சிறுகதை:ஒரு நாள் கழிந்தது ஆசிரியர்:புதுமைப்பித்தன் ஒரு நாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தனின் கதை அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்ட கதையாக இருக்க வாய்ப்புண்டு. எனினும் அதைப்பற்றி சொல்ல அவரவர்களுக்கு வேவ்வேறு வாசகபகிர்தல்கள் இருக்கும் தானே? ஒரு எழுத்தாளரின் ஒருநாள், அதுவும் ஒரு சாயுங்காலம் இந்தக்கதை. கதையை எத்தனை முறை வாசித்திருந்தாலும், கதையை எடுத்துவிட்டால் புதுமைப்பித்தன் சொல்வது போல மீண்டும் வாசிக்கவைக்கும் ‘சாகாவரம் பெற்ற கதை’. புதுமைப்பித்தனுக்கு அதிகதுயரத்தை எழுதுகையில், துயரைவிட அதிக எள்ளல்தன்மை மிக்க நடை கைகூடிவிடும் என இன்று புரிகிறது. அந்த முதல் வாசிப்பில், முதல் புதுமைப்பித்தனில் அந்த நகைச்சுவை எனக்கு மிகப்பிடித்ததாக இருந்தது. புதுமைப்பித்தனின் பெண்குழந்தைகள் மீதான வாஞ்சையானது கடவுளும்கந்தசாமிப்பிள்ளை மற்றும் ஒரு நாள் கழிந்தது ஆகிய இருகதைகளிலும் அழகான ஒன்று. ஏறத்தாழ இரண்டும் ஒன்றுதான். இரண்டிலும் கதைநாயகர் கூட அவரேதான் என்று தோன்றும். “கமலம்! அந்தக்கூஜாவில தண்ணீர்...