Posts

Showing posts from August, 2024

பிறப்பு

Image
  நித்தியம் காற்றில் அசைகையில் இலைளெல்லாம் மலர்களாகிவிடுகின்றன. காற்றற்ற போதும் மலர்களைக்காண நீ இன்னும் கொஞ்சம் உடைய வேண்டும். காலையில் கவிஞர் இசையின் இந்தக்கதையை வாசித்ததும் எனக்கு ராமனும் கைகேயியும் மனதில் வந்தார்கள். பத்துவயதில் சிறுவர்களுக்கான ராமாயணம் புத்தகத்தை வாசித்தேன். அந்தப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் மனதை கற்பனையில் அமிழ வைப்பவை. காட்டிலிருந்து திரும்பிய ராமர் மறுபடி கைகேயி மீது அன்பாக இருந்தார் என்ற கதையை இருபது வயது வரைக்கூட என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் அப்போதெல்லாம் ஒருவருடன் பேசாமல் இருப்பதை அவருக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைப்பேன்.  காந்தி எபெஃக்ட் என்று அய்யா கிண்டல் செய்வார். [காந்தியை சரியாக புரிந்து கொள்ளாமை] . பேசாமல் ஒருவரை தவிர்ப்பது வன்மம்,இது மனிதர்களை கைவிடுவது,கோபக்காரர்களாக ஒருவரை மாற்றுவது என்ற கருத்து அவருக்கு இருந்தது. பெரிய பிழைகளுக்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்.  ' பேசமாட்டேன்' என்று முதன்முதலாக சொன்ன போது தங்கை மகன் ராஜமித்திரன் 'ஏன் தம்பிக்கிட்ட கமலா பேசமாட்ட...'என்று முகம் சுருக்கிய முதல் தருணம் இன்ன

போதவிழ் அகம்

Image
 [2024 ஜூலை கவிதை இதழில் வெளியான வாசிப்பனுபவம்] போதவிழ் அகம் சங்கப்பாடல்களில் ‘போதவிழ் வான்பூ ‘ என்ற ஒரு சொல் உண்டு. மொக்கு போன்ற கூம்பிய இருள். ஔி வந்து தொட்டதும் பூவைப் போல பூத்த வானமாகிறது என்று சங்ககாலக் கவி சொல்கிறார். இங்கு இருள் என்பது கூம்பியிருத்தல். மொக்குக்குள் இருப்பதும் அதே பிரபஞ்ச இருள் தானே. இங்கு மொக்கு ஒரு குட்டி பிரபஞ்சமாவதை உணரமுடியும். ஒரே நேரத்தில் பூக்க வைக்கும் வேர்ப்பின்னல் ஆயிரம் அலைகளுக்கு அடியில் இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல் ஈர்த்தும் விலகியும் சுற்றும் அனைத்தையும் தாங்கி நிற்கும் கடுவெளி என் ஆழத்து அகவிழி கல்பனா ஜெயகாந்த்தின் இந்தக்கவிதையில் இவர் சொல்லும் அனைத்திலும் அந்த மொக்கு வெவ்வேறு வடிவில் உள்ளது. அசையாத ஒரு தன்மை. ஔியோ, காற்றோ, எதுவோ வந்து தொட காத்திருக்கும் தவம். அல்லது வெறும் இன்மை.   மலர்தலுக்கும் விரிதலுக்கும் அசைவிற்கும் அடியில் உள்ள ஔியை, அசைவின்மையை, ,செறிவை எங்கெங்கிருந்தோ தொட்டெடுக்கும் கவிமனம் பின் தன்னுள்ளே அதை உணர்கிறார். அசையாத ஆழம். அதிகாலை குளம் போல. கன்னியின் மனம் போல. பெரியோர்கள் சொல்லும் அறிதலுக்கு முந்தைய நிலை போல அல்லது பிரபஞ்ச

அம்பையின் படைப்புலகம் :5

Image
   [ மே 2024  நீலி இதழில் வெளியான கட்டுரை] நெருப்பல்ல நீர் [ சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை சிறுகதை தொகுப்பை முன்வைத்து] அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து கீச்சிடும் ஒரு குருவி. ஒரு நாள் பட்டாம்பூச்சி தரையில் கிடந்தது அசையாமல். குருவி அவள் கண் முன்னாலேயே ஒரு நாள் சொத்தென்று விழுந்தது. பிறகு ஒரு முறை காரில் போகும்போது ஆட்டுக்குட்டி சத்தமே போடாமல் சாய்ந்தது. நான்கு வயது அப்போது. பாட்டி,ஏன் எல்லாம் சாகிறது? பாட்டி அணைத்துக் கொண்டாள். செத்த பின்னே அதெல்லாம் எங்கே போகிறது? பாட்டி இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.          _ அம்பையின் சிங்கத்தின் வால் என்ற சிறுகதையிலிருந்து                                  அம்பை இந்தத்தொகுப்பில் பிரிவு, இழப்பு, மரணம் சார்ந்த கேள்விகளும் அவற்றின் புரிந்துகொள்ளமுடியாத தன்மையும் கதைகளாகியிருக்கின்றன. அறுபது வயதை நெருங்குபவர்களின் [குறிப்பாக பெண்கள்] மனமும் அவர்களின் குடும்பம் வழக்கமாக அவர்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளும் சாம்பல் மே

