுகிறது. புறப்பாடல்களில் அகமும், அகப்பாடல்களில் புறமும் அடர்ந்து சேரும் பாடல்களில் இதுவும் ஒன்று.

இளம் வயதில் அல்லித்தழையாடை உடுத்து தலைவி மகிழ்ந்திருக்க இந்த அல்லி உடன்இருந்தது. அதே போல இவளின் துயர நிலையிலும் உணவாக  உடன்இருக்கிறது. இந்த அல்லி எவ்வளவு கருணை மிக்கது என்று பாடல் சொல்கிறது. 

இதில் அல்லியை காதலின் குறியீடாகக் கொள்ளலாம். தலைவன் இருக்கும் போது மகிழ்ச்சியான உணர்வாக இருந்த காதல்,அவனை இழந்தப்பின் துயரமான உணர்வாக உடனிருக்கிறது. 

மேலும் அல்லியின் கிழங்கு நெடுங்காலம் அழியாதது. குளம் வற்றும் போது காத்திருந்து நீர் பெருகும் காலத்தில் தானும் பெருகக்கூடியது. காதலும் கூட அவ்வாறு தானே. 



வளர்ந்து செழிப்பதும், பூத்து மலர்வதும், விதையாவது ஒன்றே தான்.

மேலும் அல்லியின் அந்த சூழகப்பைக்குள் அத்தனை விதைகளை நம்மால் கற்பனை செய்வது கடினம். அதுவே ஒரு  பிரபஞ்சம் போல இருக்கும். மழையற்று போய் ஒரே ஒரு கிழங்கு மிஞ்சினால் கூட எண்ணற்ற அல்லிக்குளங்களை உருவாக்க முடியும். 

இளம் வயது மணவாழ்வில் துணையின் இழப்பு பெருந்துயரை ஏற்படுத்துவதற்கு அடிப்படையான காரணம் அந்த உறவு சலிப்பும் கசப்பும் அறியாதது என்பது தான். அது இனிய நினைவாகவே எஞ்சும் வாழ்க்கை. 

பிரிவு ஒரு துல்லியமான உருப்பெருக்கி கண்ணாடி போன்றது.  கசப்புகள் அறியாத அன்பு மனம் பிரிவால் வரும் துயரத்தை எண்ணி எண்ணி பெருக்குகிறது. சிறு சிறு நினைவுகளைக்கூட துல்லியமாக மனதில் நிறுத்திப் பெருக்குகிறது. இதை இந்தப்பாடலுடன் நம்மால் இணைத்து பார்க்க முடிகிறது.

இதை எழுதும்போது…

‘காற்றில்  உடைந்துவிட்ட நுரைக்குமிழ் நீ…

வெளியெங்கும் உன்னை

நுகர்ந்தலைகிறது என் ஆன்மா’

என்ற ப்ரிம்யா கிராஸ்வினின் வரிகள் நினைவிற்கு வந்தன. எத்தனை வலிமிக்க வரிகள். உற்ற மனதின் வலியை, வாசிக்கும் மனதிற்கு மிச்சமில்லாது கடத்தக்கூடிய கவிதை. எவ்வளவோ காதல்  கவிதைகளை வாசிக்கிறோம். சில கவிதைகளே சாரம் என மனதில் தங்கிவிடுகின்றன. இந்தக்கவிதை அப்படியானது. [இந்த வரிகளை ப்ரிம்யா  சமர்ப்பணம் பகுதியில் எழுதியிருக்கிறார். ஒரு கவிதை தொகுதியைவாசிப்பவர் எங்கிருந்து வேண்டுமானாலும் கவிதையை கண்டு கொள்ளலாம். ப்ரிம்யாவின் முதல் தொகுப்பின் சாரம் இந்த வரிகள் என்று ஒரு கவிதை வாசகியாக சொல்வேன்]

இந்த மூன்று வரிகளை எத்தனை எத்தனை தருணங்களாக விரிக்கலாம்! எத்தனை எத்தனை வாழ்க்கையாக பார்க்கலாம். எத்தனை எத்தனை இழந்த காதலின் தேடல்களாக இது விரிகிறது. இதையே கவிதையின் சாரம் என்றும் சாத்தியம் என்றும் சொல்கிறோம்.

சங்கக்கவிதைகளில் இது போன்ற சாரங்களை நாம் கண்டு கொள்ளும் எண்ணற்ற தருணங்கள் உண்டு . அதானாலேயே இன்றைய வாழ்க்கை வரை சங்கக்கவிதைகள் நம்முடன் இருக்கின்றன. நித்தியம் கவித்துவம். கவிஞன் தன் வாழ்வில் கண்டுகொண்ட அழகின் சாரங்களை,துயரின் சாரங்களை,இன்பத்தின் சாரங்களை,அலைவுகளின் சாரங்களை கவிதையாக்கி வைத்திருக்கிறான். காலகாலத்திற்கும் அந்த அல்லியின் சூழ்ப்பை போன்று தான் கண்டுகொண்டவற்றை கவிதையாக சேமித்து வைக்கிறான். காலத்தால் அழியாதது. எந்த காலத்திலும் முளைக்ககூடியது. மனமெங்கும் பூக்கக்கூடியது.



 அந்த அல்லி முளைவிடும் நீர் என்பது துயரமோ, பிரிவோ, மகிழ்வோ எதுவாக இருந்தாலும் மனக்குளம் நிறையும் போது இந்த அல்லி படர்ந்து மலர்கிறது.

 இந்தப்பாடலில் அல்லியின் குறியீடு விரிந்து கொண்டே செல்கிறது. தூயதாக, [பொதுவாக அல்லி என்று சொல்லப்படாது வெள்ளாம்பல் என்று குறிப்பிடப்படுகிறது] விரியும்  மனமாக,நினைவின் ஒரு துளியாக,அழியாததாக,பெருகும் நினைவாக என்று அந்தக்குறியீடு காதலை விரித்துக்கொண்டே செல்கிறது. பூத்து முடித்த தண்டில் தான் இந்த கிழங்கு உள்ளது. மலரில்லை. விதைகள் மட்டுமான ஒரு நிலை. இளம் வயதில் தலைவனை இழந்த தலைவி நினைவுகளால் மட்டுமே ஆன காதலை மனதினுள் வைத்திருக்கிறாள். உற்றபோதும், இல்லாத போதும் பெரும்துணையாகும் ஒரு உணர்வின் பாடல் இது.


அவள் இளமையில்

விரும்பி அணிந்து களிக்கும் 

ஆடையாகியது..

கணவன் மறைந்த பின்பு

அவளின் ஒரு வேளை உணவாகியது…

அவள் வாழ்வின்

இன்பத்திலும்

துன்பதிலும் உடன்வரும்

இந்த வெள்ளை அல்லி….

எத்தனை கருணை மிக்கது.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...