Skip to main content

புதிதாக எதையும் கற்பிக்கவில்லை

 [ 2019 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை ]

                                                       புதிதாக எதையும் கற்பிக்கவில்லை                           

நூல்:சத்தியசோதனை

ஆசிரியர்:மோகன்தாஸ் கரம்சந் காந்தி

என்னுடைய பதினான்காவது வயது கோடைவிடுமுறையில் தந்தையால்  பரிசளிக்கப்பட்ட புத்தகம் சத்தியசோதனை.பத்துநபர்களைக் கொண்ட வீட்டில் காந்தியை விமர்சிக்கும் ஒருதரப்பும்,வழிபடும் மறுதரப்பும் என்னை குழப்பிய  நாட்கள் அவை.


அய்யா தினமும் போராடி வீட்டின் வழக்கமான குடும்பப் பேச்சு சூழலை ,பிள்ளைகளுக்காக  மாற்றிக் கொண்டிருந்தார்.அவருக்கு பிடித்த அல்லது தெரிந்த ஆண்டாள், காந்தி,நேரு,காமராஜர்,பாரதி,பெரியார்,கல்கியால் ஆனது  அந்தவட்டம்.

“புரியலேன்னாலும் சத்தியசோதனைய படி..அடுத்த வருஷ லீவிலயும் படிக்கனும்..ஒவ்வொரு வயசில படிக்கறப்பவும் புதுசாதான் இருக்கும்..”என்றார்.

தனிப்பட்ட பேச்சில் அவருக்கு எதிர்கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த நான் ஏன் நிறையமுறை படிக்கனும் என்றேன்.“முதல்ல படி,” என்றார். “சுயசரிதைய  ஏன் படிக்கனும்,” என்று பேச்சு நீண்டு கொண்டிருந்தது. அய்யா முகச்சவரம் செய்ய, முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். தினமும் அந்த நேரம்தான் எங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரம்.

“நாலுபேரு பாக்க பொட்டப்பிள்ள பெத்தஅப்பன நிமிர்ந்து பாத்து பேசறது இந்தவூட்லதான் நடக்குது..” என்ற தன்அம்மா செல்லும் வரை காத்திருந்தார்.  தலைகுனிந்து நின்ற என்சடையை பிடித்து ஆட்டியபடி, “நிமிந்து பாரு பாப்பா..இந்தப்புத்தகத்தை படிச்சுமுடி…ரெண்டு பேரும் தனியா சண்டை போடலாம்…நீ என்கிட்ட கேள்வி கேக்கறாப்ல படிச்சிருக்கனும்,”என்று சிரித்தார்.

அன்றுதான் முதன்முதலாக, “பெரியபிள்ளையானதும் உன்னோட பேருக்கு பின்னாடி என் பெயரை எழுதற பழக்கத்தை வச்சிக்காத,”என்று சொல்லியதாக நினைவு.

எங்கிருந்தோ எழுந்து ஒரு மலையோர கிராமத்தின் எளிய மனிதர்கள் வரை தன்ஔியை பாய்ச்ச வல்லவை புத்தகங்கள். காலங்காலமாக களிம்பென படிந்துபோன ஆதிக்ககுணத்தை தட்டி எடுத்து அப்புறப்படுத்துபவை. வாசிப்பு என்பதும், எழுத்து என்பதும் இல்லாமலிருந்திருந்தால் வலியவர் வகுத்த வாய்க்கால் மட்டுமே வழியாக இருந்திருக்கும். மேலும் தரமான நூல்களை காலந்தோரும் நினைவுபடுத்துவதன் மூலம் ஏதோ ஒருவகையில் எழுதியவரின் உழைப்பிற்கு நியாயம் செய்யப்படுகிறது.

இந்த வாசிப்பனுபவத்தை எழுதத் துவங்குகையில் குறைந்தது கோடிநபர்களாவது வாசித்திருக்க வாய்ப்புள்ள ஒரு நூலைப்பற்றி என்ன எழுதுவது? என்ற கேள்வி வந்ததும் காந்தி மனதில் வந்து நின்றார்.

அவர் எதைத் துவங்குகையிலும் இருமுனை மனநிலையிலிருந்து பின் துணிந்து தீவிரமாக எழுகிறார். நிறைவேற்றி விளைவுகளை பரிசீலிக்கும் போதும் அதே  மனநிலையில் பரிசீலிக்கிறார். அதனாலேயே தன் வாழ்வை சோதனைக்களமாகக் கண்டிருக்கிறார். அவர் தரும் நம்பிக்கையிலேயே எழுதலாம் என்று தொடங்கினேன். ஒரு தனிமனதில் காந்தி என்னவாக இருக்கிறார் என்பதே இந்தக் கட்டுரையின் பேசுபொருள்.

