Skip to main content

அகமும் புறமும் 18

       ஏப்ரல் 1 ,2023          வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.

         ஒரு பழைய நீர்த்தேக்கம்

நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரைத்

தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்

மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்,

நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்,

தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே,

கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்

காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்,

பொலங்கலம் சுமந்த பூண்தாங்க இளமுலை,

‘வருக மாள,என் உயிர்!’ எனப் பெரிது உவந்து,

கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன்,

‘மாசுஇல் குறுமகள்! எவன் பேதுற்றனை?

நீயும் தாயை இவற்கு?’ என யின்தற்

கரைய,வந்த விரைவனென் கவைஇ,

களவு உடம்படுநரின் கவிழ்ந்து,நிலம்கிளையா

நாணி நின்றோள் நிலை கண்டு,யானும்

பேணினென் அல்லெனோ_ மகிழ்ந! _ வானத்து

அணங்குஅருங் கடவுள் அன்னோள்,நின்

மகன்தாய் ஆதல் புரைவது_ ஆங்கு எனவே!


அகநானூறு:16

பாடியவர்: சாகலாசனார்

திணை : மருதம்

துறை :  தலைவனுக்கு தலைவி கூறியது.


அகத்துறை முழுவதுமே  உன்னதமான காதல் வரிகள், தருணங்கள் நிறைந்துள்ளன. இத்தனை உன்னதமா? என்ற தராசின் இந்தப்பக்கம் தலைவனின் பரத்தமை புன்னகையுடன் அமர்ந்திருக்கிறது.

தலைவியின் குழந்தைபேறு காலத்திலும் தலைவன்  பரத்தையர் இல்லம் செல்கிறான். தாசி முறை ஒழிக்கப்படும் வரையில் ஏதோ ஒரு பெயரில் பெண்ணை  களியாட்டதிற்கு உரியவளாக சமூகம் பிரித்து வைத்திருக்கிறது. பொது விலைமகள் என்று ஒரு பிரிவு [சங்கஇலக்கியம் சேரிப்பரத்தை என்று சொல்கிறது] ,காதல் பரத்தை என்று ஒரு பிரிவு உள்ளது. பரத்தையின் மகள் பரத்தை. பரத்தைக்கு தந்தை இல்லை.

சென்ற நூற்றாண்டில் தாசி ஒழிப்பு முறை வந்த பிறகுதான் இந்தப் பிரிவு நம் சமூகத்திலிருந்து மறைந்துள்ளது. கோவில் சார்ந்த கலைகளை வளர்ப்பதற்காக கோயில் சேவை செய்யும் பெண்களை  நாடு பிடிக்க வந்தவர்கள் விலைமகள்களாக மாற்றிவிட்டார்கள் என்று நாம்  சொல்லலாம். 

ஆனால் நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரத்தை ஒழுக்கம் இருந்ததை சங்கப்பாடல்கள் எடுத்து வைக்கின்றன. பெண்களை தங்களின் தேவைகளுக்காக  பிரித்து  வைத்திருப்பது குற்றம் என்ற பிரக்ஞையே சமூகத்திற்கு சென்ற நூற்றாண்டில் தான் வந்திருக்கிறது. நண்பர்களே…சட்டங்கள் இயற்றி சில குற்றங்களை  தடுத்து வைத்திருக்கலாம். ஆனால் பெண்ணை பற்றிய ஆணின் மனநிலையில் மாற்றங்கள் நிகழ வேண்டியுள்ளது. 

ஆணின் பேச்சில், சிரிப்பில், பார்வையில், பழக்கவழக்கங்களில்  வெளிப்படும் ரசனை தகுதியாக  கருதப்படுகிறது. அதுவே பெண்ணின் பேச்சில், சிரிப்பில், பார்வையில், பழக்கவழக்கங்களில்  வெளிப்படும் ரசனையில் எங்கிருந்து பரத்தமை வந்து குடியேறுகிறது? இதில் வேடிக்கை என்னவென்றால் இருபாலினத்தவருக்குமே பொதுவெளியில் கலகலப்பான பெண்கள்  மீதான பார்வை இப்படித்தான் இருக்கிறது.

