Skip to main content

அபிதா

       [2019 ஜூன் பதாகை இதழில் வெளியான கட்டுரை]

                                                        யாவும் அழகே உன்காட்சி  

                                                       

                                                          எழுத்தாளர் லா.சா.ராமாமிர்தம்           

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் அபிதா. இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது. மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது.




வயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை. ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும்  தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது.

ஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம். அது இன்னொரு வசீகரம். சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது. நீண்ட ஒற்றைக்கனவு. அப்படி ஒரே அமர்வில் வாசித்தநாவல்களில் அம்மாவந்தாள்,அபிதா இரண்டும் மனதை ஆட்டிவைத்தவை. வாசித்துமுடித்து வேறெதும்வாசிக்காமல் அடுத்தநாளே மீண்டும் வாசித்தவை.

 நாவலில் அம்பி சொல்வதைப்போல் உள்ளே ஒரு கோடழியும் அவரின் மனம், அவரின் நடப்பிலும், கனவிலுமாக  தவிக்கிறது. நாவலின் நடைமுறை அம்சம் என்பது இளம்வயதின் ஈர்ப்பு அல்லது காதல் அல்லது சினேகம். அது மனதின் ஆழத்தில் கிடந்து  நினைவில், கனவில் எழுந்து கொண்டேயிருக்கிறது.

அதை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை. யாருக்கும் அப்படியான ஒரு பேரன்பு ஒருவர் மேல் இருக்கவே செய்யும். அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம். நடைமுறை வாழ்வில் எந்தபயனும் இல்லாதது.அவரவர் மனதிற்கினிய தெய்வத்தைப் போல தான். உடனிருந்தும் ஒன்றும் பயனில்லை ஆனால் அது உடனில்லாவிடில் வேறெதுமில்லை.

நாவலின் தத்துவத்தளம் என்று நான் உணர்வது இவ்வுலகப்படைப்பின் பேரெழில் மீது எளியமனம் கொண்ட மையல். வயதாகும் போது இவ்வுலகின் மீது உண்டாகும் பெரும் பிடிப்பு. இந்தப்படைப்பையே பெண்ணுருவாக காணுதல் அல்லது பெண்ணுருவையே படைப்பாக காணுதல். தன்படைப்பு அனைத்திலும் தன்னையே பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தின் பேரெழில்.

அம்பி தான் இளமை வரை வாழ்ந்த கரடிமலைக்கு,அவரின் மனதின் வலி உடலின் வலியாக மாறியிருக்கும் நேரத்தில் வருகிறார். அழகு ஆட்சி செய்யும் பசுமையான இடம்.அதுவே ஒரு குறியீட்டுத்தளம். இளமையை குறிக்கும் தளம்.பசுமை, இளமை, செளந்தர்யம். ஒருவேளை முதிய மனதின் இளமைக்கான ஏக்கம்  அல்லது இளமை பற்றிய கனவுதான் இந்தநாவலாக இருக்கலாம். நாவலின் மொழியும் கூட இன்றும் அத்தனை வசீகரமானது. கதையின் களம் ,பேசுபொருள் மொழி அனைத்தும் குன்றாத எழில் கொண்டவை.



வாழ்வின் மறுகரையில் வந்து நின்று அந்தக்கரையை பார்க்கும் கனவு. கனவை அதே போன்ற ஒரு உன்மத்த மொழியில் தானே சொல்ல முடியும்.

‘மல்லாந்த முகத்தின் பனித்த காற்று தான் மீண்ட நினைப்பின் முதல்உணர்வு’

‘நானின் மாறாத மட்டற்ற மெளனத்தின் தனிமை’

‘அத்தனையும் உன்:நீ யின் சட்டையுரிப்பு’

அத்தனை பசுமையான கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதர் வானமே கூரையாக, மழையும், வெயிலும், காற்றும், பனியும், பறவைகளும் அபிஷேகம் செய்ய அமர்ந்திருக்கிறார். அத்தனை சிறுமுட்கள் சூழ வீற்றிருக்கும் தாதை, அன்னையை மனதில் நிறுத்தி காத்திருக்கும் யோகன்.

மானுடவாழ்வின் முட்களுக்கு எதிரே பசுமையென விரிந்திருப்பது அவர்களின் பதின் வயதுகள் தானா? என்று இந்நாவலை வாசிக்கையில் தோன்றுகிறது. உடலும் மனமும் நடைமுறையில் சிக்காது பறக்க எத்தனிக்கும் காலம். சுற்றிநடப்பவைகள் எங்கோ எனத் தெரிய தன்கனவில் தான் வாழும் பருவம்.

ஊரில் திருமணங்கள் என்றால் ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடும் பழக்கம் இன்றும் உண்டு. சிறுவயதில் அப்படி கேட்டு பதிந்தபாடல் ஒன்றின் வரிகள் இந்தநாவல் வாசிப்பின்போது நினைவில் எழுந்தது. ‘ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்காட்சி’ என்ற பாடலாசிரியர் வாலியின் வரி. முதலில் அது மானுடருக்காக இருந்து படிப்படியாக பிரபஞ்சஅழகை ஆராதிக்கும் நிலையாகிறது. அதை மலையும் மலை சார்ந்த சொல்லும் போது அதன் பொருள் மேலும் அழகாகிறது அல்லது கூர்கொள்கிறது. என்றும் நமக்கு குறிஞ்சி காதலும் காதல் சார்ந்த இடம். கனவில் தொடங்கும் வாழ்வு இடையில் நடைமுறையில் சிக்கி மீண்டும் கனவை நோக்கி செல்வதுதான் இந்தநாவல் சொல்லும் வாழ்வு.

