[ 2023 ஜூலை வாசகசாலை இணையஇதழில் வெளியான தொடர் கட்டுரை ]
கதைசொல்லியின் மேழி
ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும், கனியும் போதும், காய்ந்து உதிரும் போதும் அவர் மீண்டும் மீண்டும் அடையும் ஒன்று உண்டு.
ஒரு சம்சாரியின் நுண்ணுணர்வு ஆழமானது விரிந்தது. அவர் மனிதர்களை, விலங்குகளை, நிலத்தை பார்க்கும் பார்வை வேறு. அந்த மலர்வு [Pleasure] தான் இங்கே தெய்வங்களை நிறுத்தியது. கலைகளை வளர்த்தது. கதைகளை பெருக்கியது.
அந்த வாழ்க்கை முறை மாறும் போது அந்த ஆதாரமான ஒன்றும் மாறுகிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியை நுண்ணுணர்வுடன் காணும் சம்சாரி தன்னுள்ளே காமம் அழிவதை அப்பட்டமாக உணர்கிறார்.
மண்ணையும், பெண்ணையும், பசுவையும் அறிபவர் தன்னுள் அகங்காரமான ஒன்றை, தீராத ஒன்றை கடக்கிறார். அதற்கும் மேலுள்ள ஒரு விடுதலையை, நிறைவைத் தொட்டு இறுதிக்கட்டிலில் விழும் போது ‘பிறகென்ன காய்ச்சதெல்லாம்.. பழுத்ததெல்லாம்.. உதிரத்தானே வேணும்’ என்கிற விவேகத்துடனோ,முதிர்ச்சியுடனோ புன்னகைக்கிறார் .
உண்மை மனிதர்கள் உலவும் கி.ராவின் கதைகளில் திரிபுகளும்,தீராத வஞ்சங்களும்,வன்மங்களும் மிகமிகக் குறைவு. வன்மங்களும், திரிபுகளும் அன்பை போல காதலைப் போல இயல்பானவை என்றால், அவை இந்த சம்சாரிகளின் வாழ்வின் ஆடுபுலியாட்டத்தில் அடிப்பட்டு போகின்றன. எதிர்மறை காய்களின் வெட்டுபடல் எதனால் நிகழ்கிறது என்பதை சொல்லும் கதைகள் இவை.
கி.ரா வின் கதைகளில் உள்ள இனிமைக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று அவரின் மொழி. பேச்சுவழக்கும் வட்டார வழக்கும் கலந்த மொழி. அவர் இதைப்பற்றி சொல்லும் போது, “ மக்கள் பேசற மாதிரி எழுத ஆரம்பிச்சேன். அதுக்கு முதல்ல எதிர்ப்பு இருந்தது. கு.அழகிரிசாமி ரகுநாதன்ல்லாம் அந்தமாதிரி எழுதக்கூடாதுன்னு சொன்னாங்க. நாங்கூட முதல்ல தயங்கினேன். மக்கள் விரும்புறாங்க..வரவேற்பு இருக்குன்னு சொன்னேன். கதை சொல்லல்ங்கறதே பேச்சிலருந்து தானே வருது. அதனால பேச்சு தானே பிரதான இடத்துல இருக்குன்னு நானாகத்தான் இப்படி எழுதனுன்னு தீர்மானம் பண்ணினேன்,” என்று சொல்கிறார்.
பேச்சுவழக்கில் எழுதுவதால் அதில் உள்ள கவித்துவம், இடக்கு,எகத்தாளம், இலைமறை காயாக பேசுதல், நகைச்சுவை, ஆயாசம் என்று அனைத்தும் சேர்ந்து கதை வாசிக்கும் உணர்வை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
மழைக்குப் பிறகு நெய்க்கரிசல்மண் மேழியின் இருபக்கமும் சுகமாக விழுவதை போன்ற மொழி. இந்த மொழி அந்த வட்டாரத்து மக்களை நம்முடன் நெருங்கச்செய்கிறது. சிறுவன் ஒருவன் வயதெய்தும் மனநிலையை இப்படி சொல்கிறார்.
