Skip to main content

இற்றைத் திங்கள் அந்நிலவில்

2023 ஜூன்மாத சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரைத்தொடர்

          சங்கப் பெண்கவிகள் : 1

பழந்தமிழ் பாடல்களின் தொகுப்பான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தமிழின் செவ்விலக்கிய நூல்கள் ஆகும். இவை சங்கஇலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. 470 க்கும் மேற்பட்ட புலவர்களால் சங்கஇலக்கியத்தில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் முப்பதைந்திற்கு மேற்பட்ட பெண்புலவர்களின் பாடல்கள் உள்ளன. இப்புலவர்களுள் ஔவையர் எண்ணிக்கையில் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சங்கஇலக்கியம் பாடுபொருள் சார்ந்து அகப்பொருள், புறப்பொருள் என்று பகுக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளிலும் பெண்புலவர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.


பொதுவாக  பெண்புலவர்களில்  ஔவையாரும், காவற்பெண்டும்  பள்ளிப்பாடங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.  காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள்  இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறுவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும்  அல்லது வெறுமையை படரவிடும். 

முதல் வாசிப்பில் சங்கப்பாடல்கள் மனதில் காட்சிகளாக விரியும். உதாரணமாக இந்தப்பாடலை வாசிக்கும் போது ஒரு பெண் கையில் காவல்காக்கும் கோலுடன் நின்று நெஞ்சில் கைவைத்து என்மகன் போருக்கு சென்றுள்ளான் என்று உரக்க சொல்லும் காட்சி மனதில் தோன்றும். அடுத்த வாசிப்பில் கல்லளை உவமை புரியும். இப்படி அடுத்ததடுத்த வாசிப்பில் சங்கக்கவிதைகள் விரிந்து செல்வதை காணலாம். 

இந்த வாசிப்பு ஐவகை நிலங்கள் சார்ந்தும்,பெரும்பொழுதுகள்,சிறு பொழுதுகள் சார்ந்தும் நிறம் கொள்ளும். புறமே அகமாக, அகமே புறமாக மாறி மாறி வரும் இப்பாடல்கள் நமக்கு ஒரு அழகிய வாழ்க்கை தருணத்தை உணரசெய்யும். ஒரு தருணம் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எனக்குண்டு. தனித்தனி பாடல்களாக இருந்தாலும் கூட வாசிக்கும் போது சங்கப்பாடல்கள் தனித்தனிப்பாடல்கள் என்ற உணர்வு ஏற்படுவதில்லை. தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கும் பொழுது  ஒரு பெரும் நாவலை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. ஐந்துவகை நிலமும்,  தாவரங்களும் விலங்குகளும், பொழுதுகளும், காதலும் பிரிவும்,போருமாக வாழ்க்கை கொந்தளிக்கும் வெளியாக சங்கப்பாடல்கள் உள்ளன. அத்தனை புலவர்களும் இணைந்து எழுதிய ஒரு பெரும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் உணர்வு ஏற்படுகிறது. பக்கஅளவாக சொன்னால் குறைவாக இருக்கும்.  ஆனால் விரிந்த வாசிப்பனுபவத்தை தரக்கூடியது. 


ஒரு பாடலில் குறிஞ்சி  தினைப்புனத்தில் கண்ணீருடன் ஒரு தலைவி , அடுத்த பாடலில் பாலையின் தலைவி முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் பாடுகிறாள். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நம் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ள இந்தக்கவிதைகளில் பெண்மனம் மொழியில் எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று தேடும் முயற்சிதான் இந்த கட்டுரைத்தொடர்.    

அன்றையக்கவிதை இன்றைய வாசிப்பில் எத்தனை கவித்துவ தருணங்களை சாத்தியப்படுத்துகிறது அல்லது எப்படியான வாசிப்பனுபவத்தை தருகிறது என்று பார்க்கலாம்.

அஞ்சி அத்தை மகள் நாகையார்:

இவர் அதியமான் அஞ்சியின்  அத்தை மகள். அதியமானை மணம் செய்தபின்பு தோழிக்கு உரைப்பதாக இந்தப்பாடலை எழுதியுள்ளார். பாடலை வைத்துப்பார்க்கும் பொழுது அதியமானுக்கும் நாகையாருக்கும் மூத்தவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. திருமணத்திற்கு பின் உள்ள காதலை கூறும் பாடல்.


வளைந்த பலாமரத்தின் குடம் போன்ற பழத்தை கையில் வைத்துக்கொண்டு ஆண்குரங்கு தன்சுற்றத்தை அழைக்கிறது. கடுவன் அந்தப்பழத்தை மயிலாடும் பாறையில் வைத்திருப்பது திருவிழாவில் முழவன் கைகளில் இருக்கும் முழவு போல் உள்ளதாம். அத்தகைய வளமான குன்றை உடைய நாடன் அவன்.

அன்பானவன் , சேர்ந்தவரைப் பிரியாதவன், கொடுஞ்சொற்களை சொல்லாதவன் என்று திருமணத்திற்கு முன்  நீ சொல்லியது உண்மை தோழி. தொல்பாடலை பாடும் திறமையான பாணனின் பாட்டில், புதுமை கலந்து மேலும் அழகு கொள்வதைப்போல, திருமணநாளன்று இவன் கொண்ட அன்பை விட அடுத்தடுத்த நாட்களிலும் இனியவன் என்று தலைவி கூறுகிறாள்.


