நேர்காணல் : எழுத்தாளர் கா.சிவா

        2023 ஜூலை வாசகசாலை இணையஇதழில்  வெளியான  நேர்காணல். எழுத்தாளர் கா.சிவா அவர்களுக்கு நன்றி.

மனித மனதின் நுண்தளங்கள் 

இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின்  சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த  புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக வைத்தும்,அவர் புனைவுலகம் சார்ந்தும், அவரின் முதல் நேர்காணல் என்பதால் எழுத்தாளராக அவரை எடுத்து வந்த விசைகள் சார்ந்தும் இந்த நேர்காணலை விரித்தெடுக்கலாம். மீச்சிறுதுளி என்ற வார்த்தையை  இதுவரை கா.சிவா எழுதியுள்ள சிறுகதை புனைவுலகிற்கான சாவியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மீச்சிறுதுளியே பெருங்கடலாக விரிய சாத்தியமுள்ளது. அல்லது ஒன்றுமில்லாமல் ஆகக்கூடிய சாத்தியமும் உள்ளது. கதைகளில் திரிபாகும் இந்த மீச்சிறு துளியே, திரிந்தப்பின் எஞ்சும் அமுதத்துளியாகவும் மாறும் விந்தை இந்தக்கதைகளில் உள்ளது. அந்த அமுதமே நம் லௌகிகத்தின் அடியில் உறையும் துளி இனிமை. வாழ்வின் அத்தனை உவர்ப்பிற்கு அடியில் உறையும் துளி இனிமை அதன் இருப்பால் உன்னதம் கொள்கிறது. அண்மையில் வெளியாகியுள்ள கரவுப்பழி என்ற சிறுகதை தொகுப்பிற்காகவும்,முதல் கவிதைத்தொகுப்பான கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு என்ற முதல் கவிதைத்தொகுப்பிற்காகவும் எழுத்தாளர் கா.சிவாவிற்கு  வாழ்த்துகளும் அன்பும்.


எழுத்தாளர் கா.சிவா

1. எழுதலாம் என்று உங்களுக்கு தோன்றியது எப்பொழுது?

 சிறு வயதிலிருந்தே வாசிப்பு பழக்கம் இருந்தாலும் ஆசிரியர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அவரவர் கதைகளை அவரவர்களே எழுதமுடியும். ஒருவர் கதையை வேறு யாராலும் எழுத முடியாது என சொல்லியிருந்தார். இந்தக் கருத்து என் மனதில் பதிந்து விட்டது. இதன் பிறகுதான் எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்தது. அது 2018 - 19 - ஆம் ஆண்டு என்றே நினைக்கிறேன். 


 2.முதல் கதை எது? முதல் கதை அனுபவத்தையும் சொல்லுங்கள்

 கண்ணாடியின் மிளிர்வு என்ற சிறுகதைதான் என் முதல் கதை. 

ஒரு தாய் தான் செய்வதுதான் சரியானது,  சிறப்பானது என்ற எண்ணத்துடனேயே எல்லாவற்றையும் இயற்றுகிறார். அவர் அமைத்துக் கொடுத்த அவருடைய மகளின் வாழ்வில் பெரும் இடர் ஏற்படுகிறது. ஆயினும் தான் எடுத்த முடிவு சரியானதுதானென அதை மற்றவர்களிடம் எப்படி பாவனை செய்கிறார் என்பதை எழுதியிருந்தேன். ஆனால், தலைப்பையும் கவனிக்காமல், அந்தத் தாயின் தன்னம்பிக்கை பற்றிய கதையாகவே எல்லோராலும்  வாசிக்கப்பட்டது.


3.எப்பொழுது வாசிப்பின் மீது ஈடுபாடு தொடங்கியது?

