பனிப்பொழிவு
பட்டையான மரவேலிகள், கடுகுச்செடிகள், தக்காளி, குடைமிளகாய், முள்ளங்கி செடிகள் மீது பனித்துகள்கள் விழுந்து வெண்படலமாக பரவிக்கொண்டிருந்தது. மரங்கள் பாதி நரை கண்டதை போல மாறிக்கொண்டிருந்தன. அறைக்குள் பாதி இருள். பாதையில் ஒரு கருப்பு கார் செல்வது பெரிய கண்ணாடி ஜன்னல்வழி தெரிகிறது.
தகரஎடுப்பானால் நடைபாதை படிகளில் படிந்திருக்கும் பனிப்படிவை மது சுரண்டி எடுத்துப்போடுகிறார். கருஞ்சிவப்பான பனிஆடையுடன் நிமிர்ந்து சற்றுநின்று வேடிக்கைப்பார்க்கிறார். அவர் பார்க்கும் திசையில் பனிதாளாது ஒரு மரக்கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்திருக்கிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. ஈரமரம். பனி மின்சாரக்கம்பிகளை ஆக்கிரமித்து தடித்த வெண்வடங்களாக மாற்றியிருக்கிறது.
பார்வையைத் தழைத்து மது நிற்கும் தாழ்வாரத்திற்கு கண்களை திருப்பினேன். அவர் தலைக்குமேல் தொங்கிய இரும்பு கொக்கி மடிப்பில் பனி நிறைந்திருந்தது. எழுந்து மெத்தைமேல் சாய்ந்து அமர்ந்தேன்.தேதிகிழமைகள் கண்களில்பட்டன. அவற்றை கவனிக்காவிடில் நாட்களுக்கிடையேயான கோடுகள் அழிந்துவிடலாம். கதவை அடைத்துவிட்டு திரும்பிய அவர் அங்கியில் பனித்துகள்கள் வைரம் போல தெறித்துக் கிடந்தன. கடந்து செல்கிறார். அவர் நடையோசை மட்டுமே உயிர்ப்பென வீட்டில் வியாபித்திருக்கிறது.
மது அலைபேசியுடன் நாற்காலியில் அமர்ந்தார். முகநூலில் இந்திய நண்பர்களின் புகைப்படங்களை சுட்டுவிரலால் தள்ளினார். இது கார்த்திகை மார்கழி காலம். அங்கு இந்நேரத்திற்கு வாசல் கோலங்களில் பனிவிலகி இதவெயில் பரவியிருக்கும். ஆட்கள் வெயில்தேடி உணர்க்கையாக சூரியனின் பார்வையில் நின்று கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீரங்கத்தின் ராஜகோபுர பேருந்து நிறுத்தத்தில் நின்ற மதுவைப் பார்த்து ரங்குமாமா கைக்காட்டி அழைத்தார்.
“நீங்க மதுசூதனன் தானே…அப்பாவைப் பாக்க ஒருநா வரணும்,”
“வழக்கமா இந்த ஸ்டாப்புக்கு வரமாட்டேளே,”
“ஆமா…திருச்சியா போறேள்…”
“ஆமாண்ணா. மலைக்கோட்டை தெப்பக்குளத்தங்கரை சுப்புமாமா ஹோட்டல் தெரியுமோ… அங்க கம்ப்யூட்டர் சொல்லித்தர வரச்சொன்னார். ரெண்டுநாளா போயிண்டிருக்கேன்,”
“இவ ராதா…எம்.எஸ்.ஸி பண்ணியிருக்கா. மாமி வகையில பந்து. பழனியப்பாஸ் புக்ஸ்டால் போகணுன்னா. கொஞ்சம் காட்டித்தரேளா. நேக்கு ஆஃபீஸ் போகணும். நாழியாகுன்னாலும் சங்கடமில்லை சொல்லிடுங்கோ,”
“அதுகென்ன அழச்சிண்டு போறேன்,”
மது திரும்பி ராதாவைப் பார்த்தான்.
