சக்யை _ ஒரு நினைவு

 பதின்வயதின் கனவு

எழுதும் ஒவ்வொருக்கும் முதல் நூல் என்பது எத்தனை ஆண்டுகளின் கனவு. எழுதத்தொடங்கும் முன்பே பதின் வயதில் மனதில் விழும்விதை. என்னுடைய முதல் புத்தகத்திற்கு நான் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. 


சொல்வனத்திலும் பதாகையிலும் சிறுகதைகளும்,வாசிப்பனுபவங்களும் எழுதிக்கொண்டிருந்தேன். இணையவெளியில் என் கதைகள் இருக்கின்றன என்பது எனக்கு போதுமானதாக இருந்தது. வெளியில் சென்று செய்யும் அளவிற்கு என் அகப்புற சூழல்கள் இல்லை. ஆனால் 2016 ல் இருந்து தொடர்ந்து இடைவிடாது எழுதிக்கொண்டிருந்தேன். 

திடிரென்று ஒருநாள் இரவு சொல்வனம் மைத்ரேயன் அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. வாசகசாலை என்ற அமைப்பு உங்கள் கதைகளை புத்தகமாக வெளியிட விரும்புகிறார்கள். உங்கள் அலைபேசி எண்னை அவர்களுக்கு கொடுக்கட்டுமா என்றும், அது என்ன அமைப்பு என்று நான் விசாரித்துவிட்டேன்...கதைகளை கொடுக்கலாம். எழுதியவை புத்தகமாக வெளிவருவது நல்லது என்றும்  எழுதியிருந்தார்.

வாசகசாலையில் இருந்து முதலில் தம்பி ப்ரவீன் தான் பேசினான். பின் கார்த்திகேயன் வெங்கட்ராமன் பேசினார். கதைகளை தருகிறேன் ஆனால் வெளியீட்டிற்கு வர முடியுமா? என்று தெரியவில்லை என்றேன். அவர் அதை பின்பு பார்த்துக்கொள்ளலாம். கதைகளை அனுப்புங்கள் என்றார். 

வாசகசாலையும் ஒரு பதிப்பகமாக துவக்கநிலையில் இருந்தார்கள். மிகச்சில புத்தகங்களே சக்யை க்கு முன்பு வாசகசாலை பதிப்பாக வெளியாகி இருந்தன. கதைகளை அனுப்பி பிழைபார்த்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். முன்னுரை யாரிடம் கேட்பது என்றதும் முதலில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் தான் நினைவிற்கு வந்தார். அப்போது அவரின் பேசும்பூனை குறுநாவலை வாசித்திருந்தேன். அவரின் காந்திக்கட்டுரைகள் சிலவற்றை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அவரின் மின்னஞ்சல் முகவரி கூட எனக்குத் தெரியாது. கார்த்திகேயன் அவரிடம் 




முன்னுரைக்காக கேட்டுவிட்டு என்னிடம் அவர் எழுதித்தருவதாக சொன்னார் என்று கூறினார். அவர் 2019 ஜனவரி ஒன்றாம் தேதி முன்னுரை எழுதி அனுப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் என் முதல் புத்தகம் வெளியானது. என்னுடன் எழுத்தாளர் பானுமதி அம்மாவின் முதல் புத்தகமும் வெளியானது. ஐந்து புத்தகங்கள் வெளியாகின. என்னை தான் மேடைக்கு முதலில் அழைத்தார்கள். ஐந்து நாற்காலிகளுக்கு நடுவில் அமர வேண்டும் என்பது தெரியாது இருந்ததிலேயே ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். விழா முடிந்து குழு புகைப்படம் எடுக்கும்போது ஓரத்தில் நின்றேன். கார்த்திகேயன் அருகில் ஓடிவந்து இது உங்களுக்கான விழாம்மா...இங்க வாங்க என்று நடுவில் அழைத்தார். கிளம்பும் போது நல்ல உயரமான ஒருவர் நான் அருண் என்று சொன்னார். ஏற்கனவே கழுத்து வலி. அன்னாந்து அவரை பார்த்தபடி சிலவார்த்தைகள் பேசினேன்.  கைக்குலுக்கும் போது சிரித்தபடி வாசகசாலை உறுப்பினர் என்றார். 

முதல் புத்தகம் வந்துவிட்டது என்பதை அரசு பேருந்தில் ஊருக்குள் நுழையும் அதிகாலையில் நம்பமுடியவில்லை. ஆனாலும் மனதிற்குள் மதுரம். பதின்வயதின் முதல்விருப்பம் இது. கடவுளை கண்ணாற பார்க்கனும் என்று வெகுளியாக அதன் விரிவு தெரியாது சொல்வதை போன்று எழுதனும் என்று சொல்லித்திரிந்த நாட்களை நினைத்துக்கொள்கிறேன். மருத்துவர்,பொறியாளர்,ஆசிரியர் கனவுகளுடன் பிள்ளைகள் இருந்த போது நான் எழுத்தாளர் கனவில் இருந்தேன். அந்த வயதின் கனவு வெகுசில பேருக்கே வாய்க்கிறது. எனக்கு காலத்தின் கணக்குகளால் கொஞ்சம் தாமதமாகியது.

                தம்பியும் தங்கையும்

எழுத வேண்டும் என்ற கனவு ஒரு போதும் முடிவுறாத கனவு.

Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்