  நான் ஊரிலிருந்து சென்னைக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போது வந்தேன். பிறரிடம் பழகுவது தயக்கத்துடன்தான். இதே குணத்துடன் இருக்கும் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அதில் ஒருவன் சந்திரசேகரன். போலியோவினால் கால் பாதிக்கப்பட்டிருந்த அவன் மூலம்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் வந்தது என்பதை மிகப்பரவசத்தோடு இப்போது நினைவு கூர்கிறேன். அவன் ஒரு கையெழுத்து பத்திரிக்கை தொடங்கினான். ஆறாம் வகுப்பில் பயன்படுத்தப்படாத கோடுபோட்ட நோட்டுகளின்  ஆறு பக்கங்களை கிழித்து நூலால் முனையில் தைத்திருப்பான். அதில் தினமலரின் வெள்ளிமலர் போன்று சிறுவர் கதைகள், துணுக்கு, விடுகதை மற்றும் படக்கதை எல்லாம் அவனே உருவாக்குவான். .  ஒரு நான்கு பேர் வாசிப்பதற்காக இவ்வாறு செய்யச்சொல்லி அவனைத் தூண்டியது எது என இப்போது நினைக்கும்போது வியப்பாக உள்ளது. ஆனால் அப்போது தோன்றியதில்லை. அந்தப் பிரதியை விருப்பத்துடன் வாசித்தேன். தொடர்ந்து அவன் அறிமுகம் செய்த பூந்தளிர், அம்புலிமாமா என விரிந்த என் வாசிப்பு க்ரைம் நாவல், குமுதம், ஆனந்த விகடன் என மாறியது. பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த சந்திரசேகரன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என தெரியவில்லை. அவனால் தூண்டப்பட்ட நானே எழுத ஆரம்பித்துள்ளபோது அவனும் எழுதிக்  கொண்டிருப்பான் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன். 


4. நீங்கள் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்? 

   என் இலக்கிய வாசிப்பு வண்ணதாசனில் இருந்தே தொடங்கியது. இப்போதுவரை வாசித்து வருகிறேன். ஆனந்த விகடன் தொடர்ந்து வாசித்து வந்ததால் அதில் பிரசுரமான கதைகள் மூலம் நாஞ்சில் நாடன் மேல் பெரும் பிரமிப்பு ஏற்பட்டது. வண்ணதாசனின் அழகியலில் இருந்து மாறுபட்ட எழுத்தாக இருந்தாலும் அதன் கூறல் முறையின் வசீகரம் என்னை ஆட்கொண்டது. இன்றுவரை தொடர்கிறது. ஆசிரியர் ஜெயமோகனின் எழுத்துகளுடன்தான் பத்தாண்டுகளாக கண்விழிக்கிறேன். ஜெயமோகன் மூலமாக அறிந்த கவிஞர் தேவதேவன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். அவற்றை மனனம் செய்வதில்லை. அதிலுள்ள குழந்தைமையும் இயற்கை மீதான வியப்பும் தரும் ஈர்ப்பினால்  அலுவலகத்தில் என் மேசையில் இருக்கும் அவரின் பெருந்தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். 



5. வாசிப்பின் தொடக்கத்தில் உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்? உங்களின் ஆதர்சன எழுத்தாளர்கள் பற்றியும் கூறுங்கள்.