‘சூழலில் இருந்தும் அந்நியம் ஆக்கிவிட்டது போல உணர்வு,மலர்கள் வித்தியாசப்பட்டு விட்டது போலத் தெரிவு’
தன் பேச்சு மொழியாலான எழுத்தால் கி.ரா நாட்டார்கதைகளில் ஒரு அழகிய உன்னதமாக்கலை நடத்துகிறார். உதாரணத்திற்கு ஒன்று: ‘எருமை பயிராவதற்கு கத்துமே… அந்த மாதிரி ஒரு சத்தம்’ என்று வண்டி ஹாரன்களின் சத்தத்தை சொல்கிறார். சொல்பவருக்கும் வாசிப்பவருக்கும் ஒரே தொனியில் கடத்தப்பட்டாலும், சொல்லும் முறை அதிலுள்ள ஒன்றை அழகாக்கி வேறொன்றாக மாற்றிவிடுகிறது.
இந்த கதைகளின் வழியே கரிசல் நிலத்தில் பெய்த மழை உடனே மண்ணுக்குள் மறைவதைப்போல பலவகைப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து மறைகிறார்கள். முழு தொகுப்பை வாசிக்கும் போது காலமாற்றம் நம் முன்னே நடக்கிறது.
ஒரு காலகட்டத்தில் கரிசல் நிலத்தில் பாடுபட்டு செயலான, ஏல்க்கையான வாழ்க்கை வாழ்ந்த சம்சாரிகள் படிப்படியாக விவசாய வாழ்க்கையின் வீழ்ச்சியை காண்கிறார்கள். கொத்தை பருத்தி கதையில் கோனேரிநாய்க்கர் பத்துஏக்கர் நிலமுள்ள தன் பேரனுக்கு பெண் கிடைக்காமல் சோர்ந்து ‘என்னடா சம்சாரி கொத்தை பருத்தியிலும் கேவலமா போயிட்டானா… சம்சாரிக்கு பொண்ணு கொடுக்கலேன்னு சொல்றது. சம்சாரிக்கு சம்சாரி சொல்ற சொல்லாடா இது,’ என்று வருத்தப்படும் இடம் முக்கியமானது. அங்கே ஒரு நிலத்தின் விவசாய வாழ்வின் மதிப்பீடுகளும், வாழ்க்கைமுறையும் முடிவுக்கு வருகிறது.
விவசாய வாழ்விலுமே செழிப்பான காலத்தை போல பஞ்சமும்,மழை பொய்த்தலும் உண்டே. வாழ்ந்த கதைகளின் மத்தியில் [மகாலட்சுமி,கனிவு,புவனம்] வீழ்ச்சியின் கதைகளுக்கும்[சுப்பன்னா,அவுரி,தாட்சண்யம்] குறைவில்லை. வாழ்ந்து கெட்ட வீட்டின் கடைசி வாரிசான சுப்பய்யா பசியுடன் இளைத்து திரிகிறான். அவனை சொந்தத்தில் ஒருவர் அழைத்து சென்று கவனித்துக் கொண்டாலும் அடிக்கடி தன் ஊருக்கே திரும்பி வருகிறான். மறுபடி பசியுடன் திரும்பி செல்கிறான். சுப்பய்யாவை போன்றே இந்தக்கதைகளில் உள்ள மனிதர்களும் தங்கள் நிலத்துடன் பிணைந்து இருக்கிறார்கள்.
மண் அவர்களுக்கு தருவது பாதுகாப்பு உணர்வை மட்டுமா? அது ஒரு ப்ரியம். மனிதன் மனிதனுடன் கொள்ளும் காதலை போன்ற ஒரு பிணைப்பு மண்ணுடன் அவர்களுக்கு இருக்கிறது.
பஞ்சத்தில் ஆட்டிப்படைக்கும் நிலம் தான். மேகம் வந்து நின்று பெய்ய தயங்கும் வனம் தான். என்றாலும் அந்த மண்ணை கிண்டி அங்கேயே கிடக்கவே விரும்புகிறார்கள். இந்தமண் தன் பச்சையை கண்களுக்கு காட்டிவிடும் என்ற மாறாத நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வனமாகக் கிடந்ததை நிலமாக்கினோம். பாடுபட ஆளில்லாமல் மீண்டும் தரிசாகி வனமாகி மூடிக்கொள்ளுமோ கதைசொல்லி விசனப்படுகிறார். தீப்பெட்டி தொழிற்சாலைகள் வந்து விட்ட காலத்தில் விவசாயம் படிப்படியாக குறைந்து, பாடுபட ஆளில்லாமல் கரிசல்நிலம் தரிசாகும் சித்திரத்தை பல கதைகளில் காணமுடிகிறது.
