[அக்டோபர் 2023 ஆவநாழி இதழில் வெளியான கதை] அந்த செம்மண் நிலமெங்கும் சித்திரையின் அனல் அடித்து இரவும் பகலும் தகித்திருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நிலம் புழுதியாகிப் பறந்தது. அதிகாலையின் மெல்லிய தண்மையும் நிலம்கூடாத அந்த கருக்கல் பொழுதில், கழுத்து வியர்வையின் நசநசப்பில் கரையாளருக்கு முழிப்பு தட்டிவிட்டது. திண்ணையில் இருந்து திரும்பிப் படுத்து கிழக்குப் பக்கமாகப் பார்த்தார். வானம் மீன்கள்பூத்து நிறைந்திருந்தது. இனி கண்கூட்டி தூங்கமுடியாது. எழுந்து அமர்ந்து கைக்கால்களை நீட்டி மடக்கியப்பின் பின்பக்கமாக சென்றார். பின்புற சுவரில் சாய்ந்திருந்த பெரிய மண்பானையை உற்றுப்பார்த்தார். கரிய மினுமினுப்பாக நீர் தெரிந்தது. குட்டிச்சுவர்களை தாண்டிக்கொண்டு முள்காட்டிற்குள் சென்று திரும்பும்போது வானம் வெளுக்கத் தொடங்கியது. பானையில் இருந்த தண்ணீரை மண்ணாலான உலைமூடியால் அள்ளி அள்ளி உடலில் ஊற்றிக்கொண்டார். உடலில் தண்ணீர் வழிய வழிய மனம் விழித்துக்கொண்டது. இன்னைக்கு இந்தக்கடனை அடைக்கனும் என்று நினைத்தவராக உடலின் ஈரம் காயும் வரை நின்றார். எட்டின...