தொடக்கத்தில் ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள்மேல் பெரும் பித்து இருந்தது. பழைய புத்தகக் கடைகளில் தொங்கவிட்டிருக்கும் ஒரு நூலை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி படித்துவிட்டு திரும்பக் கொடுத்து மற்றொன்றை எடுத்தால் ஐம்பது பைசா கொடுத்தால் போதும். ஐம்பது பைசா வாடகை போன்று கணக்கு. அதன்பின் சுஜாதா, வைரமுத்து இருவரின் நூல்களின் மீது பித்து ஏற்பட்டது. அப்போது நூலகத்தில் வண்ணதாசனின் "கலைக்க முடியாத ஒப்பனைகள்" சிறுகதைத் தொகுப்பை எதேச்சையாக எடுத்து வாசித்தேன். இதுவரை வாசித்த அனைத்தையும்விட புதுமாதிரியாக இருந்தது. சுவராசியம் குறைவாகவும் தெளிவாக புரியாததுபோல் இருந்தாலும் ஒருமாதிரி பிடித்திருந்தது. அவரது நூல்களை தொடர்ந்து வாசித்தபோதுதான் "வண்ணதாசனின் கடிதங்கள்" நூலையும் வாசித்தேன். கதைகளை நூலாக்கலாம் ஆனால் கடிதங்களை நூலாக்கியுள்ளார்களே என்ற ஆச்சர்யத்துடன் அதை வாசித்தேன். மனதளவில் எனக்கு மிக நெருக்கமானவராக மாறிவிட்டார் வண்ணதாசன். ஒரு கடிதத்தில் "தி. ஜானகிராமன் நூல்களில் மரப்பசுவைவிட மோகமுள்ளைவிட என்னைக் கவர்ந்தது உயிர்த்தேன்தான். அதில் வரும்  அனுசுயா மாதிரி பாத்திரம் வேறெதுவும் இல்லை" எனக் குறிப்பிட்டிருப்பார். அதன் பிறகு தி. ஜானகிராமனின் நூல்களை தேடித்தேடி வாசித்தேன். உயிர்தேன் நாவலைத்தான் முதலில் வாசித்தேன். மற்ற நாவல்களை எல்லாம் வாசித்த பின்பும் அனுசுயா, கெங்கம்மாள் மற்றும் பழனி பாத்திரங்கள் நெஞ்சைவிட்டு அகலாமல் இப்போதுவரை நீடிக்கின்றன. 

  தொன்னூறுகளில் எங்கள்  வீட்டில் தினமணி நாளிதழ்தான் வாங்குவது. அதில் நூலறிமுகம் பகுதியில் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய குறிப்பினைப் பார்த்து அந்நூலை வாங்கினேன்.  அப்போது முதல் இதுவரை ஆசிரியர் ஜெயமோகனின் அத்தனை நூல்களையும் (ஏழாம் உலகம் தவிர) வாசித்துள்ளேன். தினமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏழாம் உலகம் நாவலை இரண்டு முறை முயன்றும் மூன்றாவது அத்தியாயத்திற்கு மேல் நுழைய மனதில் திடமில்லை.

   ஆசிரியர் ஜெயமோகன் மூலம் அறிமுகமான ரஷ்ய எழுத்தாளர் தல்ஸ்தோய் மற்றும் தஸ்தவோஸ்கியும் எனக்கு பிரியமானவர்கள். அவர்களின் நூல்களை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எழுதப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது எழுதப்பட்டது போன்ற மிளிர்வு அவற்றில் இருப்பதை வியக்கிறேன். 


6. எழுத்து உங்களுக்கு என்னவாக இருக்கிறது? எதற்காக எழுதுகிறீர்கள்?

 யாரிடமும் கூறிட முடியாமல் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விசயங்களைத்தான் முதலில் எழுதத் தொடங்கினேன். எழுதியபின் மனம் சற்று ஆசுவாசம் கொள்கிறது. தற்போது, வலி நிவாரணிபோல  எழுத்து எனக்கு ஒரு உறுத்தல் நிவாரணியாக உள்ளது எனக் கொள்ளலாம்.


7. எது உங்களை எழுதத்தூண்டுகிறது?

  இது ஏன் இப்படி நிகழ்ந்தது. அல்லது நிகழ்கிறது. இதற்கு ஏதோவொரு காரணம் அல்லது தூண்டுதல் இருக்கத்தான் வேண்டும். அது என்னவாக இருக்கக்கூடும் என நான் கருதுவதை எழுதுகிறேன். இப்படி நிகழ்வதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம் என்ற தரப்பை முன்வைப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


8. கள்ளம் கலைதல் கதையில் இயல்பாக மனதில் உள்ள கள்ளத்தை கிராம நடைமுறைகள் சார்ந்து எழுதியிருக்கீங்க..அந்தக் கதைப் பற்றி..

