Skip to main content

Posts

இற்றைத்திங்கள் அந்நிலவில் 9

 [பிப்ரவரி 2024 சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை] சந்தனம் வாடும் பெருங்காடு நல்வெள்ளியார் நான்கு அகப்பாடல்கள் பாடியுள்ளார்.  தலைவியும் தோழியும்  திணைப்புனத்தில் காவலிற்கு இருக்கிறார்கள். அங்கு வரும் மணிப் பூண் அணிந்த தலைவன் தலைவியிடம் பணிந்து பேசி தன் காதலை அறிவிக்கிறான். மறுக்கும் தலைவியின் மனதிடத்தை வியந்து திரும்பி செல்கிறான்.  அடுத்தநாள் தலைவி இப்படி சொல்கிறாள்.. ‘ இகுபெயல் மண்ணின் நெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடியகூறி’ [அகநானூறு 32] பெய்யும் மழையில் கரையும் மண் போல அவனால் என் மனம் கரைவதை கண்டு கொண்டானோ என்று பதறி மறுத்தேன் என்று வருத்தத்துடன் கூறுகிறாள்.  அதற்கு தோழி… இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே  தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா… என்கிறாள். அடுத்தப்பாடலில் ஒரு த...

வாடிவாசல்

 [2024 ஜனவரி நடுகல் இணைய இதழில் வெளியான கட்டுரை] எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல்.  மதுரை பக்கமிருக்கும் ஊரில் நடக்கும் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வே அதன் கதை.  ஜல்லிக்கட்டிற்காக ஆட்களும் காளைகளும் சங்குவாடியை நோக்கி ஒரு வெயில் மதியத்தில் கிளம்பி சாரி சாரியாக வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. பொழுது அணையும் நேரத்திற்காக கும்பல் காத்திருக்கிறது.  காளைகளை ஜல்லிக்கு விடும் வாடி வாசல் அருகே கூட்டம் இடித்துக்கொண்டிருக்கிறது. வாடிவாசலின் வலதுபுறம் ஊன்றப்பட்ட பனை மரத்தின் பக்கத்தில் திட்டிவாசலில் பிச்சி நிற்கிறான். அவன் ஒரு மாடுபிடி வீரன். அவனுடைய சகா மருதனும் உடன் இருக்கிறான். அவர்களுக்கு அருகில் நிற்கும் ஜல்லிக்கட்டு பார்வையாளரான கிழவர் அவர்களுக்கு பேச்சு துணையாகிறார். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பார்க்கும் அவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். செல்லாயிசாட்டு முடிந்து ஜல்லிக்கட்டு துவங்கப்படும் வழக்கம் முதல் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வை சார்ந்த அனைத்து தகவல்கள...

இற்றைத்திங்கள் அந்நிலவில் 8

 [2024 பிப்ரவரி  சொல்வனம் இணையஇதழில் வெளியாகிய கட்டுரை] வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் காக்கைப்பாடினியார் நச்செள்ளை குறுந்தொகையில் ஒரு பாடலும், புறநானூற்றில் ஒரு பாடலும், பதிற்றுப்பத்தில் ‘ஒருபத்தும்’ பாடியுள்ளார்.  திண்தேர் நள்ளிகானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே  [குறுந்தொகை 210] தலைவன் தோழியிடம் தான் பிரிந்து சென்ற காலத்தில் தலைவியை நலத்துடன் பார்த்துக் கொண்டதற்காக நன்றி சொல்கிறான். அதற்கு தோழி இந்த தொண்டி நாடு முழுவதும் உள்ள பசுக்கள் தந்த நெய்யுடன்,சேரநாடு முழுவதும் கழனிகளில் விளைந்த சோற்றை கலந்து பலிசோறாக வைத்தாலும் அந்த காக்கைக்கு தகும். ஏனெனில் அது தினமும் நம் இல்லத்தில் கரைந்து உன் வரவை அறிவித்ததாலேயே அவள் நலத்துடன் இருந்தாள் என்கிறாள். இந்தப் பாடலில் நாட்டு வளமும், மக்களின் அன்றாட வாழ்வில் தொடரும் நம்பிக்கையும் சொல்லப்பட்டுள்ளது. காகத்தைப் பாடியதால் நச்செள்ளையார் காக்கைப்பாடினியார் என்ற சிறப்பு பெயரால் அ...

