மதுரம்

 https://youtu.be/zpHNHJCzmxI


செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன். 

'மதுரம் ஜீவாமிர்த பிந்து' 

எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார். 

சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புதமாக நடித்திருப்பார். தந்தை அவமானப்படும் முதல் சில நிமிஷங்களை கண்டும் காணாமல் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பார். தன்னை அறியாமல் அவர் ஆவேசம் கொள்ளும் இடமே படத்தின் ஆன்மா. அவர் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டுவிடும்.

சிறையில் இருந்து திரும்பி வரும் போது தந்தை குடிகாரராக இருப்பார். தங்கை நடிக்கச்செல்வார். வீடே அவர் வீடாக இல்லாமலிருக்கும். வீட்டில் இருந்து வெளியே தங்கி சம்பாதிக்கும் சிறுதொகையை தன்னால் இறந்தவரின் மகனுக்கு அனுப்புவார்.

தன்னுடன் பணிக்காக தேர்வெழுதிய சகவயதினர் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியாக தினமும் கையெழுத்திடுவார்.

இந்தப்படத்தில் 'இந்த ஜீவிதம் மதுரம்' என்று மோகன்லால் உணரக்கூடிய இடம் மிக மிக மெல்லிய ஒரு இடம். 

மோகன்லாலின் நடிப்பு அவர் முகத்தில் நடையில் உடல்மொழில் பார்வையில் புருவங்களில் என்று அற்புதமாக  வெளிப்படும் பாடல் இது. 'ஏட்டன் வல்லியதொரு ஆர்ட்டிஸ்ட்டானு' என்று எத்தனையோ பேர் சொல்வதைப்போல நானும் சொல்கிறேன்.

மானுடர்க்கு சாய்ந்து கொள்ள மரங்களின் மடியை எப்போதும் இந்த நிலம் அருளியிருக்கிறது. 

'பாடுமீ ஸ்னேக ரூபம் போல

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

'நின் விரல் பூத்தொடும் போழ்தென் நெஞ்சில்

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

வீட்டில் அன்னையின் பூவிரலாக இருப்பது வேறிடத்தில் பால் நிலவின் ஔியாகவும்,மென்காற்றாவும்,சாய்ந்து கொள்ளும் விருட்சத்தின் வேராகவும் இருக்கிறது. இங்கு நாம் இழந்த அரியவை அனைத்தும் இன்னொரு வடிவில் பெறக்கூடியவை தானா?


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்