Skip to main content

காயங்கள்

அதிகாலை ஐந்துமணி இருக்கலாம். கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனின் வலைப்பூவில் சிலப்பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன். 
தெருவில் சலசலப்பு. 
இரும்புக்கதவை திறந்து எட்டிப்பார்த்தேன். 
ஏரிக்கரைக்கு அப்பால் இருக்கும் வயலில் தூக்குப்போட்டு ஒரு அம்மா தற்கொலை.

"பேய் அடிச்சிருச்சு...நேத்து எங்கூடத்தான் வயநடவுக்கு வந்தா... வேல விட்டு வாரப்பவே எருக்கங்குச்சி ஒடிச்சு கையிலயே எடுத்துக்கிட்டு வந்தா..கட்டில் பக்கத்துல வச்சுக்கிட்டு தான் தூங்கியிருக்கா,"என்று செல்லம் அம்மா பூஞ்சோலை அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
காலை ஆறுமணிக்கே பயிர்நடவு, களையெடுப்புக்கு ஆட்கள் கிளம்பிவிடுவார்கள். வயல்காரர்கள் குட்டியானை வண்டியில் ஆட்களை அமர்த்தி கூட்டிச்செல்வார்கள். இரண்டு  குட்டியானை ஆட்டோக்கள் முடக்குகளில் நின்றன. ஆட்கள் வழக்கமில்லாத சலசலப்புடன் கையில் வயர் கூடை, தண்ணீர் பாட்டில்களுமான நடந்தார்கள். வீட்டு முடக்கில் சிலர் நின்று பேசுவது எனக்குக் கேட்டது. 

"பிள்ள காலேசுக்கு போவுது...பய பள்ளிக்கூடம் முடிக்கப்போறான்..அந்தாளு பழக்கவழக்கதனதுல நல்ல மனுஷன்..இப்படி பண்ணிட்டாளே,"

"நல்ல மனுஷருக்கு தான் இப்படி நடக்குது..துணைக்கு இருக்கனுன்னு அவ நினைக்கலையே," என்று பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் நின்ற ஆண்கள் இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கண்ணை தூக்கி எட்டும் மட்டும் பார்த்தால் வண்ணப்புடவைகளில் பெண்கள். படியஎண்ணெய் வைத்து தலைவாரி கொண்டை அல்லது பின்னலிட்டு, முகப்பவுடர் பூசி பொட்டு குங்குமம் வைத்து திருந்தக்கட்டிய சேலையை காணுக்காலுக்கு ஏற்றி செருகிக்கொண்டு நின்றார்கள். அனைவர் கையிலும் ஒரு  பழைய ஆண் சட்டை. வயலில் வேலைசெய்யும் போது அணிந்து கொள்வார்கள்.
விவரம் தெரிந்ததில் இருந்து ஒரு ஆண்டில் இந்த மாதிரி மரணங்கள் இரண்டு மூன்றாவது நடந்துவிடுகிறது.

இறந்தவர் வயதை கணக்கு பார்த்தால் அன்றாட சிக்கல்கள் எரிச்சல்களுடன் சேர்ந்த மெனோபாஸ் சோர்வாக இருக்கலாம். நீண்ட கால மனசோர்வாகவும் இருக்கலாம். அவர்கள் சொல்லதைப்போல பயமும் காரணமாக இருக்கலாம். மனஇருள் எல்லாமே பேய் தானே. இவர்கள் கொல்லி மலை அடிவார வயல்களில் வேலை செய்து திருப்புபவர்கள். அசங்க மசங்கலான நேரத்தில் நம் மனதை இந்த நிலம் துணுக்குற செய்வதும் நடக்க வாய்ப்பிருக்கிறது. 
அவ்வளவு ஔியில்லாத கார்த்திகை மதியத்தில் எதையாவது பார்த்து திடுக்கிட்டிருக்கலாம். 

ஊரில் பேய் ஓட்டுவது அடிக்கடி நடக்கும். நான்கைந்து பூசாரிகள் உடுக்கையுடன் அமர்ந்து வசனமும் பாட்டுமாக பேசுவார்கள். பேய் பிடித்ததாக சொல்லப்படும் அந்த பெண்ணை பேச வைப்பார்கள்.
கணவன் மட்டும் பேய் ஓட்டும் இடத்திற்கு வரக்கூடாது. ஆண்களுக்கு ஏன் பேய் பிடிக்க மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை.

எங்கள் அத்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனசோர்வு தீவிரமாக வெளிப்பட்டது. சாப்பாடு கொடுக்க வந்த பேத்தியிடம் 'பக்கத்துல வராத பயமா இருக்கு' என்று சொல்லியிருக்கிறார்.
பின்பு அவரே, 'டப்பாவில இருக்கிற எல்லா மாத்திரைகளையும் முழுங்கிறலான்னு நேத்து தோணுச்சு' என்று சொல்லியிருக்கிறார்.
துறையூரில் இருக்கும் உளவியல் மருத்துவரிடம் அழைத்து சென்று மூன்று நான்கு மாதங்களில் இயல்பாகிவிட்டார்.
அவருக்கு நாற்பத்து ஐந்து வயதில் மாமா இறந்ததும் இந்த மனசோர்வு ஏற்பட்டது.