இற்றைத்திங்கள் அந்நிலவில் 7

 [2024 ஜனவரி சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை] தீரத்தின் ஔி சங்கப்பெண்கவிகளின் பாடல்களில் ஒப்பீட்டளவில் அகத்தை விட புறம் பற்றிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. என்றாலும் துறவு,மன்னனின் வீரம்,இழப்பு,கைம்மை நோன்பு,தோற்றவனின் வீரத்தை வெற்றவன் முன்பாடுதல் என்று விதவிதமான பாடுபாருட்களில் பாடியுள்ளார்கள். மாறிப்பித்தியார் புறநானூறில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் துறவறம் பூண்டவர்களின் துறவு நிலையையும்,முன்னர் உலகவாழ்வில் அவர்களின் நிலையையும் ஒப்பிடும் பாடல்கள். இவரின் இரண்டு பாடல்களும் தாபதவாகை துறையை சார்ந்தவை. இரண்டு பாடல்களிலும் பாடப்பட்ட தலைவனின் தலைமுடியின் அழகு மாறியுள்ளதை பற்றி சொல்லப்படுகிறது. சடாமுடி வளர்த்தல் மற்றும் நறுநெய்யிட்ட மின்னும் கருங்கூந்தல்  சங்கப்பாடல்களில் அங்கங்கே இருப்பதை காணலாம். துறவின் குறியீடாக புரிசடை உள்ளது. ‘ கழைக்கண் நெடுவரை அருவியாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தேறல் செந்தீ வேட்டுப் புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே [புறம் : 251] இல்லறத்திற்கு பிறகு துறவறம் ஏற்று வாழும் வாழ்க்கையைப் பாடுவது தாபதவாகை எனப்படுகிறது. இரண்டுபாடல்களிலும்  துற...

பாட்டும் தாளமும்

 [ 2024 ஜனவரி 5 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை] மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக கண்ணாமூச்சி ஆடியது. வெளிச்சம் மங்கும் போது கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. சுமதி தோட்டத்திலிருந்து வரிசையாக படுக்கையறைகள் வரை மின்விளக்குகளை ஔிரச் செய்து கொண்டே நடந்தாள். அவள் கொலுசின் ஒலி கலைந்தும், நின்றும், தயங்கியும், சடசடவென்றும் கேட்டுக்கொண்டிருந்தது.  அவள் நடக்கும் போதெல்லாம் மஞ்சள் வாசம் வந்து வந்து போனது.   “லட்சுமிஅக்கா,” என்று அழைத்தபடி நிலைப்படிகளில் மெதுவாக ஏறி தெய்வானை உள்ளே வந்தாள். மஞ்சள் நிற சுங்குடிச் சேலை. விளக்கு வெளிச்சத்தில் அவள் முகமும் மஞ்சளாகியது.  “என்ன…கொஞ்சநாளா இங்க எட்டிப்பாக்கலை,”  “கடைக்குட்டி பேத்திக்கு தலைச்சம்பிள்ளை…கை வேலை எதுவும் முடியாட்டாலும் கூடவே இருந்தேன்… சொல்லியனுப்பினேனே?”  “…” ...

வீடும் வீடு சார்ந்தும்

 நீலி: எழுத்தாளர் உமாமகேஸ்வரி சிறப்பிதழ். நவம்பர் 2023 எழுத்தாளர் உமாமகேஸ்வரி நாவல்கள் பற்றிய கட்டுரை: எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் இரு நாவல்களை வாசித்து முடித்ததும் ஒரு புன்னகை உணர்வு நாள்முழுவதும் இருந்து கொண்டிருந்தது.  எழுத்தாளர் நம் கைப்பிடித்து ஒரு பெரிய வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அங்குள்ள மனிதர்களை, இருள் மூலைகளை, சன்னல் வெளிச்சங்களை,மூச்சுத்திணறல்களை,இனிமைகளை,வலிகளை நமக்கு காட்டுகிறார். வாசிக்கும் போது கண்கள் கலங்கியபடியே இருந்த மனநிலை முடித்தப்பின் இயல்பாக புன்னகையானது எப்படி? பெண்களையே சுற்றி சுற்றி வரும் இந்த இரு நாவல்களும் வாசிக்கும் போது ஒருவித உணர்ச்சிப்பெருக்கும், கண்ணீருமாக இருந்தது.  வாசித்தபின் இந்த மனநிலை  இல்லாமலாகிறது. இது வரை வாசித்த நல்ல படைப்புகளின் இறுதியில் எழும் வெறுமை இதில் ஏன் எழவில்லை? ஏனென்றால் இது முழுக்க முழுக்க பெண்மனநிலையால் பெண்களை எழுதிய நாவல். அது இப்படிதான் இருக்க முடியும். பரவசத்தையும், கண்ணீரையும், தனிமையையும், வெறுமையையும் கடந்து உயிர்படைப்பின் மூலகர்த்தா பெண். படைப்பு உலகின் உணர்வு நிலை பரவசம். எனில் பெண் என்பவள் பரவசம் ...