குழந்தை வேண்டாம் என்று திருமணமான புதிதிலேயே மதுவிடம் ராதா சொல்லியதால் வீட்டில் அனல் கிளம்பி வெடித்துச் சிதறியது.
“எல்லாத்துக்கும் நான் கூட இருக்கேன் ராதா… ஏன் பயப்படுற?”
“இல்ல மது. மனசுல இனம்புரியாத குழப்பம். குழந்தை பிறந்தா நான் இருக்கமாட்டேனோ என்னவோ?”
மது சிரித்தபடி அருகில் வந்து அமர்ந்தான். அந்த முற்றத்துவீட்டின் மதியவெயில் நேரம். தாழ்வாரத்தின் தூணருகே அமர்ந்த மதுவின் வலதுமுகத்தில் வெயில் சரிந்திருந்தது. கைகளை பிடித்தபடி,“எல்லாவளும் பயப்படறது வாஸ்தவம்தான்…இப்பெல்லாம் எவ்வளவு ஹாஸ்பிடலைசேசன் இருக்கு?” என்றான்.
“இல்ல மது. எங்க மாமிகள் ரெண்டுபேருமே அதனால சின்னதுலயே இறந்துட்டாங்க…”
“அது அந்தகாலம்…”
“ஆமாம்…அது என்னை தொடர்ந்து வராப்ல இருக்கு…”
“உங்கவீட்ல அதையே வருஷாந்திரமா பேசிண்டே இருந்துருப்பா…அது மனசுல விழுந்தாச்சு,”
“இருக்கலாம்…நான் சின்னமாமிய நேர்ல பாத்தேன். எனக்கு குழந்தை வேணாம் மது…வேணுன்னா தத்து எடுத்துக்கலாம். எத்தனையோ குடும்பத்துல குழந்தைகள் இல்லாம இருக்கலியா…”
“…”
“மன்னிச்சுடு …ப்ளீஸ். உன்னைய பிடிக்கறச்ச…கல்யாணம் பண்றச்ச இது நெனவுல இல்ல மது. சின்னதா சிம்ப்டம்ஸ் தெரிஞ்சிருந்தாலும் எப்படியாச்சும் மனச மாத்திண்டுருப்பேன்…தெரிஞ்சே செய்யல கேட்டியா. சாரி…மது. இந்த ஜென்மத்துல உனக்கு பிரதியுபகாரம் பண்ண முடியாதவளாயிட்டேன்,”
மதுவின் தோள்களில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளிடம் என்ன சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை. அம்மா என்ன சொல்வா? வருஷக்கணக்கா பேரப்பிள்ளைக்கு காத்திருக்கவக்கிட்ட என்னத்தை சொல்றது. என் மனசுக்கே இத்தனை பதட்டமா இருக்கே...எள்ளும் நீரும் குடுக்க…உங்கப்பாவை திரும்ப பாக்கணுன்னு அடுக்குவாளே! தோள்களில் ஈரம் மென்மையாய் பரவித்தொட்டது. அம்மாவுக்கு மட்டுமா எனக்கும் இந்த நினைப்புகள் இருக்கத்தானே செய்யுது. இவ்வளவு பயந்தவளா ஒருத்தி இருப்பாளா! ரங்கா என்ன செய்யட்டும்?
காவிரிக்கரை தயங்கி தயங்கி நகர்ந்து கொண்டிருந்தது. ராதா வெண்பட்டில் கால்களை மடக்கி அமர்ந்திருந்தாள்.
“இங்க ஒக்காந்து என்ன பேசணும் ராதா…கல்யாணசாப்பாடு கண்ணை கட்றது,”
“அம்மா ஆத்திரப்படறா…இருக்கும் தானே. நான் எங்காத்துக்கு போயிடறனே..”