கூட்டு சமூகத்தின் நனவிலியில் இன்னும் அந்த பரத்தமை இயல்பு மாறவில்லை. ஈராயிரம் ஆண்டு மனோபாவம் நூறாண்டிற்குள் மாறுவது சிரமம் தான் இல்லையா? ரசனை ஒரு போதும் பிழையானதில்லை நண்பர்களே..உடைமையாக்கலும்,துன்புறுதலுமே பிழை ஆகிறது.

உலகில் அனைத்து சமூகங்களுக்குள்ளும்  இதுமாதிரியான ‘கல்ட்’ மனநிலை உண்டு. சமூகமாக உருவாகி படிப்படியாக ஒவ்வாதவைகளை விலக்கி வந்ததாலேயே இன்றைய நிலையில் இருக்கிறோம். பேச்சில், சொல்லில் அல்ல அகத்தின் ஆழத்தில் மாற்றம் நிகழ வேண்டியுள்ளது.

தலைவன் பரத்தையுடனான அகவாழ்வில் ஈடுபட்டிருப்பதை தெரிந்து கொண்ட தலைவி அதை தலைவனிடம் சொல்லுவதாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.


வானினும் உயர்ந்த,கடலினும் ஆழம் மிக்க, நிலத்தினும் பெரியதான அன்பு கொண்டவள் தலைவி. அந்த அன்பின் பொருட்டு தலைவனை சகித்து  கொண்டாளோ என்னவோ? இது சரியா தவறா என்பதைத்தாண்டி தலைமுறை தலைமுறையாக இது நடக்கிறது.

தன் காதல்தலைவனுடைய சாயலில் தெருவில் விளையாடும் மைந்தனை  கண்டதும் பரத்தையின் மனம் மலர்ந்து விடுகிறது. தனியாக இருக்கும் மைந்தனை ‘என் உயிரே வா’ என்று கைநீட்டி அழைக்கிறாள். தன் உள்ளத்தை மறைக்க இயலாதவள் அவள். அருகில் வரும் மைந்தனை அள்ளி எடுத்து மார்புடன் அணைத்துக் கொள்கிறாள்.

இந்த வரியை வாசித்ததும் வாழையின் குருத்துஇலை என் மனதில் வந்தது. இளம் பச்சை  நிறத்தில் அடிபாகத்தில் சுருண்டும், மேல் பகுதி மெல்ல விரிந்து கொண்டிருக்கும் புதிய இலை. பரத்தையின் மனம் குருத்து இலை விரிவதைப் போல மலர்கிறது. இளம் மைந்தனும் ஒருவகையில் வாழை குருத்து போன்றவன் தானே.

வீட்டிலிருந்து மகனைத் தேடி வரும் தலைவி, மகனையும் அவளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள்  தலைவியை கண்டதும் பதட்டம்  கொள்கிறாள். அவளிடம் தலைவி, முதல் வார்த்தையாக ‘மாசு இல்லாத குறுமகளே ஏன் பதறுகிறாய் இவன் உனக்கும் மகன்தான்’  என்று சொல்கிறாள்.

பாடலின் முடிவில் தலைவனிடம் ‘அணக்கு போன்ற தெய்வத்தன்மை கொண்ட அவள், உன் மகனுக்கு தாயாவதற்கு பொருத்தமானவளே’ என்கிறாள். 



இது போன்ற கணவனின் நடத்தையால் மனம் தடுமாறிப் போன பழனியம்மாள் என்ற பாட்டி எங்கள் தெருவில் உண்டு. நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது சேலையை முட்டி வரை ஏற்றி கட்டியிருப்பார்.

“சீலய எறக்கிக்கட்டு பழனி,” என்று யாராவது சொன்னால், “அசிங்கம்..ஒட்டிக்கும்,” என்று சிரிப்பார். இப்போது சில ஆண்டுகளாக மகன்கள் கணுக்கால் வரை மொத்தமான பாவாடைகளும், மெல்லிய சேலைகளும்  வாங்கித் தருகிறார்கள். இப்போது சேலையை இடுப்பு வரை சுருட்டிக்கொள்கிறார். 