மழைபொய்க்கும் காலங்களிலும், பஞ்சங்களிலும் நிலத்தை கைவிடாத விவசாயிகள் தொழில்புரட்சி காலத்தில் நிலத்தை விலகிச் செல்கிறார்கள். விவசாயப் பொருட்களுக்கான கொள்முதலில் சம்சாரிகளை ஏய்க்கும் வியாபார தந்திரங்களால்,அரசியல் காரணங்களால் அவர்கள் நிலத்தை கைவிட்டு வேறு வேலை தேடிச் செல்கிறார்கள். மாற்றுவிவசாயமாக அவுரியை பயிரிடும் தசாரி நாயக்கர் கொள்முதல் இல்லாத பொன்அவுரிகாய்களை கூடைக்கூடையாய் குப்பையில் கொட்டுகிறார். அவர் ‘சம்சாரிகளின் பாடு… ஒண்ணும் ஒப்பேறாது இனிமே…பாவிப்பயல்கள் இப்படி செஞ்சிட்டாங்களே..’என்று தலையில் கைவைத்து அமர்வது விவசாய வாழ்க்கையின் முடிவை காட்டுகிறது.
பருத்திவெடிக்கும் ஓசையும்,பாலூறும் சோளக்கதிர்களின் மணமும் கிளர்த்திய வாழ்க்கையை அறியாத குழந்தைகள் கஞ்சிப்பசை கைகளில் ஒட்டிக்கொள்ள நாளும் பொழுதும் தீப்பெட்டி ஒட்டுகிறார்கள்.
நிலத்தில் தன் உழைப்புப் பங்காளியான பெண்ணை, மகாலட்சுமியாய்[ மகாலட்சுமி] வரவேற்கும் கரிசல் மண்ணுடன் இணைந்த காதல், அந்த வெங்கானலில் எங்கோ உலர்ந்து கொண்டிருக்கிறது. மகவுண்ட மிச்சப்பாலை உவகையுடன் மண்ணுக்கு பீய்ச்சி மகிழ்ந்த ஊரில் வெண்மை புரட்சி வந்து கன்றுகள் பாலின்றி வற்றி சாகின்றன. வண்டிவண்டியாக பால் கேன்கள் டவுனிற்கு செல்ல பிள்ளைகள் மோர் விட்ட சோற்றிற்காக ஏங்கிகிடக்கின்றன.[ஒரு வெண்மைப் புரட்சி]
விவசாய வாழ்விலிருந்து சமூகம் தொழில்புரட்சிக்கு மாறுவதால் கரிசல் கிராம வாழ்வில் நிகழ்ந்த உயிர்ப்பின் சரிவை கதைகளில் காணமுடிகிறது. விடுதலை முன்பு நிகழும் கதைகளில் காலத்தின் முகம் இல்லை. அந்த கிராமங்கள் எங்கோ உயிர்ப்புடன், வெற்றிலை மணத்துடன், கம்பங்கூழுடன், கும்பாவில் பருப்புக்கறியுடன், கரிச்சான்களின் முதல் குரலுடன் இருக்கின்றன.