காந்திக்கு தன் செயல்களில் இருந்த ஒரே நம்பிக்கை சத்தியத்தின் அடிப்படையிலிருந்து எழுகிறது என்ற நம்பிக்கை. இந்த ஒரு பற்றுகோலை வைத்து வாழ்நாள் முழுவதும் தன்னை அலைகழித்த கேள்விகளை,சோதனைகளை,சிக்கல்களை,புதுமுயற்சிகளை,எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்.

என் அடுத்தடுத்த வாசிப்பில் காந்தியுடன் அந்தந்த வயதுக்கு ஏற்ற நெருக்கமோ, விலக்கமோ உண்டாகிக் கொண்டிருக்கிறது. காந்தி என்னுடனிருக்கும் மனிதர்களுள் ஒருவர் என்ற உணர்வை உண்டாக்குவது இந்த எழுத்தில் உள்ள சத்தியத்தின் வலிமை. பெரும்பாலும் எழுத்தாளர்களை அப்படி உணர்வோம்.

காந்தியை பின்பற்ற வேண்டும் என்ற நினைப்பு இருந்ததில்லை. ஏனெனில் அதற்கு அதீத மனவலிமை அவசியம். ஆனால் தொடர்ந்த வாசிப்பின் மூலம் அவர் எவ்வாறோ உள்ளிருக்கிறார். முக்கியமாக காந்தி நமக்கு அளிக்கும் வாழ்வியல் சார்ந்த சிந்தனை என்பது எப்பொழுதும் எதிர்நிற்பவரை புரிந்து கொள்ள முயற்சிப்பது மற்றும் நாம்  சரியானவை என்று நினைப்பவற்றில் பிடிவாதமாக இருப்பது.

காந்தி விளைவுகள் பற்றிய பதட்டத்தை, தயக்கத்தை நீர்மேல் பாசி என வாழ்நாளெல்லாம் விலக்கி வழி சமைத்துக்கொண்டவர். அதே நம்பிக்கையை நமக்கும் அளிக்கிறார். பொறுப்பில்லாமல் இருக்கத் துணியும் மனதை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். கடைகளுக்குள் நுழைகையில் உடன் வருகிறார். காந்தியால்தான் அத்தனை பெரிய கடல்களில் இருந்து கைக்காசுடன் தப்பிக்கிறேன். நுகர்வு பற்றி பேசிக்கொண்டே இருந்த மனிதர் அவர். புத்தகங்கள் வாங்குவதில் பொறுப்பில்லாமல் இன்னும் இருப்பதால் வாங்க வேண்டிய பட்டியலை பத்துநாட்களாவது பரிசீலிக்க சொல்வது காந்தி தான்.

வீட்டில் சொல்ல மாட்டார்களா? என்றால் எங்களின் பெரிய குடும்பத்தில் அபிப்ராய பேதங்கள் அதிகம். காந்தி நம்மையே கேட்டுப் பார்க்க சொல்வதால் மற்றவர்கள் மேல் குறைசொல்லி தப்பிக்க வழியில்லை. இலக்கியப் பித்திற்கான இயல்பிருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு நான் எடுக்கும் முடிவுகளில் பொறுமை காக்க காந்தி அருகில் இருக்க வேண்டியிருக்கிறது. நம் முன் கல்வி நிலையங்களில்,சுவர்களில்,சாலைகளில்,கைப்பொருளில் என்று எங்கும் விரிந்து கிடக்கும் நம் மனசாட்சியே காந்தி. எனவே நம்மை நமக்கே சுட்டிக் காட்டுவதாலேயே காந்தி மீது இத்தனை விலக்கமும்,நெருக்கமும் என நினைக்கிறேன்.

காந்தி தனிமனித,சமூக,பொருளாதார,மத,பாலின,கிராமிய,விவசாய,தொழில் கல்வி சார்ந்த,இயற்கை சார்ந்த,தாய் மொழி சார்ந்த அனைத்தையும் பற்றி உரையாடி சிந்தித்து நிறைய எழுதியிருக்கிறார். அதுவே அவரை இன்றைய சமூகத்துடன் பிணைக்கிறது.