“என்ன பேசற ராதா. என் நிம்மதியே போச்சு…விட்டுட்டு இருக்க முடியுன்னு தோணல,”
“இல்ல மது. மனுசசுபாவம் மாறும்…இங்கருந்தா அம்மா பேசற பேச்சிலயே தார்க்கோலை எடுக்க நாளாகாது. அது உன்னையும் என்னையும் எதுக்கஎதுக்க நிக்க வச்சுரும். இப்ப சொன்னேளே…இருக்க முடியுன்னு தோணலன்னு…அதுஅப்படியே இருக்கட்டும் மது. தயவுபண்ணி நீங்களே திருவையாத்துக்கு ரயில் ஏத்தி விட்டுடறேளா?”
“எனக்காக டாக்டர் கன்சல்டேசனுக்கு வரியா ராதா…”
குனிந்து மணலை கைகளில் அள்ளிப்பிடித்து வழியவிட்டுக்கொண்டிருந்தவள் தலையாட்டினாள். சற்றுதொலைவில் மணல்இடைக்குறைவில் நின்ற செடிகளுக்கிடையில் மஞ்சள் மூக்கை நீட்டிக்கொண்டு நாரைகள் நகரும் நீரை பார்த்துக்கொண்டிருந்தன.
மருத்துவரிடம் சென்று சோதனைகள் நடந்தன. அந்த அம்மாள், “இது உடல்பிரச்சனையில்லை. ஆழமான மனப்பதிவு. அடுத்தடுத்து இரண்டு கர்ப்பவதிகள் இறந்ததை ராதா மறக்கணும். காலப்போக்குல மாறலாம். மாறாமலே போகலாம். இங்க அடிக்கடி அழச்சுட்டு வாங்க. பக்கத்துவீட்டு குழந்தைகளை வீட்டுக்குள்ள வர வைங்க,” என்று அரைமணி பேசினார்.
அம்மா ஜாதகமும் கையுமாக அலைந்து அமர்ந்தாள். ராதா சந்தனமுல்லையை முற்றத்தில் கொட்டி அதன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ஊறவைத்த வாழைநாரை தண்ணீரிலிருந்து பிரித்து நூலாக்கிக்கொண்டிருந்தாள்.
“கணிப்பு சொல்றவால்லாம் மழுப்பறா. நாம என்ன பண்றது? நாளைக்கு இவளுக்கு ஒன்னுன்னா அந்தப்பாவம் நம்ம குடும்பத்தை விடாது. எனக்கு குடும்ப விருத்தியம்சமாகனும். என்ன சொல்றேன்னு விளங்கறதா?”
சட்டென நிமிர்ந்தான். ஈரவிழிகளை தரைநோக்கி மாற்றியபடி அரும்புகளை எடுத்து நாரில் வைத்து சரமாக்கத்தொடங்கினாள்.
ரயிலடியில் எந்தபேச்சுமின்றி சந்தடிகளில் மிதந்தது சிந்தை. முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஊர்சென்று நாளை திரும்பிவிடுபவள் என ராதா அமர்ந்திருந்தாள். சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு இடதுபுறம் அமர்ந்திருந்த மது அவள்பக்கமாக கையை ஊன்றியிருந்தான். தன் இடதுகை ஆள்காட்டி விரலால் அவனின் ஒவ்வொரு நகமாக தொட்டு புன்னகைத்தாள்.
அம்மாவை என்றென்றைக்குமாக வழியனுப்பிய பின்பு சுப்புமாமா இடமாற்றம் மனமாற்றம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாடுவிட்டு இங்கிலாந்தின் நகரங்களில் மாறிமாறி கணினி வேலையில் எத்தனையோ உயரம் சென்றுவிட்டாள். அலைபேசியை மேசைமீது வைத்துவிட்டு,“ராதா..எதானும் சாப்பிடு. டேப்லெட் எடுக்கனும்…நாழியாறது…”என்றார்.