  கிராம பஞ்சாயத்துகள் எத்தனை நூறு ஆண்டுகள் நடந்து வருகின்றன. இப்போதைய நவீன காலத்தில் அது ஒரு வேடிக்கையான ஒன்றாக இளையவர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் வழிமுறைகள் மனிதரின் மனங்கள் இயங்கும் விதத்தைக் கணித்து அதற்கேற்ப பரிணமித்தே வந்திருக்கும் என நான் கருதுகிறேன். தனிப்பட்ட சிலரின் கீழ்மைகளால் பல இடங்களில் சீரழிந்துள்ளது என்றாலும் பஞ்சாயத்து என்பதன் நோக்கம் நேர்மறையானதாகவே இருந்திருக்கும். இக்கதையில் நிகழ்வது போன்ற எத்தனை எத்தனை பிறழ்வுகளை பஞ்சாயத்து கண்டிருக்கும். அவற்றை தண்டிக்காமல் களைவதற்கான வழிமுறைகளையும் கண்டடைந்திருக்கும்தானே. மேல் பார்வைக்கு வேடிக்கையாக தெரிவதெல்லாமே வேடிக்கையாக மட்டும் இருந்திடாது என்பதையும் அக்கதையின் வழி கூற முயன்றுள்ளேன்.


9. உங்கள் கதைகளில் கணிசமான அளவு கிராமம் சார்ந்த கதைகள் உள்ளன…மிக இளம் வயதில் இருந்தே நீங்கள் நகரவாசி. கிராமம் சார்ந்த கதைகளின் நிலவிவரணைகள், மக்களின் இயல்புகளை எப்படி உங்களால் கொண்டு முடிகிறது? கதைகளின் நிலக்காட்சிகளை வாசிக்கும் போது உள்ளுக்குள் அந்த கிராமத்து சிறுவன் அப்படியே இருக்கிறான் என்று தோன்றும். இயல்பாகவே கிராமம் சார்ந்து எழுதுகிறீர்களா..இல்லை சிறப்பு கவனம் எடுத்துக் கொள்கிறீர்களா?


   நான் பதினோரு வயதில் சென்னைக்கு வந்தேன். வந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் நகரத்துவாசியாக என்னால் உணரவோ மாறவோ முடியவில்லை. ஊரில் சென்று வாழவேண்டும் என்ற ஆவல் மனதினுள் நீங்காமல் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் பெரும் நிலைகுலைவை அடைகிறேன். என் கிராமம் அதாவது நான் விட்டு வந்த கிராமம் அங்கில்லை. பெருநகரத்தின் புறநகர் பகுதிபோலவே இப்போது மாறிவிட்டது. ஆனால், என் மனதில் இருக்கும் கிராமம் அப்படியே உள்ளது எந்த மாற்றமும் இல்லாமல். என்னுள் அந்த பதினோரு வயது கிராமத்து சிறுவன் இன்னும் வயதடையாமல் அப்படியே இருக்கிறான். அதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

  நான் எழுதும் கிராமம் என் மனதிலிருந்து இயல்பாக எழும் பழைய கிராமம்தான். இதை நேரில் சென்றால் காணமுடியாது.


10. மனதில் தோன்றும் சிறு பிசிறல்,சிறிய திரிபு போன்றவை உங்கள் கதைகளின் மையமாக உள்ளது. ஒரு துளி மோர் பாலில் விழுவதைப்போன்ற மனநிலைகள், செயல்கள்  உங்கள் கதைகளின் கருப்பொருள்களாக  இருக்கின்றன. இந்த சின்னஞ்சிறு வஞ்சங்கள் தான் உங்களை தொந்தரவு செய்து எழுத வைக்கின்றனவா?