அவருக்கும் என்னை போன்ற பலகீனங்கள் இருந்து எதிர்கொண்டிருக்கிறார் என்பது அவரை எனக்கு நெருக்கமாக்குகிறது. நம் நாட்டின் விடுதலைக்கான திறவுகோல்களில் முக்கியமானவர் என்பதுடன் , தாத்தா என் அகத்திற்கான வழிகளை திறக்கவல்லவர் என்ற நம்பிக்கையை இந்தநூலின் மூலம்  கொடுத்துக் கொண்டேயிருப்பதால் இந்தநூல் முக்கியமானதாக இருக்கிறது.

‘சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கிருந்த தீவிர ஆர்வம்,நான் உயிரோடிருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது”

“அகிம்சை ஆராய்ச்சியின் பகுதியாக ஆகாரசோதனை எனக்கு முக்கியமானது’

“ஆண்டவனே எனக்கு நம்பிக்கையைக் கொடு என்று இரவு பகலாக பிரார்த்திக்கிறேன்”

இதுபோன்ற வரிகளை காந்தி தன்  எழுத்தின் வழி சொல்லும் போது அவை செறிவும் சத்தியத்தின் பலமும் பெறுகின்றன. உலகியல் சார்ந்த தடுமாற்றங்களை போராட்டங்களை மீறி நொய்ந்த மனம் எழ காந்தியின் சொற்கள் கைக்கொடுக்கின்றன. அதேசமயம் தொடர்ந்த இந்த வாசிப்புகள்.... மனதின்,பழக்கவழக்கங்களின் சில நொய்மையான பகுதிகளை வெட்டி எறியும் அறுவசிகிச்சை கத்திகளாக இருக்கின்றன.

ஒவ்வொன்றையும் சலிக்காமல் செய்துபார்ப்பது, தோல்விகளை ஏற்பது, அதையும் கடந்து தன்தவறுகளை ஏற்றுக்கொள்வது என்ற இயல்புகள் மூலம் அகங்காரம் சார்ந்த மனஅழுத்தங்களை குறைக்கக் கற்றுக்கொள்ள மிக இளமையில் எனக்கு கிடைத்த வாய்ப்பு சத்தியசோதனை. எனக்குத் தெரிந்து இப்பொழுது எழுத்தாளர் சுனீல்கிருஷ்ணனின் ‘காந்தி இன்று’ இணையதளத்தில் காந்தியைப் பற்றிய கட்டுரைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் காந்தி பற்றிய விவாதங்கள் மற்றும் காந்திய வாழ்விலிருப்பவர்கள் பற்றி அறியலாம். ஏனென்றால் நம்முடைய அனைத்து தலைவர்கள் போலவும் காந்தியும் விவாதித்து அறியப்பட வேண்டியவரே அன்றி காற்றுவழி செய்திகளால் அறியப்பட வேண்டியவர் அல்லர்.

காந்தி வாழ்நாளெல்லாம் வயிற்றுப்பிரச்சனையால் அவதியுற்றிருக்கிறார். இது தொடர்ந்த மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனை. மேலும் உண்ணாவிரதங்களால் வரும் பிரச்சனை.இதிலென்ன என்று தெரியவில்லை? ஆனால் சிறுவயதிலிருந்து காந்தியை நினைக்கும் போது இந்த நினைவும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். இதுதான் இந்திய மக்களை ஒன்றிணைத்தது. ஆதிக்கத்தை உறுத்தியது என்று மெதுவாகத்தான் புரிந்தது. பேரன்பே தன்னை வருத்திக்கொள்வதன் மூலம் ஒன்றை புரியவைப்பது. ஞானிகள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம் மானுடத்திற்கு அன்பை, அறத்தைக் கற்பிக்கிறார்கள்.

இந்த தனிமனிதசரிதை ஒரு தேசத்தின் சரிதையாக,உலகத்தின் வரைபடமாக விரிகிறது. அவர் தான் வாழ்ந்த காலகட்டத்தில் தன் தனிவாழ்வில்,பொதுவாழ்வில் செய்த சோதனைகளின் வழி இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த நூலை தனிமனிதரின் பேருருவாகவும் காணலாம். அதைக்கடந்து அடக்குமுறைக்கு எதிரான கருவியாக ,அடக்குமுறை கொண்ட மனதையே மாற்றும் வழிமுறை வலுவாக எழுந்த புதுயுகத்தின் பிறப்பாகவும் காணலாம்.