கணவருடன் முறையற்ற உறவில் இருந்த பாட்டியின்  மகன்களை பார்ப்பதற்காக தினமும் எங்கள் வீடிற்கு பின்புறம் உள்ள அவர்களின் வீட்டிற்கு வருவார். காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக வந்து விடுவார். 

அந்த மாமாக்கள் இருவரும்  ஐம்பது வயதை நெருங்குபவர்கள். தினமும் வாசலில் நின்று அவர்களின் மனைவிகளை அழைப்பார். “செல்வம் பொண்டாட்டி இருக்கியா ...இங்க வா. பய எங்க? வயலருந்து மாடுகட்டிட்டு வந்துட்டானா..” என்று கேட்டுவிட்டு பதிலிற்கு காத்திராமல் அடுத்த மருமகளிடம் பேசத் தொடங்கிவிடுவார். மகன்கள் இருவரும் வீட்டிலிருந்து வாசலுக்கு வந்து ‘என்னம்மா   காப்பி குடிக்கிறியா?’ என்று கேட்டு இரண்டு வார்த்தை பேசினால் தான் திரும்பி வீட்டிற்கு செல்வார். 

பேச்சுவாக்கில் யாராவது, “உனக்கு எத்தனப்பிள்ளைங்க?” என்று கேட்டால், “நாலு பயக,”என்று சிரிப்பார். அவருக்கு பிள்ளைகளில் வேறுபாடு இல்லை. இரண்டு தாத்தாக்களும் இன்று இல்லை. இரண்டு பாட்டிகளும் இருக்கிறார்கள். இருவருக்குமே பிள்ளைகள் மீது மாறுபாடு இல்லை.

 அகமும் புறமும் என்ற இந்தக்கட்டுரை தொடரை நான் மிகவும் எச்சரிக்கையுடன் புனைவிற்குள் செல்லாமல்  எழுதுகிறேன். உண்மை மனிதர்கள் நிறம் கொள்ளும் இந்தக்கட்டுரைகளில் வரும் மனித சுபாவங்களைக் கண்டு எனக்குமே வியப்பாக இருக்கிறது.

‘நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரை’ என்ற முதல் வரியில் தலைவி தன்னுடைய மன உணர்வை முழுவதுமாக சொல்லிவிடுகிறாள். அடுத்து வரும் வரிகள் அனைத்தும் உரையாடல் மட்டுமே. பழைய நீர்த்தேக்கம் என்று தன்னை கூறி அதில் மலர்ந்த தாமரையாக மகனை சொல்கிறாள். வலியும் எள்ளலும் மிக்க வரி.


நீர்நாய் விளையாடும்

பழைய நீர்த்தேக்கத்தில்

மலர்ந்துள்ள தாமரையின் 

உள்இதழ் போன்ற

உள்ளங்கைகளையும்,

மழலை பிதற்றும் வாயும்,

காண்பவர் விரும்பும்

 தன்மையுடையவன்

நம் மைந்தன்.


அவன் தேர் ஓடும் வீதியில்

தனியே நிற்பதைக் கண்டு

இளையவள் ஒருத்தி பதறி

‘ என் உயிரே வா’ என்றழைத்து

அணிகலன்கள் நிறைந்த

தன் மார்பில் அவனை

 தழுவிக்கொண்டாள்.


மைந்தனை தேடிச் சென்ற

 என்னைக் கண்டதும்

 பதறினாள்.

மாசற்ற சிறு பெண்ணே 

எதற்கு பதறுகிறாய்?

 நீயும் இவனுக்கு அன்னையே

 என்றேன்.

மனதை மறைக்கத் தெரியாத

 அவள் தலைகவிழ்ந்தாள்.

அந்த நிலையில் 

மைந்தனுடன் நின்றவளை

 நான்

அணைத்துக் கொண்டேன்.

அருளும் அணங்கு தெய்வம்

 போன்ற அவள்…

உன் மைந்தனுக்கு, 

அன்னையாகும் தகுதி உடையவள்.





Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...