அகநானூறு : 352

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்

பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்

பாடு இமிழ் அருவிப்பாறை மருங்கின்,

ஆடு மயில் முன்னது ஆக,கோடியர்

விழவு கொள் மூதூர் விறலி பின்றை

முழவன் போல அகப்படத் தழீஇ

இன் துணைப் பயிரும் குன்றநாடன்

குடிநான்கு உடையவன்; கூடுநர் பிரியலன்

கெடு நா மொழியலன் அன்பினன் என,நீ

வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்

நல்ல; காண் இனி காதல் அம் தோழீஇ!

கடும் பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி

நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்

தொல் இசை நறிஇய உரை சால் பாண்மகன்

எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்

புதுவது புனைந்த திறத்தினும்

வதுவை நாளினும் இனியனால் எமக்கே

இது குறிஞ்சித்திணை பாடல். பலாப்பழத்தின் இனிமைப்போல அவன் காதலும்,அவனின் குணநலன்களும் அவன் மீதுள்ள என் காதலும் நாளும் வளர்வது என்று தலைவி சொல்கிறாள். பலாப்பழம் உண்ண உண்ண தித்திப்பது. 

[புலவரின் பெயரை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அகநானூறுக்கு ஏற்ற பெயர்தான். இன்னாரின் மகள் என்பதைப்போல,இந்தப்புலவர்  அஞ்சியின் அத்தை மகள்]

அணிலாடும் முன்றிலார்:

மனிதர்கள் விலகிச் சென்ற பாலைநிலத்தின் ஊரில் ஒரு தனித்த இல்லத்தின் முற்றத்தில் அணில் விளையாடுகிறது. மக்கள் இல்லாத அந்த வீட்டைப் போன்று நான் தலைவன் அருகில் இல்லாது பொலிவிழந்து வருந்துகிறேன் என்று தலைவி  சொல்கிறாள். 


குறுந்தொகை 41 :

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து 

சாறுகொள் ஊரின் புகல்வேல் மன்ற

அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்

புலப்பில் போலப் புல்லென்று

அலப்பேன் தோழி அவர் அகன்ற ஞான்றே

இது பாலைத்திணை பாடல். இந்தப்பாடலில் திருவிழா நடக்கும் ஊராகவும் அணில் விளையாடும் தனித்த முற்றமாகவும் இருப்பது தலைவியின் மனம். அவன் அருகில் இருந்தால் மனத்திற்குள் திருவிழா. இல்லையெனில் அவன் நினைவுகள் விளையாடும் முற்றமாக அவள் மனம் இருக்கிறது.

‘சாறு கொள் ஊர்’ என்று சொல்கிறாள். சாறு என்றால் திருவிழா என்று பொருள்.  ஊரின் மகிழ்ச்சியாக திருவிழா இருக்கும் போது அவளின் கொண்டாட்டமாக அவனுடைய அருகாமை இருக்கிறது. அவன் இருந்தால் மட்டுமே இந்த ஊர் எனக்கு சுவை கொள்கிறது என்று அவள் கூறுவதாகவும் பொருள் கொள்ளமுடியும். [பழத்தின் சாறே அதன் சுவை அல்லவா]

நாகையார் பாட்டிலும் ‘விழவு கொள் மூதூர்’ வருகிறது. இந்தப்பாடலிலும் ‘சாறு கொள் ஊர்’ வருகிறது. இரண்டிற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. 

கனிகளும் மரங்களும் செழித்த குறிஞ்சியின் மூதூர்,பால் பொட்டலான பாலை நிலத்து குரும்பூர் இரண்டும் தலைவி மனத்தின் புறவடிவங்கள். அது திருவிழா நடக்கும் ஊர் இது திருவிழா நிறைவுற்று  மக்கள் விடைபெற்ற ஊர்.

அவனுடைய அருகாமையும், அன்பும் மட்டுமே அவள் மனதை  குறிஞ்சி நிலமாகவோ, அனல் பறக்கும் வெட்டவெளி பாலையாகவோ மாற்ற போதுமானது.


இருட்டில் ஔிரும்

எனது மின்மினியல்லவா நீ

வீழும் எரிகல்லின்

துயரமும்,மோகனமுமல்லவா நீ..

பெருகியோடுகிற ஆற்றில்

சுழன்றலையும்

விண்மீனல்லவா நீ…

எடையற்ற சிறு இறகின்

மிதப்பல்லவா நீ

விழிக்க விடாதவொரு

மாயக் கனவல்லவா நீ…

கிளைகளுக்குள் தெரிகிற

நிலவல்லவா நீ..

எனது ஏகாந்த இரவின்

மனப்பிறழ்வல்லவா நீ

                       :கவிஞர் பொன்முகலி 


பொன்முகலியின் இந்தக்கவிதை அஞ்சியின் அத்தை மகள் நாகையாரின் முழவு கொள் மூதூரையும் அணிலாடு முன்றிலாரின் தனித்த இல்லத்தையும் உள்ளடக்கி மேலும் விரிகிறதில்லையா? இன்று வரை காதலும், நிலமும், மனமும் சுழன்று சுழன்று சமைக்கும் தருணங்களின் உணர்வுகளை தன்னுள் அடைத்துக்காக்கிறது கவிதை என்னும் மொழிப்பிரபஞ்சம்.

                            

                                   _  தொடரும்

                                         




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...