இற்றைத்திங்கள் அந்நிலவில்: 13

Image
 [ 2024 சொல்வனம் ஜூலை இதழில் வெளியான கட்டுரை] மலைதெய்வம் சங்ககாலத்தில் இல்லங்களில், கோயில்களில் களம் அமைத்து வெறியாட்டு விழா நடத்தும் வழக்கம் இருந்தது. இந்த விழாவைப்பற்றி பாடியதால் வெறிபாடிய காமக்கண்ணியார் என்று இந்தப்புலவர் அழைக்கப்படுகிறார். இவர் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். வெறிபாடிய காமக்கண்ணியார் போர்க்களத்தின் இருநிகழ்வுகளை புறநானூற்றில் பாடியுள்ளார். சங்ககாலத்தில் புலவர்கள் போர்நடக்கும் போதும், போர் முடிந்த பின்னும் களத்திலிருக்கும் வழக்கம் உண்டு. பகைஅரசனிடமிருந்து மதிலை காப்பதற்காக நொச்சிப் பூ மலை அணிந்து வீரர்கள் போரிடுகிறார்கள். போர்க்களத்தில் வீரன் காயம்பட்டு இறக்கிறான். மகளீரின் இடையில் ஆடையாக கண்ட நொச்சி மாலை [தழையுடன் இணைந்த நீண்ட பூங்கொத்தை இடைஆடையாக பயன்படுத்தும் வழக்கம்] மைந்தனின் மார்பை மாலையாக அழகுபடுத்தியது. நொச்சிப்பூவை கொத்தாக தலையில் சூடும் வழக்கமும் உண்டு. இப்போது அவன்  குருதியில் தோய்ந்த மலரை நிணம் என்று நினைத்து பருந்து கால்களில் கவ்விச்செல்கிறது. இந்தக்காட்சி மூலம் பூங்கொத்து போன்று இருந்த மைந்தன்  போர்க்களத்தில் உயிரிழந்து  வெறும் தசை துண்டமென உடல் கசங்கிக்

படுகளம் நாவல் வாசிப்பனுபவம்

Image
[படுகளம் நாவல் குறித்து எழுதிய கடிதம்] அன்பு ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். படுகளம் நாவல் வாசித்தேன். ஒரு கலைஞனை வியாபார சூழல் தூண்டும் போது அவனுளிருக்கும் வியாபாரி விழித்துக் கொள்கிறான்.  பொதுவாக சாதாரணனிலிருந்து கலைஞன் விழித்துக்கொள்வது நடக்கும். ஆனால் இங்கு கலைஞனிலிருந்து வியாபாரி. ஏனோ தானோ என்றில்லை. அவன் கலைஞனில் இருந்து முழுமையான வியாபாரியாகும் தருணம் வரை. ஒரு விஸ்வரூபம். அந்த விளம்பரத் தட்டி எழுந்து நிற்பது போல அந்தக்கடைத்தெருவில் அவனும் எழுந்து நிற்கிறான்.   இந்த நாவலில் அவனுடைய மனவேகம் தான் கலையனுபவமாகிறது. ஆதர்சனமாக உணர்பவர்களின் பாதிப்பால் உருவாகும் வேகம். துரத்தப்படுகையிலும் ஓடும்போதும் உள்ளே சுரக்கும் உயிர்திரவத்தால் நிறைந்தது தான் காடு...பசி தோற்று உயிரிச்சை வெல்லும் தருணம் நாவலாகியிருக்கிறது. 'இரும்பு ராடு ஒன்று சீட்டின் அடியில் வைத்திருந்தேன். அதை என்ன செய்வது என்று தெரியவில்லை' என்ற வரியில் சட்டென்று கண்கலங்கியது. ' அதை தூக்கிப்போட்ரு' என்று தான் வாசிக்கும் போது முதலில் மனம் சொல்லியது. அது இல்லாமலிருந்தால் அவன் அழிந்து போயிருப்பான். ஒட்டுமொத்த நாவலே அது

பெருகும் காவிரி

Image
 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை நாச்சி என்றும் அழைக