“கொஞ்சம் போட்டும்,”
“லன்ச் சாப்பிடலான்னு உத்தேசமா…”என்று சிரித்தார். சிரிக்கும் போது பாதி மூடிக்கொள்ளும் அந்த முட்டைவிழிகளின் சரிந்தபார்வை அவள் கண்களுக்குள் நிறைந்தது.
முப்பொழுதும் உறக்கத்தை கண்களில் நிறுத்தும் மாத்திரைகளை நினைத்தாலே மனம் பதைத்தது. அதை பயன்படுத்தாமலும் இருக்கமுடியவில்லை. மதுவும் உணவு உண்ணாமல் இருப்பார். எழுந்து கழிவறைக்கு சென்று கண்ணாடியில் முகம் பார்த்தேன். கண்களின் கருவளையம் அடர்ந்திருந்தது. எனக்கு என்ன நடக்கிறது. இருந்திருந்தாற் போல சுடுஎண்ணெய் கொட்டினது மாதிரி மனதை எதோ ஒன்று எரியச்செய்கிறது. மது சலிக்காமல் என் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்.
ராதாவிற்கு ஆண்டில் பத்துநாள் இருபதுநாள் என்று இருந்த மனசஞ்சலம் ஐம்பதுவயதில் இந்தமுறை மாதமாக போட்டு வதைக்கிறது. ராதாவை பார்த்தபடியிருந்த மது கண்கள் சோர்ந்து திரும்பிப்படுத்தார். இரவு கனத்து கவிழ்ந்தது.
ராதா நிமிர்ந்து படுத்து இருளை வெறித்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை இத்துடன் அனைத்தும் முடிந்து போகுமோ என்று இரண்டு நாட்களுக்கு முன், சமையல் அறையில் இருந்த பழைய கத்தியை பார்த்ததும் தோன்றியது. அதற்குள் மது வந்துவிட்டார்.
காலையில் சூடான கோதுமை தோசையை குடைமிளகாயில் செய்த தொடுகறியுடன் முடித்தப் பின் கண்ணாடி ஜன்னல் அருகே நாற்காலியில் அமர்ந்தாள். மெதுவாக பனி விழுந்து கொண்டிருந்தது. நேற்றிருந்த ஏதோ ஒன்று அதனடியில் மிக மெதுவாக மறைந்து கொண்டிருந்து. ஓவியத்தின் மீது வெண்சுண்ணம் அடிப்பதை போல.
மது அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“ராதா…மார்கழியானா எவ்வளவு பெரிசா கோலம் வரைவ…காவிப்பொடியில ஓரம் வரைஞ்சு…பனியிலயே அரைமணியாச்சும் நிப்ப…
தலையாட்டினாள்.
“உங்க ஆஃபீஸ்லருந்து பேசினா…”
மீண்டும் அதே அசைப்பு.
“உறக்கம் வரதா?”
இல்லையென்று தலையாட்டினாள்.
சமையலறையில் குக்கர் சத்தம் கேட்டு அவர் எழுந்து சென்றார்.
இத்தனை பேசறாரே பேசினா என்ன? என்று மனம் கேட்டது. பேசவே பிடிக்கவில்லை. காதுகள் ஜிவ் வென்று அடைத்துக்கொண்டன. விளக்கொளி மங்குவதாக தோன்றியது. உடனே எழுந்து விளக்கை அணைத்துவிட்டு அரையிருளில் மெத்தையில் படுத்தாள்.
இருளும் அரையிருளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. தோட்டத்தின் எதுவுமே தெரியாத அளவிற்கு பனிமூடி சமதரையாகியிருந்தது. மரங்கள் இலைகளின்றி குச்சிகளாய் நீட்டிக்கொண்டிருந்த கிளைகளில் பனிப்படர்வை சூடியிருந்தன.