 ஒரு நாள் நானும் அத்தையும் சேர்ந்து சமையல் செய்து கொண்டிருக்கும் போது
 இதை சொன்னார்.  மாமா இறந்து மூன்று மாதங்களுக்குப்பிறகு தனியாக வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சி பெட்டியை தூக்கிப்போட்டு உடைக்கலாம் என்று தோன்றியதாம். 
'கயிறை எடுத்துட்டேன் கமலு...எங்க அண்ணன் ஞாபகம் வந்ததும் கீழ வச்சுட்டு மணிபர்சை மட்டும் எடுத்துக்கிட்டு ரவிசெல்வம் ஆஸ்பிடலுக்கு பஸ் ஏறிட்டேன்,"என்றார். எனக்கு பட்டென்று அறைந்த மாதிரி ஒரு அதிர்ச்சி...அத்தையா? என்று. அத்தை தைரியமானவர். அண்ணன் மீதுள்ள அன்பு ஒரு தடையாக கயிற்றின் மீது விழுந்திருக்கிறது. 

தொடர்ந்து பேசியதில்... மெனோபாஸ் காலகட்டமும், மாமா இறந்த காலகட்டமும் சமகாலமாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கமுடிந்தது. மாமாவுக்காக மருத்துவமனைக்கு அலைந்தது,பணம் சார்ந்த சிக்கல்கள்,உடலிற்குள் மனதிற்குள் புரியாத ஏதோ ஒன்று எல்லாம் சேர்ந்து அத்தையை தூண்டியிருக்கிறது.

மனதிற்கு ஏதாவது காயம் என்றால் ஏன் அதை கவனிக்க மறுக்கிறார்கள் என்ற கோபமும் எரிச்சலும் எனக்கு உண்டு. பூசாரி, கோவில் என்று செல்லலாம். ஆனால் மருத்துவமனைக்கு சென்றால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. அத்தை ஏழாம் வகுப்பு வரை படித்தவர். அவர் மாதிரி சுயமாகவாவது செல்லலாமே என்று தோன்றியது.

 ஊரின் மிகப்பெரிய சிக்கல்,வயல் வேலை இடத்தில் புழங்கும் புரளிகளுக்கு அஞ்சுவது. வயல்வெளிகள் போல பெரிய புரளிக்களங்கள் வேறு இல்லை. அதற்கு அஞ்சாதவர்கள் இல்லை. ஊரில் யாருக்கு என்ன நோய்,எங்கு மருத்துவம் பார்க்கிறார்கள்,யார் யார் காதலிக்கிறார்கள்,வீட்டுசண்டை என்ன,என்ன சொத்து விற்கிறார்கள் வாங்குகிறார்கள்,எந்தப்பிள்ளை நல்லா படிக்குது,எந்தப்பய பள்ளிக்கூடத்துல சிகரெட் பிடிச்சான் என்ற அனைத்தும் அங்குதான் பேசப்படும். நிறைய புனைவுகள் உதிக்கும் இடமும் அதுதான். பொய்கள் மலிந்த இடம். 
இந்த மாதிரியான விஷயங்களுக்கு  அஞ்சி பலர் மனசார்ந்த சிக்கல்களை செய்வினை என்றும் கண் திருஷ்ட்டி என்றும் கழிப்பு கழித்ததை மிதித்து விட்டார்கள் என்றும் மறைத்துக்கொள்கிறார்கள். 

அந்த காலத்தில் இவைகளை உண்மையாவே நம்பினார்கள். இன்று அப்படி இல்லை. நோய்களை மறைப்பதற்காக செய்யப்படுகிறது. நோய்கள் தனிப்பட்ட விஷயம் என்றாலும் அதை சாமியுடனும்,பேயுடனும்,செய்வினையுடனும் முடிச்சு போடுபவர்கள் சமூகத்தில் ஒரு எதிர் மனநிலையை பரப்புகிறார்கள். அறமற்ற ஒன்றை படித்தவர்களும் தெரிந்தே செய்கிறார்கள். எவ்வகையிலும் அது மன்னிக்க முடியாதது. மனசோர்விற்கு மருத்துமனைக்கு செல்லலாம் என்பது இயல்பான விஷயமாக மாறும் வரை இது போன்ற தற்கொலைகள் நடக்கும்.

காலையில் காய்கறி வெட்டும்போது கத்தி நகக்கண்ணிற்கு அருகில் வெட்டிவிட்டது. இந்த வாழைத்தண்டு எப்போதும் நம்மை வழுக்கி விட்டுவிடும். சின்னக்காயம் என்றாலும் கத்தி பட்ட இடம், விரல் நுனி என்பதால் கொஞ்சம் கூடுதலாக இரத்தம் வெளியேறியது. எப்போதும் போல கையை கழுவிட்டு மீண்டும் காய் அறிந்தால் மேலும் அதிகமாக இரத்தம் வெளியேறியது. சரி ஆழம் அதிகம் என்று ஒரு கையால் செய்யக்கூடிய  வேலைகளை செய்தேன்.  
இரண்டு மணி நேரம் சென்று தலை வாரும் போது மீண்டும் கசியத்தொடங்கியது. வழக்கத்தை விட சற்று ஆழமான காயம் என்று ஒரு கையால் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.

எழும்பில், தசையில் அடிபட்டால் அசையாமல் வைத்திருக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். சில காயங்கள் மேலோட்டமாக இருந்தால் உடனே சரியாகிவிடலாம். ஆழமான காயங்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. மனமும் அப்படித்தானே. சில சமயங்களில் குழப்பிக்கொள்ளாமல் அசையாமல் வைத்திருப்பது அவசியம் என்று தோன்றுகிறது.

'அழுக சுகமா இருக்குன்னு அழுதுக்கிட்டே இருக்காதீங்க' என்று தோழிகளிடம் சொல்வேன். அதற்காக நான் அழவே மாட்டேன் என்றில்லை. கொஞ்ச நேரம் அழுதுட்டு வேலையை பார்க்க வேண்டியது தான். அப்புறம் வேலைகளை முடிச்சுட்டு மெதுவாக அழலாம். அழுகை நல்லது. persisting time குறைவாக இருந்தால் மிகவும் நல்லது. 




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...