ஆனால் விடுதலைக்கு பின்பான காலக்கட்டத்தின் கதைகளில் காலம் அதன் இரைச்சலுடன் தன்னை காட்டுகிறது. மண்ணுடன் இணைந்த வாழ்வில் காலமாற்றத்தால் மண் உதிர்ந்து மனிதன் தனியாளாக மாறுவதன் சித்திரங்கள் இந்தக்கதைகளில் உள்ளன.[அவத்தொழிலாளர்,கொத்தை பருத்தி]
அடிப்படையில் கி.ரா ஒரு விவசாயி. அவர் விவசாயம் சரியும் காலத்தை கண்களால் காணும் பதட்டம் இந்தக்கதைகளில் உள்ளது. ‘என்னடாது….சம்சாரிக்கும் இப்படி ஆயிடுத்தே,’ என்ற கலக்கமும் ‘இப்படியும் ஆகனுமே..அது தானே மனுச பிறப்பின் ரகசியமே,’ என்ற நிதானமும் உள்ள கதைகள் இவை.[விடிவு]
குருபூசையில் பரதேசிகளுக்கு அன்னமிட்டால் குடும்பத்திற்கு நல்லது என்ற நம்பிக்கை அங்கே காலகாலமாக உள்ளது. தன் பேரன் வாழ்க்கை நலத்திற்காக அரிசி, பருப்பு சேகரிக்கிறாள் சிவகாமி ஆச்சி. மலைமுருகன் கோவிலில் சோற்றையும் இலையையும் வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். ‘ஆளுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தின்னா இலையில் உட்காருகிறோம்’ என்று ஒரு இளம் பரதேசி சொல்கிறான். அவ்வளவு பணமில்லை. காத்திருக்கிறாள். பணம் தருவர்களின் இலைகளை நோக்கி பரதேசிகள் செல்கிறார்கள். சிவகாமி ஆச்சியின் சிறுவயதில் இந்த மலைமுருகன் கோவிலுக்கு வருகிறாள். வயிறு நிறைய உண்ட களைப்பில் பரதேசிகள் படுத்துக்கிடக்கிறார்கள். உணவு படைக்க பரதேசி கிடைக்காத கிழவி ஒருத்தி கண்ணீர் விடுகிறாள். அதை கண்ட பரதேசி ஒருவன் ‘நான் வாரேன் முன்னால போங்க’ என்று சொல்லிவிட்டு வாய்க்குள் விரலை விட்டு உண்ட உணவை வாந்தி எடுத்து வாயைகழுவிக் கொண்டு சாப்பிடச் செல்கிறான். ஒரு கிழவியின் கண்ணீருக்காக இரங்கும் காலம் மாறி பணத்திற்காக இலை முன் அமரும் காலம் வந்துவிட்டதை அறிந்தாலும் ஆச்சிக்கு அது சரிவர புரியவில்லை. உணவை பாறைகளில் வைத்துவிட்டு அவள் பசியோடு கிளம்பி செல்கிறாள்.
இந்தக்கதையில் [குருபூசை] மனிதர்களுக்குள் உள்ள உயிர்ப்பான ஒரு ஒட்டுதல் மாறி உலர்வதை காணமுடிகிறது. விவசாயம் வெறும் தொழிலாக மாறும் போது வேண்டுதல்களும் ஒரு நாடகத்தை போல நடக்கின்றன. அசலான ஒன்றிலிருந்து மனிதர்கள் படிப்படியாக சரிகிறார்கள். மாற்றத்திற்கும் சரிவிற்கும் இடையில் உள்ள இடைவெளியில் அல்லாடும் மனிதப்பாடுகள் உறையும் கதைகள் இவை.
ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரே பசுவை மாற்றி மாற்றி தானம் கொடுப்பது சரியானது இல்லை என்று நினைக்கும் ஆச்சிகளை விட்டுவிட்டு காலம் முன்னகர்கிறது.
கி.ரா 1989 களில் எழுதிய கதைகளில் கதைகளில் விவசாய வாழ்வின் அறங்களும்,அதன் விழைவான மனிதஆதுரங்களும்,பிணைப்பும் நிறம் மங்குகின்றன. தெருவில் விளையாட ஒரு பெண்பிள்ளை இல்லை. எல்லா பெண்குழந்தைகளும் உள்ளறையில் தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் உள்ளறைகளில் வாழும் குலதெய்வங்கள் ஆடாமல் அசையாமல் கால்களில் நரம்புப்பிடித்துக்கொள்ள ஆலைகளில் வேலை செய்கின்றன.
ஒரு சம்சாரி தன் வாழ்வில் எத்தனை பசுகளை தொட்டு அறிகிறான். பசுவின் பருவங்களை அறிகிறான். குட்டியிடும் பூனைகள்,காவலிற்கான நாய்களும், சிற்றுயிர்களும், பயிர்களும், கோடையும், மழையுமான வாழ்க்கையில் காதல் ஒரு செழித்த பயிர்க்காட்டை போல பச்சை விரிக்கிறது. அது ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் மட்டுமல்ல. அது வாழ்வின் சுவையான ஆதாரபகுதி.