அதுவரை தனிப்பெரும் அரசர்களின்,தலைவர்களின் கதைகளை கேட்டிருந்தது மானுடம். அகிம்சை வழியில் திரளின் எழுச்சியை உண்டாக்கியவரின் வாழ்வின் கதை இது. ஜனநாயக கருதுகோளை உருவாக்கியவர்களுக்கு ,ஐனநாயகத்தின் ஔிமிக்க பக்கத்தை காட்டும் சரிதங்களுள் முக்கியமானது சத்தியசோதனை.

உடல்பலமில்லாதவர் இவ்வளவு செய்ய முடியுமா? என்று நான் முதல்வாசிப்பின் முடிவில் அய்யாவிடம் கேட்டது நினைவில் வருகிறது. அய்யா டைரியில் குறித்துக் கொண்டார். இப்படி வரிசையாக ஒவ்வொரு வாசிப்பிலும் நான் சொன்னதை குறித்து வைத்துள்ளார். இடையில் எதிரான கருத்துகள் உள்ளன. மீண்டும் புரிதல் என்று தொடர்கிறது.

கல்லூரியல் ‘கல்விக்கொள்கைகள்’ என்ற பாடப்பகுதியில் ‘காந்தியின் கல்விக்கொள்கை’ வகுப்புமுடிந்து, தாகூர்:காந்தியின் கல்விக் கொள்கைகளின் ஒற்றுமை வேற்றுமை பற்றிய விவாதம் அறுந்து நின்ற வேளையில், காந்தியை பற்றி பேசுகையில் அவரின் தனிவாழ்வின் மறைக்கப்பட்ட பகுதிகள் பற்றிய பேச்சு வந்தது. இன்று அதுசார்ந்து எழுத்தாளர் சரவணகார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ என்ற நாவல் வந்துள்ளது.

எங்கள் ஆசிரியர் பேசத்துவங்கி பத்துநிமிடங்களில் பாலு கை உயர்த்தினான்.

“என்ன?” என்றார்.

“சத்திய சோதனை வாசிச்சிருக்கீங்களா சார்?”என்றதும் கோபமாக அவர், “முழுசா வாசிச்சிருக்கேன்,”என்றார்.

நூற்றுவரில் மூவர் வாசித்திருந்தோம்.

பாலு,“எங்க நூறுபேருல எழுபதுபேர் ஆசிரியர்களானால் ஒரு ஸெட்டுக்கு நூறு ஸ்டூடண்ஸ்கிட்ட பேசுவோம். சத்யசோதனைய மட்டுமாச்சும் படிச்ச பின்னாடி காந்தியப் பத்தி பேசலாம் சார்,”என்றான். நான் எழுந்து அவ்வாறு சொல்லாததைப் பற்றி இன்றுவரை உறுத்தல் உண்டு.

காந்தியைப் பற்றி எதிராக ,நேராக என்று என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். காந்தி மக்களை நோக்கி அதிகமாக எழுதியவர் .அனேகமாக தினமும் எழுதியவர். அவரின் சத்திய சோதனையை மட்டுமாவது வாசித்தப்பின் பேசலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கட்டுரை எனக்கும் மறுவாசிப்பிற்கான தொடக்கமாக இருக்கிறது.

புதுநிலமான குழந்தைகளின் மனதில் விழவேண்டியவை அறத்தின் விதைகள். அவை முளைவிடும் பதின்வயதில் அவர்களுக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டியவர்கள் அறத்தின் நாயகர்கள். உளவியல் ரீதியாக குமரப்பருவம் என்பது தனக்கான தலைமையைத் தேடும் பருவம். அதற்கு பின் அவர்கள் ஏற்றோ, மறுத்தோ தங்களை உருவாக்கிக் கொள்ளட்டும்.

குமரப்பருவம் என்பது புயல்சூழ்ந்த கடலில் தனியளாக,தனியனாக நிற்கும் பருவம் என்று உளவியல் சொல்கிறது. அதில் மற்றவர்களின் உதவியால் எந்தவகையிலும் தனக்கான படகை அவர்கள் செலுத்தஇயலாது. தானே எழ அவர்களுக்கு தன்னுள்ளிருக்கும் ஆன்மசக்தி தேவைப்படுகிறது. அதற்கு இன்றிருக்கும் வாய்ப்பு நம் சிந்தனையாளர்களை,தலைவர்களை இளமையில் அறிமுகம் செய்வதே. அந்தவகையில் சத்தியசோதனை ஒரு முக்கியமான நூல்.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...