   பெரிய அண்டாவிலிருக்கும் பாலை சிலதுளி மோர் உறைகுத்தி விடுவதைப் போல சிறு வஞ்சமோ பிறழ்வோ பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. நான் கவனிப்பது மிகப்பெரிய அழிவுகளுக்கு காரணமாக அமைகின்ற ஏதோவொரு வஞ்சத்தைப் பற்றி. பெரிய கட்டடங்கள் சிதைவதற்கு சில சிதல்களே வேராக இருக்கும். அந்த சிதல்களின் மூலம் எது என்பது முக்கியமல்லவா. அந்த மூலம் எதுவாக இருக்கும் என நான் கருதுவதை முன்வைக்கிறேன். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் வாய்ப்பும் உள்ளது என்றே கருதுகிறேன்.


11. உங்கள் கதைகளில் திரிபென்று எதுவும் இல்லை. அந்த சிறு துளிகளும் ஒன்றை மற்றொன்றாக மாற்றுகிற ஒன்றாகவே இருக்கிறது என்று வாசிக்கும் போது தோன்றுகிறது. பால் தயிரானால் என்ன? என்பதைப்போல.  லௌகீகத்தின் இயல்பே திரிதல்களால் ஆனது என்று நினைக்கிறீர்களா?

உலகத்திலுள்ள வாழ்வு ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பதுதான். மாறுவதன் மூலமே உலகம் உயிர்ப்புடன் திகழ்கிறது. அந்த மாற்றம் உண்டாவதற்கான காரணி என்ன என்பதைப் பற்றியே நான் கவனிக்க முற்படுகிறேன். நான் கணிப்பது தவறாக இருக்கலாம். ஆனாலும் ஆராய்வதில் தவறில்லையல்லவா. 


12. தீவிரமான வஞ்சங்களை திரிபுகளை நோக்கி எழுதாமல் இந்த சின்னசிறியவற்றிற்கு உங்கள் உள்ளம் கனிவது குறித்த வியப்பு உங்களை வாசிக்கும் தோறும் எனக்குத்தோன்றும்..அந்த சின்னஞ்சிறு வஞ்சங்கள் பற்றி

   எத்தனை அணுக்கமானவர்கள் மீதும் சிறு புகாரோ பொறாமையோ இருந்துதான் தீரும். அந்த சின்னச்சிறியவற்றின் மீது கனிவென்று ஏதுமில்லை. ஒரு வியப்பு என்று சொல்லலாம். சிறு உளி மாமலையை பொடியாக்குவதைப் போல சிறு வஞ்சங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாண்டமானவை. அந்த அழிவை காண்பவர்கள் தங்கள் வஞ்சம்தான் அதன் மூலம் என்று உணரும்போது பெரும் குற்றவுணர்வை அடைகிறார்கள். ஆசிரியர் ஜெயமோகனின்  வெண்முரசு நாவலில் சகுனி தன்னால் தொடங்கப்பட்ட போரினால் ஏற்படும் பேரழிவைப் பார்த்து பதைத்து திகைக்கும் காட்சி உள்ளது.

13. பொதுவாக நண்பர்களுக்குள் இருக்கும் எதிர்பாராத மாறுதல்களை கதையாக்கி இருக்கிறீர்கள். உங்கள் தொகுப்பில் உள்ள நண்பர்களின் கதைகள் பற்றி..

   பேசுவதில் தயக்கம் கொண்ட எனக்கு நண்பர்கள் குறைவுதான். அவர்கள் என் அலைவரிசையில் இருப்பவர்கள். என்னை முழுதாகப் புரிந்தவர்கள். ஒரு விசயம் பேசும்போது அதில் எனது கருத்து என்னவாக இருக்கும் என்பதுவரை கணிக்கக் கூடியவர்கள். நட்பு எத்தனை ஆழமானதாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தவர்களே. அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் விழைவுகளும் ஊடாடிக் கொண்டேதான் இருக்கும். இது நட்பை பாதிக்கவோ பயன்படுத்திக் கொள்ளவோ செய்கிறது. இதைத்தான் கூற முயன்றுள்ளேன்.  

14. சங்கர் என்ற ஒருவர் தொடர்ந்து உங்கள் புனைவுலகில் வருவது பற்றி..

