[ஜனவரி 30, 2023 தமிழினி இணைய இதழில் வெளியான கதை] அந்த கிச்சிலி மரத்தடியில் யுவான் தன்சிவந்த மெல்லிய இடது கரத்தை நீண்ட மரத்திண்டின் மீது அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்த சிறுவீட்டின் வடக்கு புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக்கேட்டது. அந்த ஒலியை கேட்டபடி அவன் வலது கரத்தின் இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டை சீவி கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் அவன் லயித்திருந்தான். அதன் பின்ணனியில் நீர் ஊற்றும் ஒலி. அவன் முகம் புன்னகைக்கொண்டது. அந்த மரவீட்டிற்கு வெளியே உறைபனி மண்ணை மறைக்கபடி இருக்க வளைந்து சென்ற ஒற்றையடிப் பாதையை பார்த்தான். உடலை நிமிர்த்தினான். முதுகில் ஒரு புள்ளியில் இருந்த வலி படர்ந்தது. கைகளால் அந்த இடத்தை நீவியபடி சின்னஞ்சிறு கண்ணாடி சன்னலருகே சென்று நின்றான். கண்முன்னால் ஆல்பைன் மலைச்சிகரங்கள் எங்கும் பனி மூடியிருந்தது. கணேமுன்னே தூய வெள்ளை...