நேற்றைக்கு முதல் நாள் சாயுங்காலமே மேற்கே கொல்லி மலையை மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசியது. ஆனால் இரவு நல்ல புழுக்கம்.
மூன்று வாரங்களாக கடும் வெயில். இங்கு மழை பனி வெயில் என மூன்று காலநிலையும் அந்தந்த பருவத்தில் சற்று கூடுதல். கோடையில் கொல்லி மலையை பார்ப்பதற்கே செம்பு நிறமாகத் தெரியும்.
சென்ற வாரம் பேருந்திற்காக காத்திருந்த போது அரசமரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன. சில தலையிலும் விழுந்தன. பேருந்திற்காக காத்திருந்தவர்கள் உதிர்ந்த இலை விரிப்பில் நின்று கொண்டிருந்தோம்.
ஒரு குழந்தை இவ்வளவு ஹார்டின் என்று கைகளால் சைகை செய்து ஓடி ஓடி பச்சை மஞ்சள் இலைகளை எடுத்து கைகளில் சேர்த்து கொண்டிருந்தது. நானும் எடுக்கலாம் என்று சுற்றிப் பார்த்தால் என் வயது ஆட்கள். தெரிந்த முகங்கள். சொந்த ஊர் என்பது பலவிஷயங்களில் பெரிய பின்பாரம். விதியை நொந்து கொண்டு ஏக்கத்துடன் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். பாப்பா உற்சாகமாக குதூகலமாக மன எழுச்சியுடன் ஓடி ஓடி இலைகளை எடுத்தது. கை நிறைந்தவுடன் கைகளில் உள்ள இலைகளை வீசிவிட்டு புதிதாக எடுத்தது.
இந்த மானக்கேடான ஏக்க மனநிலை தேவையா என்று குழந்தை பக்கத்தில் வந்ததும் 'எனக்கு ஒரு ஹார்ட்டின் தரியா..' என்று கை நீட்டி விளையாட்டு பாவனையில் கேட்டேன். அது கையை பின்புறம் மறைத்துக் கொண்டது. நான் மேற்படி எதுவும் கேட்கவில்லை. சென்ற வாரம் அஞ்சல் அலுவலகத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டது போல ஒரு முரட்டு பயலிடம் நானாக சென்று மாட்டிக் கொண்டேன். இரண்டு வயது தான். ஆனால் விளையாடுகிறேன் என்று தோளை முதுகை பதம் பார்த்து விட்டான். இந்த பிள்ளைகள் அடிப்பதை விளையாட்டு என்று நினைக்கின்றன. எல்லாம் கார்டூன் பார்ப்பதால் வரும் பழக்கம்.
நான் இலை கேட்டதும் பாப்பா என்னை உற்று பர்த்துவிட்டு நகர்ந்து சென்று சிரித்தபடி ஓடி ஓடி அரசஇலைகளை எடுக்க மரமும் அதே போல இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. இருவேறு பாஷையில் ஒரே உணர்வு.
உச்சிவெயில் நேரம். பெரியவர்கள் கடுப்பாக பேருந்தை திட்டிக் கொண்டிருக்க.....மரமும் குழந்தையும் அவற்றை பார்க்கும் நானும் இன்னொரு குட்டி உலகில் இருந்தோம். என்ன நினைத்ததோ குழந்தை ஓடி வந்து என்னிடம் கணக்காக ஒரு இலையை தந்தது. பக்கத்தில் குமிழ் கல்லாக நின்ற ஓட்டர்களின் குலதெய்வம் இலையால் அபிஷேகம் செய்யப்பட்டதை போல முழுக்க அரச இலைகளுக்குள் பொதிந்திருந்தது.
நேற்று சாயுங்காலம் மழை தூரலாக விழும் போது எவ்வளவு ஹார்ட்டின்கள் என்ற குழந்தையின் குரல் மனதில் வந்தது. பின் மழை வலுவானது. இரண்டு மணிநேரம் அடித்து பெய்தது மழையையே ஹார்ட்டினாக மாறிவிட்டது. உண்மை தானே.. வானம் இந்த நிலம் மீது கொண்ட அன்பே மழை.
மீதூறி பெய்வது. .
அய்யன் சொல்வதைப் போல
வானின்று இறங்கி வரும் அமிழ்தம். உயிரை உண்டாக்கி வாழ்வளிப்பது. அன்பு போல.
விசும்பின் துளி விழவில்லை என்றால் இங்கு பசும்புல்லின் தலை காண்பது அரிதில்லையா..
உயிர்களில் மனித மனங்களில் முகிழ்க்கும் அன்பும், விசும்பின் துளியும் இல்லாமல் உயிர் குலம் தலைகாண்பதும் அரிதுதானில்லையா....
இரவு மழை முடிந்த காலை இனிதிலும் இனிது. சூரியன் பச்சை மலை தொடருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு வெளிச்சம் மட்டும் வீசி விளையாடும் நேரம். மேக நுனிகள் பொன்னாகி கிழக்கு வானம் இளம் சிவப்பாக மாறும். மழை கழுவிய இலைகள் மெல்ல ஒளி கொள்ளும்.
கண்முன்னே மணதக்காளியின் சிறுகரும்பழங்கள் ஒளியில் மினுமினுத்தன. கம்பனின் இருட்கனி என்ற பதம் கண்முன்னே வந்தது. ஒளி கொண்ட கருமை.
இருட்கனியும் போல்பவன் என்று கம்பர் ராமனை சொல்கிறார். வெண்முரசின் கர்ணனும் இருட்கனி.. அந்த அழகை காலை வெயிலில் சின்னஞ்சிறு கரும் பழத்தில் கண்டேன். சிறு துளி போன்ற கனி.
மழைத்துளியும் கனி தான் என்று தோன்றியது. விசும்பின் கனி. நாம் அனைவரும் இந்த உயிர் குலம் அனைத்தும் விசும்பின் கனியால் ஆனது தானே.
அய்யன் குறள் மறுபடியும்..
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


Comments
Post a Comment