அனைத்தும் ஏதோ ஒருகாலத்தில் இருப்பவை என உறைந்து போயிருந்தன. இனி இவையனைத்தும் மீளப்போவதில்லை. ராதாவிற்கு தானும் இவைகளுடன் இப்படியே காலகாலமாய் இருப்பதை போல தோன்றியது. இந்த நீளுறக்கத்திலிருந்து என்றும் எப்போதும் எதுவும் விழிதிறக்கப் போவதில்லை. அவை விழிப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவை உறக்கத்திலிருந்து எழ விரும்பவில்லை. சூரியன் அவைகள் மீது தன் முதல் தொடுகையை நிகழ்த்தவில்லை.
மேலும் மேலும் என பனி படர்ந்து மூடிக்கொண்டேயிருந்தன. மது எங்கோ தொலைவில் என அவளை அழைத்துக் கொண்டிருந்தார். இருள் சூழ்ந்து பரவி நிற்க அவள் நடந்து கொண்டிருந்தாள். இருளிற்கு அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள விழைபவள் என. தன் அகம் புறம் கெட்டு, தன் நாமம் கெட்டு சென்றுகொண்டிருந்தாள்.
பனித்துகள்கள் செறிந்து படர்ந்து இறுகியது. சுழலும் கிணறு என ஆழத்தினுள் ஆழமாய் இரவும் பகலும் திருகிக்கொண்டிருந்தன. திருவையாற்று கரையில் அம்மாவும் அப்பாவும் அவளைப் பார்த்து சிரிக்கிறார்கள். வெயில் விழுந்த முற்றத்து துளசி செடியருகே மாமி கூர்த்த பர்வையுடன் இவளைப் பார்க்கிறாள். சிறிய வெள்ளை பாதச்சுவடுகள் பார்வைக்குப் படுவதும் மறைவதுமாக இருக்கிறது. அவள் அதன் பின்னால் ஓடுகிறாள். கிங்கிணியின் ஓசை. பின் சிரிப்பொலி தேய்கிறது.
எதோ ஒன்று தவறுகிறது என்று ஒருபாதி மனம் பதைக்கிறது. எவ்வளவு நாழி காவிரியை பாத்துண்டிருப்ப…எழுந்துரு ராதா என்ற மதுவின் குரல் திரும்பத்திரும்ப கேட்கிறது.
ரங்குமாமா நாலுகால் மண்டபத்தில் அமர்ந்து கதை சொல்கிறார். கண்ணன் இடிமழைமின்னலுமாக பூமிக்கு வருகிறான். நீரும் குளிரும் ஈரமும் அவன் குணம். அதனால் தான் அவன் எரிந்ததே இல்லை. அவன் எரி எல்லாம் பனியினுள் உறைகிறது. அவன் குணம் இருளுக்குள் தண்மையாய் நீலம் பூத்து நிற்கிறது. அவன் தன் செந்தணலை பாதத்தில் நிறுத்தி வைத்தவன். அதை நீட்டி சயனித்திருக்கும் அரங்கம் வாழ்க. அந்த பாதங்கள் மனதை வெளிச்சமாக்கட்டும்…வெளிச்சமாக்கட்டும் என்று மாமாவின் குரல் கேட்கிறது. பலதிசைகளில் இருந்து கலையும் குரல்கள். ஒருகுரல் மட்டும் தெளிவாகக் கேட்கிறது.
“ராதா….ராதா….”
மன்றாட்டு என மதுவின் குரல். கண்கள் மெல்ல பிரயத்தனமின்றி திறக்கின்றன. படுக்கை நுனியில் கைகளை ஊன்றி நான்குவிரல்களை மெல்ல அசைத்து புன்னகைக்கிறார். வெளியே ஔிபட்டு வெண்பனி படர்வு ஔிகொண்டது. இனி மெல்ல உருகும்.
நன்றி:தமிழ்வெளி இலக்கிய காலாண்டிதழ்.
ஜனவரி 2021 தமிழ்வெளியின் முதல் இதழில் பிரசுரமாக சிறகதை
Comments
Post a Comment