ஒரு பசு ஈற்றெடுக்கும் போதும், சினையாகும் போதும், ஈனும் போதும் ,பால் பெருக்கும் போதும் சம்சாரி தனக்குள் கனிகிறான். கனிவின் சுவை வாழ்வின் சுவை அல்லவா? ஒரு பூனை தன் குட்டிகளுக்கு வாலை ஆட்டி ஆட்டி விளையாட்டாக வேட்டை பயிற்சி அளிப்பதை பார்க்கும் சம்சாரி, தன் கைக்கடங்காத பதின் வயது பிள்ளையை எப்படி போக்குக்காட்டி கையாள்வது என்று ஊகித்துக் கொள்கிறார்.[ஓட்டம்]
மொடாவில் உள்ள மோரில் திரண்டு வரும் வெண்ணையைப்போல இளம் தம்பதிகளுக்குள் மெதுமெதுவாக திரளும் அன்பை ஒரு பெரியகுடும்பம் கவனிக்கிறது. ஒரு குடும்பத்தின் அத்தனை நபர்களையும் அந்தக்காதல் கம்பங்காட்டை கட்டை கடக்கும் இளம் காற்றை போல தொட்டு சிலிர்க்க செய்கிறது. உருட்டிப்போட்ட வெண்ணெய் உருட்டை தண்ணீரில் மிதக்க, மத்தின் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் வெண்ணெய்க்காக கைநீட்டும் குழந்தைகளைப் போல, பெரியவர்களும் வாழ்வில் காதல் தரும் இத்துணூண்டு அமிர்தத்தை, இளம்பிள்ளைகளிடமிருந்து தாங்களும் கைநீட்டிப் பெற்றுக்கொள்கிறார்கள். உறவு சிடுக்குகளுக்குள் ஔிந்திருக்கும் துளிஅமிர்த்தை அந்த வாழ்க்கை அவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது. கி.ரா தாய்ப்பால் என்று எங்குமே சொல்வதில்லை. அமிர்த்தப்பால் என்றே சொல்கிறார். இந்த மொழியே நம்மை அவர் கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்க செய்கிறது.
திருமணம் ஆனதும் பெண்ணை பசுமாட்டை ஓட்டுவதைப்போல நடத்த அவர்களின் மனம் ஒப்புவதில்லை. திருமணம் முடிந்தாலும் அவர்களின் முறைமைகள் ‘மெல்ல புரிஞ்சு காதலிக்கட்டுமே’ என்று சொல்லும் நாகரீகம் உள்ளவை. இங்கு மண்ணும், பெண்ணும் தானே கனிவதுதான், தங்களின் வாழ்க்கையின் மலர்ச்சியாக கொள்கிறார்கள்.
கி.ராவும் துணைவியார் கணவதி அம்மாள் அவர்களும்
ஒரு பயிரையோ,சிறு பிராணியையோ வளர்க்காத வாழ்வில் எப்படியோ ஈரம் உலர்ந்து போகிறது. அந்தப்பசை உயிர்ப்பசை என்று சொல்லலாம். வளர்த்த பசுவை தானம் கொடுப்பதில் உள்ள ஆன்மீகமான ஒன்றை இழக்கும் காலகட்டம் அது.
தான் வளர்த்த பசுவின் பிடிக் கயிற்றை கைமாற்றி விடுவது என்பது அத்தனை எளிய செயலா என்ன? அப்படி கைமாற்றி விட்டு வரும் அந்த சம்சாரி மனதின் தவிப்பே, அதற்கு பின்னான வாழ்வில் அவனுக்கு சகமனிதர்மீது தீராத காதலாகிறது. ஒரு பசுவை கைமாற்றி விட்ட ஒருவன் அதற்கு முன்பிருந்தவன் அல்ல. அவனுள் கசிந்து பெய்யும் எதுவோ அதுவே வாழ்வின் மழை. அதனால் நிலமும் மனமும் செழிக்கிது, மலருகிறது, கனிகிறது.
கால மாற்றத்தில் நெய்கரிசலின் அந்த பசை காய்ந்து அந்த மண் தரிசாகி கெட்டித்தட்டிப் போகிறது. அவர்களின் வாழ்க்கையும் தான். அந்த வாழ்க்கைமுறை சமூக மாற்றத்தால் மாறிப்போகிறது . வாழ்தலில் இருந்து பிழைத்தலிற்கு மாறும் கரிசலை விழி மலங்க இந்தக்கதைகள் பார்க்கின்றன.
காலத்தை உழும் இந்தக் கதை சொல்லியின் மேழி உதிர்ப்பது…மழை முடித்த நெய்கரிசலின் பத நிலத்தையும்,ஈர வாழ்க்கையையும் தான். நெய்கரிசலில் அந்த மேழி உதிர்த்த மிச்சம் கி.ராவின் மொழியாகவும் இருக்கலாம்.
_தொடரும்
Comments
Post a Comment