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கதைகளில் வரும் கிருஷ்ணன் பாத்திரம் எனக்கு பிடித்தமானது. எழுத்தாளர்தான் இப்பாத்திரத்திரமோ என எண்ணவைக்கும் வகையில் தன் சாயலில் அதைப்  படைத்திருப்பார். ஆசிரியர் ஜெயமோகன் தனது இளமைக்கால கதைகளில் தன் பாத்திரத்தை அனந்தன் என்னும் பெயரில் படைக்கிறார். 

      ஒரே பெயரில் வரும் பாத்திரங்களில் உள்ள வசதி என நான் கருதுவது, ஒரு படிமம் போல பெயரைக் குறிப்பிட்ட உடனேயே அந்தப் பாத்திரத்தின் குணநலன்கள் பற்றிய சித்திரம் வாசகர் மனதில் தோன்றிவிடும். கூடுதலாக உள்ளதை மட்டும் கூறினால்போதும். சங்கர் பாத்திரம் சிறிது எனது சாயலில் உருவானதுதான்.


15. மோக முள் நாவலில் வருவது மாதிரி ஒரு கதையில் பழைய காதலியின் தோற்றத்தை பார்த்த காதலனுக்கு  இதையா நான் நேசித்தேன் என்று கேள்வி அவரை குடையும்? இந்த மாதிரி காதலிகளின் கதைகள் உங்கள் கதை உலகில் பரவலாக இருக்கிறார்கள்.  காதல் பற்றி…

அவளையா நேசித்தேன் என்ற கேள்வி குடையும். ஆனால் நேசித்தது என்றும் மாறாது நிலைத்திருக்கும் ஒன்றை என்றே கதை முடியும். இதுவரை வெளிவந்த கதைகளிலேயே என் அசல் காதலிகளின் கதையே மூன்றில் உள்ளது. 

காதல் என்பது நிபந்தனையற்ற அன்பு என நான் கருதுகிறேன். கண்களில் தொடங்கி காமத்தில் நிறைவடைவது போன்ற கருத்துகளை நான் ஏற்கவில்லை. காதலிக்கும் இருவர் மணந்து கொண்டால் அவர்களின் காதல் மரித்துவிடும் என்பது என் தரப்பு. அதாவது காதல் என்பது நிபந்தனையற்றது, எல்லையற்றது. திருமணம் என்பது கட்டுப்பாடுடையது, எல்லை தாண்டக்கூடாதது. காதல் என்ற எல்லையற்ற ஒன்றிலிருந்து திருமணம் என்ற எல்லைக்குள் அடைபடுவது. காதலுக்கும் திருமணத்திற்குமான இந்த வேறுபாடு புரிந்தவர்கள் கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். புரியாதவர்கள் நேற்றுவரை இருந்த நீ இன்றில்லை என்று புலம்புகிறார்கள். பிரிகிறார்கள்.

  என்னைப் பொருத்தவரை காதல் நிபந்தனை அற்றது. அவள் உணராவிட்டாலும் திருப்பி செலுத்தாவிட்டாலும் ஏன்  திரும்பி பாராவிட்டாலும் நிலைத்து இருப்பதுதான் காதல்.


16. உங்களின் முதல் கவிதைத்தொகுப்பு  அண்மையில் வெளியாகியுள்ளது. அதை பற்றி சொல்லுங்கள். மேலும் சிறுகதையிலிருந்து கவிதைக்கான உங்கள்  மாற்றம் பற்றி கூறுங்கள்


 கவிதைத் தொகுப்புதான்  என் முதல் நூல். மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துவிட்ட நிலையில், அதை முதல் கவிதை நூல் எனக் குறிக்கலாம்தான். ஆனால் முதல் சிறுகதையை தொடங்குவதற்கு முன்பே எழுதி முடிக்கப்பட்ட கவிதைகள்தான் இப்போது நூலாகியுள்ளது. எனவே இதை என் முதல் நூலென்றும்  கருதலாம். 

