ஜூலை 25, 2021 சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை அமுதம் அந்தியின் மஞ்சள் எரியும் நேரம். இன்று ஏனோ தெருவே மஞ்சளாய் கலங்கிக்கொண்டிருந்தது. “ஊர்மேல மாரியம்மன் சேலயை விரிச்சுவிட்டாப்ல…”என்ற பார்வதி வானத்திலிருந்து கண்ணெடுத்துக்கொண்டாள். வீட்டுவாசல்படிக்கு இருபுறமிருந்த மண்திண்ணைகளின் இடைவெளியில் சாணி மெழுகிய தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து அரிசி களைந்து கொண்டிருந்தாள். ஈயக்கிண்ணத்தில் கண்ணாடிவளையல்கள் உராயும் ஒலி ஒருதாளம் போல சீராகக்கேட்டது. “சித்திரமாச அனல் அவிஞ்சு வைகாசி பெறந்திருச்சுல்ல… மெதுவா காத்தும் மழயும் எந்திரிக்கும். ஆகாசம் இப்படி சாயங்காலமா செத்தநேரம் மஞ்சக்கட்டும்…கொத்தம்பட்டியில…” என்ற அவள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தாள். வெள்ளையன் அசையாமல் வலதுத்திண்ணையில் படுத்திருந்தார். வட்டக்குங்குமம் பளிச்சென்று தெரியும் சிவந்த முகம் கோபத்தால் மேலும் சுருங்கியது. இத்தனை பெரிய பொட்டு வைக்கும் பழக்கத்தை யாரிடமிருந்து பழகிக்கொண்டாளோ. அறுபது வயதிலும் வயல்வேலைக்கு செல்லும் இடிபிடி இருந்தாலும் இதற்கென்று கண்ணாடிமுன் நிற்க பொ...