இந்தநாவலின் கனவுமயமான பகுதிகள் கரடிமலை சூழலில் வருகின்றன. அப்படியான சூழலில் வரும்பாதே அவற்றின் கனவுத்தன்மை என்பது தீவிரமடைகிறது.

அன்பின் பெருங்காவியங்கள் அனைத்தையும் போலவே இதிலும் பிரிவே அந்தஅன்பின் நிறத்தை, சுவையை அடர்வு கொள்ளச்செய்கிறது. அடையப்பட முடியா நிலையே ஒன்றை பெருமதிப்புடையதாக, பேரழகுடையதாக மாற்றுகிறது. அதுவே எதிர்நிலையில் பெரும் சினமாக ,வெறுப்பாகவும் மாறுகிறது. ஒன்றின் இருநிலைகள். உளவியல் சார்ந்தும் இதுவே உண்மை.

இந்தநாவலில் அபிதா மீதான அம்பியின் பொசசிவ்னஸ் எனக்கு அதிர்ச்சியளித்தது. தோழிகள் அந்தசொல்லை பயன்படுத்தும் போது ‘நோய்வாய்ப்பட்ட அன்பு’என்று அதற்குபொருள் சொல்வேன். இந்தநாவலில் வாயோதிக அம்பியின் நோய்வாய்ப்பட்ட அன்பாக அதை இணைத்து புரிந்து கொள்ளமுடிகிறது.

வாழ்வில் நம்பால்யத்தின் மனிதர்கள் மீதான அன்பு கள்ளமற்றது,மிகத்தூயது.அந்தவயதுகளில் நம் வாழ்வில் வரும் மனிதர்கள் நம் மனதில் அழியா நித்தியத்துவம் பெறுகிறார்கள். நாம் எங்கு சென்றாலும் மனதின் ஆழத்தில் அந்தமனிதர்களும்,அந்த இடங்களுமே நம்முடனிருக்கின்றன.

மழைப்பெய்த புதுநிலமாக மனம் இருக்கையில் விழும் விதைகள். புதுமனிதர்களை,புதுஇடங்களை  நாம் பால்யத்தின் மனிதர்கள் இடங்களுடனே ஒப்பிட்டுக்கொள்கிறாம். புறத்தோற்றத்தில்,குணத்தில் என்று இரண்டிலுமே. அவ்வகையில் இந்தநாவலின் புறசூழலும்,அம்பியின் மனஆழமும் அபிதாவாக எழுந்திருக்கிறது. லா.ச.ரா  தன் அழகிய கனவை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.

இந்தநாவலை என் தோழியிடம் பகிர்ந்த பொழுது அவள் சலித்துக்கொண்டாள். பெண் சார்ந்த இன்றைய, நேற்றைய, நாளைய பார்வைகள் பற்றி பேசினாள். என்னால் அவளுக்கு புரியவைக்க இயலவில்லை. அதன் பின்தான் இந்தவாசிப்பனுபவம் பற்றி எழுத நினைத்தேன். இலக்கியம் என்பது  நடைமுறை தளத்திலிருந்து பறப்பது அல்லவா ? அதன் சிறகில் அமரும் நம்மனதின் புழுதிகள் அந்தப்பறவையின்   ஜிவ்வென்ற ஒரே எழும்புதலில் பறந்துவிடும். அந்தப்பறவை பிரபஞ்சத்தை அளப்பது.

பிரபஞ்சத்தின் பேரழகை காணமுடியும்…ஒரு எல்லையில் உணரமுடியும். ஆனால் ஒருபோதும் உடைமையாக்கமுடியாது.  இதில் லா.ச.ரா தொடுகை என்பதேயே உடமையாக்குதல் என்ற பொருளில் சொல்கிறார். உடமையான எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை. 

இந்தநாவலை வாசித்துமுடிக்கையில் கண்எதிரே நீண்டிருக்கும் கொல்லிமலையைப்பார்க்கிறேன். கோடையில் கருகித்தீய்ந்து உயிர்ப்பிடித்திருக்கிறது. முதல்மழை கண்டுவிட்டது.இன்னும் ஓரிருமழை…மலை சிலிர்த்துக்கொண்டெழும் பேரழகை ஜீன்மாதத்தில் காணலாம். இந்தநாவல் இயற்கையை காண ,அதன் பேரழகில் மனதை வைத்து தன்னையிழக்கும் சுகத்தை நமக்கு சொல்லித்தருவதையே இதன் பெருமதிப்பாக நான் உணர்கிறேன். பெண்ணழகிலிருந்து பேரழகிற்கு. என்னால் இந்தநாவலை அப்படிதான் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.


நன்றி:பதாகை இதழில் வெளியான கட்டுரை.

         

                                                                                                 



Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...