     இக்கவிதைகளை எழுதியபோது இருந்த மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். பதின் பருவ இளைஞன் தன் மனதில் வரித்திருக்கும் காதலியை நேரில் காணும்போது எழும் பரவச நிலையிலும் எதைச் செய்வதென்று தோன்றாமல் அகம் திகைத்து திரியும் உன்மத்தத்தையும் அப்போது நான் கொண்டிருந்தேன். ஆனால் என் வயது அப்போது நாற்பது. நாற்பது வயதில் காதலியை கண்டடைந்தவன் எழுதிய கவிதைகள்தான் அவை.

  கவிதையில் இருந்துதான் சிறுகதைக்கு மாறினேன். காதலைத் தவிரவும் எழுதுவதற்கு ஏராளம் உள்ளன என்று தோன்றியபோது சிறுகதைக்குள் நுழைந்தேன்.


17. உங்கள் கதைகளில் வேணியம்மை,மழுக்கய்யா என்று சிறு தெய்வங்கள் நிறைய வருகின்றன. உங்கள் கதைகளின் சிறுதெய்வங்கள் பற்றி..

ஊரில் எந்த விசயமானாலும் "அய்யனாரை நெனைச்சு துன்னூறு பூசிக்க. ஆத்தாவ நெனச்சு இந்தக் காரியத்தப் பண்ணு..." என்றே முதலில் கூறுவார்கள். குன்றக்குடி முருகன் பழனி முருகனெல்லாம் பிறகுதான். எங்கள் ஊரிலேயே ஒரு பெருமாள் இருக்கிறார்.  கோயில் வழியாக  வரும்போதும் போகும்போதும் அவரை வணங்கிக் கொள்வோம். ஆனால் எந்தவொரு பிரச்சனைக்கும்  முதலில் அய்யனையும் ஆத்தாவையும்தான் அழைப்போம், அழைப்பார்கள். அப்படித்தான் என் கதைகளிலும் இயல்பாக இடம் பெறுகிறது.


19. முதல் தொகுப்பில் உள்ள இருமை என்ற கதையிலிருந்து, இரண்டாவது தொகுப்பின் மீச்சிறுதுளி என்ற கதை, மூன்றாவது தொகுப்பின் கதைகளான கரவுப்பழி, நோற்பு, தோற்றங்கள் வரையான கதைகளில் ஒரு transformation ஐ ஒரு வாசகியாக என்னால் உணரமுடிகிறது..தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு நிலையில் இருந்து,விடுதலை அளிக்கும் களங்கமின்மை என்ற நிலையில் உங்கள் கதைகள் வந்து நிற்பதை எப்படிப்பார்க்கிறீர்கள்? 

  என்னுள் வந்த மாற்றமா என்பதை சரியாகக் கூறமுடியவில்லை. கதைக் கருவினை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று தோன்றுகிறது. கருவினை தேர்வு செய்வது மனதில் அடைந்த மாற்றம்தான் என்றும் கொள்ளலாம்.

   அல்லது மனதில் கரந்திருக்கும் வஞ்சங்களால் நான் அடைந்த நிலையழிவை மெதுவாக மனதளவில் கடந்து வருகிறேன் என்றும் தோன்றுகிறது. எழுத எழுத ஒன்றிலிருந்து  அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் கருதலாம்.

20. வாழ்வின் பலநூறு தருணங்களில் கதையாகும் ஒன்றை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? 

     ஒருவரின் வாழ்வோ, ஒரு செயலோ செவியில் விழும்போது இது ஏனிப்படி நிகழ்கிறது அல்லது நிகழ்ந்தது என்ற கேள்வி மனதிற்குள் சிறு முள்போல் தைத்துவிடுகிறது. அதன்பின், நமைச்சலாக தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும். எழுதி மட்டுமே கடக்கமுடியும் என்ற நிலையில் எனக்கு தோன்றும் வழிமுறையில் எழுதுகிறேன்.

 கருத்  தேர்வு என் கையில் இல்லை. தற்செயலாகவே என்னை வந்தடைகிறது என்றே எண்ணுகிறேன்.



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்